தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

முத்தான முத்தல்லவோ! - இசையரசி பி.சுசீலா

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
News
முத்தான முத்தல்லவோ! - இசையரசி பி.சுசீலா

அமுதைப் பொழியும் நிலவே தொகுப்பு : கு.ஆனந்தராஜ்

பால்யப் பருவம், பாடகியானது, முதல் தேசிய விருது வென்றது, பரபரப்பான ரெக்கார்டிங் தருணங்கள், குரல் வளத்துக்கான ரகசியம்... சென்ற இதழின் தொடர்ச்சியாக இன்னும் ஏராளமான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், ‘இசையரசி’ பி.சுசீலா!

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் மட்டுமே தெரிந்திருந்தாலும், 12 மொழிகளிலும் தாய்மொழி போலவே பாடியது எப்படிச் சாத்தியமானது?

என்.பத்மப்ரியா, திருச்சூர்


வார்த்தை உச்சரிப்பு எல்லா மொழிப் பாடல்களுக்கும் மிகவும் முக்கியம். எனக்குத் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள்தான் சரளமாகத் தெரியும் என்பதால், பிற மொழிகளில் பாட வேண்டிய பாடல்களின் வரிகளை எனக்குத் தெரிந்த மொழியில் எழுதிக்கொள்வேன். கூடவே பாடல் வரிகளுக்கான அர்த்தம், பாடல் வரும் தருணத்தை எனக்குத் தெரிந்த மொழியில் கேட்டு உள்வாங்கிக்கொள்வேன். வேற்று மொழியில் பாடினாலும் அதன் உச்சரிப்பையும் அர்த்தத்தையும் தெளிவுறக் கேட்டு, உணர்ந்து பாடியதால் அந்த உணர்வைக் கொடுக்க முடிந்தது.

நீங்கள் பணியாற்றிய இசையமைப்பாளர் களில் மறக்க முடியாதவர் யார்? ‘இந்த இசையமைப்பாளரிடம் பாட முடியவில்லையே’ என வருத்தம்கொள்ள வைத்தவர் யாரேனும் இருக்கிறாரா?

சுந்தரி முருகேசன், உளுந்தூர்பேட்டை


எல்லோருமே என் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்கள். என் திறமையை முழுமையாக வெளிக்கொண்டுவந்தார்கள். 1952-ல் சி.ஆர்.சுப்புராமன் சாருக்குப் பாட வேண்டிய வாய்ப்பு வந்தது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போய், அவர் இறந்துவிட்டதால் அந்த வாய்ப்பு ஈடேறவில்லை. அதனால் வருத்தப்பட்டிருக்கிறேன்.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

கிடைத்த வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினம். இந்த விஷயத்தில் நீங்கள்  எதிர்கொண்ட சவால்கள்?

சு.மஹாலட்சுமி, தூத்துக்குடி


எங்கள் காலத்தில் இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஜாம்பவான்களாக இருந்தார்கள். முதல் வாய்ப்பு கிடைப்பது மிகக் கடினம். திறமை இருந்தால் மட்டுமே தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகளுக்காக எங்கள் திறமையை வளர்த்துக் கொண் டோம். எவ்வளவு சவால்கள் இருந்தாலும், வேலை முடியும்வரை மிகவும் பொறுமையாக இருப்போம். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தோம். காலை ஏழு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புவோம். முதலில் ஓர் இசையமைப்பாளரிடம் பணியாற்றிவிட்டு, அடுத்த இசையமைப்பாளரிடம் பாடச் செல்வோம். இப்படி ஒரே நாளில் பல ரெக்கார்டிங்குகள். ஒவ்வொரு பாடலுக்கும் நிறைய மெனக்கெடல்கள், இடர்ப்பாடுகள் இருக்கும். அப்போது ஓர் இடத்திலிருந்து அடுத்த ரெக்கார்டிங்குக்குப் போவதற்குள் நிறைய மனமாற்றம் ஏற்படும். ஆனால், அதை ரெக்கார்டிங் தியேட்டரில் காட்டிக்கொள்ள முடியாது. அதற்கு நேரமும் இருக்காது. அங்கு இசையமைப்பாளர் பாடல் மெட்டுகள், நுணுக்கங்கள், சூழ்நிலை என அவசியமான விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். நம்மைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் இருப்பார்கள். நம் கவனம் சிதறினால், பலரின் உழைப்பும் விரயமாகும். அதனால் எங்கள் பொறுப்பை உணர்ந்து ஈடுபாட்டுடன் பணி செய்தோம். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. காதல், சென்டிமென்ட் என அந்தக் கதைச் சூழலுக்கான பாடல்களை அந்த நபராகவே எங்களைப் பாவித்துப் பாடுவோம். இவையெல்லாம் எவ்வளவு பெரிய சவால்கள் என்பது விவரிக்க முடியாதது.

எஸ்.ஜானகியை உங்கள் சகோதரி எனப் பல மேடைகளில் கூறியிருக்கிறீர்கள். அவர் மீதான உங்கள் அன்பு பற்றி?

ஆர்.புஷ்பா, கடலூர்


1950-களில் நாங்கள் இருவரும் திரையிசைப் பாடகிகளாகப் பணியாற்றத் தொடங்கினோம். அவர் எனக்குச் சில ஆண்டுகள் ஜூனியர். ஜானகியின் குரல் மிகவும் தனித்துவமானது. மிகத் திறமையான பாடகி. எந்தக் கடினமான பாடலையும் அநாயாசமாகப் பாடுவார். உதடு அசையுமே தவிர, அவர் முகத்தில் கஷ்டமான சங்கதிகளுக்கான உணர்வு எதுவும் வெளிப்படாது. அவர் என் உடன்பிறவா சகோதரி. மேடைகளில் நாங்கள் மனம்விட்டு ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வோம்.

எந்த நடிகைக்கு உங்கள் குரல் மிகவும் பொருத்தமாக இருந்ததாக நினைக்கிறீர்கள்?

பார்வதி நடராஜன், அரூர்


எல்லா நடிகைகளுக்குமே பொருத்தமாக இருந்திருக்கிறது. 1950 - 1990 வரை முன்னணியில் இருந்த பெரும்பாலான நாயகிகளுக்குப் பின்னணி பாடியிருக்கிறேன். ரெக்கார்டிங் நேரத்தில் கதாபாத்திரத்தை மனதில் வைத்துத்தான் பாடுவோம். நடிகைகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்ப, என் பாடலை மிகச் சிறப்பாக உச்சரித்துப் பாடி நடித்ததால்தான் முழு வெற்றி கிடைத்தது.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

கண்ணதாசன், அவரின் பாடல்கள்..?

எம்.பாத்திமா, நாகப்பட்டினம்


கண்ணதாசன் அவர்களின் பாடல்களும் கவிதைகளும் பழைமை மாறாத புதுமை சுவை கொண்டவை. பாரம்பர்ய தமிழ் மரபுக் கவிதைகளில் வரும் உவமையை விட்டுக்கொடுக்காமல், தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார். அவரின் வரிகள் மிக எளிமையாகவும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடியவையாகவும் இருக்கும். பாடல்களில், இரண்டே வரிகளில் ஒரு கதையைச் சொல்லிவிடுவார். அவரின் வரிகள் இசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்; கருத்தாழம் மிக்கவையாக இருக்கும். அவர் மறைந்தாலும், அவரின் எழுத்துக்கு அழிவே கிடையாது. அவரின் ஆயிரக்கணக்கான பாடல்களை நான் பாடியிருக்கிறேன். அவர் ஒரே நேரத்தில் பல கம்பெனிகளுக்குப் பாடல்கள் எழுதிக்கொண்டிருப்பார். அதனால், பெரும்பாலும் ரெக்கார்டிங் தருணத்தில் இருக்க மாட்டார். இருக்கும் போதே இசையமைப்பாளர், பாடகர்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள் என அனைவரின் திறமையையும் மனதாரப் பாராட்டுவார். டி.எம்.எஸ் மற்றும் என் குரல் உச்சரிப்பு கவிஞர் அய்யாவுக்கு மிகவும் பிடிக்கும். தன் புத்தகங்களிலும் என்னைப் பற்றிப் பெருமையாக எழுதியிருக்கிறார்.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

உங்கள் திரை இசைப் பயணத்தில் கணவரின் பங்களிப்பு..?

சு.தேன்மொழி, சென்னை


கணவர் மோகன் ராவ், அரசு மருத்துவராக பிஸியாக இயங்கிக்கொண்டிருந்தார். நூறு சதவிகிதத்துக்கும் அதிகமாக எனக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்தார். அப்போது ரெக்கார்டிங் சென்று பாடுவதும், வேலை முடிந்ததும் வீட்டுக்கு வருவதும்தான் என் வேலை. மற்றபடி எல்லா விஷயங்களையும் கணவர் பார்த்துக் கொள்வார். என்னை வீட்டு வேலைகள் செய்யவிட மாட்டார்; கிச்சனில் நுழையவிட மாட்டார். எதைப் பற்றியும் நான் கவலைப்படக் கூடாது என்பதே அவர் கவலையாக இருக்கும். அப்படி ஓர்  அரவணைப்பு கிடைக்கப்பெற்றதால்தான், என்னால் உற்சாகமாகப் பல மொழிகளிலும் பாட முடிந்தது. என்னுடைய பாடல்கள் வெளியாகிற கேசட்டுகளை முதல் நாளே வாங்கிவிடுவார். பாடலை உன்னிப்பாகக் கேட்பார்; பாராட்டுவார், பயனுள்ள ஆலோசனைகள் கொடுப்பார். இப்போது அவர் என்னுடன் இல்லை. அவருடனான என் நினைவுகளுக்கோ என்றும் அழிவில்லை.

இளையராஜாவின் இசையும் சுசீலாவின் குரலும் சேரும் தருணங்களின் அழகைப் பற்றி?

கமலா கண்ணன், வந்தவாசி


இளையராஜா, மிகவும் நல்ல மனிதர். அவரின் முதல் படமான ‘அன்னக்கிளி’யில் இருந்து தொடர்ந்து அவரின் பல நூறு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவரின் தெலுங்குப் படங்களில் பாடியிருக்கிறேன். அவருடைய ரெக்கார்டிங்குகளில் பணி செய்பவர்கள் செய்யவேண்டிய வேலைகளை முன்கூட்டியே எழுதிக்கொடுத்துவிடுவார். பெரிய மாற்றங்களின்றி, திட்டமிட்டபடி ரெக்கார்டிங் நடந்து முடிந்துவிடும். அவருடன் பணிசெய்வது நல்ல அனுபவமாக இருக்கும். அவரின் ஸ்வரங்களுடன் பணிசெய்வது தெய்விக அனுபவமாக இருக்கும். என் நண்பர், தான் இயக்கும் புதிய தெலுங்குப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இளையராஜாவைச் சந்திக்க அவரை அழைத்துச்சென்றேன். இப்போது நண்பர் இயக்கும் புதுப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, அதில் நான் பாடுகிறேன்.

சுசீலாம்மாவைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் மலர்ந்து பேசிய மேடைகள் பல உண்டே...

ஆர்.கயல்விழி, மதுரை


ரஹ்மானிடம் பல படங்களில் பணியாற்றி யிருக்கிறேன். அதில், ‘புதிய முகம்’ படத்தில் வரும் ‘கண்ணுக்கு மை அழகு’ பாடல் உள்ளிட்ட பல இனிமையான பாடல்களை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவர் ஆஸ்கர் விருது வென்றது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு ஹைதராபாத்தில் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த ஆசைப்பட்டேன். அதில் தங்கக் கிரீடம் அணிவித்து ரஹ்மானுக்கு மரியாதை செலுத்தினேன். அப்போது, ‘சுசீலா அம்மா அழைத்தால், சின்ன செட் டில் இந்த விழா நடந்திருந்தாலும் நிச்சயம் மகிழ்ச்சியுடன் வந்திருப்பேன்’ என்று கூறினார். அந்த அளவுக்கு என் மேல் அன்பு கொண்டவர், ரஹ்மான். விஜய் டி.வி-யின் ‘காபி வித் அனு’ நிகழ்ச்சியில் ரஹ்மான் கலந்துகொண்டபோது, ‘என் ஃபேவரைட் சிங்கரான சுசீலா அம்மாவுக்கு காபி கப் கொடுக்க விரும்புகிறேன்’ எனக்கூறி, அதில் என் பெயரை எழுதினார். இதைப்போல இன்னும் பல நேர்காணல்களிலும் மேடைகளிலும் என் பெயரைக் கூறியிருக்கிறார். பெரிய உயரத்துக்கு வளர்ந்தாலும், ஆரம்பத்தில் இருந்ததைப்போலவே இன்றும் அனைவரிடமும் இனிமையும் எளிமையு மாகப் பழக்கக் கூடியவர் ரஹ்மான்.

அந்தப் பரபரப்பான காலங்களில் குடும்பத்துக் காக நேரம் ஒதுக்க முடிந்ததா?

கே.ஹேமலதா, பவானி


என்னதான் பிஸியான பாடகியாக இருந்தாலும், குடும்பத்துக்கான நேரத்தை ஒதுக்க வேண்டியது என் கடமை. அதை நிறைவாகச் செய்தேன். என் பையன் தன் சுயதேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்கு வளரும்வரை, என்னால் இயன்ற அளவுக்கு அவனுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். அந்த நேரங்களையெல்லாம் மிகச் சிறப்பானதாகப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தக் காலங்கள், மிக வேகமாக உருண்டோடி விட்டன.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

சக பின்னணிப் பாடகிகளில் உங்கள் தோழிகள்..?

பி.நிஷா, அருப்புக்கோட்டை


ஜமுனா ராணி, ஜிக்கி, லீலா, எஸ்.ஜானகி, லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் உள்ளிட்ட பலரும் சகோதரிகளாக, தோழிகளாகப் பழகினோம். எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருக்காது. அப்போது நாங்கள் அனைவரும் பிஸியாக பாடிக்கொண்டிருந்தோம். அதனால் தனிப்பட்ட முறையில் ஒன்றாகச் சந்தித்துக்கொள்வது அரிதுதான். ஏதாவது ஒரு நிகழ்ச்சியில், ஒரே ஸ்டுடியோவில், ரெக்கார்டிங் நேரத்தில் எனச் சந்தித்துப் பேசுவோம். குடும்பம், உடல்நலம் பற்றி அதிகம் விசாரிப்போம். இப்போதும் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம்.

 நீங்கள் பாடியதில் மிகவும் பிடித்த பாடல்கள்..?

ராதா கணேசன், செஞ்சி


மிகவும் பிடித்த பாடல்களைச் சொல்வது மிகக் கடினம். பாடியதில் பெரும்பாலானவை கடினமான பாடல்கள். அவற்றைப் பாடி முடித்ததும் ஒருவித மகிழ்ச்சி வெளிப்படும். அந்தத் தருணம் மறக்க முடியாததாக இருக்கும். சில பாடல்கள் எளிமையாக இருந்தாலும், அவற்றில் சில நுணுக்கமான மற்றும் நளினமான சங்கதிகளை அனுபவித்துப் பாடுவதில் உள்ள சவால்கள் சொல்ல முடியாத உணர்வைக் கொடுக்கும். உதாரணத்துக்கு, ‘திருவருட்செல்வர்’ படத்தில் வரும் ‘மன்னவன் வந்தானடி தோழி’ பாடல். சிங்கிள் டேக்கில் பாடிய அப்பாடலில் நிறைய சங்கதிகள், அற்புதமான இசைகோப்புப் பணிகள் உள்ளடங்கியிருக்கும். எனக்கு நான் பாடிய எல்லாப் பாடல்களுமே பிடிக்கும்.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

இப்போதும் உங்கள் நட்பில் இருக்கும் சினிமாத் துறை பிரபலங்கள்..?

ஜமுனா தேவி, குண்டூர்


டி.எம்.எஸ் சார் மற்றும் பி.பி.ஸ்ரீநிவாஸ் சார் இருவரும் உயிருடன் இருந்தவரை என்னுடன் நல்ல நட்பில் இருந்தனர். சரோஜாதேவி என் நீண்டகால தோழி. இப்போதும் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து எங்கள் காலத்துப் படங்களைப் பார்த்து ரசிப்போம். பெங்களூரில் இருக்கும் அவர் வீட்டுக்கு நானும் அடிக்கடி செல்வேன். சாவித்திரி உயிருடன் இருந்த காலம்வரை அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். விஜயகுமாரியும் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து நலம் விசாரிப்பார். வைரமுத்து மாதத்துக்கு ஒருமுறையாவது வந்து சந்திப்பார். செளகார் ஜானகி, ஜெயந்தி உள்ளிட்ட பலரும் நெருங்கிய நட்பில் இருக்கின்றனர். ஹைதராபாத் வந்தபோதெல்லாம் என்னை என் வீட்டுக்கு வந்து சந்திக்கும் நடிகை ஸ்ரீதேவியின் இனிய நினைவுகள், இந்தக் கேள்வியில் மேலெழுகின்றன.

கின்னஸ் சாதனை, ஐந்து முறை தேசிய விருதுகள், பத்மபூஷண்... விருது பட்டியல் இன்றுவரை தொடர்கின்றனவே...

என்.அபிலதா, மைசூரு


சந்தோஷம்தான். நான் எந்த விருதையும் நான் எதிர்பார்த்துப் பணியாற்றவில்லை. கிடைத்த விருதுகள் மற்றும் பாராட்டுகளை என் உழைப்புக்கான ஊக்கமாகவே கருதுகிறேன். முதல் தேசிய விருது கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. பின்னர் நான்கு முறை தேசிய விருது கிடைத்தது (‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’ - ‘சவாலே சமாளி’ மற்றும் மூன்று தெலுங்குப் பாடல்களுக்கு). பல ஆண்டுகளுக்கு முன்பு, psusheela.org என்கிற என் இணையதளப் பகுதியைத் தொடங்கும் பணியில் என் அன்பு தோழர்களும் தோழிகளும் ஈடுபட்டார்கள். அதற்காக என் பாடல்களைக் கணக்கெடுத்தபோது, பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் இருந்தது தெரியவந்தது. என் தோழி ஆஷா போஸ்லே அவர்கள் 11 ஆயிரம் பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். என் பாடல்கள் அதற்கும் அதிகமாக இருந்தது தெரியவந்தது. அதனால் என் பெயரை கின்னஸ் சாதனைக்கு நண்பர்கள் விண்ணப்பித்தார்கள். கின்னஸ் புத்தகத்தில் ஒருவரின் பெயர் இடம்பெற, அந்த நிறுவனத்தினர் ஆயிரக்கணக்கான கேள்விகளையும் ஆதாரங்களையும் அடுக்கடுக்காகக் கேட்பார்கள். ஒவ்வொரு பாடலும் ரெக்கார்டு செய்யப்பட்ட மற்றும் வெளியான தேதி, பாடல்களை ரிலீஸ் செய்த கம்பெனி, ஒவ்வொரு பாடலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் கேசட்டுகள் வெளியாகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை... இப்படிப் பல நடைமுறைச் செயல்பாடுகளைச் செய்துமுடிக்க, என் நண்பர்கள் மூன்றாண்டுகள் கடும் சிரமப்பட்டனர். அதிலும், 1952 - 1959 வரையிலான என் பாடல்களை சில காரணங்களால் கின்னஸ் ரெக்கார்டு குழுவினர் கணக்கில் எடுத்துக்கொள்ளவேயில்லை. 1960-களில் இருந்து கணக்கிடப்பட்டதில், தனிப் பாடல்கள் மற்றும் டூயட் பாடல்கள் என 17,695 பாடல்களை நான் பாடியிருப்பது தெரியவந்தது. அதனால் 2016-ம் ஆண்டு என் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. விருது மகிழ்ச்சி தரும் நெகிழ்வு... அழகானது.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

டி.வி ஷோக்களில் பங்குபெறும் இளம் பாடகர்கள் பாராட்டும்படி பாடுகிறார்கள். இவர்களது எதிர்காலம் எப்படியிருக்கும்; எப்படி இருக்க வேண்டும்?

ஜெ.காமாட்சி, நாகர்கோவில்


இன்றைய இளைய தலைமுறை போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாகப் பாடுகிறார்கள். அதனால் அவர்களுக்குப் பாராட்டுகளோடு, சினிமாவில் பாடும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன. ஓர் இசையமைப்பாளர் தொடர்ந்து 5 - 10 பாடல்கள் பாடும் வாய்ப்பையாவது ஒரு பாடகருக்குக் கொடுக்க வேண்டும். பாடகர்களின் உச்சபட்ச திறமையை வெளிக்கொண்டுவர வேண்டியது இசையமைப்பாளரின் பொறுப்பு. பாடகர்கள், ஓர் இசையமைப்பாளர் எந்தக் கஷ்டமான பாடலையும், எந்த நேரத்தில் பாட அழைத்தாலும் அதற்கு நம்மைத் தயாராக வைத்திருக்க வேண்டும். எங்கள் காலத்தில் போன் வசதிகூட பெரிதாக இல்லை. ஆனால், திறமையை வீட்டில் இருந்தபடியே வெளிக்காட்ட, இன்றைக்கு சோஷியல் மீடியா என்ற மிகப்பெரிய கருவி நம்மிடம் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இசையமைப்பாளரிடம் நம் குரல் போய்ச் சேரும். 

சாப்பிடக்கூட நேரமில்லாமல் பணியாற்றிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?

ஏ.புனிதவதி, வேளாங்கண்ணி


பேச்சுக்காக அல்ல... 1955 முதல் 1975 வரை சுமார் 20 ஆண்டுகள், உண்மையிலேயே சாப்பிட நேரமில்லாமல்தான் பணியாற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் காபி, டீ, பிஸ்கட்தான் என் பசியை ஆற்றியிருக்கின்றன. காலையில் தமிழ் ரெக்கார்டிங், இரவில் தெலுங்கு ரெக்கார்டிங் நடக்கும். இதனால், குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிடும் நேரம் என்பது அப்போது குறைவாகவே இருக்கும். சில தருணங்களில், கஷ்டமான பாடல்களை எப்படிப் பாட வேண்டும் என இசையமைப்பாளர் முன்பே சொல்லிக்கொடுத்திருப்பார். அதை பயணத்திலும், வீட்டுக்கு வந்த பிறகும் பிராக்டீஸ் செய்துபார்ப்பேன். அதில் பசியெல்லாம் மறந்துபோகும். அந்தக் காலகட்டங்களை நினைத்துப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி, கண்ணதாசன், டி.எம்.எஸ், சுசீலா என இந்த ஐவர் கூட்டணியின் ஹிட் ஃபார்முலா என்ன?

சகுந்தலா சுகுமாரன், சிவகாசி

எப்போதும் திட்டமிட்டே பணி செய்வோம். நானும் டி.எம்.எஸ் சாரும் சவுண்ட் இன்ஜீனியரிடம் முன்கூட்டியே ஆலோசனை செய்துகொள்வோம்.

எம்.எஸ்.வி - டி.கே.ராமமூர்த்தி இசைக்கோப்பு, கண்ணதாசன் அவர்களின் வரிகள் என எனக்குக் கிடைத்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துகளே. நாங்கள் ஐந்து பேர் மட்டுமன்றி, ஒவ்வொரு பாடலுக்கும் உழைத்த கலைஞர்களின் பட்டியல் நீளமானது. ‘என் பாடல்கள்’ என்பதைவிட, ‘எங்கள் பாடல்கள்’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கூட்டு முயற்சியின் வெற்றியால்தான்,  இப்போதும் எங்கள் பாடல்கள் தனித்துவமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ரசிகர்களின் ஆதரவின்றி, எங்கள் வளர்ச்சி சாத்தியமில்லை. அவர்களின் ரசனைக்கு முதல் வணக்கம்.

பாடகியாகாமல் இருந்திருந்தால், வேறு எந்தத் துறைக்குச் சென்றிருப்பீர்கள்?

எஸ்.அகல்யா, புனே


சின்ன வயதிலிருந்தே இசை மட்டும்தான் என் உயிர்மூச்சுக்கு இணையாக இருந்திருக்கிறது. அதனால், ‘பாடகி ஆகியிருக்காவிட்டால்...’ என்ற ஒரு கூற்றை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. ஒருவேளை பாடகியாகாமல் இருந்திருந்தால், வேறு எந்தத் துறைக்கும் சென்றிருக்க மாட்டேன். தொடர்ந்து ஜாம்பவான்களின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு ரசிகையாகவே இருந்திருப்பேன்.

முத்தான முத்தல்லவோ! -  இசையரசி பி.சுசீலா

‘அவள் விருதுகள்’ மேடையில் நீங்கள் ‘தமிழன்னை’ விருதுபெற்ற கணம், சமீபத்தில் நாங்கள் மிக ரசித்த மேடைத் தருணம். நடிகர் சிவகுமாரின் வார்த்தைகளில் நெகிழ்ந்துபோய் நின்றிருந்தீர்களே..?

எல்.சுகன்யா, புதுக்கோட்டை


சாதனைப் பெண்களைப் பெருமைப் படுத்தும் விதமாக, முதன்முறையாக ‘அவள் விருதுகள்’ நிகழ்வை முன்னெடுத்திருக்கிறது விகடன். இந்த முதல் வருடமே எனக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தமிழன்னை’ விருது வழங்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி. சிவகுமார் என் அன்பு நண்பர். ஆனால், ஒரு ரசிகராகவும் என்னை அந்த மேடையில் அவர் கொண்டாடியது எனக்குப் பேரானந்தம். அதுவும் என் 67 வருட இசைப்பயணத்தைத் தொகுத்து வழங்கிய அவருடைய பேச்சை பிரமித்துக் கேட்டபடி மேடையில் நின்றிருந்தபோது, அந்தப் பேச்சுக்கு நான் ரசிகையாகிப் போனேன். நடிகைகள் லதா, சச்சு இருவருக்கும் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறேன். அவர்களும் என்னை வாழ்த்துவதற்காக அந்த மேடையில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி. இப்படி, என் காலத்தில் புகழ்பெற்ற மூன்று கலைஞர்களின் கரங்களால் அந்த விருதைப் பெற்றது நிறைவாக இருந்தது. மேடையில் பகிர்ந்துகொண்ட நினைவுகளையும், ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்துநின்று என்னை வாழ்த்தியதையும் அசைபோட அசைபோட அழகாக இருக்கிறது. அவள் விகடனுக்கு நன்றி.

ஓய்வுக்காலம் எப்படியிருக்கிறது?

மீனாட்சி ரங்கநாதன், கரூர்


மகன் ஜெய் கிருஷ்ணா, கட்டுமானத் தொழில் செய்கிறார். மருமகள் சந்தியா, பின்னணிப் பாடகி. இரண்டு பேத்திகள். ஒருவர் இன்டீரியர் டெகரேஷன் படித்துவிட்டு வேலையில் இருக்கிறார். இரண்டாவது பேத்தி கல்லூரியில் படித்துவருகிறார். இவர்களுடன் அழகாகச் செல்கிறது வாழ்க்கை. ஆனாலும், இதை ஓய்வுக்காலம் என்று சொல்லமாட்டேன். இப்போதும், டிவோஷனல் ஆல்பங்களுக்கு இசையமைக்கும் பணிகளைச் செய்கிறேன்; நிறைய பயணம் செய்து பல நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன்; என் ரசிகர்களுடன் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்கிறேன். முன்பு போன்ற பரபரப்பின்றி, கொஞ்சம் மெதுவாக இயங்குகிறேன். வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கிறேன்.