Published:Updated:

தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! - டி.பி.ராஜலட்சுமி

தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! -  டி.பி.ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! - டி.பி.ராஜலட்சுமி

முதல் பெண்கள் ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! - டி.பி.ராஜலட்சுமி

முதல் பெண்கள் ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! -  டி.பி.ராஜலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! - டி.பி.ராஜலட்சுமி

“வாழ்க்கையில் என்ன தடை வந்தாலும், அவற்றை நாமாகவே எதிர்கொள்ள வேண்டும். வேறு யாரிடமும் உதவி கோரக் கூடாது” - இப்படித் தன் மகள் கமலாவிடம் கூறியவர் டி.பி.ராஜலட்சுமி. தமிழ் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகை. திரைப்படம் தயாரித்த, இயக்கிய முதல் பெண்ணும்கூட!

திருவாரூரை அடுத்த சாலியமங்கலத்தில் 1911-ம் ஆண்டு பிறந்தார் ராஜலட்சுமி. தந்தை பஞ்சாபகேசன், அன்றைய வழக்கப்படி மகளுக்கு ஏழு வயது ஆனதும் அவரை முத்துமணி என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தார். இரு குடும்பங்களுக்கும் இடையே பிணக்கு தோன்றவே, கணவர் வீட்டுக்குச் செல்லாமலே இருந்தார் சிறுமி ராஜலட்சுமி. மனம் உடைந்து பஞ்சாபகேசன் இறந்துபோக, ஆதரவின்றி விடப்பட்டனர் தாயும் மகளும்.

வாழ வழி தேடி, திருவாரூரில் இருந்து திருச்சிக்கு நடந்தே பயணப்பட்டனர் இருவரும். ஏழ்மையில் உழன்ற சிறுமி ராஜலட்சுமிக்குக் கடவுள் கொடுத்த கொடை - அவரது குரல்வளம். அருமையாகப் பாடக்கூடிய திறமையும் ஆர்வமும் இருந்ததால், சி.எஸ். சாமண்ணாவின் நாடகக் குழுவின் முதல் நடிகையாக அரிதாரம் பூசிக் கொண்டார், பத்து வயதுச் சிறுமி ராஜலட்சுமி. அடுத்த ஆண்டு இவரை விவாகரத்து செய்தார் கணவர் முத்துமணி. சற்றும் அசரவில்லை இந்தச் சாதனைப் பெண். தொடர்ந்து சாமண்ணாவின் குழுவில் நடித்தார். அதன்பின் பல குழுக்களில் நடிப்பு. பால பார்ட், ஸ்த்ரீபார்ட், கதாநாயகன் எனப் பத்து வருடங்களாக நாடக உலகைக் கலக்கிவந்தார். ரங்கூன், சிங்கப்பூர் என வெளிநாடுகளிலும் தமிழ் நாடகங்களில் மேடையேறினார்.

1929-ம் ஆண்டு ஏ.நாராயணன் தயாரித்த  `கோவலன்’ என்ற சலனப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ராஜ லட்சுமி. ராஜா சாண்டோ இயக்கிய ராஜேஸ்வரி, உஷா சுந்தரி என அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! -  டி.பி.ராஜலட்சுமி

1931-ம் ஆண்டு, `குறத்தி பாட்டும் நடனமும்’ குறும்படத்தில் குறத்தி வேடம் ஏற்று, பாடி ஆடி நடித்தார் ராஜலட்சுமி. அதைக் கண்ட தயாரிப்பாளர் அர்தேஷிர் இரானி அதே ஆண்டு ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய `காளிதாஸ்’ எனும் பேசும் படத்தில் ராஜலட்சுமியைக் கதாநாயகியாக்கினார்.

காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. `காளிதாஸ்’ படத்தில்,  `காந்தியின் கைராட்டினமே’ என்ற நாட்டுப்பற்றுப் பாடலைப் பாடி ஆடி நடித்தார் ராஜலட்சுமி. படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை எனினும், நாட்டுப்பற்றுப் பாடலை ரசித்தனர் மக்கள். சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு முதல் படம் திரையிடப்பட்ட கினிமா சென்ட்ரல் டாக்கீஸ் திரையரங்கு வரை, படப்பெட்டிக்கு வழிநெடுக மலர் தூவி, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டினர் மக்கள். தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரமாக உருவெடுத்தார் ராஜலட்சுமி. அதன்பின் வரிசையாக  சம்பூர்ண அரிச்சந்திரா, ராமாயணம்,  சாவித்திரி சத்தியவான்,  கோவலன், வள்ளி திருமணம், திரௌபதி வஸ்திராபரணம், பக்த குசேலா, குலேபகாவலி என நிறைய படங்களில் நடித்தார். இதற்கிடையே `வள்ளி திருமணம்' படத்தில் தன்னுடன் நடித்த டி.வி.சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார் ராஜலட்சுமி. கமலா என்ற பெண் குழந்தை இவர்களுக்குப் பிறந்தது.

படங்களில் நடித்துக்கொண்டே ‘கமலவல்லி’ என்ற சமூக நாவல் ஒன்றையும் எழுதினார் ராஜலட்சுமி. 1936-ம் ஆண்டு ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய ராஜலட்சுமி, தன் முதல் படமாக மகளின் பெயரிலேயே ‘மிஸ் கமலா’வை இயக்கி, கதாநாயகியாக நடித்தார்.  சமூக நாவலில் இருந்து திரைக்கு வந்த முதல் கதையை எழுதிய பெண் எழுத்தாளர் என்கிற பெருமையையும் பெற்றார். படம் வசூலை வாரிக் குவித்தது. அடுத்து எல்லீஸ் டங்கன் இயக்கிய  `சீமந்தினி’ படத்தில் நடித்தார். தன் சுயசரிதையில், `ராஜலட்சுமி ஓர் அருமையான நடிகை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டங்கன். 1938-ல் கிருஷ்ண லீலை கதையை ‘நந்தகுமார்’ எனும் படமாக எடுத்தார் மராத்திய இயக்குநர் கேஷவ் ராவ் தைபார்.  படத்தின் மராத்திய மொழி வடிவத்தில், கச்சை அணிந்து நடிக்கும் காட்சியில் எந்தச் சலனமும் இல்லாமல் நடித்து முடித்தார் மராத்திய நடிகை துர்கா கோட்டே. தமிழ் மொழிக் காட்சிகளில் நடிக்க வேண்டிய ராஜலட்சுமி, அரைகுறையான கச்சை அணிந்து நடிக்க மறுத்து, வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். இறுதியில், 1930-களில் ஃபேஷனாக இருந்த உடலை முழுக்க மூடிய பூனா ‘ஜம்பர்’ பிளவுஸ் அணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார் ராஜலட்சுமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை! -  டி.பி.ராஜலட்சுமி

அதன்பின் `பக்த குமரன்’,  `தமிழ்த் தாய்’ உள்பட சில படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறையத் தொடங்கின. சென்னை கீழ்ப்பாக்கத்தில் சொகுசு பங்களாவில் வசித்த ராஜலட்சுமி குடும்பம் சிறிது சிறிதாக நொடித்துப்போகத் தொடங்கியது. இதன் பிறகு ராஜா சாண்டோ இயக்கிய `வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரித்தார். `விமலா' என்ற இன்னொரு நாவலையும் எழுதினார். 1950-ல்  `இதய தாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அத்துடன் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுபோயின.

ஒருகட்டத்தில் சொத்துகள் கைவிட்டுச் செல்வதை அறியாத ராஜலட்சுமியைச் பக்கவாத நோயும் தாக்கியது. கிட்டத்தட்ட ஒரு தெருவையே சொந்தமாக வைத்திருந்த குடும்பம், வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தது. கலைமாமணி விருதின் தங்கத்தை உருக்கி, பேரனுக்கு முதல் பிறந்த நாள் பரிசாக மோதிரம் போடும் நிலை. இதற்கு மேல் துன்புறாமல், 1964-ம் ஆண்டு மரணமடைந்தார் ராஜலட்சுமி.

சினிமா ஒருவரை எத்தகைய உயரத்துக்கும் அழைத்துச் செல்லும், எத்தகைய குழிக்குள்ளும் தள்ளும். இந்த இரு எல்லைகளையும் பார்த்து, தன் ஏழ்மையைப் பிறர் அறியாமல் நேர்மையுடனே எதிர்கொண்டு வாழ்ந்த சாதனைப் பெண் டி.பி.ராஜலட்சுமி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism