Published:Updated:

யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி

யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... -  ரோகிணி
பிரீமியம் ஸ்டோரி
யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி

பயணம் சுஜிதா சென், படம் : வீ.நாகமணி

யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி

பயணம் சுஜிதா சென், படம் : வீ.நாகமணி

Published:Updated:
யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... -  ரோகிணி
பிரீமியம் ஸ்டோரி
யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி

``ஒரே மாதிரியான கதைகளைத்தான் திரும்பத் திரும்ப எடுத்துக்கிட்டிருக்கோம்.  இயக்குநர்கள் இன்னும் நிறைய  பயணப்பட்டால்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்; யதார்த்தம் தெரியும்; ஆயிரம் கதைகள் கிடைக்கும். நான் பயணப்பட்டேன், கதை கிடைச்சது!” - ‘அப்பாவின் மீசை’ மூலம் இயக்குநரான நடிகை ரோகிணி, 42 ஆண்டுகால திரை அனுபவத்தோடு பேசத் தொடங்குகிறார்.

நடிப்பு, டப்பிங்... எப்படி ரெண்டையும் ஒரே நேரத்துல உங்களால சமாளிக்க முடிஞ்சது?

பெரிய ஹீரோக்களோடு படம் பண்ணணும்கிற கனவு இருந்த நேரத்துல, நம்மளை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்னு முத்திரை குத்திடுவாங்களோனு பயம் இருந்தது.

1989-ல ‘கீதாஞ்சலி’ தெலுங்குப் படத்துக்கு டப்பிங் பேசக் கூப்பிட்டாங்க. மணிரத்னம் சார் படமாச்சே... யோசிக்காம ஓகே சொல்லிட்டேன். அந்தப் படத்துக்கு அப்புறம் டப்பிங் பேசவே கூடாதுனு முடிவு பண்ணியிருந்தேன். அடுத்ததா, ராம்கோபால் வர்மாவின் முதல் படமான ‘ஷிவா’வுக்கு பேசக் கூப்பிட்டிருந்தாங்க. படத்தின் முதல் பாதியைப் பார்த்தப்போதான், அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் டப்பிங் பேசுனா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அதுல இருக்கிற சுவாரஸ்யம் புரிய ஆரம்பிச்சது. ‘ஜென்டில்மேன்’, ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘இருவர்’, ‘ராவணன்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ உள்பட பல முக்கியமான படங்களின் நாயகிகளுக்கு  வாய்ஸ் கொடுத்தேன்.

யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... -  ரோகிணி

மலையாள சினிமாக்கள்ல நடிச்ச அளவுக்கு தமிழ்ல நீங்க நடிக்கலையே...

என் யதார்த்தமான ஸ்டைலுக்கு மலையாள சினிமாதான் சரி வருது. 13 வயசுல இருந்து 20 வயசு வரை மலையாளத்துல பல நல்ல ஃபிலிம் மேக்கர்ஸ்கூட வேலை பார்த்திருக்கேன். தமிழ் சினிமாவுக்கு வந்தப்போ, நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். தெலுங்கு சினிமா இன்னும் கமர்ஷியல். தமிழில் நான் பாலுமகேந்திரா சார், சிங்கீதம் சார், கமல் சாரோடு மட்டும் எப்படி வேலை பார்க்க முடியுதுனு யோசிச்சப்பதான், இவங்க எல்லோரும் ஒரே ஃபிலிம் ஸ்கூலைச் சேர்ந்தவங்கனு புரிஞ்சுக்கிட்டேன். 

இப்போதானே சினிமாவுல பெண்களின் நிலை குறித்து வெளிப்படையா பேச ஆரம்பிச்சிருக்காங்க?

எல்லாத் துறைகளிலுமே பெண்களைத் தவறான கண்ணோட்டத்துல பார்க்கிற பழக்கம் இருக்கு. சினிமாவுல இன்னும் கொஞ்சம் அதிகம். அப்போ தைரியமா பேசலை. இப்போ பேசுறோம்.

சினிமாக்காரங்கன்னா பர்சனல் விஷயங்களையும் வெளிப்படையாப் பேசணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க. என்னிடம்கூட, ‘பையன் எப்படி இருக்கான்?’னு கேட்பாங்க. அக்கறையா அவங்க விசாரிக்கும்போது, மனசுக்கு சந்தோஷமா இருக்கும். பிரபலமா இருப்பதன் பலன் என்னன்னா, நாங்க சமூகக் கருத்து சொல்லும்போது, அதைக் கடைப்பிடிக்கிறாங்களோ, இல்லையோ குறைந்தபட்சம் காதுகொடுத்துக் கேட்பாங்க.

‘தனிமனித சுதந்திரம்’ என்பதே இந்தத் துறையில கிடையாது. ரகு இறந்தப்போ மீடியாவுல இருந்து பலபேர் வந்திருந்தாங்க. நான் ஸ்கூல்ல இருந்து ரிஷியைக் கூட்டிக் கிட்டு வரும்போது, ‘எங்களுக்குக் கொஞ்சம் பிரைவஸி வேணும். சின்னப் பையன், ரொம்ப அழுவான், கொஞ்சம் வெளியே நில்லுங்க’னு சொன்னாலும் யாரும் கேட்கலை. பையன் அழறதையும் கவர் பண்ணணும்னு அங்கேயே இருந்தாங்க. அது, ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அதனால, ரொம்ப நாள் மீடியாகிட்ட பேசாமலேயே இருந்தேன். ரிஷி என்கூட வெளியே வர்றதுக்கே யோசிப்பான். பலர் போட்டோ எடுக்கிறது அவனுக்குப் பிடிக்காது. ரகுவரன் ஆல்பத்தை ரிலீஸ் பண்றதுக்குக்கூட கஷ்டப்பட்டுதான் அவனைச் சம்மதிக்க வெச்சேன். அவனுக்கு  ‘மீடியா புகழ்’ மேல ஆர்வம் இல்லை. அமெரிக்காவுல ‘ப்ரீ-மெட்’னு ஒரு கோர்ஸ் இருக்கு. மெடிக்கல் படிக்கணும்னு விருப்பப்படுறவங்க, இந்த கோர்ஸை படிக்கணும். முடிச்சிட்டு இந்தியாவுக்கு வந்து சர்வீஸ் பண்ணணும்கிறது, எங்களுக்குள்ள இருக்கிற ஒரு டீல்.

ரகுவரனுடைய இசை ஆர்வம் பத்தி சொல்லுங்களேன்... 

பாப் மார்லி, ஜான் லெனின்... இவங்களை ரகுவுக்கு ரொம்பப் பிடிக்கும். ரகுவுக்கு நண்பர்கள் அதிகமா கிடையாது. அவருடைய நேரத்தை முழுக்க முழுக்க இசையிலதான் கழித்தார். வீடு முழுக்க நிறைய சிடி கலெக் ஷன்ஸ். இப்பவும் அவர் நினைவா பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்.

ஸ்கிரீன்ல அவருடைய ஒவ்வோர் அசைவுகளையும் மக்கள் இவ்வளவு ரசிச்சிருக்காங்கனு அவர் இருக்கும்போதே   தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்பார்னு நினைக்கிறேன். நான் எப்பவுமே, ‘ஒரேயொரு சாவித்திரி, ஒரேயொரு எஸ்.வி.ரங்காராவ், ஒரேயொரு சந்திரபாபு, ஒரேயொரு ரகுவரன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். நான் அவரைப் பாராட்டுறதைவிட, மத்தவங்க அவரைப் பாராட்டும்போதுதான் சந்தோஷமா உணர்வார்.

சமூக ஆர்வலர் என்ற முறையில, தமிழ்நாட்டின் இப்போதைய நிலையை எப்படிப் பார்க்குறீங்க?

நேர்மையான ஆட்கள் ஆட்சி பண்ணணும்; அதுதான் எல்லாருடைய விருப்பமும். மொழி, மதம், இனம், பாலின வேறுபாடுகள் தாண்டி, சமூகத்துக்காகத் தொண்டு செய்யணும். அப்படி நிறைய பேர் இருக்காங்க. நல்லகண்ணு ஐயா இவங்களுக்கெல்லாம் சிறந்த உதாரணம். நல்ல அரசியல்வாதிகளுக்கு ‘ஸ்டார் வேல்யூ’ இல்லாம இருக்கலாம். அவங்களுக்கான முன்னுரிமையை நாமதானே ஏற்படுத்திக் கொடுக்கணும்? `யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா, ஏன் தேர்ந்தெடுக்கிறோம்கிற புரிந்துணர்வோடு இருங்க'ன்னுதான் நான் சொல்வேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... -  ரோகிணி

‘அப்பாவின் மீசை’ என்ன ஸ்டேஜ்ல இருக்கு?

பசுபதி, நாசர், நித்யா மேனன், சலீம் குமார்... எல்லோருமே யதார்த்தமா நடிக்கிறவங்க. இந்தப் படத்துக்காக லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் பண்ணியிருக்கோம். டிஸ்கவரி, அனிமல் பிளானட் சேனல்கள்ல 25 வருஷம் வேலை பார்த்தவர், அல்போன்ஸ் ராய். அவர்தான், ஒளிப்பதிவாளர்.

14 வயசுப் பையனின் வாழ்க்கைதான் படத்தின் கதை.  அதைச் சொல்லியிருக்கிற விதம், நம்ம ஊருக்கு ரொம்பப் புதுசா இருக்கும். படத்தை பாலு மகேந்திரா சாருக்குக் காட்டணும்னு இருந்தேன். அவர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்த தருணத்திலிருந்து மீண்டுவர எனக்கு சில நாள்கள் ஆச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாடி பாரதிராஜா சார் ‘அப்பாவின் மீசை’ படத்தைப் பார்த்தார். நாங்க பயன்படுத்தியிருக்கிற தொழில்நுட்பம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. படம் சீக்கிரமே ரிலீஸ் ஆகும்.

பெண் இயக்குநர்களை சினிமா உலகம் எப்படிப் பார்க்குது?

வேலையில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கி, போஸ்ட் புரொடக் ஷன் வரை எல்லாத்துக்குமே இயக்குநர்தான் பொறுப்பு. பெண்கள் படம் இயக்கும்போது, தயாரிப்பாளர்கள் எங்களை  முழுமையா நம்ப தயாராக இல்லை. பெண்களாலும் நல்ல படம் எடுக்க முடியும்கிற எண்ணம் அவங்க மனசுல கூடிய சீக்கிரம் வரும்னு நினைக்கிறேன். கிரியேட்டிவிட்டியை மட்டும் பார்க்காம, லாப நோக்கத்தையும் முன்வைத்துப் படம் எடுக்கணும்னு நான் நினைக்கிறேன். பாடல்கள் எழுதியிருக்கேன், ஆவணப் படம் எடுத்திருக்கேன், டப்பிங் பண்ணியிருக்கேன், இதெல்லாம் இயக்குநர் ஆகும்போது ஏதோ ஒரு வகையில உதவியிருக்கு. இப்போ நடிப்பா, இயக்கமானு கேட்டா, டைரக்‌ஷன்தான்னு சொல்வேன். நடனத்தை மையப்படுத்தி ஒரு படமும் ஆக்‌ஷன் படம் ஒண்ணும் பண்ற ஐடியாவும் இருக்கு.

அடுத்து?

இப்போ நடிச்சிருக்கிற `டிராஃபிக் ராமசாமி’ படம் எமோஷனலா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த மாதிரி தரமான படங்கள்ல நானும் ஓர் அங்கமா இருக்கணும்னு ஆசைப்படுறேன். சமகாலத்துல டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒருத்தர் இருக்கிறதை நினைச்சு நாம எல்லாருமே சந்தோஷப்படணும். இந்தப் படத்திலேயும், ‘கோலிசோடா 2’ படத்திலேயும் எனக்குச் சின்ன கேரக்டர்கள்தான். ஆனா, ரெண்டுமே முக்கியமானவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism