தமிழ்நாட்டின் தங்க மகளாகப் பிறந்த சமந்தா இன்று ஆந்திராவின் மருமகளாகி யிருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய ரோலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து இவர் நடித்த ‘மாஸ்கோவின் காவிரி’, ‘பானா காத்தாடி’ படங்கள் வெற்றிதேடித் தரவில்லை என்றாலும், ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் டாப் நடிகைகளின் வரிசையில் வந்தவர். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவுக்கு ஹலோ சொல்கிற இவர், ‘நான் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் நடிப்பேன்’ என்று டபுள் தம்ஸ்-அப் காட்டுகிறார். இப்போது ‘யூ-டர்ன்’ தமிழ் ரீமேக் மற்றும் ‘சீமராஜா’ படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தாவின் வாவ் ஃபேக்ட்ஸ் இதோ...

* அப்பா தெலுங்கு. அம்மா மலையாளம். பிறந்து வளர்ந்தது சென்னையில் என்பதால் தன்னைத் ‘தமிழ்ப் பெண்’ என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார் சமந்தா. சைக்காலஜி படிக்க வேண்டும் என்பது கனவு. பி.காம் கோல்ட் மெடலிஸ்ட்.
* படிக்கும்போதே அவ்வப்போது மாடலிங் செய்தால், பாக்கெட் மணி கிடைக்கும் என்றுதான் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தாராம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* நண்பர்கள் இவரை ‘சாம்’ என்று கூப்பிட்டாலும், குடும்பத்தில் ‘யசோதா’ என்றுதான் அழைக்கிறார்கள். ‘சமந்தா’ என்றால், ‘கடவுள் சொல்வதைக் கேட்பவர்’ என்று அர்த்தமாம். சமத்துதான்!
* ‘சன் ஆஃப் சத்யமூர்த்தி’ என்ற தெலுங்குப் படத்தில், எப்போதும் சாக்லேட் சாப்பிடும் நீரிழிவு கொண்ட பெண்ணாக நடித்திருந்த சமந்தா, உண்மையிலேயே 2013-ம் ஆண்டு நீரிழிவு சார்ந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்தார். சில ஆண்டுகள் தீவிர சிகிச்சையில் இருந்த காரணத்தால் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்திலும் ஷங்கரின் ‘ஐ’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பினை இழக்க நேரிட்டது.

* சமந்தாவின் இன்ஸ்பிரேஷன் நடிகை ரேவதி. கல்லூரி காலத்தில் ரேவதி நடித்த படங்களின் சிடிக்களைப் போட்டுப் பார்த்து, கண்ணாடி முன்நின்று அவரைப் போலவே நடித்துப் பார்த்திருக்கிறார்.

* சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ‘சீமராஜா’ திரைப்படத்துக்காக ஒரு மாதம் பயிற்சி எடுத்துக்கொண்டு சிலம்பம் கற்றுக்கொண்டிருக்கிறார் சமந்தா.

* ‘ப்ரத்யுஷா சப்போர்ட்’ என்ற தன்னார்வ அமைப்பை நிறுவி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவச் செலவு, படிப்புச் செலவு போன்றவற்றைச் செய்துவருகிறார்.
* சமந்தாவின் சம்பளம் பல லட்சங்களைத் தாண்டினாலும், அதில் பெரும்பகுதியைச் சமூகப் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

* ரோண்டா பிரயன் எழுதிய ‘தி சீக்ரெட்’ புத்தகத்தை இதுவரை ஆயிரம் முறை வாசித்திருக்கிறார் சமந்தா. மனம் தளரும்போதெல்லாம் முதலில் இவர் தேடுவது ஒரு கப் டீயையும் இந்தப் புத்தகத்தையும் தான். ‘நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்’ என்கிற கோட் பாட்டை மையமாகக்கொண்டது இந்தப் புத்தகம். சமந்தாவும் நல்லெண்ணத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவரே!

* கடல் உணவுகளை அரை வேக்காடாக வேகவைத்து அத்துடன் காய்கறிகளைச் சேர்த்துச் செய்யப்படும் ‘ஷுஷி’ என்ற ஜப்பான் உணவு வகைதான் சமந்தாவின் ஆல் டைம் ஃபேவரைட். இனிப்பு வகையில் பால்கோவா வாங்குவதற்கென்றே பிரத்யேகக் கடைகளைத் தேடிச் சென்ற அனுபவம் இவருக்கு இருந்திருக்கிறது என்கிறார் சமந்தா.

* திருமணத்துக்குப் பிறகு கோபப்படுவதைக் குறைத்துக் கொண்டுள்ள சமந்தா, மாலை ஆறு மணிக்கு வீடு திரும்புவதை வழக்கமாக்கியிருக்கிறார். வீட்டில் சினிமா பற்றிப் பேசக் கூடாது என்பது சமந்தா - நாக சைதன்யா தம்பதிக்கு இடையேயான டீல்.

* “திரைப்பட உலகில் திருமணமான பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகும் பிஸியாக நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும்” என்று கணவர் நாக சைதன்யா விருப்பப்பட்டதால், அவரது விருப்பத்துக்கு இணங்க சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமந்தா. வெற்றிகாண வாழ்த்துகள்!
* தெலங்கானா அரசு கடந்த ஆண்டு தொடங்கிய நெசவாளர்களுக்கான ‘ட்வீக்’ நிறுவனத்தின் தூதுவரான சமந்தா, கைத்தறியில் புதிய தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.