சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்!”

“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்!”

சுஜிதா சென் - படம்: ப.சரவணகுமார்

“என்னோட கணவர் என்னைப் பொண்ணு பார்க்க வந்தப்போ, ‘படத்துல பாட்டு பாடணும்ங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்கு நீங்க ‘நோ’ சொல்லக் கூடாது’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லும் பிருந்தா, சிவக்குமார் குடும்பத்தின் கடைக்குட்டி.  ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தில் பாடியதன் மூலம் தன் கனவை நிறைவேற்றியிருக்கிறார்.

“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்!”

“இசை ஆர்வம் எப்போதிலிருந்து தொடங்கியது?”

“எட்டாவது படிக்கும்போது ஸ்கூல் ஆண்டுவிழாவில் ‘போவோமா ஊர்கோலம்’  பாடினேன். அதுதான் முதன்முதல்ல மேடையேறிப் பாடிய அனுபவம். அப்புறம் முறைப்படி கர்நாடக சங்கீதமும் இந்துஸ்தானி இசையும் கத்துக்கிட்டேன்.”

“முதல் பட வாய்ப்பு ஏன் இவ்வளவு லேட்?”

“10-வது படிச்சுட்டிருந்தப்போ, கார்த்திக் ராஜா சார் என்னைப் பாடுறதுக்காகக் கூப்பிட்டார்.  படிப்புல கவனம் செலுத்தணும்னு, அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க. அவங்களை மீறி எதுவும் செய்ய முடியலை. அதுக்கப்புறம் படிப்புலயே காலம் ஓடிப்போச்சு. குடும்பத்தோட உதவி இல்லாம  திறமையை வெச்சு வாய்ப்புத் தேடணும்னு நினைச்சேன். அதுக்குத்தான் இத்தனை நாளா காத்துகிட்டு இருந்தேன்.

சாம் சி.எஸ் சார் எவ்வளவு எளிமையாப் பாட்டுக் கத்துக்கொடுத்து ரெக்கார்டிங் பண்ண முடியுமோ, அந்தளவுக்கு சுலபமா சொல்லிக்கொடுத்தார். ரெக்கார்டிங் முடிஞ்சப்போ, ‘நல்லா இருந்தா மட்டும் ரிலீஸ் பண்ணுங்க. இல்லைனா வேற யாரையாவது வெச்சு ரெக்கார்டிங் பண்ணிக்கங்க சார்’னு சொன்னேன். ஆனா, பாடல் ரொம்ப நல்லா வந்துருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க.”

“பாடகியா வீட்ல என்ன ரெஸ்பான்ஸ்?”


“நான் சின்ன வயசா இருக்கும்போது அப்பா ஸ்கூலுக்கு நடக்க வெச்சுக் கூட்டிட்டுப்போவார். அப்போ என்னைப் பாட்டு பாடச் சொல்லி கேட்பார். நான் பாடுறதுலேயே அவருக்குப் பிடிச்ச பாட்டு, ‘போறாளே பொன்னுத்தாயி’தான். நான் பாடினா மனம் உருகி அழுதுடுவார். 

கார்த்தி அண்ணா நான் பாட ஆரம்பிச்சா என்கூட சேர்ந்து பாடுவார். எங்களுக்குள்ள நிறைய கலாட்டா நடக்கும். நான் கர்நாடக சங்கீதம் கத்துக்கிறப்போ, அண்ணாவும் கத்துக்கிட்டார். சூர்யா அண்ணாவுக்கு என்கூட செலவழிக்க நேரமே கிடைக்காது. அப்படியே நாங்க ரெண்டு பெரும் சேர்ந்தா, சண்டைதான் போடுவோம். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் பக்கா ஜென்டில்மேன் ஆயிட்டார்.

அப்பா நான் பண்ற அத்தனையையும் ஊக்குவிப்பார். அம்மா ஒரு சிறந்த விமர்சகர். என்னோட நிறைகுறைகளை அவங்ககிட்ட இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

எங்களோட வீட்டை அலங்காரப்படுத்துறது ஜோ அண்ணிதான். ரஞ்சனி அண்ணி ரொம்ப பாசக்கார அண்ணி”

“கல்யாணத்துக்கு அப்புறமும் ஜோதிகா தொடர்ந்து நடிக்கிறதை உங்க குடும்பத்தில் எப்படிப் பார்க்கிறாங்க?”

“வெளியே இருந்து பார்க்கிற அளவுக்கு நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் குடும்பம் கிடையாது. அவங்கவங்களுக்கு என்னென்ன பிடிக்குமோ, அது எல்லாத்தையும் செய்யலாம்.  கல்யாணத்துக்கு அப்புறம், பவர்ஃபுல் கதாபாத்திரங்கள் நிறைய ஜோ அண்ணிக்குக் கிடைச்சிருக்கு. கதையை செலக்ட் பண்ற பக்குவம் அண்ணிக்கு அதிகமாகவே இருக்கு. அதே சமயம் குடும்பத்தையும் ரொம்ப மெனக்கெட்டுப் பார்த்துக்குறாங்க. அவங்க மாதிரி எங்க குடும்பத்தை யாராலயும் தாங்க முடியாது. இப்படி குடும்பம், சினிமா ரெண்டையும் சமாளிக்கிறதுதான் அண்ணியோட பலம்.!”