சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!”

“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!”

சுஜிதா சென்

“நான் பஞ்சாபிப் பொண்ணு. ஆனா, தெலுங்குப் படங்கள்ல அதிகமா நடிக்கிறதுனால, தெலுங்கு சரளமா பேசக் கத்துக்கிட்டேன். இப்போ, தமிழ் கத்துக்கிட்டிருக்கேன்.” - விழிகள் விரியப் பேச ஆரம்பிக்கிறார், ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவின் புதிய செல்லம்.

“எப்படி இருக்கு தமிழ் சினிமா?”

“செமையா இருக்கு. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் காட்ட வேண்டியிருக்கு. செல்வராகவன் சார் படத்தில எனக்கும் சூர்யா சாருக்கும் சீரியஸான கதாபாத்திரம். சிரிக்கக்கூட நேரமில்லாதவங்க மாதிரி இருப்போம். செல்வா சார் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெச்சிருக்கிற வரையறைகள் ரொம்பப் பிரமாதமா இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்ல சூர்யா சார் ஒரு நடிகர் மாதிரியே தன்னைக் காட்டிக்க மாட்டார். நேரத்துக்கு வர்றது தொடங்கி, எல்லோர்கிட்டேயும் கலகலப்பா பேசுறது வரை... பக்கா ஜென்டில்மேன்!.

“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!”

செல்வராகவன் சார் படத்துக்கு நேரெதிர், சிவகார்த்திகேயன் படம். சிவா சாரைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே அவர் நடித்த படங்களைப் பார்த்து அவரோட ரசிகையாவே மாறிட்டேன். எனக்கும் சிவா சாருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்துல நடிக்கிறது இதுதான் முதல் முறை. ஜூன் மாசத்துல இருந்து இந்தப் படத்தோட ஷூட்டிங் தொடங்குது.

அடுத்து, கார்த்தி சார்கூட ரெண்டாவது முறையா சேர்ந்து நடிக்கிறேன். ஃபுல் ரொமான்ஸ் மூவி. முதல் படத்தைவிட இந்தப் படத்தில எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு. மூணு படங்களுக்கான ஷூட்டிங்கும் சென்னையில நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வருஷம் முழுக்க சென்னைதான்!”

“தெலுங்குல கிளாமரா நடிக்கிறதுக்கு உங்க ஃபேமிலி ரியாக்‌ஷன் என்ன?”

“கிளாமரா நடிக்கிறதும் நடிப்புல ஒரு அங்கம்தான். நடிப்புன்னு வந்துட்டா இதையெல்லாம் ஆராயக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்களும் அதைத்தான் நினைக்கிறாங்க.”

“ ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ (Beti Bachao, Beti Padhao) திட்டத்துல தெலங்கானா மாநிலத் தூதுவரா இருக்கீங்க. உங்களோட பொறுப்புகள் என்னென்ன?”


“இந்த அமைப்போட முக்கிய நோக்கம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கணும்கிறதுதான். ஒரு பெண் குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறது, அந்தக் குடும்பத்துக்கே பாடம் சொல்லிக்கொடுக்கிறதுக்குச் சமம். இந்தியாவுல இருக்கிற அத்தனை பெண் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கணும். யாரும் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. சினிமாப் பிரபலங்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கு. கிராமத்தில சினிமா பார்க்கிறவங்க நடிகர்களைக் கடவுள் மாதிரி நினைக்கிறாங்க. அவங்ககிட்ட நேரடியா போய் நாம விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம்னா, கட்டாயம் மாற்றம் வரும்.”

“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!”

“ ‘காஸ்டிங் கவுச்’ (Casting Couch) எனக்கு நடந்ததில்லை’னு நீங்க கொடுத்த ஸ்டேட்மென்டுக்கு சினிமா நடிகைகள்கிட்ட இருந்து பலத்த எதிர்ப்பு வந்துச்சு. உண்மையிலேயே இந்த மாதிரியான சந்தர்ப்பத்தை நீங்க கடந்து வந்ததில்லையா?”  

“சினிமாவுல திறமைக்குத்தான் மரியாதை. Casting Couch-க்கு இடம் கொடுக்கிறதுனால, நமக்கு சினிமா வாய்ப்பைக் கொடுக்கப்போறதில்லை. நான் அறிமுகமான தெலுங்கு சினிமாத் துறையிலேயும் இந்த மாதிரியான பழக்கம் இல்லை. தமிழ் சினிமாவிலும் என்னை யாரும் அப்படி அணுகியதில்லை. திறமையை வளர்த்துக்கிட்டு சினிமாவுல வாய்ப்பு தேடுற அத்தனை பேருக்கும் நல்ல வழியில அங்கீகாரம் கிடைக்கும். ‘ஈஸி கேர்ள்’ங்கிற பேச்சுக்கே இடம் கொடுக்கக்கூடாது!”

“ ‘நடிகர்களோட சம்பளத்தை வெளிப்படையா தெரிவிக்கணும்’ங்கிறது தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் எடுக்கப்பட்ட முடிவுகள்ல ஒண்ணு. உங்க சம்பளம் என்ன?”


“முதல்ல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு வெளிப்படையா சொல்லட்டும். அதுக்கப்பறம் நடிகைகளோட சம்பளத்தைக் கேளுங்க. கண்டிப்பா நடிகர்களைவிட நாங்க பல மடங்கு குறைவாதான் சம்பளம் வாங்குறோம். ஆனா, சினிமாத் துறையினர் எல்லாருமே வருமானவரியைச் சரியா கட்டுறோம். அதனால, சம்பளத்தை வெளியே சொல்றதுல எந்தவிதத் தவறும் இல்லை. எல்லா நடிகர்களும் முன்வந்து சொல்லட்டும், நானும் சொல்றேன்!”