சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

‘மகாநடி’ என்னும் மகாநதி!

‘மகாநடி’ என்னும் மகாநதி!
பிரீமியம் ஸ்டோரி
News
‘மகாநடி’ என்னும் மகாநதி!

விகடன் டீம்

டிப்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த சாவித்திரியின் புன்னகையும் கண்ணீரும் நிறைந்த அசல் வாழ்க்கையையும், வெற்றிகளும் தோல்விகளும் நிரம்பிய சினிமா வரலாற்றையும் ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் விவரிக்கிறது ‘நடிகையர் திலகம்’.

‘மக்கள் வாணி’ பத்திரிகை நிருபரான மதுரவாணிக்கு (சமந்தா), கோமாவிலிருக்கும் நடிகை சாவித்திரி பற்றி செய்திக் கட்டுரை எழுதுவதற்கு அசைன்மென்ட் தரப்படுகிறது. வேண்டா வெறுப்பாக சாவித்திரியைப் பற்றி செய்தி சேகரிக்கச் செல்லும் மதுரவாணி, சாவித்திரி வாழ்க்கையோடு தொடர்புள்ள பல்வேறு நபர்களின் வழியாக ‘நடிகையர் திலகம்’ குறித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வியக்கிறார். அவரது வாழ்க்கைக் கதையை எழுதுகிறார். கூடவே பார்வையாளர்களான நாமும் பயணிக்கிறோம்.

‘மகாநடி’ என்னும் மகாநதி!

தந்தை முகம் காணாது விதவைத் தாயோடு தொடங்கும் பால்யம், நாட்டியத்தின் மீதும் நடிப்பின் மீதுமான ஆர்வம், சினிமா ஆசையில் சென்னையில் வந்து போராடியது, நடிகையானது, புகழின் உச்சத்துக்குப் போனது, ஜெமினி கணேசனுடனான காதல், திருமணம், பிரிவு, துயரும் தனிமையும் மதுவும் மிகுந்த இறுதிக்காலம் என எவரையும் கலங்கடிக்கச் செய்யும் ஒரு பெண்ணாளுமையின் வாழ்வு, மிக நேர்த்தியான சினிமாவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரத்தமும் சதையுமான அசலான கலைப்படைப்பைத் தந்ததற்கு இயக்குநர் அஷ்வின் நாக்  திறமையை மனம் திறந்து பாராட்டலாம்.

படம் தொடங்கி 15 நிமிடங்களுக்குப் பிறகு சாவித்திரியாகத்தான் தெரிகிறார் கீர்த்தி சுரேஷ். வெகுளித்தனம், காதல், கோபம், கம்பீரம், தனிமை, ஏக்கம் என கீர்த்தி ‘மகா நடி’யை அபாரமாக பிரதிபலித்திருக்கிறார்.  அதிலும் குண்டான தோற்றத்தில் அப்படியே அச்சு அசல் சாவித்திரியேதான்!

காதல் ரசம் ததும்பும் ரொமான்ஸ் காட்சிகள், மனைவியுடனான ஈகோ எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆகியவற்றில் சிறப்பாக நடித்திருந்தாலும் கடைசிவரை துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நம் கண்களுக்குத் தெரியவேயில்லை என்பது துயரம்தான். தோற்றம், உடைகள், குரல் என எதிலுமே ஜெமினி கணேசனின் சாயல் துளியளவும் இல்லையே!

படத்தில் ‘பெத்த நாணா’வாக வந்து நையாண்டி, கோபம், ஆதங்கம், துயரம் என அத்தனை உணர்வுகளையும் பிரமாதமாய்ப் பிரதிபலித்திருக்கிறார் ராஜேந்திர பிரசாத்.

‘மகாநடி’ என்னும் மகாநதி!

ஒளிப்பதிவாளர் டேனி சா லோ, பல்வேறு காலகட்டங்களை, மன உணர்வுகளைத் தனது ஒளிப்பதிவின் வழியே சிறப்பாய் உணர்த்தியிருக்கிறார். மிக்கி ஜே மேயரின் இசை படத்துக்குப் பலம். கலை இயக்குநர், ஆடை வடிவமைப்புக் குழு, ஒப்பனைக் கலைஞர்கள்  எனப் பலரும் ‘நடிகையர் திலக’த்தின் வாழ்க்கையைத் திரைக்குக் கொண்டுவர மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். பின்பாதியில் உடல் எடை கூடிய சாவித்திரியைக் கண்முன் கொண்டுவருகிறார் ஒப்பனைக் கலைஞர். ஒரு சில நொடிகளே திரையில் வந்தாலும், பிரகாஷ்ராஜ், மனோபாலா, மாளவிகா நாயர் போன்றவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள். ’சங்கரய்யா’ பாத்திரப் பின்னணி, கிராபிக்ஸ்  என்.டி.ஆர் மாதிரி சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் கவனம் ஈர்க்கின்றன. சமந்தா - விஜய் தேவரகொண்டா காட்சிகளைக் குறைத்து படத்தை இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம்.

படத்தின் முக்கியமான பலம் மதன் கார்க்கியின் வசனங்கள். “எனக்காகத்தான் குடிக்கிறீங்களா?”,

‘மகாநடி’ என்னும் மகாநதி!

“தோல்வியிலகூட எனக்கு கிரெடிட் தர மாட்டியா?” - வசனம் ஒரு சாம்பிள்.

 தெலுங்கில், ‘மகா நடி’யாக எடுக்கப்பட்ட படம் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. சாவித்திரிக்கும் தெலுங்குத் திரையுலகத்துக்கும் உள்ள உறவு விரிவாக விவரிக்கப்பட்ட அளவுக்குத் தமிழ் சினிமாவுக்கும் சாவித்திரிக்கும் உள்ள உறவு விவரிக்கப்படாதது, நம் பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்தான். குறிப்பாக ‘நவராத்திரி’, ‘பாவ மன்னிப்பு’, ‘திருவிளையாடல்’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘கர்ணன்’, ‘காத்திருந்த கண்கள்’ என்று நாம் பார்த்து ரசித்த ‘சாவித்திரி’யை ஏனோ காட்சிப்படுத்தவேயில்லை. சாவித்திரி - ஜெமினி கணேசன் உறவும் பிரிவும் ஒருதரப்புப் பார்வையிலிருந்துதான் விவரிக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த இந்திய சினிமாவுலகில் மிகச்சிறந்த நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவதும் அது கலாபூர்வமான படைப்பாக வெளியாகியிருப்பதும் வரவேற்கத்தக்கது.