சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?
பிரீமியம் ஸ்டோரி
News
டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

அனிருத் - நயன் - சிவகார்த்திகேயன் ‘கோகோ’ கூட்டணி!ம.கா.செந்தில்குமார்

கீபோர்ட் மீது விழும் சூரிய ஒளி,  மெல்லிய ஏசி குளிர், எங்கிருந்தோ சன்னமாக ஒலிக்கும் இசை... அனிருத்தின் ரெகார்டிங் ஸ்டுடியோ சூழலே மயக்குகிறது. அடுத்தடுத்த திட்டங்கள், தனுஷுடனான நட்பு, சிவகார்த்திகேயனைப் பாடலாசிரியர் ஆக்கியது, ‘கோலமாவு கோகிலா’, குடும்ப வாழ்க்கை என எக்கச்சக்கமான கேள்விகளோடு அவரைச் சந்தித்தேன்.

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

“ரஜினியின் அடுத்த படத்துக்கு நீங்கதான் இசையமைப்பாளர். ஹேப்பி..?”

“ `தலைவர் படம் ஒண்ணாவது வாழ்க்கைல பண்ணணும்’ என்பதுதான் இங்கே இருக்கிற எல்லா டெக்னீஷியன்களின் கனவும். என் கனவும் அதுதான். அரசியல் கட்சி ஆரம்பிச்சபிறகு சினிமாவுல நடிக்கிறதையே நிறுத்திட்டார்னா நமக்கு அந்த வாய்ப்பே வராதோன்னுகூட நினைச்சுப் பயந்திருக்கேன். 

கார்த்திச் சுப்பாராஜ் போன் பண்ணிப் பேசினது செம சர்ப்ரைஸ். ஆனா மனசுக்குள்ள பெரிய பயமும் இருக்கு. கார்த்திக் சுப்பாராஜும் தலைவரோட பெரிய ரசிகர். அவர் ஒரு ரசிகர் மனநிலையில இருந்து ஸ்கிரிப்ட்  எழுதியிருக்கார். எனக்கும் ஒரு ரசிகனா நிறைய ஆசைகள் உண்டு. இந்த இரண்டும் சேரும்போது மியூசிக் நல்லா வரும்னு தோணுது. பரபரப்பா வேலைகளை ஆரம்பிச்சிட்டேன்.”

“ரஜினி என்ன சொன்னார்?”

“என் சின்ன வயசுல பெரும்பாலும் போயஸ்கார்டன்ல தலைவர் வீட்லதான் இருப்பேன். அங்கே இருக்கும் பியானோவை வாசிச்சுட்டே இருப்பேன். நாலு வயசுல நான் வாசிக்கிறதைப் பார்த்துட்டு தலைவர் என்னை `ஜீனியஸ்’னுதான் கூப்பிடுவார். எப்பவுமே என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். இந்த வாய்ப்புக்குப்பிறகு ‘அனி சூப்பர், ரொம்ப ஹேப்பி. தூள் கிளப்பிடுவோம்’னார். நிச்சயமா கிளப்புவேன்.”

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

“குறிப்பிட்ட இடைவெளியில சர்ச்சைகள்ல சிக்குறீங்களே?”

“நமக்கும் கான்ட்ரவர்ஸிக்கும் அப்படி ஒரு பந்தம். பாட்டு, படம், போட்டோ, வீடியோனு. வருஷத்துக்கு ஒரு குருமா நடக்கும். ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. கிஸ் பண்ற போட்டோ வெளியில வந்த சமயத்துல நான் ஊர்லயே இல்லை. ஃப்ளைட்டைப்பிடிச்சு பாம்பே பறந்துட்டேன். சென்னை திரும்பினபிறகுகூட வெளியில போகலை. ரெண்டு மாசம் கழிச்சு நான் படிச்ச லயோலா காலேஜ்ல சீஃப் கெஸ்டா கூப்பிட்டாங்க.  அங்கேயும் 10 பேர்கொண்ட வேற காலேஜ் கும்பல் கத்த ஆரமபிச்சுட்டாங்க. ‘ஏங்க, ஒரு பொண்ணை அவங்க சம்மதத்தோட கிஸ் பண்ணியதுல என்னங்க தப்பு’னு சொன்னேன். அலறிட்டாங்க. அப்பாடா... இதோட முடிஞ்சுதுடானு நினைச்சேன். ஆனா  இப்ப சர்ச்சைகள்  சாதாரணமாயிடுச்சு. நமக்கு கல்யாணம் ஆகுறவரைக்கும் அப்படித்தான் இருக்கும் போலிருக்கு.”

`` ‘கோலமாவு கோகிலா’வில் என்ன ஸ்பெஷல் ?’’

“நண்பர் நெல்சனோட படம்.  என்னோட கான்செர்ட்டெல்லாம் அவர்தான் டைரக்ட் பண்ணுவார். அப்படி உண்டான நட்பு அது. ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம்னு முடிவு பண்றாங்க. என்னாகுதுங்கிறதுதான் கான்செப்ட்.  இதை நெல்சன் டார்க் ஹியூமர் ஜானர்ல காமெடியாப் பண்ணியிருக்கார். படம் செம ஜாலியா இருக்கும்.

நயன் ரொம்ப ஃப்ரெண்ட்லி. சமயத்துல விருந்து லெவல்ல சாப்பாடு சமைச்சு அனுப்புவாங்க. அவங்களுக்கு என் மியூசிக் எப்பவும் பிடிக்கும். ‘நான் உங்க பெரிய ஃபேன்’னு மெசேஜ் அனுப்புவாங்க.அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள். ஆனால் இன்னும் தன்னை டாப் லெவல் ஹீரோயினா மெயின்டெயின் பண்றாங்கன்னா அது பாராட்டப்படவேண்டிய விஷயம்”

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

“‘கோலமாவு’ ஆல்பத்துல என்ன எதிர்பார்க்கலாம்?”

“மொத்தம் ஆறு பாடல்கள். ஆறுமே ஏற்கெனவே ஷூட் பண்ணிட்டு வந்த மான்டேஜ் காட்சிகளுக்கு நான் போட்ட பாடல்கள். இதுல சிவகார்த்திகேயன் எழுதின பாட்டு ஒண்ணு இருக்கு. செம ஃபன். படத்தில் நயன்தாராவை ஒன்சைடாக் காதலிக்கும் யோகிபாபு பாடற பாட்டு அது. ஆனா ‘சிவகார்த்திகேயனை மனசுலவெச்சு கம்போஸ் பண்ணினா எப்படி இருக்குமோ அப்படி யூத்தாப் பண்ணுவோம். நிச்சயம் ரீச் ஆகும்’னு சொன்னேன். அதை சிவாவே எழுதினா நல்லா இருக்கும்னு நினைச்சு சொன்னோம். அவரும் நட்புக்காக பண்ணித்தந்தார். ‘எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி... டேட் பண்ணவா, இல்ல சாட் பண்ணவா? கூட சேர்ந்து வாழுற ஆசை வந்துடுச்சுடி... மீட் பண்ணவா, இல்ல வெயிட் பண்ணவா’னு செம ஜாலியா எழுதிக்குடுத்தார். சூப்பரா வந்திருக்கு சாங்!”

“மற்ற இசையமைப்பாளர்கள் இசையில பாடுறீங்க. எந்தத் தயக்கமும் இல்லையே?”

“நான் பாடுவதன் மூலம் அந்தப் படத்துக்கோ பாட்டுக்கோ எக்ஸ்ட்ரா பூஸ்ட் கிடைக்கும்னா நிச்சயம் பாடிடுவேன். பாடுறதுக்குக் காசு வாங்குறதும் இல்லை. ரஹ்மான் சாரா இருந்தாலும்  சரி, புதுசா வர்ற மியூசிக் டைரக்டரா இருந்தாலும் சரி, யார் கூப்பிட்டாலும் போய்ப் பாடிட்டு வந்துடுறேன். தவிர அவங்ககூட ஒர்க் பண்ணும்போது அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்களை நான் கத்துக்கிறேன் ”

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

“இந்தப் பயணத்தில் உங்க வாழ்க்கையை மாற்றிய விஷயம்னு எதைச்சொல்லுவீங்க?”

“30 வயசுக்குள்ள இசையமைப்பாளரா ஆகணும் என்பதுதான் என் லட்சியம். எங்க அப்பா ஒரு பேங்கர். எனக்கு சிங்கப்பூர்ல ஒரு நல்ல ஃபைனான்ஸ் கோர்ஸ் கிடைச்சது. அப்ப நான் எடுத்த முடிவுதான் இன்னைக்கு என் நிலைக்குக் காரணம். ‘இங்கேயே ஒரு டிகிரி பண்றேன். அந்த மூணு வருஷத்துல மியூசிக்ல வாய்ப்புக் கிடைச்சிடுச்சுன்னா. இங்கேயே செட்டில் ஆகிடுறேன். இல்லைனா நீங்க சொல்றபடி ஃபாரின் போறேன்’னு சொன்னேன். அவரும் ஒப்புக்கிட்டார். 

அரவிந்த்னு என் நெருங்கிய நண்பன், ஸ்கூல்ல இருந்தே ஃப்ரெண்ட். ‘மச்சான் நான் ஒருநாள்  மியூசிக் டைரக்டர் ஆகிடுவேன். நீ போய் சவுண்ட் இன்ஜினீயர் படிச்சிட்டுவா’னு சொன்னேன். டெல்லி போய் சவுண்ட் இன்ஜினீயரிங் கத்துகிட்டு இருந்தான். காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்லயே `3’க்கு முன்னாடியே ஒரு படத்தில் கமிட் ஆனேன். ‘எனக்குப் படம் கிடைச்சிடுச்சு. வாடா மச்சான்’னு அரவிந்தைக் கூப்பிட்டேன். அவனும் வந்தான். ஆறேழு மாசம் பரபரப்பா ஒர்க் பண்ணி ஆறு பாடல்கள் முடிச்சோம். திடீர்னு அந்தப் படத்தைக் கிடப்புல போட்டுட்டாங்க. விஷயத்தை வீட்ல சொன்னேன். ‘ஒண்ணும் பிரச்னையில்லை. டிகிரியை இங்கே முடி. ஃபாரின்ல போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சு இன்வெஸ்மென்ட் பேங்கர் ஆகிடலாம்’ன்னு சொன்னாங்க.

‘நீ இந்த ஃபேமிலியை சார்ந்தவன்னு சொல்லாம நீ பண்ணின பாடல்கள் எல்லாத்தையும் சீடியாப் போட்டு இயக்குநர்களுக்குக் கொடுப்போம்’னு அரவிந்த் ஒரு ஐடியா சொன்னான். கௌதம் மேனன் தொடங்கி ஷங்கர் சார் வரை இன்னைக்குப் பரபரப்பா ஒர்க் பண்ணிட்டு இருக்கிற எல்லா டைரக்டர்களிடமும் அந்த சீடியைக் கொடுத்திருக்கோம். ஆனால் எதுவும் நடக்கலை.

காலேஜ் செகண்ட் இயர்லதான் ‘3’ படத்துல கமிட் ஆனேன். ‘கத்தி’ படம் பண்ணும்போது அரவிந்த் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான். இப்பயும் ஏதாவது ட்யூன் வரலைனா... என் கீபோர்ட் மேல இருக்கிற அரவிந்த் போட்டோவைத்தான் பார்ப்பேன். ‘உன்னால முடியும்டா மச்சான்’னு அவன் என்கிட்ட சொல்ற மாதிரியே இருக்கும்”

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

“தனுஷுடனான உறவுப் பயணம்...?”

“இப்ப அவர் சினிமாவே டைரக்ட் பண்ணிட்டார். ஆனா அப்ப அவர் ஷார்ட் ஃபிலிம் எடுப்பார். அதுல அவர் ஷூட் பண்ணும்போது நான் நடிப்பேன். நான் ஷூட் பண்ணும்போது அவர் நடிப்பார். அப்படி ‘3’ படம் எடுக்குறதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஹாரர், காமெடி, லவ்-னு வெவ்வேற ஜானர்கள்ல  கிட்டத்தட்ட 10 குறும்படங்கள் பண்ணினோம். அவர் கதை. நான் மியூசிக். எடிட் எல்லாமே என் கம்ப்யூட்டரில்தான் நடக்கும். அந்தக் குறும்படங்களுக்காகத்தான் முதல்ல ‘ஒன்டர்ஃபார் ஃபிலிம்ஸ்’னு பேர் வெச்சோம். ஃபேமிலியில உள்ள 10 பேர்தான் அதுக்கு ஆடியன்ஸ். அப்படி பைபோலார் டிஸ்ஸார்டரை வெச்சு எடுத்த ஷார்ட் ஃபிலிம்தான் ‘3’.

 `போ நீ போ...’ பாட்டெல்லாம் அந்த ஷார்ட் ஃபிலிம்லயே இருந்தது. எடுக்கறது 20 நிமிஷப் படமா இருந்தாலும் அதிலும் ரெண்டு பாடல்கள் இருக்கும். ‘3’ படத்தை ஐஸ்வர்யா இயக்கும்போது, தனுஷ்தான், ‘ஷார்ட் ஃபிலிமுக்கு மியூசிக் பண்ணின அனிருத்தே படத்துக்கும் பண்ணினா சூப்பரா இருககும்’னு சொன்னார். என்மீது தனுஷ் வெச்ச நம்பிக்கையில் ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம்.”

டேட் பண்ணவா... சாட் பண்ணவா...?

“தனுஷுக்கும் உங்களுக்கும் இடையில் என்னதான் பிரச்னை? திரும்ப எப்ப சேர்ந்து படம் பண்ணுவீங்க?”

“எங்களைப்பொறுத்தவரை இது ஒரு ஆரோக்கியமான பிரேக். வெவ்வேற ஆட்களோட நான் படம் பண்ணும்போதுதான் எண்ணங்கள் புதுசா இருக்கும். ஆனால் அந்த பிரேக் ரொம்பப் பெருசாகிடுச்சு.  நாங்க திரும்பவும் சேர்ந்து வேலை செய்வோம். 2019 ஜனவரியில் நாங்கள் சேரும் அடுத்த படத்துக்கான அறிவிப்பு நிச்சயம் வரும்.”

தம்ஸ்-அப் காட்டிச் சிரிக்கிறார் அனிருத்.