Published:Updated:

`18 வயசு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனம் ஆனவங்க, இந்தப் படத்தைப் பார்க்காதீங்க!’ - `ஹாலோவீன்' படம் எப்படி?

தார்மிக் லீ
நித்திஷ்
`18 வயசு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனம் ஆனவங்க, இந்தப் படத்தைப் பார்க்காதீங்க!’ - `ஹாலோவீன்' படம் எப்படி?
`18 வயசு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனம் ஆனவங்க, இந்தப் படத்தைப் பார்க்காதீங்க!’ - `ஹாலோவீன்' படம் எப்படி?

40 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கோர சம்பவத்தைத் தோண்டியெடுக்கிறார்கள் இரு நிருபர்கள். அந்தத் தேடல் மீண்டும் ஒரு அகோரத்துக்கு வித்திடுகிறது. 'சதக் சதக்' எனச் சதை வேட்டையில் ஈடுபடும் பாதையில் பயணிக்கிறது. 'ஹாலோவீன்' படம் எப்படி?

இன்றைய ஹாலோவீன் படத்தின் முன்கதை :

தன்னுடைய 6 வயதில் உடன் பிறந்த சகோதரியைக் கொன்றுவிட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மைக்கேல் மையர்ஸ், பின்னொரு நாள் ஒரு ஹாலோவீன் பொழுதில் சிறையிலிருந்து தப்பித்து, மீண்டும் கோரக் கொலைகள் செய்து, தன்னுடைய சைக்கோத்தனத்துக்குத் தீனி போட்டுக்கொள்கிறான். தன் வழியில் குறுக்கிடும் அனைவரையும் வெறியோடு கொலை செய்கிறான். வழியில் பார்க்கும் லெளரி ஸ்ட்ரோடை பின் தொடர்ந்து சென்று அவரின் நண்பர்களைத் தன் ஸ்டைலில் போட்டுத்தள்ளுகிறான். மறுபக்கம் மைக்கேலின் மனநல மருத்துவர் சாமுவேல் லூமிஸ், தன் பேஷன்ட்டை ஊர் முழுவதும் சல்லடைபோட்டு தேடித்திரிகிறார். இறுதியாக லௌரியையும் மைக்கேல் கொல்ல முயலும்போது குறுக்கே புகும் சாமுவேல், மைக்கேலை சுட்டுத் தள்ளுகிறார். குண்டடிபட்டு மாடியிலிருந்து கீழே விழும் மைக்கேல், மாயமாய் மறைவதோடு 1978-ல் நடக்கும் கதை முடிவடையும்.

இன்று...

40 வருடங்கள் கழித்து, 2018-ல் இந்தச் சம்பவத்தை விசாரிக்க முற்படும் ஆரோன் கோரி மற்றும் டானா ஹைன்ஸ் ஆகிய இரு நிருபர்களும், மைக்கேல் சிகிச்சை பெற்று வரும் மனநலக் காப்பகத்துக்கு சென்று அவரைப் பேச வைக்க முயற்சி செய்கிறார்கள். மறுபக்கம் இந்த நாற்பது வருட இடைவெளியில் லௌரி இரண்டு முறை திருமணமாகி, விவாகரத்து பெற்று, பழைய நினைவுகளிலிருந்து வெளிவர முடியாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறார். அவரின் சொந்த மகளே அவரை வெறுக்குமளவுக்கு குடும்பத்தோடு அந்நியப்பட்டு நிற்கிறார். கடந்த பாகத்தில் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததைப்போல், இந்தப் பாகத்திலும் தப்பிக்க ஒரு தக்க சமயம் மைக்கேலுக்குக் கிடைக்கிறது. வழியில் தென்படும் அனைவரையும் நம் கண்கள் கூசும்படி போட்டுத்தள்ளும் மைக்கேல் கடைசியாக லெளரியின் வீட்டை அடைகிறார். பின் ஏற்படும் திக் திக் நிமிடங்கள்தான் படத்தின் மீதிக் கதை.

மக்கள் மனதில் வேரூன்றி நிற்கச் செய்யும் ஒரு பேய் படத்தை எடுப்பதுதான் தற்போதிருக்கும் இயக்குநர்களுக்கு ஒரு சவாலான விஷயம். இந்தியாவிலிருக்கும் கடவுள்களை பேய்த் தனமாக வழிபட்டு நாம் பார்த்திருப்போம். அதற்காகத் திருவிழாக்களும் கொண்டாடுவோம். ஆனால், பேய்களுக்கென்று தனியே திருவிழா கொண்டாடும் வழக்கம் அமெரிக்கர்களுக்கு உண்டு. நாளடைவில் அது எல்லா நாட்டு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படியான கொண்டாட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, அந்த ஹாலோவீன் இரவை முழுவதுமாக கொடூரக் கொலைகளால் மட்டுமே நிரப்பியிருக்கிறது படம். 

`ஸ்லாஷர்' எனப்படும் கொடூரமாகக் கொலைகள் செய்யும் ஜானர் படங்களில் பழைய ஹாலோவீனுக்கு முக்கிய இடமுண்டு. இனி புதிய ஹாலோவீனும் அந்தப் பட்டியலில் இடம்பிடிக்கும். தமிழ் சினிமா ரசிகர்களும் இப்படி ராவான படங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், 'ஹாலோவீன்' ஒரு ராவான 'ராட்சசன்'. 40 வருட 'கொலை'பசிக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒரு சைக்கோ கொலைகாரன் செய்யும் கொலைகள் எப்படியிருக்கும்? வாயைக் காதுவரை கிழித்து, பற்களை நோண்டியெடுத்து... இன்னும் என்னவெல்லாமோ கொடூரங்கள் நடப்பதாக இருக்கும். லௌரியின் குடும்பத்தை வேட்டையாடக் கிளம்பும் மைக்கேல் மையர்ஸ் நடந்து வரும்போது, அவர் வைத்திருக்கும் கத்தியின் விளிம்பில் உங்களது பயத்தின் பிம்பம் தெரிவதைக் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த மாதிரியான படங்களில் 'Jumpscares' மிகவும் முக்கியம். அதை ஆங்காங்கே தெளித்து பயத்தின் நடுக்கம் நம்மை விட்டு அகலாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

பாட்டி கதாபாத்திரத்தில் நடித்த ஜேமி லீ கர்டிஸ் மற்றும் அவரை மிரட்டியெடுக்கும் ராட்சச கொலைகாரன் நிக் காஸ்டில்தான் படத்தின் மாஸ்டர் பீஸ். இந்த இருவருக்கும் நடக்கும் யுத்தம், இதில் பலியாகும் மற்றவர்கள்... இந்த இரண்டையும் நேர்த்தியாகக் கோத்திருக்கிறது டேவிட் கார்டன் க்ரீனின் இயக்கம், ஜான் கார்பென்டர் - கோடி கார்பென்டர் - டேனியல் டேவிஸ் ஆகியோரின் இசையமைப்பு, மைக்கேல் சிம்மன்ட்ஸின் ஒளிப்பதிவு. இந்த ஒட்டுமொத்த கதையையும் ஜேமி லீக்கும், நிக் காஸ்டிலை வைத்துதான் கட்டமைத்திருக்கிறார், இயக்குநர். ஆனால், இதுவேதான் படத்தின் மைனஸும்கூட. இவர்களைத் தவிர இடம்பெறும் மற்ற கதாபாத்திரங்கள் யாரும், கதையோடும் படத்தோடும் ஒட்டாமல் போய்விட்டார்கள்.  

'A' சான்றிதழ் படமென்பதால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டும்தான் இதைப் பார்க்கக் கூடாது என்பதில்லை. இளகிய மனம்கொண்ட எவரும், இந்தப் படத்தைத் தவிர்ப்பது நல்லது. நிமிடத்துக்கு நிமிடம் கோரக் கொலைகளையும், மிரட்டலான ஹார்ட் பீட் நிமிடங்களையும் அனுபவிக்க ஆசைப்படும் சினிமா ரசிகர்கள், கட்டாயம் 'ஹாலோவீன்' திருவிழாவிற்குச் சென்று வாருங்கள். 

'ஃபர்ஸ்ட் மேன்' விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.