Published:Updated:

சம்சாரம் அது மின்சாரம் - நினைவோவியம்

சம்சாரம் அது மின்சாரம் -  நினைவோவியம்
பிரீமியம் ஸ்டோரி
சம்சாரம் அது மின்சாரம் - நினைவோவியம்

சந்தோஷ் – விக்னா, ஓவியம் : ஷண்முகவேல்

சம்சாரம் அது மின்சாரம் - நினைவோவியம்

சந்தோஷ் – விக்னா, ஓவியம் : ஷண்முகவேல்

Published:Updated:
சம்சாரம் அது மின்சாரம் -  நினைவோவியம்
பிரீமியம் ஸ்டோரி
சம்சாரம் அது மின்சாரம் - நினைவோவியம்

ராஜா சிதம்பரம்... நான் வேலை செய்த விளம்பர நிறுவனத்தின் ஆடிட்டர். வயசு முப்பத்திரண்டுதான். ஆனால், நாப்பத்திரண்டு வருஷ அனுபவம் மாதிரி கணக்கு வழக்கில் அவ்வளவு ஷார்ப். காரணம், ஃபேஸ்புக்கில் அவர் பெரிய குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தபோதுதான் விளங்கியது. அவர் அப்பா சிதம்பரத்தை மறக்க முடியாதே... குடும்பத்தையே கார்ப்பரேட் கம்பெனி மாதிரி பாவித்து `கணக்கு வழக்கில்’ அவ்வளவு கறார் காட்டியவர் ஆயிற்றே!

வழக்கம்போல விக்னாவுக்கு ராஜா வீட்டு அட்ரஸ்ஸுடன் ஒரு மெசேஜ் தட்டினேன். அடுத்த சில நொடிகளில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ்கால் அசரீரியாக விக்னா வந்தாள்.

“ ‘அழகிய அண்ணி’ உமாவைச் சந்திக்கப் போறோமா?” என்று ஆச்சர்யப்பட்டவள் “அம்மையப்பன், கோதாவரி எல்லாம் எப்படி இருக்கிறார்களாம்?” என்றாள். “அதெல்லாம் உமாவிடமே கேட்டுருவோம்” என்றேன் நான்.

வளசரவாக்கம் கற்பக விநாயகா காலனி...

“சிதம்பரம் சார்...”

சிரித்துகொண்டே “வணக்கம், வாங்க. ராஜா சொன்னான்” என்றார் கெட்டிதட்டின குரலில். சிதம்பரம் சாருக்குச் சிரிக்க வருமா, கடுகடு முகத்தைக் கூட காலம் எப்படி மாற்றிவிடுகிறது என்று தத்துவார்த்தமாக வியந்தபடி வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தோம்.

“வணக்கம் உட்காருங்க” என்று உமா வந்தார். “என்ன வெயில்? காபி வேண்டாம், குளிர்ச்சியா ஜூஸ் எடுக்கட்டுமா?” என்றார்.

நான் சிதம்பரம் சாரை ஓரக்கண்களால் பார்த்தேன். கிளம்பும்போது ஜூஸுக்கு பில் கொடுப்பாரோ என்னமோ? விக்னா புரிந்து கொண்டு “பரவாயில்ல மேடம்” என்றாள்.

சம்சாரம் அது மின்சாரம் -  நினைவோவியம்

ஜூஸுடன் உமா வருவதற்கு எடுத்துக் கொண்ட பத்து நிமிட இடைவெளியில் சிதம்பரம் சார் பேசினது ஐந்தே ஐந்து வார்த்தைகள்தாம். வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக்கொள்ளும் இடைவெளியில் எந்தக் கஞ்சத்தனமும் காட்டவில்லை அவர். பேசும் சொற்களையும் ‘எண்ணி எண்ணி’ப் பேசினார். வாழ்க்கையையே கணக்கு வழக்காகத்தான் பார்க்கிறார் போல.

உமா வந்து உட்கார்ந்ததும், “சொல்லுங்க மேடம். உங்க குடும்பக் கதையைக் கேட்க ஆர்வமாக இருக்கிறோம்” என்றாள் விக்னா.

“கதையல்ல நிஜம். இது வாழ்க்கையாச்சே” என்றார் சிரித்துக்கொண்டு.

“உங்க மாமனார் அம்மையப்பன் சார்” என்று இழுத்தேன்.

“நல்லா இருக்கார். என்ன கொஞ்சம் வயசாயிடிச்சு. ஆனாலும், அதே துறுதுறு சுறுசுறுன்னு பேச்சுக்கு கொறச்சல் இல்ல. இப்பவும் வீக் எண்டு முழுக்க ஒரே அரட்டை அரங்கம்தான்” என்று கலகலவெனச் சிரித்தார்.
“சோகத்துக்கு உருவம் கொடுத்துச் சேலையைக் கட்டி விட்டமாதிரியே எப்பவும் இருக்கிற உங்க மாமியார் கோதாவரி எப்படி இருக்காங்க?” என்றாள் விக்னா. “இதெல்லாம் நீ எழுதும்போது வெச்சுக்கோ. இப்படியா கேக்கிறது?'' என்று நான் விக்னாவிடம் முணுமுணுத்தேன்.

“சின்ன வயசுலேயே அவங்க அப்படிதான். `ஜானகி தேவி ராமனைத்தேடி’ன்னு அவங்க பாடும்போதுகூட அழுகிற மாதிரியே இருந்திச்சுன்னு எங்க மாமனார் இப்பவும் கிண்டல் பண்ணுவார். அப்புறம் நீங்க கேக்குறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன். மைத்துனர் சிவா அம்பத்தூர்ல சின்னதா ஒரு ஃபேக்டரி ரன் பண்றார். சின்ன மைத்துனர் பாரதி அந்த சேட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி திருவல்லிக்கேணியில செட்டில் ஆயிட்டார். இப்போ இந்தி நல்லா பேசுறார்” என்றார் உமா.

“அந்த வேலைக்காரக் கண்ணம்மா...” என்றேன் நான். “அவர், ‘கம்முனுகெட!’னு சொல்றதே ரகளையா இருக்கும்!'' என்றாள் விக்னா கண்கள் மின்ன.

உமா முகத்தில் சோகம் படரச் சொன்னார், “அவங்க 2015-ல் இறந்துட்டாங்க. அவங்கள எங்க குடும்பத்தின் மூத்த உறுப்பினராதான் பார்த்தோம். அவங்களுக்கு ஒரு பையன் இருந்தான். அவங்க கஷ்டப்பட்டு உழைச்ச காசை எல்லாம் அவன் அழிச்சிட்டதா பேசிக்கிட்டாங்க. என்ன சொல்றது... விதி” என்று நொந்துகொண்டு கண்கலங்கியவர், சட்டென்று சுதாரித்துக்கொண்டு மென் சோகத்துடன் புன்னகைத்தார்.

கோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்க முமாகப் பிரிந்து நின்ற குடும்பத்தைச் சேர்த்து வைக்கப் போட்ட திட்டங்களாகட்டும், சேர்ந்த குடும்பத்தின் நலன் கருதி தனிக்குடித்தனமே பெஸ்ட் என்று எடுத்த முடிவாகட்டும்... உமா வின் புத்திசாலித்தனத்தை மறக்க முடியாது.

“உங்களப்போல ஒரு புத்திசாலி ஏன் கடைசிவரை வேலைக்குப்போகாம குடும்பத் தலைவியாகவே இருந்துட்டீங்க?” என்று விக்னா கேட்டதற்கு சோகம் மறந்து வாய் விட்டே சிரித்தார்.

“வெளியே வேலைக்காக ஏன் போகி றோம்? பொருள் ஈட்ட, திறமைக்கான அங்கீகாரம் தேடி. பொருளாதார நெருக்கடி எங்களுக்கில்ல. என் திறமைக்கான அங்கீகாரத்தை இன்னொருத்தர் தரணும்னு நான் காத்திருக்கல. அவ்வளவுதான்!”

அவ்வளவு எளிமையாக முடித்து விட்டவரை ஆச்சர்யத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்தோம்.

“பணம் சம்பாதிக்கலன்றது மட்டும்தான் குடும்பத்தலைவிகள் சலிப்படையக் காரணம் என்கிறீங்களா மேடம்?” என்று அவரிடம் பேச்சை நீட்டித்தேன்.

“குடும்பத்தலைவிகளா இருக்கற என் தோழிகள் சிலர் சலிப்போட வாழ்க்கையைக் கடத்தறதைப் பார்த்திருக்கேன். `ஹோம் மேக்கிங் இஸ் எ தேங்க்லெஸ் ஜாப்.' யாரும் உங்க கையைப் பிடிச்சு, நன்றி சொல்லப்போறதில்ல. ஒரே மாதிரி வேலைகளை வருடக்கணக்கா செய்யறதும், தன் வயதுடைய மற்ற பெண்கள் சுயமாக இயங்குவதைப் பார்க்கையில் தனக்குத் தன்னம்பிக்கைக் குறைவா உணர்றதும் சலிப்படையக் காரணம். அவங்ககிட்ட சொல்லுவேன், `மனி சேவ்டு இஸ் மனி யேர்ண்டு' சேமிக்கற ஒவ்வொரு ரூபாயும், புதுசா சம்பாதிக்கறது போலத்தான். அப்படிப் பார்த்தால் வீட்டில் இருக்கும் பெண்கள் நிறையவே சம்பாதிக்கறாங்க. வேலை, பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தைத் தருதுங்கறதை நானும் மறுக்கல. ஆனா, அதுமட்டுமே மகிழ்ச்சியின் காரணியா இருக்க முடியாது” என்றதோடு, அவரே தொடர்ந்தார்...

“45 வயதில் மாதவிடாய் நிற்கும்போது, பெண்கள் பலவிதமான உடல், மனநிலை மாற்றங்களை அடையறாங்க. அதேநேரத்தில் குழந்தைகள் வளர்ந்து, தங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு அம்மாவை எதிர்பார்க்காத இடத்துக்குப் போயிடறாங்க. குஞ்சுப்பறவை வளர்ந்துட்டா கூட்டை நீங்கிடறதுபோலத்தான். உடல் உபாதைகள், தான் இனி யாருக்கும் தேவைப்படலன்ற எண்ணம், அதுநாள்வரை தனக்குன்னு நட்புவட்டத்தையோ, யோசனைகளையோ உருவாக்கிக்காமல் இருந்ததுன்னு எல்லாமா சேர்ந்து அவங்க வாழ்க்கையை நரகமாக்கிக்கறாங்க. எல்லாப் பொறுப்பும் நீங்கியதும்தான் இன்னும் உற்சாகமா செகண்டு இன்னிங்ஸ் ஆடத் தொடங்கலாம். ஆனா, அத்தனை நாள் உதாசீனப்படுத்தப்பட்ட உடம்பு தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுடுது.”

“அப்ப வேலைக்குப் போகாத பெண்களுக்கு என்னதான் அடையாளம் இருக்கு?'' - விக்னாஆர்வமாகிவிட்டாள்.

“அடையாளங்கறதே ஒரு பர்செஷன் (உள்ளுணர்வு) தான். நீங்கள் யார் என நீங்கள் நினைப்பதற்கும், உலகம் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் வாழ்நாளையே செலவிட்டாலும் அத்தனை பேரையும் மாற்றிவிட முடியாது. உங்களுக்குப் பிடித்தமான முதல் நபராக நீங்கள் இருப்பதே போதுமானது. மற்றபடி, சலிப்படையாமல் இருக்க வேண்டுமானால் மனம்விட்டுப் பேச நல்ல நட்பு அவசியம். அந்தத் துணை நம்பத்தகுந்தவராகவும் இருக்கணும். தனக்குன்னு ஒரு பொழுதுபோக்கு, வம்புபேசாத நட்புவட்டம், ஆரோக்கியத்தில் கவனம், எதையாவது கற்றுக்கொண்டே இருப்பது, இயற்கையோடு நேரம் செலவிடுவது, பயணங்கள், சின்னவகையிலாவது பலன் கருதாம உதவி செய்யறதுன்னு சொல்லிட்டே போகலாம். யாருக்கும் தொந்தரவில்லாத, தனக்கு மகிழ்ச்சி தர்ற எதையும் செய்வதில் தப்பே இல்லைன்னு நினைக்கறேன்.

வீட்டின் மற்ற உறுப்பினர்களும் தங்கள்  பங்களிப்பைச் செய்ய முன் வரணும். பெண்களும் சுயமரியாதை உள்ள தனி உயிர்தான். அவர்களைப் பாராட்டுவதும் உற்சாகப்படுத்துவதும் அவசியம். அன்றைக்கு என் கணவரோடு என் மாமனாருக்குப் பிரச்னை வந்ததும், என்னையும் சேர்த்து அந்தக் குடும்பத்திலிருந்து ஒதுக்கிட்டாங்க. அது ஏன்? பெண்ணை, ஆணின் நிழல்போல பாவிக்காம சகபயணியா பார்க்கத் தொடங்கணும்.''

“அப்போ ஒரு குடும்பத்தில் தலைமைக்கு அவசியமே இல்லை என்கிறீங்களா?” - விக்னா அவர் வாயைக் கிளறினாள்.

“தலைமை அவசியம். ஆனா, அந்தத் தலைமை வீட்டு உறுப்பினர்கள் கருத்தைக் கேட்டுச் செயல்படணும்னு சொல்றேன். எந்த ஆண் தன் மனைவியை மரியாதையோடு நடத்தினாலும், அங்கே சொந்தங்களும் அவ்வாறே நடத்தும். தன் வார்த்தைக்கு மதிப்பிருக்கிறது என்பதே ஒருவர் ஓர் இடத்தை விரும்ப முதன்மைக் காரணமாக இருக்க முடியும். அதேபோல, கணவன் மனைவி உறவில் யார் யாரை மரியாதைக்குறைவாக நடத்தினாலும் குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்ளும்.

பின்னாளில் அவ்வாறே தன் துணையிடம் நடந்துகொள்ளும் சாத்தியமும் அதிகம்.''

சோஃபாவில் நிமிர்ந்து உட்கார்ந்து கம்பீரமாகச் சொன்ன நீண்ட பதில் களைக் கேட்டு முடிக்கவும், ராஜா வரவும் சரியாக இருந்தது. கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்பும்போது நான் விக்னாவிடம் உமாவைப்பற்றிச் சொன் னேன், “பெண்மணி அவள் கண்மணி”. அதற்கு விக்னா சிரித்துக்கொண்டே சொன்னாள், “திருமதி ஒரு வெகுமதி”.

சம்சாரம் அது மின்சாரம்...

வெளியான ஆண்டு: 1986

நடிப்பு: விசு, ரகுவரன், லட்சுமி

இயக்கம்: விசு