Published:Updated:

``பாலியல் தொல்லை கொடுத்தார்!" - நடிகை மாயா மீது பெண்ணின் #MeToo-வுக்கு பதில் என்ன?

``பாலியல் தொல்லை கொடுத்தார்!" - நடிகை மாயா மீது பெண்ணின் #MeToo-வுக்கு பதில் என்ன?
``பாலியல் தொல்லை கொடுத்தார்!" - நடிகை மாயா மீது பெண்ணின் #MeToo-வுக்கு பதில் என்ன?

``இந்தப் பதிவு மாயாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் போய் சேர்ந்து, அவர்கள் நிச்சயம் நம்பிக்கையும், தைரியமும் கொள்வார்கள் என்பதாலேயே இதை எழுதுகிறேன்."

``இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் ஓரிரு நாள்களுக்கு மேல் பேசுபொருள் ஆனாலே பெரிய விஷயம். ஆனால், #MeToo புகார்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தை நாம் மேலும் புரிந்துகொள்ள முடியும். 

இதுவரை நம் கவனத்துக்கு வந்த எல்லா #MeToo புகார்களுக்கும் உள்ள ஒற்றுமை ஒரு பெண், ஆண் மீது வைத்த குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. அதை மறுக்கும் விதமாக, அந்த ஆண் அறிக்கை விடுவார். இத்தகைய சூழலில் ஒரு பெண் இன்னொரு பெண் மீது #MeToo புகார் அளித்திருக்கிறார். குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பெண், வளர்ந்துவரும் தமிழ் சினிமா நடிகையான மாயா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. மாயா கிருஷ்ணன் மேடை நாடகங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், திரைப்படங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து பங்காற்றி வருபவர். இதுதவிர, க்ளவுனிங் டாக்டராகவும் இருக்கிறார், மாயா. மாயா கிருஷ்ணனின் கலை வாழ்க்கை ஆரம்பித்தது, `லிட்டில் தியேட்டர்' என்ற மேடை நாடகக் குழுமத்தில் இருந்துதான். `தொடரி', `வேலைக்காரன்', `மகளிர் மட்டும்' உட்பட சில படங்களில் நடித்திருந்த மாயா, விரைவில் வெளியாகவிருக்கும் `2.0', `துருவ நட்சத்திரம்' படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.  

மாயாவுடன் மேடை நாடகங்களில் இணைந்து நடித்த அனன்யா ராம்பிரசாத் என்கிற பெண் தன்னுடைய ஃபேஸ்புக்கில் மாயா பற்றி எழுதியிருக்கிறார். அதில், அவர் எழுதியதின் சுருக்கம் இதுதான். 

``ஆரம்பத்தில் மாயா எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவர் என் மீது கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் அவருக்கு ஒரு நல்ல தோழியாக நெருக்கமாகப் பழகினேன். பின்னர் மாயா என்னை முழுதும் அவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அப்போது எனக்கு வயது 18. மாயாவுக்கு 25. என்னுடைய ஒவ்வொரு அசைவையும் மாயாவே தீர்மானித்தார். அவர் மீதுள்ள அன்பால் முழுவதும் அவருடன் உடன்பட்டேன். அவருடன் ஒரே வீட்டில் தங்கினேன். ஒரு கட்டத்தில் மாயா என்னை தன்னுடைய பாலியல் தேவைக்காகப் பயன்படுத்தத் தொடங்கினார். அவர் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய உளைச்சல்களைக் கொடுத்தார். இதனால், ஒருவித மனநோய்க்கு ஆளாகி சிகிச்சையிலிருந்து நண்பர்கள் உதவியால் மீண்டு வந்தேன். திரும்பவும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். என்னுடைய இந்தப் பதிவு, மாயாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் போய்ச் சேர்ந்து, அவர்கள் நிச்சயம் நம்பிக்கையும், தைரியமும் கொள்வார்கள் என்பதாலேயே எழுதுகிறேன். நம்முடைய மௌனம் நம்மைச் சுரண்டுபவர்களுக்குப் பெரும் உதவியாகிவிடும். ஆகவே, உங்களுக்கு நடந்ததைத் தைரியமாக முன்வந்து வெளிப்படையாகச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்குச் செய்கிறேன்" என்று எழுதியிருந்தார். 

இதுகுறித்து மாயா கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?! - மாயாவின் உறவினர் நம்மிடையே பேசினார். ``இந்தப் புகாரால் மாயா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை. அந்தப் பெண் எழுதியது அத்தனையும் பொய். சொல்லப்போனால், இந்தக் குற்றச்சாட்டு அனைத்தையும் மாயா அந்தப் பெண் மீது வைக்க வேண்டியது. அந்தப் பெண் ஏன் முந்திக் கொண்டார் என்பதற்குக் காரணம் இருக்கிறது. மாயா நடித்துக்கொண்டிருந்த ஒரு நாடக கம்பெனியில் மாயாவை ஒரு இளைஞன் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்தான். அதை மாயா அந்த நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. இதனால், அந்த நாடக கம்பெனிக்கும் மாயாவுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. அதனையொட்டி அனன்யா என்கிற பெண்ணை மாயாவுக்கு எதிராக எழுதச் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அதை அந்தப் பெண் மட்டும் எழுதவில்லை என்று எங்களால் உறுதியாகச் சொல்லமுடியும். மாயாவுக்கு எதிரானவர்கள் சேர்ந்து அதை ஒரு கதைபோல நேர்த்தியாக எழுதியிருக்கிறார்கள். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறோம். விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்." என்றார்.

`Metoo' இன்னும் என்னென்ன செய்யுமோ?! 

அடுத்த கட்டுரைக்கு