பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

உங்கள் உடல்... உங்கள் உரிமை!

உங்கள் உடல்... உங்கள் உரிமை!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் உடல்... உங்கள் உரிமை!

ஆர்.வைதேகி

ப்போ எனக்கு 19 வயசு. காலேஜ் முடிச்சதும் நடிச்ச முதல் நாடகத்தில் எனக்குப் பாட்டி கேரக்டர்.  அதுக்கு அப்புறம் எத்தனையோ நாடகங்கள், ஏறக்குறைய 20 வருஷம் ஓடிப்போச்சு. இதுவரைக்கும் நான் நடிச்ச நாடகங்கள்ல எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம் மாமியார், அம்மா, வேலைக்காரி, காமெடியன் கேரக்டர்ஸ்தான். காரணம், என் சைஸ்.’’ - பெரிய சிரிப்புடன் ஆரம்பிக்கிறார் அனுராதா.

பெங்களூரைச் சேர்ந்த நாடகக் கலைஞரான இவர் ஆரம்பித்திருக்கும் `தி பிக் ஃபேட் கம்பெனி’ ப்ளஸ் சைஸ் கலைஞர்களுக்கான நடிப்புக்களம்.

``பெங்களூரில் படிச்சேன். காலேஜ் தியேட்டர் க்ளப்ல ரொம்ப ஆக்டிவா இருந்தேன். நாடக ஆர்வம் காரணமா படிப்பை முடிச்ச பிறகும்கூட வேற வேற தியேட்டர் குழுக்கள்ல நடிச்சிட்டிருந்தேன். நாடகம் மேல தீவிர ஆர்வம் வந்தப்போ எந்த மாதிரியான கேரக்டர்ஸ் எல்லாம் பண்ணலாம்னு எனக்குள்ள நிறைய கனவுகள்.  நிஜம் வேற மாதிரி இருந்தது. ஒருத்தரோட திறமையை அவங்க தோற்றத்தைவெச்சு எடைபோடுறது எந்த வகையில நியாயம்?

உங்கள் உடல்... உங்கள் உரிமை!

அந்தக் கேள்வி, கிட்டத்தட்ட பத்து வருஷமா என்னை விரட்டிக்கிட்டே இருந்தது. பார்த்திட்டிருந்த கார்ப்பரேட் கம்பெனி வேலையை விட்டேன். `தி பிக் ஃபேட் கம்பெனி’ பிறந்தது.’’ அறிமுகம் சொல்கிற அனுராதாவின் இந்த நாடகக் குழுவுக்கு வயது ஒன்று.

``சின்ன வயசுலேருந்தே நான் பருமனாத்தான் இருந்திருக்கேன். நானோ, என் குடும்பத்தாரோ அதைப் பற்றிக் கவலைப்படாதபோதும், சமுதாயம் ரொம்பவே கவலைப்பட்டது. `டயட் பண்ணலாமே... எக்ஸர்சைஸ் ட்ரை பண்ணிப்பாரேன்’னு வலிய வந்து ஆலோசனைகளைத் தந்திருக்காங்க. எனக்கு அதெல்லாம் அவசியம்னு தோணலை.

பருமனான மனிதர்களை காமெடியன்களா பார்க்கிற சமூகப்பார்வையும், திரைப்படங்கள்ல அவங்களை காமெடியன்களாகவும் வில்லன்களாகவும் சித்திரிக்கிற போக்கும் பல வருஷமா மாறலை. துணை நடிகர்களாகவும் காமெடியன்களாகவும் நடிக்கிறவங்களுக்கு வேற பிரச்னைகளும் உண்டு. டைரக்டர் உட்பட யாரும் அவங்களைப் பெருசா கண்டுக்க மாட்டாங்க. ஸ்க்ரிப்ட்டையோ, மற்ற விஷயங்களையோ அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண மாட்டாங்க. வந்தோமா, நாலு வரி டயலாக் பேசினோமா, போனோமானு இருக்கணும். நடிப்புத்திறமையைவிடவும் தோற்றத்தைப் பெருசா பார்க்கிற பார்வை மாறணும்கிறதுதான் எங்க நோக்கம்’’ நிதர்சனமாகப் பேசுகிறார்.

கிரிஷ் கர்னாட்டின் `ஹயவதனா’வை முதல் நாடகமாக அரங்கேற்றியிருக்கிறது `தி பிக் ஃபேட் கம்பெனி’.

உங்கள் உடல்... உங்கள் உரிமை!

``நாங்க யாரு என்பதில் தொடங்கி, இங்கே நிலவுகிற உடல் அரசியல் உட்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசற நாடகம் இது. நாங்க பாதிக்கப்பட்டிருக்கோம்னு புலம்புறதோ, எங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுதுனு கண்ணீர்விடுறதோ எங்க நோக்கமில்லை. ஒருவருடைய உடல் குறைபாடுகள், நாம வாழும் சூழலில் எப்படியெல்லாம் வர்த்தக மயமாக்கப்படுகின்றன என எடுத்துச்சொல்றது தான் எங்க நோக்கம்.

இந்த நாடகக்குழுவின் மூலமா சமுதாயப் பார்வையை ஒட்டுமொத்தமா மாத்திட முடியுமானு கேட்கிறாங்க. `எங்களை இப்படியும் பார்க்கலாமே’னு மக்களுக்கு பாசிட்டிவான ஒரு பார்வையையும் அனுபவத்தையும் கொடுக்க முடியும்னு நம்புறோம்’’ அனுராதாவின் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை.

``நீங்க எப்படி இருந்தாலும் உங்களை நேசிக்கக் கத்துக்கோங்க. அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கோங்க. பருமனா இருக்கிறது பாவத்துக்குரிய விஷயமல்ல. என் பாட்டி பருமனான உடல்வாகு கொண்டவங்க தான். 89 வயசு வரைக்கும் ஆரோக்கியமா வாழ்ந்துட்டுப் போனாங்க. தவறான ஆலோசனைகள், விளம்பரங்களை நம்பி உங்க பணத்தையும் நேரத்தையும் ஆரோக்கியத்தையும் தொலைச்சுடாதீங்க. உங்கள் உடல். உங்கள் உரிமைங்கிறதை மறந்துடாதீங்க. இது அட்வைஸ் இல்லை... அன்பான கோரிக்கை.’’ அசத்துகிறார் அனு.