Election bannerElection banner
Published:Updated:

``சினிமா விமர்சகர்களே... என் மனைவிகிட்ட உங்க ரிவ்யூலாம் தோத்துரும்!" - 'துப்பாக்கி முனை' விக்ரம் பிரபு

``சினிமா விமர்சகர்களே... என் மனைவிகிட்ட உங்க ரிவ்யூலாம் தோத்துரும்!" - 'துப்பாக்கி முனை' விக்ரம் பிரபு
``சினிமா விமர்சகர்களே... என் மனைவிகிட்ட உங்க ரிவ்யூலாம் தோத்துரும்!" - 'துப்பாக்கி முனை' விக்ரம் பிரபு

`துப்பாக்கி முனை' படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு பேட்டி

"'நாம சாப்பிடுற அரிசியில நம்ம பெயர் இருக்கிறது உண்மைனா, என் துப்பாக்கியில இருக்கிற ஒவ்வொரு தோட்டாவுலேயும் குற்றவாளிகளோட ஜாதகமே இருக்கு என்பது என் நம்பிக்கை.’ டிரெய்லர்ல வந்த இந்த வசனம்தான், கதையின் மையம். அப்படிப்பட்ட நியாய தர்மத்தை நம்பி வாழும் ஒரு என்கவுன்டர் போலீஸ் அதிகாரிக்கும், இன்றைய சமூகத்தில் உள்ளவங்களுக்குமான கதையே `துப்பாக்கி முனை’. இராமேஸ்வரம்தான் களம். அங்கு ஒரே நாளில் நடக்கும் கதை. இதில் எனக்கு 45 வயசு போலீஸ் அதிகாரி கேரக்டர். அப்பா, தன் இளம் வயதிலேயே ‘நினைவுச் சின்னம்’ உட்பட பல படங்கள்ல வெள்ளை முடியோட வயசான கேரக்டர்கள்ல நடிச்சிருக்கார். அதேபோல இதில், என் ஒரிஜினல் வயசைவிட 15 வயசு அதிகமான கேரக்டர். அதுக்காக, 10 கிலோ வெயிட்டைக் கூட்டினேன். `ஃபிட்டாவும் இருக்கணும், கொஞ்சம் குண்டாவும் இருக்கணும்’னு பெரிய டாஸ்க்.” - விக்ரம் பிரபுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு தெளிவு. கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இயக்கத்தில் `துப்பாக்கி முனை’யில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

``அறிமுக இயக்குநர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தர்றீங்க. இந்தப் படத்தை இயக்குநர் தினேஷ் எப்படிக் கையாண்டிருக்கார்?”

``இயக்குநர் தினேஷ், `அன்னக்கிளி’ செல்வராஜ் சாரின் மகன். தினேஷ், ஸ்கிரிப்டில் ரொம்ப ஸ்ட்ராங். அப்பா-மகன் இருவரும் சேர்ந்து உட்கார்ந்துதான் எழுதியிருக்காங்க. கதை கிட்டத்தட்ட ஒரு நாவல் மாதிரி இருக்கும். அதாவது, ஒரு பெரிய கதையின் சின்ன பாகம்னு சொல்லலாம். ஆனா, அதில் பெரிய கதைக்கான அடர்த்தி இருக்கும். கதாபாத்திரங்களையும் ரொம்ப ஸ்ட்ராங்கா வடிவமைச்சிருக்காங்க. தினேஷ், ஒரு விஷயத்தைச் சொல்லாம சொல்ல முயற்சி பண்ணுவார். `இந்த மாதிரி ஒண்ணு முயற்சி பண்ணா எப்படி இருக்கும்’னு தூண்டி விடுறதுதான் அவரோட ஸ்பெஷல். ஆனால், எனக்கு நிறைய சந்தேகங்கள். `ஏன், எதுக்கு’னு அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இருப்பேன். என் எல்லாக் கேள்விகளுக்கும் அழுத்தமான ஆதாரங்களோட பதில் வெச்சிருப்பார். ஏன்னா, அவர் மைண்ட்ல ஸ்கிரிப்ட் அவ்வளவு தெளிவா இருந்துச்சு. விஷுவலாவும் சரியா எடுத்துட்டு வந்திருக்கார். நிச்சயம் இந்தப் படம் ஆடியன்ஸை எமோஷனலா கனெக்ட் பண்ண வைக்கும். அவரோட பாஸ் மணிரத்னம் சார்ல இருந்து, ரசிகர்கள் உட்பட எல்லோருக்கும் `துப்பாக்கி முனை’ பிடிக்கும்.”

``இந்தப் படத்துக்கான பயணத்தில் வேறென்ன சுவாரஸ்யங்கள்?”

``ராமேஸ்வரத்துக்கு ஷூட்டிங் போகும்போது ஒரு கலர்ல இருந்த நாங்க, ஷூட்டிங் முடிஞ்சு வேறொரு கலர்ல வந்தோம். அங்கே அந்தளவுக்கு வெயில். வெயிலுக்குக் குடை பிடிச்சிருந்தாலும், அந்த வெள்ளை மண் வழியா சூடு தலை வரை ஏறுது. வெயிலின் அந்த எரிச்சலிலும் கவனம் சிதறாம ஷூட் பண்ணிக்கிட்டே ஊரின் முனையான தனுஷ்கோடிக்குப் போயிட்டோம். சேஸ், ஃபைட்னு அங்கேதான் நிறைய நாள்கள் ஷூட்டிங் நடந்துச்சு. அங்கே பக்தர்கள் கூட்டம் அதிகம். குறிப்பா, வட இந்திய பக்தர்கள். அவங்களுக்கு மத்தியில ஏவி.எம் ஸ்டுடியோவுல ஷூட் பண்றமாதிரி ரிலாக்ஸா ஷூட் பண்ணிட்டு வந்தோம். `கும்கி’ல இருந்து இப்போவரை நான் சொல்ற அதே உண்மைதான். ஆமாம், சினிமா என்பது ஒரு டீம் எஃபெர்ட்.”

``டிராவல், துரத்தல்னு பரபர படம். டெக்னிக்கல் டீம் சப்போர்ட் இல்லாம இப்படியான படத்தைக் கையாளுவது கடினம். எப்படி உழைச்சிருக்காங்க உங்க டீம்?”

``இது ஆக்ஷன் படமாவும் ஃபேமிலியோட பார்க்கவேண்டிய படமாவும், சமூகத்துக்குத் தேவையான கருத்துள்ள படமாவும் இருக்கும். ரொம்பவும் சினிமாத்தனமா போயிடாம, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் பண்ணியிருக்கோம். டயலாக், மூட் செட் பண்றது, கதையைப் புரிஞ்சுகிட்டு ஷாட் வைக்கிறதுனு... சில விஷயங்களை கேமராமேன்களே இறங்கி, கூடுதல் எஃபர்ட் போட்டு செய்வாங்க. டைரக்டர் சொல்றதை மட்டுமல்லாம, கூடுதலா என்ன செய்யலாம்னு நிப்பாங்க. அப்படியான ஒளிப்பதிவாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை. எங்க கேமராமேன் ராசாமதியும் அப்படியானவர்தான். அவரும் ஓர் எழுத்தாளர். கவிஞர் அறிவுமதி அண்ணனின் மகன். `இப்படி ஒரு ஷாட் வைக்கலாமா பிரதர், இப்படி முயற்சி பண்ணலாமே’னு ஒருங்கிணைப்புலயே இருப்பார். `இந்தப் படத்துக்குப் பிறகு உங்களை எல்லோரும் `துப்பாக்கி முனை ராசாமதி’னுதான் கூப்பிடுவாங்க பாருங்க’னு சொல்லிருக்கேன். என்னை தாணு சார்தான் அறிமுகப்படுத்துறதா இருந்துச்சு. சார் ரொம்ப ஆர்வமாவும் இருந்தாங்க. ஆனால், அது நடக்கலை. இப்படிப் புதுமுகங்களை அறிமுகப்படுத்துறதுல தாணு சாருக்கு அப்படி ஓர் ஆர்வம். `துப்பாக்கி முனை’ இசையமைப்பாளர் எல்.வி.முத்துவும் தாணு சாரின் பெருமைமிகு அறிமுகம்தான். கதைக்குத் தேவைன்னா மட்டும்தான் பாட்டு வைக்கணும்னு சொல்வேன். அப்படி இதில் இரண்டு பாடல்கள். இரண்டுமே கதையை நகர்த்திட்டுப்போற மாதிரியான பாடல்கள். அதையும் வைத்து நல்ல மூட் செட் பண்ணி பண்ணியிருக்கார். பின்னணி இசையை கிரிஸ் நாட்டின் மாசிடோனியாவுக்குப்போய் ரீ-ரெக்கார்டிங் பண்ணிக்கிட்டு வந்திருக்கார். பின்னணி இசை, நிச்சயம் பேசப்படும். முத்து, திறமையான கலைஞர். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. `அரிமா நம்பி’ பண்ண புவன்தான், இதுக்கும் எடிட்டர். சமீபத்தில் `இமைக்கா நொடிகள்’ படம் பண்ணியிருந்தார். அவரும் படத்தைப் பற்றி நிறைய பேசினார். `பிரதர் இதுக்குமேல படத்தைப் பற்றிப் பேசாதீங்க. படத்தை நான் பார்த்துடுறேன்’னு சொல்லியிருக்கேன்.” 

``ஹன்சிகாகூட உங்களுக்கு இது முதல் படம். அவங்க எப்படி நடிச்சிருக்காங்க?”

``இதில் அவங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். சில விஷயங்களை நிறைய சொல்லணும்னு இல்லாம கோடிட்டுக் காட்டினாலே அதைப் பிக்கப் பண்ணி நடிக்கிறாங்க. பாசிடிவ் எனர்ஜி. ரொம்ப லைவ்லியா இருந்தாங்க. அவங்களுக்கு ஆக்ஷன் போர்ஷன்கூட இருக்கு. இந்த விஷயத்தை டைரக்டர் சொன்னதும் மறுக்காம உடனே ஓகே சொன்னாங்க. படபடபடனு பேசுறது, கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கிறதுனு எனர்ஜியான பெர்சென். அவங்களைப் பார்க்கும்போதே ஒரு ஸ்மைல் வரும். ஷூட்டிங் போயிட்டேன்னா அந்த கேரக்டர் மனநிலையிலேயே இருங்கனு டைரக்டர் சொல்வார். ஆனா இவங்க, அந்த சமயத்துல வேற ஏதாவது பேசி சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க. `அம்மா தாயே விட்டுடும்மா’னு சொல்ற அளவுக்கு ஃபன் பண்ணிட்டே இருப்பாங்க. இவங்களைத் தவிர வேல.ராமமூர்த்தி சாருக்கு மெஜஸ்டிக்கான பாஸ் கேரக்டர். எம்.எஸ்.பாஸ்கர் சாரும் இருக்கார்.”

``அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ்?"

``இப்போ `அசுர குரு’னு ஒரு படம். ஜெயம் ராஜா சாரின் அசோஷியேட் டைரக்ஷன். ஒரு கேரக்டரின் பயணம்தான் அந்தப் படம். அடுத்து, `வால்டர்’னு ஒரு படம். அதில் அர்ஜுன் சார், ஜாக்கி ஷெராப் சார்னு பெரிய டீம். டைரக்டர் லிங்குசாமி சாரின் அசிஸ்டென்ட் டைரக்ட் பண்றார். `துப்பாக்கி முனை’ கேமராமேன்தான் இதுக்கும் பண்றார். இவை தவிர இன்னும் சில படங்கள் பேசிக்கிட்டு இருக்கோம்.”

``திருமணம் முடிந்து 10 வருடம் ஆகுது. உங்க சினிமா பற்றி மனைவி என்ன சொல்றாங்க?”

``ஆமாம், சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. தாத்தா இறந்த சில வருடங்கள்ல பாட்டிக்கு உடம்பு முடியாம போயிடுச்சு. எனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதனால காலேஜ் முடிச்ச அடுத்த வருடமே கல்யாணம். எங்க கல்யாணத்துக்குப் பிறகு ஆறு மாசம்தான் பாட்டி இருந்தாங்க. அந்த டைம்ல அவங்க ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. லைஃப்ல கல்யாணம் பெரிய விஷயமா இருந்தாலும், எங்க பாட்டி இருந்து கல்யாணத்தை நடத்தியது, அதைப் பார்த்து அவங்க சந்தோஷப்பட்டதெல்லாம் மகிழ்ச்சியான விஷயம். மற்றபடி என் மனைவி, என் நல்ல தோழினு சொல்லலாம். நல்லதோ, கெட்டதோ அவங்கதான் சப்போர்டிவா இருக்காங்க. சின்ன வயசுல கல்யாணம் ஆனதால பொறுப்பும் அதிகமாகிடுச்சு.”

``உங்க படங்களைப் பார்த்துட்டு அவங்க என்ன சொல்வாங்க?”

``அவங்ககிட்ட விமர்சனம் பண்றவங்க தோத்துடுவாங்க. அவ்வளவு டீடெயிலா விமர்சிப்பாங்க. மத்தவங்ககூட தயங்குவாங்க. ஆனா, அவங்க தயங்கமாட்டாங்க. அவங்களுக்கு சினிமாவுல வொர்க் பண்ணணும்னு ஆர்வம் இல்லை. என் காஸ்ட்யூம்ஸ் எல்லாமே அவங்களோட மேற்பார்வையில் தயாராகுறதுதான். ‘ஆர்வம் இருந்தா சினிமாவுல காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட்ல வொர்க் பண்றியா'னு கேட்டேன். ஃப்ரீ டைம் கிடைச்சா வொர்க் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். இப்படி வாழ்க்கை ரொம்ப அழகா போயிட்டு இருக்கு.”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு