Published:Updated:

"சேரிகளில்தான் நான் பாடுவேன்!"

"சேரிகளில்தான் நான் பாடுவேன்!"

"சேரிகளில்தான் நான் பாடுவேன்!"

"சேரிகளில்தான் நான் பாடுவேன்!"

Published:Updated:
##~##

''அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, சினிமா நடிகர்களுக்கோ திரளாத மக்கள் கூட்டம், ஒரு புரட்சிப் பாடகருக்குக் கூடுமேயானால், அவர் ஆந்திராவின் புரட்சிகரப் பாடகர் கத்தாருக்காகத்தான் இருக்கும். 'இதி கொங்கனி ரஜம்’ (இது திருடர்களின் தேசம்) என்று சால்வையைப் போர்த்தியபடி கத்தார் முதலாளித்துவத்துக்கு எதிராக முழங்க ஆரம்பித்தால், கேட்பவர் மனசில் நெருப்பு பற்றிக்கொள்ளும். அவருடைய பாடல்களுக்குப் பல லட்சம் பேர் ரசிகர்கள். அவர்களில் ஒருவன் நான். என் முன்மாதிரி அவர்தான்'' - என்கிறார் குமாரபாளையத்தைச் சேர்ந்த 'சமர்பா’ குமரன். 'சமர்பா’ என்னும் கலைக் குழுவைத் தொடங்கி அதன் மூலம் எழுச்சியைத் தூண்டும் பாடல்களைப் பாடிவருகிறார்.

''என் பெயர் குமரன். 2003-ல் 'சமர்பா’ கலைக் குழுவைத் தொடங்கினேன். 'சமர்’ என்றால் போர். 'பா’ என்றால் பாடல். வறுமை காரணமாக, 3-ம் வகுப்பு வரைக்கும்தான் படிக்க முடிந்தது. 12 வயதிலேயே விசைத் தறி வேலைக்குப் போய்விட்டேன். அப்புறம் மூட்டை தூக்கினேன். கம்யூனிஸத்தின் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். மூட்டை தூக்கும்போது 'பொன்னான மனசே... பூவான மனசே... வெக்காத பொண்ணு மேல ஆசை’ பாட்டை ரீ-மிக்ஸ் செய்து, 'அட தொழிலாளத் தோழா... எத்தனை நாளா பாழாப்போன இந்த வாழ்க்கை?’ என்று பாடினேன். அதுக்குத் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இப்படித்தான் பாட்டு பழகினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சேரிகளில்தான் நான் பாடுவேன்!"

உண்மையில் இசை என்றால் என்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி ஒன்றில் புதுவை சித்தன் என்கிற பாடகர் அறிமுகமானார். அவர் திடீர் என்று 'சும்மாப் பாடுங்க’ என்றார். திகைத்துப்போய் நின்றேன். பிறகு அவர் சொன்ன வரிகளைப் பாடினேன். 'நல்லா ஏழு கட்டையில் பாடுறீங்க’ என்று சொன்னார். ஏழு கட்டை என்றாலும் என்னவென்று எனக்குத் தெரியாது.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து, பல நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் கொள்கைரீதியான பாடல்களைப் பாடினேன். ஒருகட்டத்தில் சொந்தமாக எழுதிப் பாட ஆரம்பித்தேன். அந்நிய குளிர்பான நிறுவனங்களால் உள்நாட்டு குளிர்பானங்கள் அழிந்துவருவதைப் பற்றி ஒரு பாட்டு எழுதிப் பாடினேன். அது பலருடைய பாராட்டுகளைப் பெற்றது. சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையினரால் வேட்டையாடப்பட்ட பழங்குடி மக்களின் வேதனைகள் பற்றியும் பல பாடல்களைப் பாடினேன்.

பெரியார் திராவிடர் கழகக் கூட்டங்களுக்குப் போனபோது, கொளத்தூர் மணி அண்ணனின் ஈழத் தமிழர் தொடர்பான பேச்சுகளைக் கேட்க நேர்ந்தது. அவர்களின் கூட்டங்களிலும் மேடை ஏறிப் பாடச் சொன்னார்கள். 'செவல மாடு கட்டி இருக்கிற சலங்கை உடையட்டும்... சிங்களவன் கொட்டம் அடிக்கிற இலங்கை உடையட்டும்!’ என்று அந்த மேடைகளில் நான் பாடிய பாடல், தமிழ் உணர்வாளர்களை ஈர்த்தது. இப்போது மேடையில் பாடல்கள் பாடுவதே என் முழு நேரப் பிழைப்பு. பலர் என்னிடம் 'சினிமாவுக்குப் போனால் எளிதில் வாய்ப்புக் கிடைக்கும்’ என்கிறார்கள். ஆனால், நான் அதை விரும்பவில்லை. தெலுங்கு எழுத்தாளர் ஜி.கல்யாணராவின் 'தீண்டாத வசந்தம்’ நூலில் வரும் ஆந்திர நிலாத்திண்ணை கிராமத்துச் சேரிகள், தமிழகத்திலும் இருக் கின்றன. அந்தச் சேரியில் உருவான உருமி நாகண்ணா, எல்லண்ணாவைக் கேள்வியுற்று கத்தார் உருவானார். அவர் வழியிலேயே நானும் அடித்தட்டு மக்கள் வாழும் சேரிகளிலும் தொழிலாளத் தோழர்கள் பணிபுரியும் இடங்களில் மட்டுமே பாட விரும்புகிறேன்.

தீண்டாத வசந்தத்தில் எல்லண்ணா பாடுவார்... 'இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே, இன்றும் தீண்டாததே! பிறந்த சாதி தீண்டப்படாதது, செய்ய விரும்பிய போராட்டமும் தடை செய்யப்பட்டது. அது நேற்றாக இருக்கலாம், இன்றாகவும் இருக்கலாம், எந்தக் காலமாகவாவது இருக்கலாம். இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே, இன்றும் தீண்டாததே!’ - பெருங்குரலெடுத்துப் பாடுகிறார் 'சமர்பா’ குமரன்!

கட்டுரை, படங்கள்: கி.ச.திலீபன்

"சேரிகளில்தான் நான் பாடுவேன்!"