வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்

எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்

அவளும் நானும் நானும் அவளும் படங்கள் : ப.பிரியங்கா

``எனக்கு இருக்கும் ஒரே கடன் வி`கடன்’. அது விகடன்மேல் நான் வைத்திருக்கும் நன்றிக்கடன். ரொம்பவும் நாணயமான பத்திரிகை. அதனால்தான் அவர்களால் `நாணயம்’ விகடனும் நடத்த முடிகிறது. `அவள்’ விகடனுக்கான பேட்டிதானே... அது எனக்கு `அவல்' விகடன் மாதிரி’’ என்று தன் டிரேட்மார்க் காமெடியுடன் பேச ஆரம்பிக்கிறார் கிரேஸி மோகன். நகைச்சுவைப் பேட்டியாக இருக்குமோ என நினைத்தால், நெகிழ்ச்சியான பதிவில் நன்றிக்கடனைச் செலுத்துகிறார் கிரேஸி மோகன்.

அவரின் `அவள்’ யார்?

``ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதற்கேற்ப, என் வெற்றிக்குப் பின்னால் நிற்பவர் ஜானகி. அவர் இல்லாமல் என் படைப்புகள் முழுமை யடைவதே இல்லை. நாடகமோ, டி.வி சீரியலோ, சினிமாவோ எதற்கு எழுதினாலும் என் சம்பளத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் நான் வைக்கிற வேண்டுகோள், `ஜானகி’ என்கிற பெயர் இருந்துட்டுப்போகட்டுமே என்பதுதான். அது கமல், ரஜினி படங்களானாலும் சரி.

`ஜானகி என்பவர் யார்... கிரேஸி மோகனின் காதலியா, மனைவியா?’ என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. அவருக்கு 85 வயது. பெங்களூரில் வசிக்கிறார். என் ஆசான். `கற்பகவள்ளி கலாலயம்' என்ற பள்ளியில் எனக்கு ஒன்றாம் வகுப்பு ஆசிரியராக இருந்தவர். நாடகத் துறைதான், `கிரேஸி மோகன்’ என்கிற தனிநபருக்கு மரியாதையைச் சம்பாதித்துக் கொடுத்தது.  நாடகம் என்கிற அந்த விதையை எனக்குள் ஊன்றியவர் ஜானகி.

எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்

அவர் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந் தார். எனக்கு `வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட வசனங்களைக் கற்றுக்கொடுத்து, அட்டைக்கத்தியும் கிரீடமும் செய்து கொடுத்துத் தெருத்தெருவாக அழைத்துச்
செல்வார். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வதைத் தாண்டி, கல்லூரியிலோ, வேலையிடத் திலோ யாரும் எதையும் பெரிதாகக் கற்றுக்கொண்டுவிடுவதில்லை. அப்படி பள்ளிப் பருவத்திலேயே என்னைச் செதுக்கியவர்தான் ஜானகி.

என் சித்தப்பா வி.ஏ.பார்த்தசாரதிக்கு, அந்தக் காலத்தில் திரையுலகத் தொடர்புகள் உண்டு. எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது, அவரிடம் `வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட வசனங்களைப் பேசிக்காட்டினேன். சிவாஜி பட வசனங்களாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் பெருந்தன்மையுடன் வாழ்த்தி, `ரொம்ப நல்லாருக்குத் தம்பி, தொடர்ந்து பண்ணுங்க’ என்றார். அதற்குக் காரணம் ஜானகி டீச்சர்தான்.

எங்கள் வீட்டில் எழுத்தாளர்கள் யாரும் கிடையாது. மனைவிக்குக் கடிதம்கூட எழுதி யாருக்கும் பழக்கமில்லை. அப்படிப்பட்ட சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்த நான், இன்று நகைச்சுவை எழுத்தில் பெயர் வாங்க காரணம் என் ஜானகி டீச்சர். அவருக்கு நான் செலுத்தும் மரியாதையாகத்தான் என் எல்லா படைப்புகளிலும் ஜானகி கேரக்டரை வலியுறுத்துகிறேன்.

என் முதல் நாடகமான அலாவுதீனி லிருந்தே என் ஹீரோயின் பெயர் ஜானகிதான்.

நான் நடித்த முதல் படமான `அபூர்வ சகோதரர்க'ளில் கவுதமி பெயர் ஜானகி. `தெனாலி’ படத்தில் ஜோதிகா பெயர் ஜானகி. `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சிநேகா பெயர் ஜானகி. இன்றும்
அதைத் தொடர்கிறேன். `ஜானகி’ என்று பெயர் வைப்பதில் யாருக்காவது ஆட்சேபம் இருப்பதாகச் சொன்னால், நான் அவர்களுக்கு எழுத மறுத்துவிடுவேன்.

ஒருமுறை பெங்களூரில் நாடகம் போட்டபோது, ஜானகி டீச்சரை அழைத்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தேன். என் வளர்ச்சிக்குக் காரணமானவருக்கு நான் நன்றிக்கடன்பட்டிருப்பதை ஊரறிய, உலகறியச் சொல்ல நினைத்தேன். என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் ஜானகி கேரக்டர் இருக்கும் என்பது தெரிந்த போது, `என்ன மோகன்... இதைப் போய் பெருசுப்படுத்துறியே. அதுக்கப்புறம் நீ எவ்வளவு வளர்ந்துட்டே...’ என்றார். `நான் பிரமாதமா வளர்ந்திருக்கலாம் டீச்சர். ஆனா, ஜானகி என்கிற காக்கா போட்ட விதைதான் நாடகம்’ என்றேன். எளிமையான நபர். இன்று ஃபேஸ்புக்கில் ஒரு லைக் போட்டாலே அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஜானகி டீச்சருக்கு இது பெரிதாகவே தெரிவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

என்னுடைய நாடகங்களை, பெரும்பாலும் ஜானகி டீச்சர் பார்த்துவிடுவார். `சாக்லேட் கிருஷ்ணா’ அவருடைய ஃபேவரைட். பிடித்த படம் `அவ்வை சண்முகி’. ஐ.பி.எல் மாதிரி இப்போது சி.பி.எல் (கிரேஸி ப்ரீமியர் லீக்) என்றொரு நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் ஹீரோயின், முடிவெட்டுகிறவரைப் பார்த்து `நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே!’ என்பார். `நீங்க என்னைப் பார்த்தே இருக்க முடியாது. நான் ஒன்லி ஃபார் ஜென்ட்ஸ்’ என்பார் பதிலுக்கு. இந்த வசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருந்தேன். என் டீச்சரைத்தான் நினைத்துக்கொண்டேன். எதிலும் அத்தனை சீக்கிரத்தில் திருப்தியடைய மாட்டார். பர்ஃபெக்‌ஷன் வரும் வரை காத்திருப்பார். நான் எதிர்பார்த்ததுபோலவே இந்த வசனம் அவருக்கு இது மிகவும் பிடித்தது.

எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்

பெங்களூரு போகும்போதெல்லாம் ஜானகி டீச்சரைச் சந்திக்கத் தவறுவதில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் என் பக்கத்து வீட்டுக்காரராகவும் இருந்ததால், பல காலம் அந்தத் தொடர்பு தொடர்ந்தது. டீச்சருக்கும் எனக்குமான அந்த உறவில் திடீரென ஓர் இடைவெளி விழுந்தது. 35-40 வருடங்களுக்குப் பிறகுதான் அவரைத் திரும்பவும் சந்தித்தேன்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் நண்பர் நந்தகுமார். அவர் எனக்கும் நண்பர். நந்தகுமாரைச் சந்தித்தபோதுதான் அவரின் அம்மாதான் ஜானகி என்பது தெரிந்தது. உடனே விசாரித்து, டீச்சர் பெங்களூரில் இருப்பது தெரிந்து சந்தித்தேன். என்னை நன்றாகவே ஞாபகம் வைத்திருந்தார்.

நான் ஜெயிக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த வெறி, என்னை பிரமிக்கவைத்தது. ஓர் ஆசிரியராகத் தன் மாணவனை நன்றாகப் படிக்க வைத்தால் போதும் என்று மட்டும் நினைக்காமல், எனக்குள் இருந்த கலை உணர்வைத் தூண்டி வளர்த்தவர். இன்று நான் கொள்ளிடமாகக் கரைபுரண்டு ஓடினாலும் எனக்குத் தலைக்காவிரி ஜானகி டீச்சர்தான்.

எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்

பெண்கள் சூழ வளர்ந்தவன் நான்.  பாட்டி, அம்மா, மனைவி என அன்பால் என்னை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் பெண்கள். எனக்கு மகள் கிடையாது. அந்தக் குறை எனக்கு உண்டு. பாட்டியின் பெயர் ஜம்பகலஷ்மியம்மாள். `ஜம்பா’ எனக் கூப்பிடுவோம். இன்றும் எங்கள் வீட்டு மளிகைக்கடைக் கணக்கு, பாட்டியின் பெயரில்தான் தொடர்கிறது. ஜானகி மாதிரியே ஜம்பகலஷ்மியையும் வாழ்வில் மறக்க முடியாது!’’

எனக்கு அவரே தலைக்காவிரி! -  கிரேசி மோகன்

நானும் அவளும் நகைச்சுவைக்கு இடம் எங்கே?

``அவள் விகடனின் ரெகுலர் வாசகன் நான். பெண்களுக்குத் தேவையான எல்லா விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இதழ். ஒரே ஒரு குறை. பெண்கள் எழுதும் சிறுகதைகளுக்குக் கொஞ்சம் இடம் தரலாம். பெண்களின் பெருமை பேசும் சிறுகதைகளை வெளியிடலாம். அப்படி எழுதுகிறவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாம்.

பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்கிறார்கள். `மகளிர் மட்டும்’ படத்தில் ஊர்வசி, ரேவதி, ரோகிணி என மூன்று நடிகைகள். ஊர்வசி, நடிப்பு ராட்சசி. ஊர்வசியுடன் நடிக்கும்போது மற்றவர்கள் டல்லாகிவிடுவார்கள். அவரைப்போலவே கோவை சரளாவும் என் வாழ்வில் முக்கியமானவர். `சதிலீலாவதி’ பண்ணும்போது அதில் கோவை சரளாவை நடிக்கவைக்கச் சொல்லி கமலிடம் கேட்டேன். நான் எழுதிய சாதாரணத் தமிழை, கோவைத் தமிழுக்கு மாற்றியவரே சரளாதான்.

அருந்ததி ராய், சிவசங்கரி, வாஸந்தி எனப் பலரும் சீரியஸாகவே எழுதுகிறார்கள். மனோரமா என்றாலும் யாரோ எழுதிக் கொடுத்த நகைச்சுவையைத்தான் பேசி நடித்தார். ஏன் பெண்களில் நகைச்சுவை எழுத்தாளர்கள் இல்லை? பெண்கள் நிறைய சுமக்கிறார்கள். சீரியஸான விஷயங்களைச் சுமப்பதாலேயே அவர்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். பெண்களுக்கான நகைச்சுவையைத் தேடிப்பிடித்து அவள் விகடனில் அறிமுகப்படுத்துங்கள்.’’