வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

தமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்! கே.எஸ்.அங்கமுத்து,   டி.ஏ.மதுரம் 

தமிழ்  சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்! கே.எஸ்.அங்கமுத்து,   டி.ஏ.மதுரம் 
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்! கே.எஸ்.அங்கமுத்து,   டி.ஏ.மதுரம் 

முதல் பெண்கள் ஹம்சத்வனி, ஓவியங்கள் : கார்த்திகேயன் மேடி

`சினிமா பேசத் தொடங்கும் முன்னரே நகைச்சுவை நடிகையாகப் பரிமளித்தவர்களில் முதலாமவர் என ‘சைலன்ட் மூவி’களில் நடித்த ருக்மணி பாலாவைச் சொல்லலாம்' என்கிறார் தமிழ் சினிமாவை அதிகம் அலசி புத்தகங்கள் எழுதிய வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன். ருக்மணி பாலா குறித்து அதிக தகவல்கள் நம்மிடம் இல்லை. ஆனால், அப்போது முதலே நடித்துக்கொண்டு இருந்தாலும், திரைப்படங்கள் பேசத் தொடங்கியதும் நகைச்சுவை நடிகையாகத் தனி முத்திரை பதித்துக் கலக்கிவந்தவர் கே.எஸ்.அங்கமுத்து. சினிமா தமிழ் பேசும் முன்னரே நாடகங்களில் கோலோச்சிக்கொண்டிருந்த அங்கமுத்துவை அதிகம் அறியப்படும் தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவை நடிகை எனக் கொள்ளலாம்.

1914-ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் ஜீவரத்தினத்துக்கும் எத்திராஜுலு வுக்கும் மகளாகப் பிறந்த அங்கமுத்து, சிறு வயதிலேயே அடுத்தடுத்து தந்தை தாய் இருவரையும் இழந்து அநாதையாக நின்றவர். படிக்க வழி இல்லாதவருக்கு நாடக உலகம் கைகொடுத்தது. சண்முகம் செட்டியார் என்பவர் பி.எஸ்.வேலு நாயர் நாடக கம்பெனியில் சேர்த்துவிட, மளமளவென கம்பெனிகள் மாறி அயல்நாடுகளுக்குச் சென்று நாடகங்கள் நடித்த அங்கமுத்து, 1933-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘நந்தனார்’ என்ற பேசும் படத்தில் முதன்முறையாகப் பேசி நடித்தார். அதன்பின் பி.எஸ்.ரத்னாபாய் - பி.எஸ்.சரசுவதிபாய் சகோதரிகள் தயாரித்த ‘பாமா விஜயம்’ படத்தில் நடித்தார். சகோதரிகளுடன் நல்ல நட்பு கொண்டிருந்த அங்கமுத்து, அவர்கள் நடத்திய நாடக கம்பெனியிலும் நடித்துக்கொண்டிருந்தார்.

தமிழ்  சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்! கே.எஸ்.அங்கமுத்து,   டி.ஏ.மதுரம் 

நடிப்பு என்பது வெறும் வசன உச்சரிப்பு, பாடல் என்று மட்டுமே இருந்த காலகட்டத்தில், உடல்மொழியிலும் நகைச்சுவை ஊட்டலாம் என்று கற்பித்தவர் அங்கமுத்து. பெருத்த உருவம், கணீர்க் குரல், கை கால்களை ஆட்டிப் பேசும் உத்தி என, அந்தக் காலத்தில் நடிகைகளுக்கு இருந்த எந்த இலக்கணத்தையும் சாராதவராகத் தனி முத்திரை பதித்துவந்தார்.

ரத்னாவளி, மிஸ் சுந்தரி, மீராபாய், பிரேமபந்தன், காலேஜ் குமாரி, டம்பாச்சாரி, மாயாபஜார் என வரிசையாகப் படங்கள். ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி வாழைப்பழம் திருடித் தின்னும் காட்சியில், பழக்காரியாக நடித்த அங்கமுத்து, `காலேஜ் குமாரி' படத்தில் சைக்கிள் ஓட்டி நடித்த முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார். `தங்கமலை ரகசியம்’ படத்தில் வரும் இவரது `ராஜா காது கழுதை காது’ நகைச்சுவைக்கு இன்றளவும் மக்கள் சிரித்து மகிழ்கிறார்கள்.

1960-கள் வரை ரெட்டை மாடுகள் பூட்டிய வில்வண்டியில்தான் ஸ்டுடியோக்களுக்குப் பயணப்பட்டார் அங்கமுத்து. 1979-ல் வெளிவந்த ‘குப்பத்து ராஜா’ அங்கமுத்து நடித்த கடைசி திரைப்படம். திருமணம் செய்து கொள்ளாத அங்கமுத்து, வாய்ப்புகள் அருகி, பருமனால்வந்த நீரிழிவால் அவதியுற்றார். அரசின் உதவிகள் கிடைத்தும், அது போதாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த அங்கமுத்து, 1994-ம் ஆண்டு மறைந்தார்.

அங்கமுத்து நடிக்கத் தொடங்கிய காலத்துக்குப் பின் நடிக்க வந்தவர் டி.ஏ.மதுரம். ஆனால், என்.எஸ்.கே என்ற ஜாம்பவானின் நட்பும் வசனங்களும் கைக்கெட்டியதால், மிக சுலபமாக அப்போது நடித்துக்கொண்டிருந்த நகைச்சுவை நடிகைகளை ஓரம்கட்டி முன்னேறிவிட்டார் மதுரம். கணவன் மனைவி இணையராக நகைச்சுவை நடிப்பை வழங்கிய முதல் ஜோடி, தமிழ் சினிமாவில் என்.எஸ்.கே - மதுரம்தான். அவர்களைப் போன்றே அடுத்து களம் இறங்கியவர்கள் காளி என்.ரத்னம் - சி.டி.ராஜகாந்தம், கே.ஏ.தங்கவேலு - எம்.சரோஜா ஜோடிகள். சினிமாவில் மட்டும் ஜோடியாகப் பரிமளிக்காமல், நிஜவாழ்விலும் திருமணம் செய்துகொண்டு உற்றதுணையாக வாழ்ந்தவர்கள் மதுரமும் கிருஷ்ணனும்.

1918-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்த மதுரம், `ரத்னாவளி’ படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். 1935-ல் வெளிவந்த ரத்னாவளிக்குப் பின் புனே நகரத்தில் எடுக்கப்பட்ட ‘வசந்த சேனா’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார் மதுரம். அப்போது கிருஷ்ணனை வெகுவாகக் கவர்ந்தது, கணீர்க் குரலில் டி.பி.ராஜலட்சுமியின் பாடல்களை மதுரம் பாடிய அழகும் அவரது உதவும் மனப்பாங்கும்.

ராஜா சாண்டோ தலைமையில் படம் முடியும் முன்னரே திருமணம் செய்து கொண்டது காதல் ஜோடி. சென்னை திரும்பிய பின்னரே மதுரத்துக்குத் தெரிந்தது, கிருஷ்ணன் ஏற்கெனவே மணமானவர் என்ற உண்மை. சிறிது காலம் சண்டையிட்டுக் கொண்டாலும், இளகிய மனம்கொண்ட மதுரத்தால் கிருஷ்ணனை உதறித் தள்ள முடியவில்லை. அதோடு, இறுதிவரை கணவரின் முதல் மனைவி நாகம்மாள் மற்றும் அவர் குழந்தைகளைப் பராமரித்து வந்தார் மதுரம். சொந்தமாகப் பாடியும் நகைச்சுவை வசனங்கள் எழுதியும் வந்த காரணத்தால், வெற்றிகரமாகவே இயங்கியது என்.எஸ்.கே - மதுரம் ஜோடி. இவர்களது நகைச்சுவைப் பகுதிகள் தனியாகவே எடுக்கப்பட்டுப் படங்களில் இணைக்கப்பட்டன. அவற்றை எங்கு, எவ்வாறு பொருத்த வேண்டும் என்பதையும் இவர்களே முடிவு செய்தார்கள். இதற்கிடையே ஒரு குழந்தை பிறந்து, சிறிது நாள்களில் இறந்தும் போனது மதுரத்துக்கு. நடிப்பு மட்டும் தளராமல் போய்க்கொண்டே இருந்தது. ஒரு காலகட்டத்துக்குப் பின், மதுரத்தின் தங்கை டி.ஏ.வேம்பம்மாளையும் கிருஷ்ணன் வாரிசு வேண்டி மணம் முடிக்க, அவர்கள் குடும்பத்தையும் சேர்த்தே நிர்வகித்து வந்தார் மதுரம்.

தமிழ்  சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்! கே.எஸ்.அங்கமுத்து,   டி.ஏ.மதுரம் 

எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்க,  1944-ம் ஆண்டு ஊடகவியலாளர் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் திடீர்க் கைதானார் கிருஷ்ணன். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாசம். குடும்ப நிர்வாகம் தலைவலியைத் தர, என்.எஸ்.கே. நாடக சபாவைத் தொடங்கிய மதுரம், மாநிலம் எங்கும் சென்று நாடகங்களை அரங்கேற்றினார். சட்டப்படி கிருஷ்ணனை மீட்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார். இங்கிலாந்து வரை சென்ற வழக்கு, ஒருவழியாக முடிந்து, கலைவாணர் விடுதலையானபோது சேர்த்து வைத்தது எல்லாம் கரைந்துவிட்டிருந்தது.

எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து, அவரின் ஜோடியாகவும் நடித்து ‘பைத்தியக்காரன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து வந்தார் மதுரம். கிருஷ்ணன் அல்லாது வேறு நடிகருடன் அவர் ஜோடியாக நடித்தது அந்த ஒரு படத்தில் மட்டுமே. இந்தப் படத்தில் இவருக்கு இரட்டை வேடம். முதன்முதலில் இரட்டை வேடம் தரித்த நகைச்சுவை நடிகை இவரே. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் 122 படங்களில் நடித்து முடித்துவிட்டது மதுரம் - என்.எஸ்.கே ஜோடி. இருவரும் பாடி நடித்த `சிரிப்பு’ பாடலை மறக்க முடியுமா என்ன?

காந்தியவாதியான கிருஷ்ணனின் அடிச்சுவட்டில் மதுரமும் சுதந்திரப் போரில் அதீத அக்கறை கொண்டிருந்தார். அறிவியல், சீர்திருத்தம் எனப் புதுமையான கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றனர் இருவரும். 1947 ஆகஸ்டு 15 அன்று, `அறுபது வருஷத்துப் பயிர்’ என்ற வானொலி சிறப்பு நிகழ்ச்சியில் இந்த ஜோடி பங்கு பெற்றது.

தான் பிறந்த நாகர்கோவிலில் மனைவியின் பெயரில் `மதுர பவனம்’ என்ற மாளிகை வீடும், ஸ்ரீரங்கத்தில் `கிருஷ்ண பவனம்’ என்ற வீடும் கட்டினார் கிருஷ்ணன். 1957-ல் கலைவாணர் மரித்த பிறகும், குடும்பச் சூழல் காரணமாக நடிப்பை நிறுத்தவில்லை மதுரம். 1974-ல் மறையும் வரை மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றிய மதுரம், நிச்சயம் ஒரு ‘முதல் பெண்’தான். அதிகம் அறியப் பட்ட வெற்றிகரமான முதல் நகைச்சுவை நடிகை இவர்.

இவரைப் போன்றே சி.டி.ராஜகாந்தம், டி.பி.முத்துலட்சுமி என பல நடிகைகள் நகைச்சுவையை அன்றைய படங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள். சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கே சொந்தமான கையிருப்பு - சிரிப்பு… சரிதானே?