Published:Updated:

ஆசை, குரோதம், துரோகம்... மனிதனின் அகவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மகா கலைஞன்! #11YearsOfVetrimaaran

ஆசை, குரோதம், துரோகம்... மனிதனின் அகவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மகா கலைஞன்! #11YearsOfVetrimaaran
ஆசை, குரோதம், துரோகம்... மனிதனின் அகவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மகா கலைஞன்! #11YearsOfVetrimaaran

``மூணு பேர வெட்டிட்டேன்! ரெண்டு பேருக்கு நெறைய அடிபட்டுருக்கு, இதெல்லாம் நடக்கும்னு, என் லைஃப்ல நடக்கும்னு, நான் நினைச்சுக் கூட பாக்கல! இதுக்குலாம் காரணம் நான் ஆசப்பட்டு வாங்குன இந்த பைக்தான்னு சொன்னா நம்ப முடிதா!" ஹவுசிங் போர்டு குடியிருப்பில் கை, கால்களில் வெட்டுப்பட்டு ரத்தமும் வியர்வையுமாகத் தன் கையில் கத்தியுடன் பதைபதைப்பாக தனுஷ் நிற்க, அவரது வியர்வை பல்ஸர் பைக்கில் விழ, தனுஷின் வாய்ஸ் ஓவரில் ஆரம்பமாகும் பொல்லாதவன் திரைப்படம். `எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடல், பல்ஸர் பைக், சிக்ஸ் பேக் தனுஷ் எனப் பொல்லாதவன் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. 2007-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி அந்தத் தீபாவளியின் 'ஹிட்டான' பொல்லாதவன் படம், தமிழில் வெளிவந்த படங்களில் முக்கியமான இடத்தைத் தக்க வைத்தது. கோலிவுட்டில் வெளியாகும் படங்கள் அனைத்தும் `கமர்சியல்’ என்ற ஜானரை உருவாக்கி, படத்தின் அனைத்துப் போக்கையும் அதன் பிணைப்பிலேயே வைத்திருக்கும். அதைத் தளர்த்தி கதையையும் கதையின் நாயகனையும் சினிமா என்கிற சயின்ஸ் வடிவத்துக்குள் கொண்டு வர எத்தனிக்கும் சொற்பமானவர்களில், மிக முக்கியமானவரான வெற்றிமாறன் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். ஆனால், பின் `பொல்லாதவன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டது. 

நண்பர்களுடன் கேரம் போர்டு, சரக்கு, காதலியை சயிட் அடிப்பது, அப்பாவிடம் தண்டச் சோறு திட்டு எனத் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் ஹீரோதான் என்றாலும் பொல்லாதவனின் நுணுக்கமும் மேக்கிங்கும் வெற்றிமாறனை கவனிக்க வைத்தது. சாதாரணன் ஒருவனுக்கு வரும் ஆசையை, கோபத்தை, காதலை மிக யதார்த்தமாகத் திரையில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி நிகழ்த்திக் காட்டியது. தனுஷ் பைக் வாங்க ஆசைப்படுகிறார். காசு இல்லை. பைக்கை விளம்பரங்களில், ஷோரூம்களில் பார்த்து ரசிக்கிறார். தன் தந்தை தன்னை குடித்ததற்காகத் திட்டும்போது, ``துட்டு வோணும் எல்லாதுக்கும்" என ஆதங்கத்துடன் பூ தொட்டியைக் குத்தி உடைக்க, மறுநாள் அவர் அப்பா 'என்னால முடிஞ்சது இவ்ளோதான் இதை வச்சு பொழச்சுக்கச் சொல்லு!" எனப் பணம் கொடுக்கிறார். அதை வைத்து தன் ஆசை வண்டியை வாங்குகிறார். அதன் பிறகு பைக் வைத்திருக்கும் காரணத்தாலேயே லோன் வசூலிக்கும் வேலை கிடைக்கிறது. வீட்டில் மரியாதை கூடுகிறது. தன் காதலி 'டிராப்' செய்ய சொல்ல காதலும் மலர்கிறது. இப்படி தன் வாழ்வு மொத்தத்தையும் மாற்றியதாக நினைக்கும் பைக் திருடு போனதும், அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கையில், அதன் பின் விரியும் கதை அவரை கத்தி எடுத்து பைக்கை மீட்க வைக்கிறது. 

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நாயகர்களைப்போல, பைக்கைத் திருடியவனைக் கண்டுபிடித்து அவனை துவம்சம் செய்து பைக்கை மீட்கவில்லை பொல்லாதவன். மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவன் தன் சக்திக்கு உட்பட்டு, என்னவெல்லாம் செய்வானோ அதைத்தான் பிரபுவும் ( தனுஷ்) செய்கிறான். தனது திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் கதையின் போக்கை அடர்த்தியாக்குகிறார் வெற்றிமாறன். காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் செயற்கையாகக் கட்டமைக்காமல் கதையோடு பிணைத்திருக்கிறார். மேம்போக்காக எந்தவொரு கதாபாத்திரத்தையும் உருவாக்காமல் கதாபாத்திரங்களின் குணாதிசியம், உடல்மொழி, கதாபாத்திரத் தேர்வு என அனைத்திலும் `அறிமுக இயக்குநர்' வெற்றிமாறனின் அசாத்திய உழைப்பு தெரியும். தனுஷ் தனக்கு வேலை கிடைத்த பிறகு, எந்த மளிகைக் கடையில் நூறு ரூபாய் மாற்றி அப்பாவிடம் அடிவாங்குவாரோ, அந்த மளிகைக் கடையின் பாக்கியை அடைத்துவிட்டதாகச் சொல்லும் காட்சியில் `தனுஷ் அப்பா முரளி பெரும்பாலான அப்பாக்களை நினைவுபடுத்துவார். தனுஷின் அப்பா முரளி, அம்மா பானுப்ரியா தொடங்கி , அவுட்டாக வரும் பவன், கிஷோரின் மகனாக இரு காட்சிகளில் மட்டுமே வரும் சிறுவன் முதற்கொண்டு கதாபாத்திரங்களை யதார்த்தமாக வடிவமைத்திருப்பார். ஜி.வி.பிரகாஷ், வேல்ராஜ், எடிட்டர் கிஷோர் பல கலைஞர்களின் கூட்டு உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரியும்.

முன் பின்னாக வாய்ஸ் ஓவரில் விரியும் திரைக்கதையில், படத்தின் கிளைக் கதையாக வரும் டேனியல் பாலாஜி- கிஷோரின் ரவுடியிசம், கடத்தல் கதை படத்தை வேறெங்கோ இழுத்துச் செல்லாமல் படத்தின் திரைக்கதையோடு பிசகில்லாமல் பயணித்திருக்கும். வெறுமனே ரவுடிகளைக் கொடூர வில்லன்களாக மட்டுமே சித்திரிக்காமல், அவர்கள் கடத்தும்போதைப் பொருளின் காரணகர்த்தாக்களாக விளங்கும் முதலாளிகளையும் காட்சிப்படுத்தியிருப்பார். அது கதையில் எந்த உறுத்தலுமின்றி வரும். இயல்பான ஆனால், அடர்த்தியான காட்சிகள் எந்த அளவுக்கு கதையின் போக்கை சுவாரஸ்யப்படுத்தும் என்பதற்கு இப்படத்தின் காட்சிகள் சரியான உதாரணம். 

தொலைந்து போன தனது பைக்கைத் தேடி , கருணாசுடன் தனுஷ் போகும் காட்சியும் அதன் பின்னணி இசையும் அந்த நேரத்தின் பதைபதைப்பை நமக்கும் கடத்தும். கிஷோரை முதன் முறையாக தனுஷ் சந்திக்கும் காட்சி, தனது அப்பாவை அடித்ததும்  டேனியல் பாலாஜியை தனுஷ் அடிக்கும் காட்சி, மருத்துவமனையில் "போட்றா" என கண்களாலேயே தனுஷ் மிரட்டும் காட்சி, கிஷோரை டேனியல் பாலாஜி கொலை செய்யும் காட்சி என படத்தில் பல காட்சிகள் மெனக்கெடலுடன் எடுக்கப்பட்டிருக்கும். இந்த காட்சிகள் அனைத்திலும் தனுஷ், கிஷோர் என அனைவரின் சிறப்பான நடிப்பும் வெளிப்பட்டிருக்கும்.  

பெரும்பாலான தமிழ் சினிமாக்களைப்போல `சீன்’களாக எழுதப்படாமல், காட்சிகள் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், கேமரா எனத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து எழுதியிருப்பது படத்தில் தெரியும். வெற்றிமாறனே ஒரு நேர்காணலில் எழுதுவதிலேயே ஒரு சினிமா தீர்மானிக்கப்பட்டுவிடும் என்பார். அப்படியான ஒரு படம் பொல்லாதவன். பொல்லாதவன் போன்ற ராவான சினிமா தமிழில் பெரும்பாலும் எடுக்கப்படுவதே இல்லை. வெற்றிமாறன் அதைச் சரியான விதத்தில் கையாண்டிருப்பார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனது படைப்புகளில் ஆசை, குரோதம், துரோகம் என மனிதனின் அகவுணர்வுகளை மையப்படுத்தி கதையை உருவாக்குகிறார். வாழ்வின் அனைத்தும் மனிதனின் அகவுணர்வுகளைப் பொறுத்துதான் நடக்கிறது என்பதைக் கதையோடு பொறுத்திக்கொள்கிறார். அதனால்தான் அவரது படைப்பு வணிக சமரசங்களைக் கடந்து நேர்த்தியான ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. ``சினிமாங்குறது முதல்ல பிசினஸ், அப்புறம் சயின்ஸ் அதுக்கப்புறம்தான் மத்தது’’ என அடிக்கடி வெற்றிமாறன் சொல்வதுண்டு. ஹீரோக்களை சுற்றியே கதை எழுதப்பட்டு திரைப்படங்கள் வெற்றி பெற்று வந்த சூழலில், தனது படங்களில் கதையின் தன்மையை, அடர்த்தியைப் பெரிதும் சமரசம் செய்யாமல் வெற்றி பெற்று வருகிறார். ரசிகர்கள், திரை விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் என அனைவருக்குமான ஒரு படத்தை எடுப்பது தமிழ் சினிமாவில் பெரும் சவால். அதைத் தனது 11 ஆண்டு கால சினிமாவில் மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறார் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்துக்கு வெற்றிமாறன் முதலில் வைக்க நினைத்த தலைப்பு `இரும்புக்குதிரை.’ பாலகுமாரனின் நாவலான இரும்புக் குதிரையைத் தலைப்பாக்க விரும்பினார். நிஜத்தில் தமிழ் சினிமாவின் `இரும்புக் குதிரை’ வெற்றிமாறன்தான்.

ஒரு கலைஞனுக்கு சமூகப் பொறுப்பு, விமர்சனத்தை எதிர்கொள்ளும் தன்மை, தன் படைப்பின் மீதான நம்பிக்கை இது மூன்றும் அடிப்படைத் தேவைகள். அதனால்தான், `` `பைசைக்கில் தீவ்ஸ்' ஒரு க்ளாசிக் அதை 'பொல்லாதவன்'ன்ற 'கமர்சியல் ப்ளிக்'கோட கம்பேர் பண்ணக் கூடாது" எனச் சொல்கிறார். 'அமரோஸ் பெரோஸ்'  படமும் 'ரூட்ஸ்' நாவலும்தான் ஆடுகளத்தின் இன்ஸ்பிரேசன் என்கிறார். படத்தின் முடிவில் இன்ஸ்பிரேசனான படங்களின், புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். அனைவரும் கொண்டாடிய 'விசாரணை' படத்தை சிலர் விமர்சித்தபோது அவர்களுக்கு படம் பிடிக்கலைன்றத ஏத்துக்கணும் என்கிறார். கவனமாக ஸ்டடி பண்ணி எடுத்தும் 'இது எங்க வாழ்க்கை இல்லனு, மக்கள் சொல்றாங்கல' என்பதற்கு "அந்த மக்கள் சொல்றப்ப அது உண்மைதான் ஏத்துக்கணும்" என்கிறார். இந்தப் பக்குவம்தான் முதல் நாள் ரசிகர்கள் விசில் பறக்க வைக்கும் படைப்பையும் வெனிஸ் திரைப்பட விழாவுக்கான படைப்பையும் கொடுக்க வைக்கிறது. தனது முந்தைய படைப்பிலிருந்து பெரும்பாய்ச்சலோடு தனது அடுத்த படைப்பை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்க வைக்கிறது. வெற்றிமாறனுக்குப் பிடித்த கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் வரிகளைப் போலவே அவரது சினிமா வாழ்வும் அமைந்திருப்பது ஆச்சர்யம். 

``வனமொன்றில் இருபாதைகள் பிரிந்தன, நான்
இதுவரை போகாத பாதையைத் தெரிவு செய்தேன்.
அதுதான் உண்டாக்கியது எல்லா வித்தியாசங்களையும்.’’  

வாழ்த்துகள் 'வெனிஸ்' மாறன்.

பின் செல்ல