Published:Updated:

“வளைகாப்பு சீன்ல நடிக்கும்போது விக்கித் திணறி அழுதேன்!” திருநங்கையின் தாய்மை

``இதுவரை எந்தத் திருநங்கைகளுக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்போறதா நினைச்சேன். படத்துக்காக நடிக்கப் போறோம்னு என்னால உணரவே முடியலை. நிஜமாவே நான் தாயான மாதிரிதான் ஃபீல் பண்ணினேன்!”

“வளைகாப்பு சீன்ல நடிக்கும்போது விக்கித் திணறி அழுதேன்!” திருநங்கையின் தாய்மை
“வளைகாப்பு சீன்ல நடிக்கும்போது விக்கித் திணறி அழுதேன்!” திருநங்கையின் தாய்மை

"திருநங்கைனாலே சாலையோரம் கை தட்டி காசு கேட்கிறவர்கள், பாலியல் தொழில் செய்கிறவர்கள்... போன்றவாறே இன்னமும் சிலர் நினைச்சுட்டு இருக்காங்க. ஏன் சென்னை வர்றதுக்கு முன்பு வரை நான்கூட அவங்களைப் பார்த்து பயந்துட்டுதான் இருந்தேன். ஆனா, சமீப காலமா மருத்துவத்துறை, காவல்துறை, நீதித்துறை, மீடியா... என எல்லாத் துறைகள்லயும் தங்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பைச் சரியா பயன்படுத்திக்கிட்டு கெத்துக் காட்டுற திருநங்கைகளைப் பார்க்கும்போது அந்தப் பார்வை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. அதுதான் `திருத்தாய் அவளே' குறும்படத்தை இயக்குவதற்கான தெளிவைக் கொடுத்துச்சு” என்கிறார் பிரவீன்குமார். `திருத்தாய் அவளே' குறும்படத்தின் இயக்குநர். சமீபத்தில், மதுரையில் திருநங்கைகள் சொசைட்டி சார்பாக நடைபெற்ற திருநங்கைகளுக்கான குறும்படப் போட்டியில் பல பிரிவுகளில் நாமினேட் ஆன குறும்படமாகவும், சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்ற `திருத்தாய் அவளே' குறும்படத்தின் இயக்குநர் பிரவீன் குமார் இளம் படைப்பாளிகளுக்கான நம்பிக்கை முகம்.

``நான் இதற்கு முன்பே `எனக்கெனப் பிறந்தவளே' என்ற ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருந்தேன். அதுதான் என்னோட ஃபர்ஸ்ட் புராஜெக்ட். அதை யூடியூப்ல பார்த்துட்டு ஜீவா அக்கா எனக்கு போன் பண்ணி பேசுனாங்க. `பிரதர் உங்க ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன். ரொம்ப டச்சிங்கா இருந்தது. உங்ககிட்ட வேற ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க. நாம சேர்ந்து ஒரு புராஜெக்ட் பண்ணலாம்'னு சொன்னாங்க. ஆல்ரெடி நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்லயும் ஃபியூச்சர் ஃபிலிம்ஸ்லயும் ஜீவா அக்கா பிஸியா இருக்கிறப்போ அவங்களாவே போன் பண்ணி பேசுறாங்களேன்னு நினைச்சு சந்தோஷமா இருந்துச்சு. உடனே அவங்களுக்காகவே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். திருநங்கைகளைப் பத்தின எல்லாப் படங்களையும் பார்த்தேன். அதுல கெஸ்ட் ரோலாவும், க்ளாமராவும் இல்லாட்டி, கஷ்டப்படுறவங்களாகவும்தான் காட்டியிருந்தாங்க. அந்தப் பார்வையை உடைக்கணும்னு முடிவு பண்ணி புதுசா ஒரு கான்செப்ட்டை செலக்ட் பண்ணலாம்னு தோணுச்சு. நிச்சயமா இந்தப் படம் முழுக்க திருநங்கை ட்ராவல் பண்ற மாதிரியும் அவங்களை வெச்சே படம் நகர்ற மாதிரியும் இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அப்போதான் எனக்கு திருநங்கைகளாலும் குழந்தை பெத்துக்க முடியும்ங்கிற தகவல் கிடைச்சது. எனக்கு அது ரொம்பவே புடிச்சிருந்தது. இதை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கணும்னு நினைச்சு அதுக்கான எல்லா ரிப்போர்ட்ஸையும் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதுதான் கதைன்னு ஜீவா அக்காகிட்ட சொன்னதும் அப்படியே ஜெர்க் ஆகிட்டாங்க” என்றதும் ஜீவா சுப்பிரமணியம் குறுக்கிட்டு, 

``நிஜமாவே அது எனக்கு ரொம்ப பெரிய ஷாக்தான் பிரதர். பிரவீன் என்கிட்ட கதை சொன்னதும், `என்னப்பா உண்மையாதான் சொல்றீங்களா? அது எப்படித் திருநங்கைகளால குழந்தை பெத்துக்க முடியும்'னு கேட்டேன். `அதுக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கு அக்கா. வெளிநாடுகளில் எல்லாம் திருநங்கைகளை வாடகைத்தாயா பயன்படுத்துறாங்க'ன்னு சொல்லி அதுக்கான ரெக்கார்ட்ஸை கொடுத்ததும் எனக்கு அப்படியொரு சந்தோஷமா இருந்துச்சு. அதுக்கப்பறம் வேற எந்தக் கேள்வியும் கேட்காம நாம எப்போ ஷூட் போலாம்னுதான் கேட்டேன். நமக்குக் கிடைக்காத ஒண்ணு கிடைக்கப்போறதா மனசுக்குள்ள ஒரு உணர்வு ஏற்பட்டுச்சு. இதுவரை எந்தத் திருநங்கைகளுக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்போறதா நினைச்சேன். படத்துக்காக நடிக்கப் போறோம்னு என்னால உணரவே முடியலை. நிஜமாவே நான் தாயான மாதிரிதான் ஃபீல் பண்ணினேன். ஷீட் ஆரம்பிச்சதும் ஒவ்வொரு நாளையும் நான் அனுபவிச்சு அனுபவிச்சு ஒரு தாயாவே வாழ்ந்தேன். அதுலயும் எனக்கு நானே வளைகாப்பு பண்ணிக்கிற சீன்ல நிஜமாவே ஏங்கிப்போனேன். கண்ணுல தண்ணி விக்கி நின்னுச்சு. நிஜமாவே வயிறு தெரியணும்ங்கிறதுக்காக பத்துப் பதினைஞ்சு நாளா நல்ல சாப்பிட்டு தொப்பை போட வெச்சேன். நடிச்சு முடிச்சதும் எனக்கு ரொம்பவெ பெருமையா இருந்துச்சு. அதை வார்த்தைகளால விவரிக்கவே முடியாது” தாய்மை உணர்வில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது ஜீவாவுக்கு. 

``இந்த உணர்வைத்தான் ஜீவா அக்கா அப்படியே படத்துல கொண்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு கேமரா முன்னாடி நடிக்கிறோம்ங்கிற எண்ணமே கிடையாது. அடிக்கடி வயித்தைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கிட்டாங்க. இந்த ஸ்கிரிப்ட்டுக்காக பல மருத்துவர்கள்கிட்ட கலந்து பேசியிருக்கேன். அப்போ, `இயல்பாவே பெண்களுக்குக் கர்பப்பை மாற்றுவது சவாலான விஷயம். அதுலயும் திருநங்கைனா அவங்களோட உடல்ல புதுசா ஒரு உறுப்பை வைக்கப் போறோம். அதை அவங்க உடம்பு தாங்கிக்கணும். அதுக்கப்பறம் ஒரு வருஷம் கழிச்சு அந்த உறுப்பு உடல்ல செட் ஆனதுக்குப் பிறகுதான் அவங்களால கருவைச் சுமக்க முடியும்'னு பல தகவல்களைக் கொடுத்தாங்க. அதை ஸ்க்ரிப்ட்ல கொண்டு வர்றது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஆனா, ஜீவா அக்கா அவங்களோட நடிப்பு மூலமா அதை அழகா வெளிப்படுத்தியிருக்காங்க. அவங்க மட்டுமல்லாம, ப்ரியதர்ஷினி மேடமும் சிறப்பா நடிச்சிக் கொடுத்தாங்க. எங்ககிட்ட அவங்க எதையும் எதிர்பார்க்கல. அவங்களுக்கு ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்ததால வந்துட்டுப் போற செலவை மட்டும் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. இப்படியான அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவங்க பக்கத்துல இருந்ததாலதான் எங்க ஷார்ட் ஃபிலிம் நல்லபடியா வந்திருக்கு. மதுரையில நடந்த திருநங்கைகளுக்கான குறும்படப்போட்டியில் சிறந்த நடிகை, சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த ஒளிப்பதிவு என மூன்று பிரிவுகள்ல நாமினேட் ஆச்சு. அதுல சிறந்த நடிகைக்கான விருது ஜீவா அக்காவுக்குத்தான் கிடைச்சது. அவங்கதான் அந்த விருதுக்குத் தகுதியானவங்கன்னு அங்க இருந்த பலரும் சொன்னப்போ ரொம்பப் பெருமையா இருந்துச்சு” என்கிறார் பிரவீன்குமார்.

``நான் 2016 ல இருந்து மீடியால இருக்கேன். 'கவண்' படம்தான் என்னை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்துச்சு. ஆனாலும், இந்தக் குறும்படம் மூலமாதான் நான் முதன் முதலா குணச்சித்திர நடிகைக்கான நாமினேஷன்ல தேர்வாகி இருக்கேன். எப்போதுமே எனக்கு ஷார்ட் ஃபிலிம்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். அங்க கமர்ஷியல் வேல்யூ கிடையாது. அது ஒரு ஓவியம் மாதிரி. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணுவாங்க. அதே நேரத்துல கிடைக்கிற எல்லா ஷார்ட் ஃபிலிம்ஸ்லயும் கமிட் ஆகிட மாட்டேன். நான் ஒரு சோஷியல் ஆக்ட்டிவிஸ்ட். அதனால, நான் நடிக்கிற படங்களும் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்றதா இருக்கணும்னு நினைப்பேன். எல்லாத்தையும் தாண்டி இங்கே எனக்கு ஒரு நல்ல டீம் கிடைச்சது. ஜீவா என்னோட நெருங்கிய தோழி. அந்த கெமிஸ்ட்ரியும் இந்த ப்ராஜெக்ட்ல நல்லபடியா அமைஞ்சிருக்கு. சீக்கிரமே படத்தை யூடியூப்ல வெளியிட்டு எல்லா மக்களையும் போய்ச் சேர்ற வகையில பண்ணுவோம்” புன்னகையோடு முடிக்கிறார் பிரியதர்ஷினி. 

திருநங்கைகளும் இனி வாடகைத்தாய் முறை மூலம் தாய்மை உணர்வை அடைய முடியும் என்பதை, தனக்கான பாணியில் வெளிப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த முயலும் இவர்களைப் போன்ற இளைஞர்களை வரவேற்போம். `திருத்தாய் அவளே' குறும்படம் நிச்சயம் சமூகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும்.