Election bannerElection banner
Published:Updated:

மாயத்தருணங்களும், கர்வம் கொள்ளும் வரிகளும்... நன்றி தாமரை! #HBDThamarai

மாயத்தருணங்களும், கர்வம் கொள்ளும் வரிகளும்... நன்றி தாமரை! #HBDThamarai
மாயத்தருணங்களும், கர்வம் கொள்ளும் வரிகளும்... நன்றி தாமரை! #HBDThamarai

மாயத்தருணங்களும், கர்வம் கொள்ளும் வரிகளும்... நன்றி தாமரை! #HBDThamarai

``என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!”

எட்டாம் வகுப்பில் என் தமிழாசிரியை குறிப்பிட்டுச் சொல்லி சிலிர்த்த இவ்வரியின் வழியாகத்தான் அறிமுகமானார் அவர். வளர வளரப் பாடல் வரிகளைக் கவனித்தபோது, அட, நமக்குப் பிடித்த பாடல்கள் நிறைய எழுதினது இவங்கதான் போல என்று நெருக்கம் கூடிய வரிகளுக்குச் சொந்தக்காரர். எந்த வரியிலும் ஆங்கிலச் சொற்கள் இருக்காது. ஒவ்வொரு வரியிலும் ஒரு கவிதை ஒளிந்துகொண்டிருக்கும். பெண்ணுடலைப் பொருளாகக் கருதி எழுதும் குத்துப்பாடல்களை அறவே தவிர்த்து வந்தவர்; ஆண்களால் மட்டுமே பாடப்பட்டுவந்த பெண்ணின் மனதை, அவளின் காதலை, தாய்மையை, ஒரு பெண்ணாக இருந்து நெகிழ்ச்சியும் அழகுமாகப் பதிவு செய்தவர். லேசான மழைப்பொழுது. ஓடும் ரயிலில் உங்களின் மனதுக்கு நெருக்கமான அவனோ அவளோ வந்து, கையில் கித்தாருடன் ``என்னோடு வா, வீடு வரைக்கும்; என் வீட்டைப் பார், என்னைப் பிடிக்கும்!” என்று பாடினால், எப்படி இருக்கும்?! வாழ்க்கையில் ஒரு முறையேனும் நிகழ்ந்துவிடாதா என்று நாம் ஏங்கும் மாயத்தருணங்களைப் பாடல் வரிகளாகக் கொடுப்பதில் பாடலாசிரியர் தாமரை கைதேர்ந்தவர். 

``என் வீட்டில் நீ நிற்கின்றாய் அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய் உன்னைப் பூவென்று எண்ணிக் கொய்யச்சென்றேன்” (விசிறி)

நேர்ல பார்க்குறதே கஷ்டம், இதுல என்னோட வீடு வரைக்கும் அவங்களால வர முடியுமா என்ன என்று செல்லமாக சலித்துக்கொள்பவர்களுக்கு இந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் பிடித்துப்போகும்தானே? 

இரும்பு மனம் படைத்த, எதற்கும் அஞ்சாத ஓர் ஆண். எளிதாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாத, அதற்குத் தேவையும் இல்லாத ஆணைப் பற்றி இங்கு ஆயிரம் ஆயிரம் பாடல் வரிகள் உண்டு. ஆனால், ஒரு பெண்ணின் பார்வையில் அவளுக்குப் பிடித்த ஆண் எப்படி இருப்பான் அல்லது அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பாள்? உறுதியும், பெருமிதமும், கம்பீரமும் நிறைந்த அவனுக்குள் இருக்கும் மெல்லிய மனதின் நெகிழ்வினை அவளால் மட்டும்தானே புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் முடியும்! தாமரை அவர்களின் காதல் வரிகளின் தனித்துவமும் இதுதான். ஆண்கள் மட்டுமே பாடலாசிரியர்களாகக் கோலோச்சிய இசையுலகில் அத்திப் பூத்தாற்போல தோன்றினார் தாமரை. கெளதம் மேனன் திரைப்படங்களின் ஆஸ்தான பாடலாசிரியரான தாமரையால் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆழத்தையும் புரிந்துகொண்டு வரிகளை வடிக்க இயலும். சற்று குழப்பமும் சிக்கலும் நிறைந்த ஜெஸ்ஸி, கண்ணியம் நிறைந்த குரலில் காதலைச் சொல்லும் மாயா, துடுக்குத்தனமும் அதிரடியும் நிறைந்த தேன்மொழி, சொல்லாமல் காத்துவைத்த காதலைச் சொல்லும் பிரியா என்று தாமரையின் வரிகளால் இன்னும் கொஞ்சம் அழகு கூடிய கதாபாத்திரங்கள் நிறைய.  

``பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே, 
கண்களை நேராய் பார்ப்பதால் நீ பேசும் தோரணை பிடிக்குதே” (ஒன்றா ரெண்டா ஆசைகள்)

பள்ளி ஆசிரியையான மாயாவின் முதிர்ச்சியான காதல், அவர்களின் எளிமையான திருமணம் என்று விரியும் காட்சிகளில் அற்புதமான பாடல் வரிகளைக் கொடுத்திருப்பார்.

``உன் போன்ற இளைஞனை, மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை;
 கண்டேன் உன் அலாதித் தூய்மையை என் கண் பார்த்துப் பேசும் பேராண்மையை” (விசிறி)

என்றும் வரிகளின் வாயிலாகவே பெண்ணின் காதலை அலாதியாகக் கூறியவரால், 

``வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் 
நீதான் என்று பார்த்தேனடி சகி; 
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே 
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி;” (மேற்கே மேற்கே) 

``கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும் 
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும் 
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்” (பார்த்த முதல் நாளே)  

என்று ஆணின் காதலையும் அழகாகக் கூற முடிந்தது!  

நோயுற்ற மகனை எப்பாடு பட்டாவது நடக்கவைக்க வேண்டும் என்று போராடும் தாய். அவளின் புற அழகே அவளுக்கு ஆபத்தாக வரும்போது, சிறிதும் யோசிக்காமல் தலைமயிரை மழுங்கச் சிரைத்துவிட்டுப் பிள்ளையை இடுப்பில் ஏந்தி, புதிய பயணத்துக்குத் தயாராகிறாள். பின்னால் கம்பீரம் நிறைந்த சித்தாராவின் குரலில் ஒலிக்கிறது, தாய்மையின் நூற்றாண்டுப் பாடல்.

“கண்கள் நீயே, காற்றும் நீயே! 
 தூணும் நீ, துரும்பில் நீ! 
வண்ணம் நீயே, வானும் நீயே! 
ஊனும் நீ, உயிரும் நீ
பலநாள் கனவே, ஒருநாள் நனவே!
ஏக்கங்கள் தீர்த்தாயே, எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான்தான் நீ, வேறில்லை!” (படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்) 

திரையில் விரியும் காட்சிகளுக்கும், ஜி.வி. பிரகாஷின் இசைக்கும் இடையில் வைராக்கியம் தாய்மையை வார்த்தைகளாக நெசவு செய்திருப்பார் தாமரை. அவர் எழுதிய மிகச்சிறந்த ஐந்து பாடல்கள் என்று அவருடைய ரசிகர்கள் யாரைப் பட்டியலிடச் சொன்னாலும், அதில் நிச்சயமாக ‘கண்கள் நீயே’ பாடல் இருக்கும். 

``என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்”

என்றும் 

``பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ, 
இசையாகப் பலபல ஓசை செய்திடும் இராவணன், ஈடில்லா என் மகன்!”

என்றும் தொடரும் அந்தப் பாடல், 

``நான் கொள்ளும் கர்வம் நீ”

எனுமிடத்தில் முடிவிலாத ஒரு பூரண நிலையைப் பெற்றிருக்கும். 

சந்த நயத்துக்காக ஏதேதோ சொற்கள் நுழைத்து எழுதும் பாடல்களுக்கு மத்தியில், மனித உணர்வுகளை மென்மையாகவும், நுணுக்கமாகவும் அடர்த்தியான தமிழ்ச்சொற்களால் வழங்குவதாலேயே அவர் இன்றும் தனித்துத் தெரிகிறார். திருப்புமுனையாக அமைந்த ’மின்னலே’ படத்தின் பாடல்கள் முதல், யூடியூபில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்ற ‘மறுவார்த்தை பேசாதே’வரை, தனது கவித்துவமான வார்த்தைகளால் வசீகரித்தவர் தாமரை. இன்னும் பல கர்வம் கொள்ளும் வரிகளை எங்களுக்காக எழுதுங்கள்!

தாமரையின் வரிகளில் உங்களுக்குப் பிடித்தவற்றை கமென்ட் செய்யுங்களேன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு