Published:Updated:

"அவமானப்படுத்துன அவங்களை விரட்டாம ஓயமாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

"அவமானப்படுத்துன அவங்களை விரட்டாம ஓயமாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்
"அவமானப்படுத்துன அவங்களை விரட்டாம ஓயமாட்டேன்!" - லட்சுமி ராமகிருஷ்ணன்

தான் குடியிருக்கும் அபார்ட்மென்டில் சங்கம் என்கிற பெயரில் முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார், நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

`ஹவுஸ் ஓனர்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார், லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது அவருக்கு `அபார்ட்மென்ட்' வடிவில் பிரச்னை வந்திருக்கிறது. பிரச்னை காவல் நிலையம் வரை வந்துவிட்டது. `என்ன விவகாரம்?' அவரிடமே கேட்டோம்.

``சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் இருக்கு, `பிரெஸ்டீஜ் பெல்லா விஸ்டா'. அதிநவீன வசதிகளுடன் கூடிய, சுமார் 2500 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு இது. இங்கே ஒரு ஃபிளாட் வாங்கி, கடந்த வருடம் குடிவந்தேன். (`பிக்பாஸ்' ஐஸ்வர்யா, `சரவணன் மீனாட்சி' ரச்சிதா உள்ளிட்ட மேலும் சில சினிமா பிரபலங்கள் இங்குதான் வசித்து வருகிறார்கள்). இப்போ நான் பேசறது என்னோட பிரச்னை மட்டுமல்ல. இங்கே வசிக்கிற பெரும்பாலானவங்க சந்திச்சுக்கிட்டு இருக்கிற பிரச்னைதான். பொதுவா ஒரு அபார்ட்மென்ட் கட்டப்பட்டா, கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலைகள் முடிஞ்சு எல்லா வீடுகளும் அவற்றை வாங்கிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்போதுதான், `ரெசிடென்ட் வெல்ஃபர் அசோசியேஷன்' உருவாக்கப்படும். அபார்ட்மென்ட்டைக் கட்டின பில்டரே ஃபார்ம் பண்ணித் தந்துட்டுப் போவாங்க. ஆனா, இங்கே கட்டடத்துக்கு ஒரு செங்கல் கூட நடப்படாதபோதே, சிலர் `ஃபிளாட் புக் பண்ணிட்டோம்'னு சொல்லி ஒரு சங்கத்தைப் பதிவு செய்திருக்காங்க. இதனால, ஆரம்பத்துல பில்டருக்கும் அந்தக் குறிப்பிட்ட சிலருக்குமிடையே பிரச்னைகூட வந்திருக்கு. ஆனா, ஒரு கட்டடத்துல பில்டர் அந்த குரூப்கிட்ட சரண்டர் ஆகிட்டாங்கனு தெரியுது.

அரசின் பதிவுத்துறை அதாவது, `சங்கங்களின் பதிவாளர் அலுவலகம்' அந்தக் கும்பலோட மோசடியான பதிவை எப்படி அனுமதிச்சதுனு எங்களுக்குப் புரியலை. வீடுகள் எல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு நாங்க அசோசியேசன் ஃபார்ம் பண்ணப் போனப்போ, `அங்கே ஏற்கெனவே ஒரு சங்கம் இருக்கு'னு எங்க சங்கத்தைப் பதிவு செய்யமாட்டேங்கிறாங்க.

அபார்ட்மென்ட் கட்டி முடிக்கிறதுக்குள்ளேயே `சங்கம்' என்ற பெயரில் உள்ளே வந்தவங்களின் நோக்கம் பணம். ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கிறதுனால மெயின்டனென்ஸ் தொகையே கோடிக்கணக்கில் வசூலாகும். ஏழெட்டு பேர் கொண்ட அந்தக் கூட்டம் இந்தப் பணத்தைக் குறிவெச்சே செயல்படுதுனு தெரிஞ்சதும், எங்கள்ல சிலர் நீதிமன்றத்துக்குப் போனோம். இப்போ, கோர்ட்ல இருக்கு இந்த விவகாரம். தீர்ப்பை ஒத்தி வெச்சிருக்காங்க.

தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிற நிலையில், சில தினங்களுக்கு முன் நாங்க யார் மீது குற்றம் சுமத்திக்கிட்டு இருக்கோமோ, அவங்க முன் நின்று ஒரு தேர்தலையும் நடத்தியிருக்காங்க. இதை எப்படிங்க அனுமதிக்க முடியும்?! அதனால, கேள்வி கேட்டேன். அதுக்காக என்னை ரொம்பவே அவமானப்படுத்திட்டாங்க. ஆனா, இந்தக் கும்பலை விரட்டுற வரைக்கும் நான் ஓயமாட்டேன்" என்கிறார், லட்சுமி ராமகிருஷ்ணன். 

தற்போது செயல்பட்டு வரும் `குடியிருப்போர் நலச் சங்க'த்தின் செயலாளராக இருந்து, பதவி விலகிவிட்ட ஶ்ரீகாந்த் என்பவரிடம் பேசினோம்.

``விவரம் தெரியாமப் பேசிக்கிட்டு இருக்காங்க அந்தம்மா. இங்கே நாங்க ஃபிளாட் புக் பண்ணின பிறகு சில வருடங்களா கட்டுமான வேலையையே தொடங்காம இருந்தாங்க பில்டர்ஸ். அதையெல்லாம் கேள்வி கேட்கணும்னா, எப்படிக் கேட்பது? அந்த ஒரு காரணத்தாலேயே ஃபிளாட் புக் பண்ணின சிலர் சேர்ந்து அசோசியேஷனை ஆரம்பிச்சோம். `சொசைட்டிஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்'டின் படி முறையாகவே நாங்க அதைப் பதிவு பண்ணியிருக்கோம். பில்டரும் எங்க சங்கத்தை அங்கீகரிச்சிருக்காங்க. குடியிருப்பில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருக்கிற சிலர், தவறான தகவலை இவங்களுக்குத் தந்திருக்காங்க. இவங்களும் அதை அப்படியே நம்பிப் பேசிக்கிட்டு இருக்காங்க. சங்கத்துல ஊழல், முறைகேடுனு எதையாச்சும் இவங்க நிரூபிச்சா, அதுக்கான தண்டனையை நாங்க ஏத்துக்க தயாரா இருக்கோம்'' என்கிறார், ஶ்ரீகாந்த்.

``சங்கத்தைப் பதிவு செய்து அனுமதிக்க வேண்டியது, அரசுத் துறையான பதிவுத் துறை. அவங்க ஒரு சங்கத்தைப் பதிவு செய்துட்டாங்க. அதுல பிரச்னைங்கிறாங்க சிலர். அதுல தீர்வு காண முயற்சிக்க வேன்டியது, ரெண்டு தரப்பும்தான். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை எங்களோட பங்கு என்ன?! வீடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு இந்த மாதிரி பிரச்னைகள் வந்தா, நாங்க தலையிடுறதில்லை." என்பது குடியிருப்பை நிர்மாணித்த கட்டுமான நிறுவனமான `பிரெஸ்டிஜ்'ஜின் பதில். 

நல்ல தீர்ப்பு வரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு