Published:Updated:

பூஜையுடன் தொடங்கியது `இந்தியன் 2’ செட் பணிகள்!

உ. சுதர்சன் காந்தி.
பூஜையுடன் தொடங்கியது `இந்தியன் 2’ செட் பணிகள்!
பூஜையுடன் தொடங்கியது `இந்தியன் 2’ செட் பணிகள்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான படம் `இந்தியன்.’ லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' படத்தை தான் இயக்கப்போவதாகப் பிக் பாஸ் முதல் சீஸனின் இறுதிப் போட்டியில் அறிவித்தார் இயக்குநர் ஷங்கர்.

பின், ரஜினியின் '2.0' படத்தின் பணிகளில் பிஸியாக இருந்ததால் இப்படத்தைப் பற்றிய எந்த ஓர் அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. கமல்ஹாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக 'இந்தியன்' படத்தின் க்ளைமாக்ஸிலிருந்து 'இந்தியன் 2' என்ற டைட்டில் வருவதுபோல் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது இப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம். அனிருத் இசையமைக்கிறார். '2.0' படத்தைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்துக்கும் கலை இயக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் முத்துராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. அதன் முதற்கட்டமாக பின்னி மில்ஸ் பகுதியில் செட் அமைக்கும் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. அதைத் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.