Published:Updated:

"சம்பள பாக்கினு விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு சொல்லலையே..!" - நந்தகோபால்

'96' படத்தின் தயாரிப்பாளர் மீது நடிகர் சங்கம் சம்பளப் புகார் ஒன்றை குற்றச்சாட்டாக வைத்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் நந்தகோபால் என்ன சொல்கிறார்?!

"சம்பள பாக்கினு விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு சொல்லலையே..!" - நந்தகோபால்
"சம்பள பாக்கினு விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு சொல்லலையே..!" - நந்தகோபால்

"இயக்குநர் ஆசையோட சினிமாவுக்கு வந்தேன். எதை எதிர்பார்த்து வருவமோ அது சினிமாவுல கிடைக்காது. பலருக்கும் இதுதான் நடந்திருக்கும். என் நண்பர்கள் என்னை நம்புனாங்க. அவங்க உதவியோட நான் தயாரிப்பாளர் ஆனேன். நான் தயாரிச்ச முதல் படமான 'கலாபக் காதல'னுக்கு என் பணத்தை நான் முதலீடு பண்ணலை. நண்பர் ஒருத்தர்தான், அவர்  பணத்தை முதலீடு பண்ணி, என்னைத் தயாரிப்பாளர் ஆக்கினார். பிறகு, தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சேன் நான்." உணர்ச்சிகரமாகப் பேசுகிறார், தயாரிப்பாளர் நந்தகோபால். 

'துப்பறிவாளன்', 'வீர சிவாஜி', 'கத்தி சண்டை', 'ரோமியோ ஜூலியட்' சமீபத்தில் வெளியான '96' உள்பட பல படங்களைத் தயாரித்தவர்,  நந்தகோபால். இவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர்கள் விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி மூவருக்கும் 'மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் உரிமையாளார் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதனால், இந்த நிறுவனத்துக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நந்தகோபாலிடம் பேசினேன். 

''அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் உண்மையல்ல. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து எனக்கு மொட்டைக் கடிதம்தான் வந்தது. அந்த அறிக்கையை வெளியிட்டது யார் என்பதும், அறிக்கையில் கையெழுத்தோ, பெயரோகூட இல்லை. மேலும், இந்த அறிக்கை ஊடகங்கள் மூலமாகத்தான் வந்தது. விஜய் சேதுபதி, விஷால், விக்ரம் பிரபு மூவருக்கும் எந்த சம்பள பாக்கியும் வைக்கவில்லைனு என் பதிலைச் சொல்லிட்டேன்.  

தவிர, விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி, விஷால் மூவருமே எங்கேயும் நான் சம்பள பாக்கி வைத்ததாகச் சொல்லவில்லை. ஏன்னா, அவர் அவருக்கு உண்டான ஊதியத்தைக் கொடுத்துட்டேன். நடிகர் சங்கத்திலிருந்து இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன் யாரும் என்னைக் கூப்பிட்டு பேசலை. இதுதொடர்பாக, சங்கத்திற்கும் எனக்கும் எந்தவொரு கடிதப் போக்குவரத்தும் நடக்கவில்லை. இப்படியான சூழல்லதான் இந்த அறிக்கை வந்திருக்கு. இந்த அறிக்கை தொடர்பாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் தலைவரிடம் பேசினேன். யாரும் தெளிவான பதிலைச் சொல்லலை. அந்த அறிக்கையில கையெழுத்து போட்டிருந்தா, பிரச்னை பெருசாகும்னுதான் கையெழுத்து போடாம வெளியிட்டிருக்காங்கனு சிலர் சொன்னாங்க. ஒரு ஜனநாயக நாட்டில் போதிய ஆதாரம் இல்லாம இப்படியெல்லாம் தடை பண்ண முடியாதில்லையா... விஷாலிடம் இதுகுறித்துக் கேட்டேன். 'எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை'னு சொல்லிட்டார், அவர். நேர்ல பேசிக்கலாம்னும் சொல்லியிருக்கார்.  


"விஜய் சேதுபதி '96' பட பிரஸ் மீட்ல சில விஷயங்களை வெளிப்படையா பேச முடியாதுனு சொன்னாரே?"

"விஜய் சேதுபதி வளரும் நடிகர். இந்த நேரத்தில் அவர் யாரையும் நேரடியா குற்றம் சுமத்த முடியாதுல்ல. மிகப்பெரிய பொறுப்பில் இருக்குறவங்களைப் பற்றி அவர் பேச முடியாது. எல்லோருக்கும் அவங்க அவங்க பாதுகாப்பு முக்கியமில்லையா... அதனால, வெளிப்படையா சொல்லாம விட்டுட்டார்னு நினைக்கிறேன்." 

" 'துப்பாறிவாளன்' படம் சம்மந்தமாக ஏற்கெனவே விஷாலிடம் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்தது. பிறகு விஷாலிடம் பேசியிருக்கீங்க... அவரோட அணுகுமுறை எப்படியிருந்தது?"

" '96' பட ரிலீஸூக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே விஷால் சாரிடம் பேசிக்கிட்டு இருக்கேன். ஒரே ஒருமுறை மட்டும்தான் அவரை நேர்ல பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அப்போ அவர் ஒரே வார்த்தையில்தான் பதில் சொன்னார். உட்கார்ந்து பேசுற சூழ்நிலையை அவர் உருவாக்கித் தரலை."  

"ஒரு தயாரிப்பாளரா நடிகர் சங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டு அறிக்கையை எப்படிப் பார்க்குறீங்க?" 

"கடந்த இருபது வருடமா சினிமாவில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்களுடைய நிலையைப் பாருங்க... அதே காலகட்டத்துல நடிகர்கள் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்க. அதிக கஷ்டம் யாருக்குனு புரியும். ஒரு தயாரிப்பாளரோட கஷ்டத்தை யாருக்கும் புரியவைக்க முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு நடிகனின் செலவு மட்டுமே பத்து இலட்சம். அவர் ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரலைனாலும் அதனால எவ்வளவு நஷ்டமாகும்னு யோசிச்சுப் பாருங்க. எல்லாமே, தயாரிப்பாளர்களைத்தானே பதம் பார்க்கும். ஆனா, கடைசியில எல்லோரும் தயாரிப்பாளரைத்தான் குற்றம் சொல்றாங்க, அது வருத்தமா இருக்கு." .

"இந்தப் பிரச்னைக்கு என்ன மாதிரியான தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறீங்க?" 

"தயாரிப்பாளர் சங்கம் நேர்மையா இருந்து செயல்பட்டா, இதுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இல்லைனா, நீதிமன்றத்துல தனி மனிதனா போராடுவேன். அதற்கான வேலைகளையும் இப்போவே தொடங்கிட்டேன். ஏன்னா, இந்த நிமிடம் வரைக்கும் எனக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பும் தரலை. தவிர, தயாரிப்பாளர் சங்கம் மூலமா இந்தப் பிரச்னைக்கு எனக்கு நல்ல தீர்வு கிடைக்கும் நம்பிக்கை இல்லை. ஆனா, தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் மூலமா, தீர்வு கிடைக்கும்னு நம்புறேன்... பார்ப்போம்." என்றார். 

இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் நாசரை தொடர்புகொண்டபோது, 'ஊடகங்களிடம் இதைப் பற்றி பேச விருப்பம் இல்லை. தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் நேரடியாகப் பேசிக்கொள்கிறேன்." என்று முடித்தார்.