Published:Updated:

பரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்

பரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்
பரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்

`மை டியர் மாரி அண்ணே...

பெத்தவுக, பெரியவுக, பெருசு சிறுசுக, நண்டு சிண்டுன்னு மதுரயிலயிருந்து எல்லாரு சார்பாவும் வணக்குமுண்ணே!

பட்டித்தொட்டியெல்லாம் `எங்கும் புகழ் தொடங்கி' மனுஷ மக்கா எல்லார் நெஞ்சுலயும் நங்கூரமா நிலைச்சு நிக்குற பரியேறும் பெருமாளுக்காக, ஒங்களுக்கு இந்தக் கடுதாசிய எழுதறதுல எனக்கு அம்புட்டு சந்தோஷம்ண்ணே.

மருதக்காரய்ங்க ஆட்டுக்கறிக்கு அடிச்சுக்கிட்டாலும் கோழிக்கறிக்குக் கூடிப்பாய்ங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும் உத்தரபுரத்திலிருந்து உசிலம்பட்டி வரைக்க நடக்குற, நடந்த சாதீயக் கொடுமையலாம் பாத்தேதேன் நான் வளந்தேன்.

எங்கூரு திருவிழாவுல சவ்வுமிட்டாய் வித்துக்கிட்டு இருந்த அண்ணன, கூட்டத்துல நாலு விடலப்பயலுக நெருக்கிச் செஞ்சத பார்த்து நான் சாட்சி சொல்லக் கெளம்பினப்போ... `எதுக்கு வம்பு?'ன்னு என்னைய கையமர்த்தி உக்காரவெச்சதுக்கும், மக்கா நாளே ஏதோ பத்திரிகையில `திருவிழா நெரிசலில் வாலிபர் மரணம்'னு வந்த சேதிய எல்லாரும் கண்டும் காணாமக் கடந்துபோனதுக்கும் பின்னால இருந்த சங்கதி இந்த மரமண்டைக்கு அப்போ ஏறல. நெசந்தேன்... இப்டி அவுக சொல்லாத கதையவும் பேசாத பேச்சையும் உச்சந்தலையில ஏறி பொட்டுல அடிச்சு புரியவெச்சுப்புட்டான் நம்ம `பரியேறும் பெருமாள்'. படத்துல பேசுன சமத்துவத்தையும் சாதி எதிர்ப்பயும் அது கடத்துன வலியவும் பேசிப் பேசி ஊரே அமர்க்களப்பட்டுப்போச்சு. அத்தனையும் நடத்திக்காட்டி எல்லாரையும் திரும்பிப் பார்க்கவெச்ச அந்தப் புளியங்குளத்து மண்ணையும் சனங்களையும், செத்த ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னு வண்டியக் கெளப்பினோம். புளியங்குளத்துக்குள்ள நாங்க இறங்குனதும் வெள்ளந்தியா சிரிச்ச முகத்தோட வரவேத்து அந்தப் பொட்டக்காட்டிலும் பூவாசத்த வீசவெச்சாரு, முருகன் - கருப்பிக்கு ஆத்தாளும் அப்பனுமா இருந்து வளத்தவரு. `பரியேரும் பெருமாள்' படத்தோட அனுபவத்த பத்திக் கேட்கிறப்போ, மனுஷன் அம்புட்டு பூரிச்சுப்போறாரு.

`என் கருப்பி, எங்க வூட்டுலதான் பிறந்து வளர்ந்ததெல்லாம். கருப்பிக்கு இப்போ நாலு வயசு. வாரத்துல ரெண்டு நாளைக்கு நீச்சலுக்குக் கூட்டிக்கிட்டுப் போவேன். காத்தால அரை லிட்டர் பாலும், ராத்திரிக்கு ரெண்டு நாட்டுக்கோழி முட்டையும்தான் கருப்பிக்கு வலு! படத்துக்காக நாட்டு நாய்கள ஊர்ல இருந்து தேடிக்கிட்டு இருந்தப்போ, டைரக்டருக்குக் கருப்பிய புடிச்சுப்போய் ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டுப்போயிருந்தாங்க. கருப்பியோட ஃப்ரெண்ட்ஸும் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. படத்துல இவ்ளோ அழகா ஹீரோவோட ஒன்றிப்போயிருந்த கருப்பி, மொதல்ல எடுத்த ஷாட்டுக்கு ஓடக்கூட மாட்டாம, அப்டியே நின்னுட்டு இருந்துச்சு'ன்னு சொல்லவும் தூக்கிவாரிப்போட்டு முழிச்ச எங்கள பார்த்து சிரிச்சுக்கிட்டே மேல சொன்னாரு.

`அப்புறமா என்னையும் கூட்டிட்டுப்போய் ஓடவிட்ட பின்னாலதான் கருப்பி ஓடுச்சு. அதோட இல்லாம, ஹீரோவோடு கருப்பிய பழகவிட்டு என்னைய ட்ரெய்னிங் பண்ணச் சொன்னாங்க. அவ்ளோ தூரம் சிரமப்பட்டுதான் டைரக்டர் கருப்பிய திரையில கொண்டுவந்திருக்காரு. இன்னிக்கு எல்லாரும் கருப்பிய தேடிவந்து போட்டோ புடிக்கிறாங்க. விலைக்குக்கூட கேட்டாவுக. சிறுசுல இருந்து எங்க கூடவே ஒண்ணு மண்ணா வளந்ததுன்னு நான் கொடுக்கல. இவ்ளோ தூரம் எங்க கருப்பி மேல எல்லாருக்கும் இருக்கிற பாசமும் பிரியமுமே எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்மா!'ன்னு கண்ணுல ஊருபட்ட நெகிழ்ச்சிய தேக்கிவெச்சு முருகன் பேசுனப்போ, படத்தோட உயிரோட்டம் மாறாம இருக்குறதுக்கு நீங்க எடுத்துக்கிட்ட முயற்சியலாம் கண்ணு முன்னால காட்சி கண்டுபோச்சுண்ணே!

கருப்பிய பார்த்த சந்தோஷத்துல நாங்க இருந்தப்போவேதான், எங்கூரு பக்கமிருந்த பேச்சி அப்பத்தா சொன்னது நெனப்புல வந்து நெஞ்சுக்குள்ள முள்ளா குத்துச்சு. பருவம் வந்த பின்னால இனச்சேர்க்கைக்காக நாய்கள ஊருக்குள்ள அனுப்பிவிடுவாகளாம். அப்டி வெளிய விடுறப்போகூட, `பெரிய’ வீட்டு நாய்கள இவுக வீட்டு நாய்களோட சேரவிடாம கவனமா இருந்துப்பாய்ங்களாம். மீறி சேர்ந்துபுட்டா ரெண்டையும் கொன்னுபோடுவாய்ங்களாம். இவ்ளோ அழுக்குப் புடிச்ச சமூகத்துலதானே நம்ம வாழ்ந்து கெடக்கோம்! ஆனா, மாற்றம்தானே மாறாதது? `அம்மா சத்தியமா’, `பரியேறும் பெருமாள்' அந்த மாற்றத்துக்கான புள்ளையார்சுழியேதான் அண்ணே!

அடுத்தாப்புல புளியங்குளத்து ரெயில் தண்டவாளம், நிழல்கூட மண்ணுல விழாம தூரமா நின்னுட்டு இருந்த பனமரத்துக் கூட்டம், படத்துல முதல் அதிர்வ ஏற்படுத்தின குளம், ஓலைக்குடிசை வீடு, கருப்பியோட ஒப்பாரியில நெஞ்ச உருக்கி அழுத ஆத்தா... இப்டி படத்தோட கூடவே பயணிச்ச நெறைய இடங்களையும் மனுஷ மக்களையும் ரெங்க ரெங்கமா சொணங்காம சுத்திக்காமிச்சதோடு தன்னோட அனுபவங்களையும் பகுந்துக்கிட்டாரு கண்ணன்.

`பரியேறும் பெருமாளுக்காக நானும் ஒருசில காட்சியில நடிச்சிருக்கேன். அதுக்காக மனசாரப் பெருமைப்படுறேன். முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஊரையேவிட்டு போனவருலாம் படம் வெளியான பிறகு, திரும்பி வந்து எங்க சனத்தோட சகஜமாப் பழகி ஒரு நாள் முழுக்க இருந்து பழைய மாதிரி உறவாடிட்டுப் போனார். ஒருதடவ நான் டவுனுக்குள்ள போனப்போ, என்னைய அடையாளம் கண்ட ஆதிக்க சமூகத்த சார்ந்தவர் ஒருத்தர், `யார் மனசையும் புண்படுத்தாம படம் நல்லா வந்திருக்கு. எல்லாமே சீக்கிரம் மாறும்னு நம்புவோம்’னு சிரிச்சாரு. இதெல்லாம் எனக்கு மறக்கவே முடியாதவை. நாங்களும் இருக்கிறதே தெரியாம வாழ்ந்துட்டு மறைஞ்சு கிடந்தோம். எங்களோட உணர்வுகளையும் வெளிய கொண்டுவந்து நிறுத்தியிருக்கு `பரியேறும் பெருமாள்!' 'னு பேசிட்டு, செத்த நேரம் அமைதியா இருந்தவர கடைசியா ஒரே ஒரு கேள்விய மட்டும் கேட்கிறதுக்கு மனசு கிடந்து அடிச்சுகிச்சு. கேட்டேபுட்டேன்.

`நம்ம ஊர்லயிருந்து இப்படி ஒரு அழுத்தமான திரைக்கதை வந்து, எல்லாரையும் திரும்பிப் பார்க்கவெச்சிருக்கு. படத்துக்குப் பிறகு நம்ம ஊர் மக்களுக்கும் நெறைய நல்ல அனுபவமேதான் கிடைச்சிருக்கு.  மாற்றத்துக்கான நம்பிக்கையா இதைப் பார்க்குறீங்களா அண்ணே?'

அவரு சொன்ன பதிலும் சாட்டையடியாத்தான் அண்ணே விழுந்துச்சு.

`நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நாங்க நாயாதான் இருக்கணும்னு நீங்க நினைக்குற வரைக்கும், எதுவுமே மாறப்போறதில்லம்மா!'

புளியங்குளத்து சனங்ககிட்ட இருந்து விடைபெற்று எங்க ஊருக்கு ரெயில் ஏறி உக்காந்த பிறகு, ஜன்னல் வழியா தெரிஞ்ச அந்தத் தூரத்துத் தண்டவாளம் சொல்லுச்சு...

`மதுர மண்ணுக்குள்ளயும் மாரி செல்வராஜ்களும் பரியன்களும் நிச்சயம் தேவைதான்!'னு.

அன்புடன்,

கள்ளமற்றப் பேரன்புகளுடன் பரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் `ஜோ’க்களில் ஒருத்தி.'