
எம்.குணா
ஏற்கெனவே ‘தடையற தாக்க’ படத்தில் இணைந்து மிரட்டிய அருண்விஜய் - மகிழ்திருமேனி கூட்டணி இப்போது ‘தடம்’ படத்தில் இணைந்திருக்கிறது.
“நானும், டைரக்டர் திருமேனியும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வோம்.அப்போதெல்லாம் ‘எனக்குத் தகுந்த மாதிரி ஏதாவது கதை உங்ககிட்டே இருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒருமுறை ‘அருண் உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒரு கதையை உருவாக்கி வெச்சிருக்கேன்’ என்று சொன்னவர், கதையை முழுவதுமாகச் சொல்லி முடித்ததும், சந்தோஷத்தில் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன்.
‘தடம்’ ஒரு இன்வெஸ்டிகேஷன், த்ரில்லர் . தான்யாஹோப், ஸ்மிரிதி என்று இரண்டு ஹீரோயின்கள். ரொமான்ஸ் காட்சிகளை வித்தியாசமாகப் படமாக்கியிருக்கிறார் திருமேனி. தமிழகத்தில் நிறைய ஊர்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துதான் ‘தடம்’ படத்தை உருவாக்கியி ருக்கிறார் அவர். படத்துல உங்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு!”

“வாரிசு நடிகராக இருப்பது வரமா, சாபமா?”
“சினிமாத் தொழிலில் இருக்கும் நெளிவு சுளிவுகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். எந்தவிதப் பின்புலமும் இல்லாமல் நடிக்க வரும் புதுமுகத்தின்மேல் பொதுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதில்லை. நாங்கள் எவ்வளவுதான் சிரமப்பட்டு நடித்தாலும் ‘அப்பா அளவுக்கு இல்லையே’ என்று ஒப்பீடு செய்து எங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். ஆரம்பத்தில் என் நடிப்பில் அப்பாவின் நிழல் தெரிந்தது. பிறகு, அப்பாவின் சாயலிலிருந்து வெளிவர ரொம்ப நாளானது.”
“சினிமாவில் முறையான நடனம், சண்டைப் பயிற்சி; அமெரிக்காவில் சினிமா குறித்த படிப்பு எல்லாம் இருந்தும் தமிழ் சினிமாவில் உங்களுக்கு என்று ஓர் இடத்தைப் பெறவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறதா?”
“வருத்தம் இருப்பது உண்மைதான். அதையே நினைத்துக்கொண்டு மனம் தளர்ந்தால் 18 வருஷம் என்னால் சினிமாவில் நீடித்து இருக்கமுடியாது.
நான் நடித்த காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் சிலருக்கு அவர்களின் அப்பாக்கள்தான் கதை கேட்டு, ஓகே செய்தார்கள். எனக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்து, பல இயக்குநர்கள் கதை சொல்வதைத் தவிர்த்தனர். உண்மையில் என் படத்துக்கான கதையை நான்தான் கேட்டேன். படங்களை சரியாக செலக்ட் செய்யாததால், என் திரை வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வளவு ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் இப்போதுதான் 25-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் இத்தனை ஆண்டுக்கால அனுபவம் முதிர்ச்சியையும் நிதானத்தையும் உருவாக்கியிருக்கிறது.”

“ஹீரோவாக நடிக்க வந்துவிட்டு, அஜித்துக்கு வில்லனாக நடித்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?”
“உண்மையைச் சொல்லணும் என்றால் மனசுக்கு ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்தது. எனக்கு நல்ல படங்களோ, பெரிய இயக்குநர்களோ அமையவில்லை என்கிற சூழ்நிலையில் நான் தவித்துக்கொண்டிருந்த நேரம். அப்போது எனக்கு ஒரு சக்சஸ்ஃபுல் திரைப்படம் தேவைப்பட்டது. அஜித்சார்கூட நடித்தால் மக்களைப்போய் உடனடியாகச் சேரும். அதனால் நடித்தே ஆகவேண்டும் என்கிற வெறி எனக்கு எழுந்தது. உண்மையில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு சமமாகத்தான் என் கேரக்டரையும் அமைத்திருந்தார், கெளதம்மேனன். விக்டர் கேரக்டர் நட்பு, கோபம், காதல் எல்லாம் கலந்திருந்தது. எனக்கு நிறைய இடங்களில் நடிப்பதற்கு விட்டுக்கொடுத்த அஜித் சாரை மறக்கமுடியாது. ஒரு உண்மையைச் சொல்லணும்னா, நான் ஹீரோவாக நடித்தபோது இருந்ததைவிட வில்லனாக நடித்தபிறகு பெண் ரசிகைகள் அதிகமாகியிருக்கிறார்கள். ‘ என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு பல வில்லன் வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் விக்டர் அளவுக்குப் பலம் பொருந்திய கேரக்டர்கள் அல்ல.”
“மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?”
“அதைப் பற்றி இப்போதைக்குச் சொல்லமுடியாது . ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் அப்பா நடித்திருந்ததால் ஒருநாள் அவரது ஆபீஸுக்கு என்னை அழைத்துப் போனார். அப்போது ‘அலைபாயுதே’ படத்துக்காக போட்டோ செஷன் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பா என்னை மணிசாரிடம் அறிமுகம் செய்தார். ‘இப்பதான் மாதவன்னு ஒரு பையனை செலக்ட் பண்ணிட்டேன். அப்புறம் பார்க்கலாம் சார்’ என்று மணிரத்னம் சொன்னார். இப்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படப்பிடிப்புக்குப் போனபோது ‘அலைபாயுதே’ நினைவுகளைச் சொன்னேன்.

‘சார், உங்க படத்துல 15 வருஷம் கழிச்சு நடிக்கிறேன். இது என்னோட 25-வது படம்’ என்று சொன்னேன். மணிசார் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘சினிமாவில் எல்லாமே டைம்தான் அருண். இப்போதான் அது நடக்கணும்னு இருக்கு. இந்தப்படம் உங்களுக்குப் பெரிய பிரேக் கொடுக்கும்’ என்று நெகிழ்ந்துபோய்ச் சொன்னார். நானும் நெகிழ்ந்துவிட்டேன்!”
“விக்ரமுக்கு ‘சாமி’, சூர்யாவுக்கு ‘சிங்கம்’ ஹிட் படங்களைக் கொடுத்த உங்கள் மைத்துனர், டைரக்டர் ஹரி உங்களை ஹீரோவாக நடிக்க வைக்கவில்லையே ஏன்?”
“உறவுகளில் எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போது குடும்ப நிகழ்வுகளை மட்டுமே பகிர்ந்துகொள்வோம் . ஹரி மாமாவைப் பார்க்கவரும் தயாரிப்பாளர்கள் ஏற்கெனவே வேறு ஒரு ஹீரோவின் கால்ஷீட்டைக் கையில் வைத்துக் கொண்டு வந்தால் அவரால் என்ன செய்ய முடியும்? மணிசார் சொன்னது மாதிரி எல்லாத்துக்கும் நேரம் என்று ஒன்று இருக்கிறது.”