பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“கூட்டணி சேர்ந்துட்டோம்!”

“கூட்டணி சேர்ந்துட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கூட்டணி சேர்ந்துட்டோம்!”

சுஜிதா சென் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

மிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸுக்காகக் காத்திருப்பவர்களுள் ஒருவர் இனியா. இவரின் அக்கா தாரா தற்போது ‘கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்க’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். “நான் மொதல்ல சினிமாவுக்கு வந்ததால் நான்தான் அக்கானு எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, நான் எப்படி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமா இருக்கேனோ, அதேமாதிரி என்னோட அக்கா மலையாள சினிமாவுல ஃபேமஸ்” என்று  பேச ஆரம்பிக்கிறார் இனியா. 

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து 14 நாள்கள் அமெரிக்கா போனதுதான் எங்களோட பெஸ்ட் மொமென்ட் ஆஃப் தி லைஃப்.இனியாதான் எனக்கு எல்லாமே. அவங்க பிஸியா சினிமாவுல நடிச்சுக்கிட்டி ருந்தப்பவும்,   எனக்காக நேரம் ஒதுக்கி என்னை வெளிய கூட்டிட்டுப் போனது இனியாதான்.

“கூட்டணி சேர்ந்துட்டோம்!”

என்னோட காஸ்ட்யூம்ஸ், மேக்க்கப், ஷூ இப்படி என்னவெல்லாம் புதுசா வாங்குறேனோ, அதையெல்லாம் அவங்க எடுத்துப் போட்டுட்டு பார்ட்டிக்குப் போவாங்க. அதுக்கப்புறம் எதுவும் தெரியாத மாதிரி என்னோட அலமாரியில் கொண்டுவந்து வெச்சுடுவாங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் தாரா.

“நடிக்க வர்றதுக்கு முன்னாடியே எனக்குத் தமிழ் தெரியும்.  நான் ஸ்கூல் படிக்கும்போது என் வீட்டுப் பக்கத்துல நிறைய தமிழ்க் குடும்பங்கள் இருந்துச்சு. அதுக்கப்பறம் ‘தமிழ் கற்றுக்கொள்வது எப்படி’ங்கிற புத்தகங்கள் வாங்கிப் படிச்சேன்.  நாங்க மாடலிங் பண்றதுல ஆரம்பிச்சு சினிமாவுல நடிக்கிறது வரைக்கும் எங்க குடும்பம் எங்களுக்கு சப்போர்ட்டாதான் இருக்குது.

எனக்கும் என்னோட அக்காவுக்கும் வேற வேற மாதிரியான ஆக்டிங் மெத்தட் இருக்கு. அக்கா எந்த மாதிரியான காஸ்டியூம்ஸ் செலக்ட் பண்றதுன்னு சொல்லிக்கொடுப்பாங்க. நான் உளவியல் ரீதியா எந்த மாதிரியான பிரச்னைகள் சினிமாத் துறையில வரும்னு அட்வைஸ் கொடுப்பேன். நான் ட்ரெடிஷனல் ஸ்டைல், அக்கா வெஸ்டர்ன் ஸ்டைல்.” என்று தாராவுக்கு ஹைஃபை காட்டுகிறார் இனியா.

“கூட்டணி சேர்ந்துட்டோம்!”

“டான்ஸ்தான் நடிப்புக்கான அடிப்படை. பரதநாட்டியம், கிராமிய நடனம் ரெண்டையுமே கத்துக்கிட்டேன். நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வெஸ்டர்ன் டான்ஸும் கத்துக்க ஆரம்பிச்சேன். ஆக்‌ஷன் படங்கள்ல நடிக்கணும்ங்கிறது ஆசை.

என்னைப் பார்த்தா ரொம்ப வெஸ்டர்னா இருப்பதாக நிறைய பேர் சொன்னதால, ஹோம்லி கதாபாத்திரங்களை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கேன். என்னால எல்லா விதமான கதாபாத்திரங்கள்லயும் நடிக்க முடியும்னு காட்டணும்” என்று தாரா கூற, ‘நீ சிஐடி கேரக்டர்ல நடிக்கலாம். ஏன்னா, நான் தூங்குற சமயம் பார்த்து என் மொபைல்ல இருக்குற போட்டோக்களை எடுத்து வீட்ல போட்டுக்கொடுக்குறது நீதானே!” என்று இனியா சொல்ல, குலுங்கிச் சிரிக்கிறார் தாரா. 

“இனியா முதல்ல பண்ணது சீரியல்தான். அதுக்கப்புறம்தான் சினிமாவுக்கு வந்தாங்க. இத்தனை வருஷமா தமிழ் சினிமாவுல இருக்காங்க. அழகும் திறமையும் என்னைவிட நிறையவே இருக்கு.  எங்க ரெண்டு பேருல பெஸ்ட் டான்சரும் அவங்கதான். அப்படிப்பட்ட இனியாவுக்கே சான்ஸ் கிடைக்கலைனா எனக்கு எப்படி சான்ஸ் கிடைக்கும்? ‘பொட்டம்மா’, ‘மாசாணி’ மாதிரியான கதாபாத்திரங்கள்தாம் இனியாவுக்கு வந்துகிட்டு இருக்கு. ஸோ, இப்போதைக்குத் தமிழ் சினிமா மேல எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை” என்கிறார் தாரா.

“கூட்டணி சேர்ந்துட்டோம்!”

“எந்தவிதமான ரோல் கிடைச்சாலும் நடிக்கிறதுக்கு நான் ரெடியா இருக்கேன். ஆனா, எனக்கு இதுதான் செட் ஆகும்னு மத்தவங்க ஏற்கெனவே முடிவு பண்ணி வெச்சிருக்காங்க. அதை மாத்திக்கிறது ரொம்பக் கஷ்டம். சின்ன பட்ஜெட் படங்கள்னு நினைச்சு எதையும் நான் ஒதுக்குறது கிடையாது. இந்திப் பட வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, அப்போ அதோட சீரியஸ்னஸ் புரியலை. டான்ஸ் மட்டும் போதும்னு நினைச்சுட்டேன்.  தனுஷோட சேர்ந்து நடிக்க வேண்டிய படம் மிஸ் ஆயிடுச்சு. இதுக்கெல்லாம் நிறைய வருத்தப்பட்டிருக்கேன்.

ஹீரோயின் ரோல் எல்லாராலயும் பண்ண முடியும். ஒரு படத்துல கேரக்டர் ரோல் பண்றதுதான் கஷ்டம். நான் எல்லாத்தையும் நடிப்பாதான் பார்க்குறேன். பாலிவுட் படங்கள்ல கேரக்டர் ரோல், ஹீரோயின் ரோல்னு எதையும் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. எல்லாரும் எல்லா கேரக்டர்கள்லயும் நடிப்பாங்க. சவுத் இந்தியன் சினிமாவுல நெகட்டிவ் ரோல் பண்ணுனா கடைசி வரைக்கும் நம்மள வில்லியாதான் பார்ப்பாங்க. வித்தியாசமான கதாபாத்திரங்கள் கெடைச்சாதான் நம்மளோட திறமையை வெளிக்காட்ட முடியும். நல்ல கதாபாத்திரங்களுக்காகக் காத்திருக்கேன்” என்று தம்ஸ் அப் காட்டுகிறார் இனியா.

“நானும்...நானும்” என்கிறார் தாரா.