Published:Updated:

``சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை!’’ - ராஜீவ் மேனன்

``சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை!’’ - ராஜீவ் மேனன்
``சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை!’’ - ராஜீவ் மேனன்

``சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை!’’ - ராஜீவ் மேனன்

``பொதுவாகவே ஒரு மியூசிகல் படம்னா, அந்தப் படத்தில் ஒரு இசைப் போட்டி நடக்கும் அதில் கதா நாயகன் எப்படி வின் பண்றான் என்பதுதான் படமாக இருக்கும். ஆனால், `சர்வம் தாள மயம்’ படத்தில் கர்னாடக இசையில் ஆர்வம் இருக்கிற, அதைக் கத்துக்கணும்னு நினைக்கிற பையன், எப்படித் தடைகளைத் தாண்டி கத்துக்கிறான் என்கிற டிராவலைச் சொல்லியிருக்கிறோம்...’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன்.

``இந்தப் படத்துக்கு முன்னாடியே இதே கதையை வைத்து ஒரு டாக்குமென்ட்ரி எடுத்தோம். இந்த டாக்குமென்ட்ரி நல்லா வந்ததுனால இதைப் படமாக எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். ஏ.ஆர்.ரஹ்மானும் நாங்க எடுத்த டாக்குமென்ட்ரியைப் பார்த்துட்டு, `இதை நான் பண்ணியே ஆகணும்’னு எமோஷனலாய் கனெக்ட்டாகிதான் படத்துக்குள்ள வந்தார். நானும் ஏ.ஆரும் சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பர்கள். நான் அவர்கிட்ட ஜாஸ் மியூசிக் கத்துக்கிட்டேன்; அவர் எங்க வீட்டுல கர்னாட்டிக் கத்துக்கிட்டார். இப்படி எங்க டிராவல்ல நடந்த சில விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும்.’’

ஒரு மியூசிகல் படம் பண்றதில் என்னென்ன சிக்கல்கள் இருந்துச்சு..?

``இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் எழுதுறது ரொம்ப ஈசியா இருந்தது. ஆனால், அதைப் படமாக்குறதுக்கு நிறைய சிரமங்கள் இருந்துச்சு. இந்தப் படம் முழுக்கவே லைவ் சவுண்டு ரெக்கார்டிங்கில் எடுத்தோம். அதுனால படத்தில் பாடகர்களாக, இசைக்கருவி வாசிப்பவர்களாக வேற யாரையும் நடிக்க வைக்க முடியாது. அந்தந்த கலையைத் தெரிந்தவர்களை வைத்துத்தான் எடுக்க முடியும். அதனால்தான் ஒரு இசையமைப்பாளரா இருக்கிற ஜி.வி.பிரகாஷை இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். இசையை மையமா வெச்சு எடுக்கிற படத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்னு ஜி.வி.க்கு நல்லா தெரிந்திருந்தது; அதனாலேயே பல சிரமங்களிலிருந்து தப்பிச்சுக்கிட்டோம்.’’

சமீபத்தில் நடந்த 31வது டோக்கியோ திரைப்பட விழாவுக்கு `சர்வம் தாள மயம்’ தேர்வாகி இருந்தது; அந்தத் திரைப்பட விழாவுக்குச் சென்றுவந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க..?

``டோக்கியோ திரைப்பட விழாவில் அங்கு இருந்த பெரிய ஸ்கிரீனில்தான் `சர்வம் தாள மயம்’ படத்தை திரையிட்டாங்க. படம் பார்த்த எல்லாருமே பல இடங்களில் கைதட்டுனாங்க. படம் முடிந்ததும் நடந்த கலந்துரையாடலில் பல பேர் கேள்வி கேட்கும் போதுதான், எல்லாரும் படத்தை எந்தளவுக்கு உன்னிப்பா கவனிச்சிருக்காங்கனு தெரிஞ்சது. சில பேர் கண் கலங்கிட்டாங்க; சில பேர் மறுபடியும் படத்தைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. ஜாப்பனீஷோட இந்த ரெஸ்பான்ஸைவிட டைரக்டர் பாலா படம் பார்த்துட்டு எமோஷனல் ஆனதுதான் எனக்கு செம ஷாக்கா, வித்தியாசமா இருந்தது. அவர் அவ்வளவு எமோஷனல் ஆவார்னு நான் நினைக்கவே இல்லை.’’ 

ஜி.வி.பிரகாஷ்தான் இந்தப் படத்துக்கு ஹீரோனு சொன்னதும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்..?

`` `பரவாயில்லையே... ஜி.வி பண்ணுவானா; அவன் அந்த அளவுக்கு சீரியஸா இருக்கானா’னு கேட்டார். ஏன்னா நிறைய படங்கள் மியூசிக் பண்ணிட்டு இருந்த ஜி.வி ஏன் நடிக்கப் போனான்னு அவருக்கு ஒரு டவுட் இருந்தது. அப்பறம், `நீங்க அவனை வெச்சுப் பண்றதா இருந்தா ஓகே’னு சொன்னார்.’’

வினித், டிடி இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க; அவங்களுக்கு எந்த மாதிரியான ரோல்..?

``ரெண்டு பேருக்குமே ரொம்ப முக்கியமான ரோல். வினித் ஒரு டான்ஸரா இருக்கிறதால அவருக்கும் சங்கீதம் தெரியும். அதனால இந்தப் படத்தில் அவரை யூஸ் பண்ணிக்கிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோல். டிடியோட ரோலைப் பற்றிச் சொல்லணும்னா, இந்த கேரக்டரை டிடியைத் தவிர வேற யாராலும் பண்ண முடியாது. படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் படத்தை நகர்த்துவதே அவங்களோட கேரக்டர்தான்.''

அடுத்த கட்டுரைக்கு