Published:Updated:

``பிர்சா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது!’’ - கோபி நயினார்

``பிர்சா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது!’’ - கோபி நயினார்
News
``பிர்சா முண்டா கதையை நானும் ரஞ்சித்தும் மட்டும் எடுத்தா பத்தாது!’’ - கோபி நயினார்

"ஒரு முதலாளியிடம் கதையைச் சொல்லி, `இதில் அதைச் செய், இதைச் செய்' என்று சொன்னால், நான் ஏற்கமாட்டேன். சமரசம் ஆவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கான கதையைச் சொல்ல நான் காத்திருப்பேன். அதனால்தான், எனக்கு இவ்வளவு வயசாகிறது."

`அறம்’ படம் மூலமாகத் தண்ணீர் பிரச்னையை விவரித்தவர் என்றாலும், உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொன்ன படத்தை இயக்கியவர் கோபி நயினார். தற்போது `அறம் 2’ பட வேலைகளில் இருப்பதோடு, ஆங்கிலேயர் காலத்தில் அவர்களை எதிர்த்த பழங்குடி இனத்தின் முதல் போராளியான பிர்சா முண்டா பற்றிய படத்தை எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளிலும் இருந்து வருபவர். அவரிடம் பேசினோம். 

`` `அறம்’ படம் பேசிய தண்ணீர் பஞ்சம் பற்றிய தெளிவான பார்வை?’’

``தெருத்தெருவாகத் தண்ணீருக்காக நானே குவளையை எடுத்துக்கொண்டு அலைந்திருக்கிறேன். தண்ணீர் இல்லை என்றால், வாட்டர் பாட்டில்களுக்காகக் கடைகளுக்குப் போக வேண்டிய சூழல் இப்போது இருக்கிறது. ஆழ்துளைக் கிணறு பிரச்னையைப் பேசும் இந்தப் படத்தை வெளியிட்ட பிறகு, நான் எவ்வளவோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சமுதாயத்தைக் கட்டமைக்கின்ற கார்ப்பரேட் முன்பு நாம் சிறு கடுகாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தப் பேச்சு சமூகத்தில் எந்த அளவுக்கு ஊடுருவும் என்பதும், அப்படி ஊடுருவினாலும் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பதையும் யூகித்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை நினைவுகளில் இருந்தால்கூட ஒரு போராட்டமாக அது தன்னையே வடிவமைத்துக்கொள்ளும் என்பதிலும் திட்டமிட்டு இருப்பது புரியும். ஒரு லட்சம் பேருக்குப் பசிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். புரட்சி நடக்கிறது. யார் யார் வீட்டில் உணவு இருக்கிறதோ அவர்கள் வீட்டில் உணவை எடுத்துக்கொள்ளலாம் என்று ஒரு நிலை வருகிறது. இது ஓர் அரசுக்குத் தெரிந்தால், அதை நிச்சயம் அந்த அரசு ஒடுக்காது. அதற்குப் பதறாது. அதற்குப் பதிலாக, ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும். மீதமிருக்கும் தொண்ணூற்று ஒன்பதாயிரம் பேரும், 'அரசு நமக்குப் பணிந்துவிட்டது, இனி நமக்கு உணவு கொடுக்கும்' என்கிற மன இயல்பைத்தான் இந்த அரசு நமக்குத் தந்திருக்கிறது. அரசின் மீது எப்போது மக்களுக்கு நம்பிக்கையற்றுப் போகிறதோ, அப்போதுதான் தண்ணீர், கல்வி, நதி நீர், நிலம், வாழ்க்கை, பண்பாடு, பாடல்கள், காதல், குழந்தைகள் என எல்லாமே நன்றாக இருக்கும். நமக்கான அரசு சிந்திக்காத வரை, அந்த அரசுக்கான மாடலை உருவாக்காத வரை எதுவும் சரியாகாது. ஒரு சிஸ்டத்தை எதிர்க்கிறோம் என்றால், அதற்குச் சரியான சிஸ்டத்தை உருவாக்கியிருக்கணும் இல்லையா? அதைச் செய்ய வேண்டும்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`` `அறம்’ படத்துக்குப் பிறகு எதிர்பார்த்த ஏதாவது நடந்திருக்கிறதா, மாறியிருக்கிறதா?’’ 

``இந்தியா, முதலாளிகளுக்கு லாபம் தருகின்ற எல்லா விதமான அறிவியலும் இங்கு ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எந்தவித அறிவியலும் ஊக்குவிக்கப்படவில்லை, வளரவில்லை. மருத்துவம், கல்வி, என எதுவும் வளரலை. அது மிஷினாகத்தான் இருக்கிறது. அதன் பேரிலதான் மருத்துவம் வளர்கிறது. 

இந்த நாடு நம்முடைய நாடு கிடையாது. இந்த நாடு அனுமதிக்க வேண்டிய விஷயங்களை நாம் தொடர் போராட்டங்கள், பேச்சுகள் மூலமாகத்தான் பெற முடியும். இந்தச் சமூகத்தில் கருத்துரிமை என்பது மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது. அதைப் பெறுவதுதான் என் வேலை. எல்லோருமே முதலாளிகளின் கைக்கூலியாகத்தான் இருக்கிறோம். மக்கள் சூழ்நிலைகளை மக்களே உருவாக்கிக்கொள்வதற்கான சுதந்திரம் இங்கில்லை. ஒரு முதலாளியிடம் கதையைச் சொல்லி, `இதில் அதைச் செய், இதைச் செய்' என்று சொன்னால், நான் ஏற்கமாட்டேன். சமரசம் ஆவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கான கதையைச் சொல்ல நான் காத்திருப்பேன். அதனால்தான், எனக்கு இவ்வளவு வயசாகிறது.’’ 

``பொழுதுபோக்கை மட்டுமல்லாமல், அரசியல் சார்ந்த விஷயங்களையும் பேசும் படங்கள் நிறைய வரத் தொடங்கியிருக்கின்றன... இதுகுறித்த உங்கள் கருத்து?’’ 

``மக்கள் அரசியலைப் பேசுகின்ற படங்கள் வருவது ஆரோக்கியமானதாக இருந்தாலும், இந்த அரசோ, முதலாளிகளோ சமூகத்தைக் கட்டமைப்பதற்காக நமக்கு முன்பே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அப்போது இரண்டு வேலைகளை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று, ஏற்கெனவே நம்மீது நடத்தப்படுகின்ற ஒடுக்கு முறைகள், அடக்கு முறைகளை, கல்வி, அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசுவது. இன்னொன்று, நிகழ்காலத்தின் அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டியதும் அவசியம். நில உரிமையைப் பற்றி பேசும்போது, நிலம் நமக்குச் சொந்தமாக இருந்தது. இப்போது, அது வணிக மயமாகியிருக்கிறது. இப்போது நில உரிமை பேசினால், அது கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதாகிவிடுகிறது. இது இந்த நிலத்தின் மீது உரிமை இருக்கின்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு நன்மையாகிவிடுகிறது. ஏனென்றால், மீட்கவே முடியாத ஒரு விஷயத்தை உரிமை எனப் போராடுவது வீண். அப்போது, நமக்கான பங்கைக் கேட்பது மட்டுமே இந்த நேரத்தில் சரியானதாக இருக்கும். ஓர் அரசியல் படம் என்பது, மக்களுக்கான படம் என்பது நிகழ்காலத்தைப் பற்றிய அரசியலைப் பற்றி பேசுவதுதான். இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கும் சக்திகளைப் பற்றிப் பேசுவதுதான்.'' 

`` `அறம் 2’ பட வேலைகள் எந்த நிலையில் இருக்கிறது, படம் பேசவிருக்கும் விஷயம் என்ன?’’ 

`` `அறம் 2’ திரைப்படம் ஜனநாயகத்தைச் சார்ந்து எடுக்கப்படவிருக்கும் படம். இந்தியா மாதிரியான நாடுகளில் பல்வேறு இயக்கங்கள், தோழர்கள் இருக்கிறார்கள். தீவிரமான மக்கள் இயக்க அரசியல் பேசுறாங்க, நேர்மையாக இருக்காங்க. ஆனால், ஜனநாயகமாக இல்லை. இந்தியாவில் மக்கள் விடுதலைக்கான அமைப்புகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாத காரணம் இதுதான் என நினைக்கிறேன். ஜனநாயகத்தில் இருந்து உருவாகிற விடுதலை அரசியல்தான் சரியானதாக இருக்கும். ஜனநாயகம் பற்றிய அக்கறை இல்லாத இவர்களால் நீண்ட நெடிய அமைப்புகளை, கட்டமைப்புகளை உருவாக்க முடியாது என நினைக்கிறேன். ஜனநாயகம் என்பது ஓர் ஒற்றைச் சொல்லாகத்தான் இருக்கிறது. அப்படி அக்கறை இருந்திருந்தால், குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர்... என இந்த மூன்று விஷயங்களில் ஆழ்ந்த வேலைகளைச் செய்திருப்பார்கள். குழந்தைகள் மேல் அக்கறை இருந்திருந்தால், இவ்வளவு தனியார் பள்ளிகள் வந்திருக்க முடியாது. இந்தியாவில் அதிக அளவில் சிறையில் இருக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களின் மனித உரிமைகளைப் பேசியிருப்பார்கள்.’’

``ஜோதிகாவிடம் சொன்ன கதை என்ன?’’

``ஜோதிகாவுக்கும் ஒரு கதை வைத்திருக்கிறேன். மொத்தம் 20 நாள்களில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஒரே ஒரு வீட்டில் நடக்கும் கதை என்று அவரிடம் சொன்னேன். 20 நாள்களில் எப்படி முடியும் என்று கேட்டார். ஆறு நாள்கள் ஒத்திகை பார்த்தாலே போதும் என்றேன். சீக்கிரமே அது தொடங்கும்.’’

``கதை என்பது படைப்பாளியிடமிருந்து தோன்றுகிறதா, பார்வையாளர்களிடமிருந்து தொடங்குகிறதா?’’

``பார்வையாளர்களிடம்தான் இதற்கான புரிதல் மிக அவசியம். தலித் சினிமா என்பதற்காகவே ஆதரிப்பதும், ஆதரிக்கச் சொல்லி திணிப்பதும் மாற வேண்டும். இது இந்து மதத்திலிருந்து பார்ப்பனியத்தைப் பிரிப்பது போன்று கொஞ்சம் கடினமானதுதான்.’’ 

``நீங்கள் இயக்கவிருக்கும் போராளி பிர்சா முண்டாவைப் பற்றித்தான், இயக்குநர் பா.இரஞ்சித்தும் படம் எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்?’’

``இது விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரோட வாழ்க்கை. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலை மீது அக்கறை இருக்கிற யாரும் இதைப் படமாக எடுக்கலாம். எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது. ஹிட்லர், யேசுநாதர் பற்றி அவ்வளவு படங்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தைத் தந்தன.

பிர்சா முண்டா பற்றி நாங்க இருவர் மட்டுமல்ல, இன்னும் பலரும் படம் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 25 வருடங்கள் வாழ்ந்த ஒரு வாழ்க்கையை, அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் நடந்த மிகப்பெரிய ஒடுக்குமுறையை வெறும் இரண்டரை மணிநேர சினிமாவில் காட்டிவிட முடியாது. 

மேலும் படத்தை நான் எங்கு தொடங்குகிறேன்னு ரஞ்சித்துக்குத் தெரியாது, அவர் எங்கிருந்து தொடங்குகிறார்னு எனக்குத் தெரியாது. இதனால் எனக்குத் துளியளவும் வருத்தம் கிடையாது. ஒரே நேரத்தில் பகத்சிங் பற்றி இரண்டு திரைப்படங்கள் இந்தியில் வருகிறது. நானே நிறைய பேர்கிட்ட சொல்லியிருக்கேன். பிர்சா முண்டாவோட வாழ்க்கையை நான் ஏழு பகுதியாகப் பிரிச்சேன். ஒவ்வொரு பகுதியையும் வெச்சு மூன்று, நான்கு படங்கள் பண்ணலாம். இரஞ்சித் இந்தப் படத்தை எடுக்கவிருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்தான். மேலும், நான் பிர்சா முண்டாவோட வாழ்க்கையைப் படமாக எடுக்கப்போவதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார் கோபி நயினார்.