Published:Updated:

``என் சப்போர்ட் மகனுக்கா... மருமகளுக்கானு தெரியணுமா?’’ நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

``என் சப்போர்ட் மகனுக்கா... மருமகளுக்கானு தெரியணுமா?’’ நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
``என் சப்போர்ட் மகனுக்கா... மருமகளுக்கானு தெரியணுமா?’’ நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

``இந்த வருடச் சந்திப்பு, கடந்த நவம்பர் 10-ம் தேதி, சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துச்சு. நானும் என் கணவரும் கலந்துகிட்டோம்; நண்பர்கள் பலரும் கலந்துகிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சினு மறக்க முடியாத நாளாக அமைந்தது."

பிரபல நடிகை பூர்ணிமா பாக்யராஜ், சின்னத்திரை பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சன் டிவி `கண்மணி' சீரியலில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தன் நடிப்பு, குடும்ப பர்சனல் விஷயங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

``முதல்முறையாக சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறீங்க. இது, எப்படி அமைந்தது?"

``கல்யாணத்துக்குப் பிறகு 29 வருஷம் நடிக்கவேயில்லை. பிறகு, கடந்த அஞ்சு வருஷமா செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கிறேன். சின்னத்திரை வாய்ப்புகள் நிறைய வந்தாலும், இப்போதான் அதற்கான சூழல் அமைந்திருக்கு. நல்ல கதை, என் ஃப்ரெண்டு சுஜாதாவின் தயாரிப்பு, சன் டிவினு நிறைய விஷயங்கள் ஒருசேர அமைஞ்சதால, `கண்மணி' சீரியல்ல நடிக்க ஒப்புக்கிட்டேன். இந்தப் பயணம் நல்லா போயிட்டு இருக்கு".

``நடிப்புக்குப் பெரிய இடைவெளி கொடுக்க என்ன காரணம்?"

``1980-களில் ரொம்ப பிஸியா நடிச்சுக்கிட்டு இருந்தப்பயே கல்யாணம் பண்ணிட்டேன். கணவர் சினிமா துறையிலதான் இருக்கார் என்பதால, எனக்கு அப்போ நடிக்காம இருக்கோமேனு வருத்தம் வரலை. குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு, ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். அப்போ நான் மிஸ் பண்ணின நிறைய படங்கள், பெரிய ஹிட்டாச்சு. பையனும் பெரியவனாகிட்டான்; கமிட்மென்ட் அதிகம் இல்லை என்பதால, பிடித்த கேரக்டர்கள்ல நடிக்கலாம்னு முடிவெடுத்தேன். 29 வருட இடைவெளிக்குப் பிறகு, 2013-ம் வருஷம் `ஆதலால் காதல் செய்வீர்' படத்துல நடிச்சேன். சில மாதங்களுக்கு முன் வெளியான `மோகினி' படத்தில் நடிச்சேன். இப்போ ஜோதிகாவுடன் ஒரு படம் உட்பட சில படங்களில் நடிக்கவிருக்கிறேன். முன்பு, ஃபேஷன் டிசைனிங் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். இப்போ பிசினஸ்லேருந்து விலகிட்டேன். ஃபேஷன் டிசைனிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, எங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருக்கு மட்டும் செலக்டிவா டிசைனிங் செய்துகொடுக்கிறேன்".

``மகனும், மருமகளும் டான்ஸர். உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பாங்களா?"

``1980-களில், டான்ஸ்ல அதிக ஆர்வத்துடன் இருந்தேன். பிறகு, டான்ஸ்ல டச் இல்லாம போச்சு. பையன் சாந்தனு மற்றும் மருமகள் கீர்த்தி ரெண்டு பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அவங்கதான் நான் தொடர்ந்து நடிக்க உத்வேகப்படுத்துறாங்க. கீர்த்தி, புது டான்ஸ் இன்ஸ்டிட்யூட்டை விஜயதசமியின்போது தொடங்கினாங்க. அப்போ நான், குஷ்பு உள்ளிட்ட ஃப்ரெண்ட்ஸ் பலரும் அந்த இன்ஸ்டிட்யூட்ல, `சின்ன மச்சான்' பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம். அந்த வீடியோ வைரல் ஆச்சு. ரொம்ப நாள் கழிச்சு, நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினது மகிழ்ச்சியா இருந்துச்சு. ஓய்வுநேரம் கிடைச்சா, நிச்சயம் டான்ஸ் கத்துப்பேன். குறிப்பா, `உனக்கு எதுக்குமா டான்ஸ்?'னு பையன் விளையாட்டா சொல்ல வாய்ப்பிருக்கு. அதனால, மருமகள் கீர்த்திகிட்ட நிச்சயம் டான்ஸ் கத்துப்பேன்".

``நீங்க வீட்டில் எப்படி, மகன் மற்றும் மருமகளில் யாருக்கு அதிகம் சப்போர்ட் பண்ணுவீங்க?"

``வீட்டில் பொறுப்பான இல்லத்தரசி. மருமகள் கீர்த்தி, என் மகள்போல. டிரஸ் உட்பட, இந்தக் காலத்துக்கு ஏற்ப புது ட்ரெண்ட்டான விஷயங்களைக் கீர்த்திதான் எனக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. கணவர், நான், மகன், மருமகள்னு நாங்க நால்வரும் ஃப்ரெண்ட்ஸ் போலவே பழகுவோம். மகன் மற்றும் மருமகள் ரெண்டு பேரிடமும் எந்த விஷயத்தையும் நாங்க வலியுறுத்த மாட்டோம். அவங்களோட நல்ல பயணத்துக்கு, ஆலோசனை கொடுப்போம்; தப்பு யார் செஞ்சாலும் கண்டிப்போம். இருவருக்கும் ஒரேவிதமான பாசத்தைத்தான் நானும் என் கணவரும் காட்டுவோம்".

``நட்சத்திரத் தம்பதியாக இருக்கும் திருமண பந்தம் பற்றி..."

``இது பலருக்கும் அமையாத மகிழ்ச்சி தருணம். என் கணவருக்கும் எனக்கும் புரிதல் அதிகம் உண்டு. அதனால 34 ஆண்டுகளாக தம்பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். தன் சினிமா பணிகள் பத்தி அவ்வப்போது எங்கிட்ட ஷேர் பண்ணுவார். மத்தபடி அவரின் சினிமா வேலைகள்ல நான் தொந்தரவு செய்ய மாட்டேன்".

``சமீபத்தில் நடந்த 80' s யூனியன் சந்திப்பு பற்றி..."

``1980-களில் நாங்க எல்லோரும் பிஸியா நடிச்சுகிட்டு இருந்தோம். பிறகு கல்யாணம், குடும்பம்னு எல்லோரும் கமிட்டாகிட்டோம். இப்போ, எங்க நட்பு பலமாகியிருக்கு. ஆண்டுதோறும் ஒருநாள் மீட் பண்ணி, அன்பைப் பரிமாறிக்கிறோம். அந்த நாளுக்காக ஆவலோடு காத்திட்டு இருப்போம். இந்த வருடச் சந்திப்பு, கடந்த நவம்பர் 10-ம் தேதி, சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துச்சு. நானும் என் கணவரும் கலந்துகிட்டோம்; நண்பர்கள் பலரும் கலந்துகிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சினு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அடுத்த வருடச் சந்திப்புக்காக இப்போதே எதிர்பார்ப்பு கூடிவிட்டது".

அடுத்த கட்டுரைக்கு