சினிமா
Published:Updated:

“நானும் அரசியல் பேசுவேன்!”

“நானும் அரசியல் பேசுவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நானும் அரசியல் பேசுவேன்!”

கே.ஜி.மணிகண்டன்

‘டேய்... அடிக்கடி டூர் போகலாம்டா’னு அப்பா சொன்னதாலதான் நான் நடிக்கவே சம்மதிச்சேன்” என்கிறார் ஜீவா.  ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பை முடித்து, இப்போது ‘ஜிப்ஸி’க்காக நாடோடியாகத் திரிந்துகொண்டிருக்கிறார்.


“ ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘ஈ’ மாதிரியான படங்கள் பண்ணுனீங்க. இப்போ, மாஸ் ஹீரோ - ஆவரேஜ் ஹீரோ... ரெண்டுலேயும் சிக்காம டிராவல் பண்றீங்களே?!”

“வாழ்க்கையோட போக்கை இழுத்துப் பிடிச்சு நிறுத்த முடியாது. லைஃப் இப்படித்தான் போகுது; நானும் போறேன். விஜய் சார் படங்கள் ஹிட் ஆகுறமாதிரி, ‘ராம்’ படம் ஹிட் ஆகலை; ஆகாது. ஆனா, டிவி, இன்டர்நெட்ல அந்தப் படத்தை இன்னைக்குவரை பல ரசிகர்கள் பார்க்கிறாங்க.  இதோ, இப்போ ‘ஜிப்ஸி’னு ஒரு படம் பண்றேன். அதுவும் தானா அமைஞ்ச படம்தான்.  கருத்து, கமர்ஷியல்னு எந்தமாதிரியான படங்கள் பண்ணுனாலும், அது ஒரு நல்ல ஆர்ட் ஃபார்ம்ல இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன்!” 

“நானும் அரசியல் பேசுவேன்!”

“சினிமா பிரபலத்தோட பையனா இருந்ததனால, சேஃப்டி ஜோன்ல இருக்கணும்ங்கிற மைண்டு செட் வந்திடுச்சோ?!”

“இருக்கலாம். எனக்கும் எல்லாவிதமாகவும் நடிக்கணும்னு ஆசைதான். ஆனா, இங்கே நிலைமை அப்படியில்லையே. 100 தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தா, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒவ்வொருவிதமான படம்னு கணக்கு பண்ணி நடிக்கலாம். ஆனா, தமிழ்சினிமாவுல 20 நிறுவனங்கள்தான் ஆக்டிவா இருக்கு; அதுல, நாலைஞ்சு கம்பெனிகள்தான் தொடர்ந்து படங்கள் பண்றாங்க. அந்த நாலைஞ்சு கம்பெனியையும் நான் தக்கவெச்சுக்க ‘சேஃப்டி ஜோன்’ வேணும்தான்.  ஏன்னா, இங்கே தியேட்டர் ரெவின்யூவை மட்டுமே நம்புற தயாரிப்பா ளர்கள்தான் அதிகம். ‘ஆன்லைன்ல சம்பாதிச்சுக்கிறேன், யூ-டியூப்ல ரிலீஸ் பண்ணிடலாம்’னு அவங்க களமிறங்கும்போது, நானும் வெரைட்டி காட்டி நடிப்பேன்.”

 “அப்பாவோட ‘சூப்பர் குட்’ மட்டுமல்ல, பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் இப்போ அதிகமா படங்கள் தயாரிக்கிறதில்லையே... என்ன காரணம்?”

“நாங்க கன்னடத்துல, தெலுங்குல படங்கள் தயாரிச்சுக்கிட்டுதான் இருக்கோம். அப்பப்போ தமிழ்ல பண்றோம். பெரிய நிறுவனங்களெல்லாம் அதிகமா படங்கள் தயாரிக்காம இருக்கிறதுக்குக் காரணம், அப்போ இருந்த ஒரு கட்டமைப்பு இப்போ இல்லாததுதான். 100 படங்கள் ரிலீஸ் ஆனா, அதுல 7 படங்கள்தான் ஹிட் ஆகுது. இணையதளங்கள்ல 40 மில்லியன் ஹிட்ஸ், 50 மில்லியன் ஹிட்ஸ்னு வர்ற  ஹிட்ஸ் கணக்கெல்லாம் வருமானமா இருந்தா எப்படி இருக்கும் யோசிச்சுப் பாருங்க... இதே ரெஸ்பான்ஸை மக்கள் தியேட்டருக்குக் கொடுத்தா, நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். இன்னும் நிறைய இளைஞர்கள் சினிமாவுக்கு வரும்போது, அது சீக்கிரமா மாறும்.”

“விஷால், கார்த்தினு சக நடிகர்களெல்லாம் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்னு பிஸியா இருக்காங்க. உங்களை அங்கெல்லாம் பார்க்க முடியலையே?”

“ஒரு நடிகரா சங்கத்துக்கு என் ஆதரவு எப்பவும் இருக்கும். அது ராதாரவி, சரத்குமார் சார் இருந்தப்பவும் சரி; இப்ப விஷால், கார்த்தி இருக்கிறப்பவும் சரி. தேர்தல்ல நிற்கிறது, பொறுப்புக்கு வர்றதெல்லாம் ரெஸ்பான்ஸிபிலிட்டியான வேலை. அது எனக்கு செட் ஆகாது. கிரிக்கெட் போட்டி, டான்ஸ் புரோகிராம்னா, ஆர்வமா கலந்துக்குவேன்.”

“நானும் அரசியல் பேசுவேன்!”

“ராஜுமுருகன் இயக்கத்துல நடிக்கிற, ‘ஜிப்ஸி’ என்னமாதிரியான படம்?”

“நாகூர்ல ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. நிறையபேர் படத்தோட ஃபர்ஸ்ட்லுக் பார்த்துட்டு, பாராட்டினாங்க. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டு ராஜுமுருகன். இந்தியா முழுக்கப் பயணப்படுற மனிதன். அவன் சந்திக்கிற மனிதர்கள். அந்த மனிதர்கள் மூலமா கிடைக்கிற அனுபவம்... இதுதான் படத்தோட களம். இதை இணைக்கிறதுக்கு, அருமையான ஒரு நாட் வெச்சிருக்கார் இயக்குநர்.”

“சினிமாவோட இப்போதைய டிரெண்டிங், அரசியல். பாலிட்டிக்ஸ் பன்ச் பேசுற ஆர்வம் இல்லையா?”


“ ‘ஈ’ மிகப்பெரிய அரசியல் படம்தானே?! எனக்கு, அரசியலை ஓபனா பேசுறது பிடிக்காது. சட்டையர் பண்ணலாம். ஒரு உள்ளர்த்தத்தோட அரசியல் பேசும்போதுதான், ஆடியன்ஸுக்கு அது ஈஸியா ரீச் ஆகும்.  நானும் அரசியல் பேசுவேன். ஆனா மறைமுகமா பேசுவேன்.”

 “படத்துல மறைமுகமா அரசியல் பேச ஆசைப்படுறீங்க, நேரடி அரசியல் நடப்புகளையெல்லாம் பார்க்கறீங்களா?”

“ஆமா ப்ரோ... பயங்கரமா போய்க்கிட்டிருக்கு. நடிகர்களோட டிரெய்லரைவிட, அரசியல்வாதிகளோட வீடியோக்கள்தான் யூ-டியூப்ல டிரெண்டிங்ல இருக்கு. ஒரு விஷயத்தை ஃபாலோ பண்றதுக்குள்ள அடுத்து ஒண்ணு நடந்துடுதா... கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு.  அரசியலாச்சே... கவனிச்சுக்கிட்டுதான் இருக்கணும்!”

“இன்னும் சில வருடங்கள்ல 50 படங்கள்ங்கிற மைல்கல்லைத் தொடப்போறீங்க. தமிழ் சினிமாவுல ஜீவாவுக்கான இடம் எப்படி இருக்கணும்?”

“கடந்த 15 வருடமா எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கிறேன். ஏன் நான் இன்னும் மத்த மொழிப் படங்கள்ல நடிக்கலை?! அதுக்கான காரணம் எனக்கே தெரியலை. ஆனா, இனி நிச்சயம் பண்ணணும். ஆடியன்ஸோட எதிர்பார்ப்பைப் பூர்த்தி பண்றதுக்குப் புதுப்புது விஷயங்களை நோக்கி ஓடுவோம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

“நானும் அரசியல் பேசுவேன்!”

“இந்தியாவின் முதல் சிம்பன்ஸி படம்... ‘கொரில்லா’ அனுபவம் எப்படி இருந்தது?”

“புத்தகமே எழுதலாம். அவ்வளவு அனுபவங்கள் இருக்கு.  காமெடி நடிகர் சதீஷ்கூட, ‘தமிழ் ஆடியன்ஸ்கிட்ட இருந்து 150 ரூபாய் வாங்குறதுக்கு, நாம குரங்குகிட்ட எல்லாம்  அடிவாங்க வேண்டியதா போச்சே!’னு அழுதார். ஆனா, இத்தனை சேட்டைகளைப் பண்ணியும், அந்த சிம்பன்ஸியை நாங்க தங்கமா பார்த்துக்கிட்டோம். ஹீரோயினைவிட அந்த சிம்பன்ஸியைத்தான் நல்லா பார்த்துக்கிட்டோம்.

ஷாலினி பாண்டே, சதீஷ், யோகி பாபு, ராஜேந்திரன், விவேக் பிரசன்னா... படத்துல நிறைய நடிகர்கள். முழுக்க காமெடிதான். குழந்தைகளுக்கு செம என்டர்டெயின்மென்ட்டா இருக்கும்.”

“மனைவி, குழந்தையெல்லாம் உங்க கரியர்க்கு எந்த அளவுக்கு சப்போர்ட்டிவா இருக்காங்க?”


“மனைவி சுப்ரியா, யூ-டியூப், அது இதுன்னு பார்த்து அட்வான்ஸ் லெவல்ல இருக்காங்க. அவங்களுக்கு ‘கலகலப்பு’ மாதிரியான படங்கள்ல நான் நடிக்கிறது பிடிக்கும். இதுவரை என்னைப் பத்தி கிசுகிசு எதுவும் வரலை. இனி வந்துடக்கூடாதுனுதான் பயந்துகிட்டிருக்கேன். ஏன்னா, பையன் மூணாவது படிக்கிறான். எழுத்துகூட்டிப் படிக்க ஆரம்பிச்சுட்டான்.”