சினிமா
Published:Updated:

செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

போதையில் எடுக்கும் ஒரு முடிவு, சுற்றவிட்டுச் சுண்ணாம்பு அடிக்கிறது. எடுத்த முடிவு என்ன, கிடைத்த முடிவு என்ன என்பவற்றைச் சொல்லி, ‘செம போத ஆகாதே’ என அட்வைஸ் கொடுத்து, அனுப்புகிறார்கள்.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் அதர்வாவுக்கு, காதலி மிஷ்டியுடன் மனஸ்தாபம். சோகத்தில் தாடி வைத்துச் சுற்றும் நண்பனுக்கு, போதையில் ‘கிக்’கான ஒரு ஐடியாவைக் கொடுக்கிறார், கருணாகரன். அந்த ஐடியா என்ன, அதனால் அதர்வாவும் கருணாகரனும் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பவற்றை ஆக்‌ஷன், ஹியூமர், கிளாமர் எனக் காக்டெயில் காம்போவாகக் கொடுத்திருக்கிறார், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்

காதலியின் பிரிவால் தவிப்பது, பிரச்னையில் சிக்கித் திணறுவது, நண்பனின் ரகளைகளுக்கு எரிச்சலாவது, ஆங்காங்கே அடியாட்களைப் பொளந்துகட்டுவது என... ஃபெர்பெக்ட் ஹீரோ புரமோஷனுக்காக மெனக்கெட்டிருக்கிறார் அதர்வா. 

காமெடியனாக, கருணாகரனுக்கு முக்கியமான படம். ‘உன் மாமனாரை ஃப்ரீஸர்லதானே வெச்சிருக்கே. அதுல பாலை வெச்சிக்கோ போம்மா’, ‘இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால். இதென்ன, இன்னிக்கே பால்?’ எனப் படம்நெடுகப் பயணிக்கும் கருணாகரனின் காமெடிக்கு மாஸ் ரெஸ்பான்ஸ்.

செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்


கீழ்வீட்டில் இருக்கும் தேவதர்ஷினி, சேத்தன், மனோபாலா மூவரும் ‘காம்போ காமெடி’ பேக்கேஜாக அசத்தியிருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், அடியாளாக வரும் ஜான் விஜய் அண்டு கோ, அவரவர் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.   கிளாமருக்கு அனைகா சோட்டி. வழக்கமான ஹீரோயின் கேரக்டருக்கு மிஷ்டி. விறுவிறுவென நகரும் திரைக்கதைக்கு யுவனின் பின்னணி இசை பெரிய ஹைப் ஏற்றுகிறது. கேமராமேன் கோபி அமர்நாத், அப்பார்ட்மென்ட் காட்சிகள், சேஸிங், ரேஸிங்... என அனைத்திற்கும் கலர்ஃபுல் காட்சிகளால் மயக்குகிறார். திலீப் சுப்பராயன் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் உழைத்திருக்கிறார். பிரவீன் எடிட்டிங்கிலும் ஏமாற்றம் இல்லை.

குட்டியான ஐடியாவை எடுத்துக்கொண்டு திரைக்கதையைப் பின்னியிருக்கும் இயக்குநர், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். காதலர்கள் பிரிய இதுதான் காரணமா, பெரும் சிக்கலில் இருக்கும் ஹீரோ கேஷூவலாக பாலக்காடு பயணிப்பது, ‘இப்படித்தான் இருக்கும்’ என்று முன்கூட்டியே தீர்மானிக்கக்கூடிய க்ளைமாக்ஸ் என... படத்தின் பலவீனங்கள் அதிகம். ஆனால், குட்டிக் குட்டி சுவாரஸ்யங்களால் மொத்தப்படத்தையும் சமாளித்திருக்கிறார்கள்.

- விகடன் விமர்சனக் குழு