சினிமா
Published:Updated:

அசுரவதம் - சினிமா விமர்சனம்

அசுரவதம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
அசுரவதம் - சினிமா விமர்சனம்

அசுரவதம் - சினிமா விமர்சனம்

ளிகைக்கடை நடத்திக் கொண்டிருக்கும் வசுமித்ரவுக்கு வரும் போன் காலில் கொலை மிரட்டல் விடுக்கிறது ஒரு குரல். அந்தக் குரல் யாருடையது, அந்த நபர் தன்னைக் கொலைசெய்ய முயல்வதற்குக் காரணம் என்ன, அந்த நபருக்கும் தனக்கும் என்ன தொடர்பு எனத் தேடியபடியே ஓடுகிறார் வசுமித்ர. மிரட்டல் விடுத்த சசிகுமார், சொன்னதுபோலவே அவரைக் கொன்றாரா, வசுமித்ர தப்பித்தாரா, காரணம் அறிந்துகொண்டாரா என்ற சேசிங் திரைக்கதையே ‘அசுரவதம்.’

அசுரவதம் - சினிமா விமர்சனம்

பல பக்க வசனங்கள், பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல், கதைக்கு ஏற்றாற்போல அடக்கி வாசித்து நடித்திருக்கிறார் சசிகுமார். படத்தில் ‘அசுரன்’ வசுமித்ரதான். குழப்பம், கோபம், சந்தேகம், வெறுப்பு என உணர்ச்சி வெளிப்பாட்டில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். நந்திதா சுவேதாவுக்குத் திரைக்கதையில் பெரிய இடமில்லை. எஸ்.ஆர்.கதிரின் கேமராக் கோணங்களும் லைட்டிங்கும் வதத்திற்கு வலிமை

அசுரவதம் - சினிமா விமர்சனம்

கூட்டுகின்றன. வெல்டன் கதிர்! மின்னல் சண்டைக் காட்சி, நள்ளிரவுக் காட்டுச்சாலை என ஒளியால் திகிலூட்டுகிறார். ஒளிப்பதிவை முழுமையாக்கும் படத்தொகுப்பை ஆர்.கோவிந்த்ராஜ் செய்திருக்கிறார். படத்தின் தன்மைக்கு ஏற்ற லொகேஷன்களைத் தேர்ந்தெடுத்து யதார்த்தத்தைத் தீட்டியிருக்கும் ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பனுக்கும், நேர்த்தியான சண்டைக்காட்சிகளை உருவாக்கியிருக்கும் திலீப் சுப்பராயனுக்கும் ஹார்ட்டின் லைக்ஸ்! கோவிந்த் மேனன் வெரைட்டியான பின்னணி இசைக்கு இன்னும் உழைத்திருக்க வேண்டும். 

அசுரவதம் - சினிமா விமர்சனம்

இரண்டே வரிகளில் சொல்லிவிடக்கூடிய கதையை இரண்டுமணி நேரத் திரைக்கதையாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் மருதுபாண்டியன். படத்தின் பலமும் பலவீனமும் அதுதான். திரைக்கதையின் சஸ்பென்ஸ் என இயக்குநர் நீட்டிக்கொண்டே செல்லும் காட்சிகள் ஒரு கட்டத்தில் பொறுமையைச் சோதிக்கின்றன. சசிகுமார் தொடர்பான ஃபிளாஷ் பேக் காட்சிகள் இன்னும் உணர்வுபூர்வமாக இருந்திருக்க வேண்டும். படத்தில் பல காட்சிகளை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறியிருப்பது நன்றாகவே தெரிகிறது. படத்தில், பல வழக்கமான காட்சிகளைத் தவிர்த்திருப்பதிலும், வன்முறையை அதிக ரத்தமின்றி அழகியலாகக் காட்சிப்படுத்தியதிலும் தனித்துத் தெரிகிறார் இயக்குநர். அந்தப் பாம்புக் குறியீட்டுக்கு என்னதான் பாஸ் அர்த்தம்?

தனக்கு வரும் போன் காலில் எதிர்முனையில் பேசுவது யார் என வசுமித்ரவுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், பார்வையாளருக்கு யார் என்று உடனே தெரிந்துவிடுகிறதே? பல வாய்ப்புகள் இருந்தும் ‘வதம்’ நிகழ்வது தாமதம் ஆவதற்கான வலுவான காரணங்கள் இல்லை.   திரைக்கதையில் பலம் கூடியிருந்தால் ‘அசுரவதம்’ இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு