சினிமா
Published:Updated:

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!
பிரீமியம் ஸ்டோரி
News
“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

பரிசல் கிருஷ்ணா

பிக் பாஸ் மீசை, அதே டிரேட் மார்க் புன்னகை. உற்சாகமாகவே இருக்கிறார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த அடுத்தநாள், அவரைச் சந்தித்தேன்.  

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“ ‘விஸ்வரூபம்’ அறிவிப்பின்போது, படத்தை ‘டிடிஹெச்’சில் வெளியிடுவேன் என்றீர்கள். அதற்கு எதிர்ப்புகள் வந்தன. அந்தப்  பிரச்னைகளின் நினைவுகள் இப்பவும் துரத்துகிறதா?” 

“இப்போது முன்னைவிடத் தெம்பாகவும் புரிந்தநிலையிலும் இருக்கிறேன். அது அரசியல் இடையூறுதான். யாரோ செய்யும் தொழிலில் நான் புகுந்துவிட்டதாக நினைத்துவிட்டார்கள்.  நியாயமான வருமானம் வேண்டுமென்றால், தியேட்டர்களின் எண்ணிக்கை கூடவேண்டும். ஆந்திராவில் எல்லாம் அப்படித்தான். ஆனால், கள்ள மார்க்கெட், அது இது என்று சலவை செய்யும் இடமாகத் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரி இருப்பதை நான் விரும்பவில்லை.”

“உங்கள் தொலைநோக்குப் பார்வையை உங்கள் துறைசார்ந்தவர்களே புரிந்துகொள்ளாதபோது எப்படி உணர்வீர்கள்?”

“மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும். எதிரிலிருப்பவனை மனிதனாகப் பார்க்காமல் இரையாகப் பார்த்த காலம் மாற, எத்தனை லட்சம் வருடங்கள் கடந்தன! ‘சாதிகள் இல்லையடி பாப்பா’னு சொல்ல நல்லா இருக்கு. ஆனா, மாத்த முயற்சி பண்ணினா ‘உங்க வீட்ல என்ன பண்றீங்க?’னு கேட்கறாங்க. நான் எதற்கும் முன்னுதாரணமா இருக்கிறதைத்தான் விரும்பறேன். நீ பண்ணுனு சொல்ல மாட்டேன். நான் பண்றேன்னு, பண்ணிக்காட்டுவேன். எல்லாரும் அதைப் புரிஞ்சு கூடவர, லேட் ஆகத்தான் செய்யும்.”

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“எம்.எஸ்.விஸ்வநாதன், ராஜா, ரஹ்மான்னு ஜிப்ரான் வரைக்கும் வேலை செஞ்சுட்டீங்க. இந்த இசைப்பயணம் எப்படி இருக்கு?”

“ ‘களத்தூர் கண்ணம்மா’வுக்கு இசை சுதர்சனம். அவர்ல இருந்து பல பெரிய ஆட்களோட பயணிச்சிருக்கேன். எம்.எஸ்.வி, கே.பாலசந்தர், கண்ணதாசன், வாலியெல்லாம் இணைஞ்சு ஒரு பாடலை உருவாக்கறதைப் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். அதெல்லாம் பெரிய பாடம்.

சலீல் சௌத்ரி இசையமைக்கும்போது இளையராஜானு ஒருத்தர் கிடாருடன் வந்து உட்காருவார். அவருக்கு என்னைத் தெரியாது; எனக்கு அவரைத் தெரியாது. அப்பறமா ரெண்டு பேரும் 100 படம் பண்ணிட்டோம். அதுக்கப்புறம் ரஹ்மான் வந்தப்ப, நாங்க திரும்பிப் பார்க்கலை. ராஜாதான் இருக்காரேனு இருந்தோம். ரஹ்மான், தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வெச்சுட்டு, எங்களையும் திரும்பிப் பார்க்க வெச்சார். இந்த மாதிரி திறமையாளர்கள் வர்றப்ப எனக்கு பர்சனலா, ஏதோ சொத்து சேர்த்துட்ட மாதிரி இருக்கும்.

ராஜாகூட வொர்க் பண்ணினது தனிக்கல்வி. இனிமே அப்படி ஒருத்தர்கூட அந்த அனுபவம் வருமானு சந்தேகம்தான். ‘வாகை சூடவா’ பாடல் கேட்டப்ப, ‘இசையமைச்ச இளைஞனையும், பாடலெழுதின இளைஞனையும் கூட்டிட்டு வாங்க’ன்னேன். ஜிப்ரான் வந்துநின்னார். எழுதினவர் யார்னா, வைரமுத்துன்னாங்க. அவரை போன்ல ‘வஞ்ச இகழ்ச்சி’ பண்ணினேன். ‘புதுசா ஒருத்தரைப் புடிச்சுட்டேன்னு பார்த்தா, நீங்களே வந்து நிக்கறீங்களே?’ன்னு கேட்டேன்.

ஜிப்ரான் ரொம்ப இளைஞரா இருந்தார். அவசரப்பட்டுட்டோமோனு நினைச்சேன். ஆனா, அவரோட ஆர்வமும் உழைப்பும் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவர் இசையமைச்சப்ப, அந்த ஆச்சர்யம்  நம்பிக்கையா மாறியது.”

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“ராஜா - எஸ்.பி.பிக்கு இடையேயான பிணக்கை எப்படிப் பார்க்கறீங்க?”

“நான் அதைப்பத்தி என்ன சொல்றது, ரெண்டு பேருமே எனக்கு அண்ணன்கள். ஒருமுறை சமசரம் பேசப்போய் எனக்கு ரெண்டு அடி விழுந்திருக்கு. ரெண்டு பேருக்குமே அந்தத் துறையில் என்னைவிடத் திறமையும் அனுபவமும் ஜாஸ்தி. அவங்களுக்குத் தெரியாததா?”

“ரசிகர்கள் சினிமாவையும் அரசியலாகப் பார்ப்பது குறித்து?” 


“அண்ணாவின் ‘வேலைக்காரி’யில இருந்து, கலைஞரின் ‘பராசக்தி’யில இருந்து அப்படித்தானே. இப்ப சோஷியல் மீடியா காலத்துல இன்னும் அதிகமாகியிருக்கு. அது எனக்குப் பிடிச்சுமிருக்கு. எல்லாரும் கேள்வி கேட்கறாங்க. இந்த ‘எல்லாரும் விழித்திருத்தல்’தான் நான் எதிர்பார்த்தது.”

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“விஸ்வரூபம் 2 டிரெய்லர்ல தமிழ்ல வசனம் மாற்றியது எதிர்ப்புகளைத் தவிர்க்கவா?”

“அப்படியெல்லாம் இல்லை. படம் பார்த்தா உங்களுக்குப் புரியும். தவிரவும், நம்ம வாக்கியத்தொடர் வேற. இந்தியில் வேற. அதுக்காகச் சில வசனங்கள் மாறலாம். அதுபோக டிரெய்லர்ல மிகக்குறைந்த நேரம்தானே. அதையெல்லாம் பெரிசுபடுத்துவாங்கனு நெனைக்கல. சோஷியல் மீடியா காலமில்லையா; அதான் சர்ச்சை ஆயிடுச்சு. ஆனால், நான் இதைவிட காட்டமாக அரசியல் பேசியிருக்கிறேன்; எழுதியுமிருக்கிறேன்.”

“பெரியார்கூட இருந்தப்ப கடவுள் மறுப்பு பேசிட்டிருந்த அண்ணா, தனியா அரசியல் இயக்கம் ஆரம்பிச்சப்ப ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’னு மாறினார். அரசியல்வாதி ஆகிட்டதால, உங்க கொள்கைகள் மாறுமா?”       

“நான் என் பிறப்பை மாத்திச் சொல்ல முடியாது. அதுல எனக்குப் பெருமையோ, சிறுமையோ கிடையாது. இப்ப பகுத்தறிவு வீட்டுக்கு வந்திருக்கேன். இது என் நிலைப்பாடு. என் நிலைப்பாட்டை மாற்றிக்கமாட்டேன். அது என் சுதந்திரம். அதை விட்டுக்கொடுக்க மாட்டேன். வேற யாரையும் வற்புறுத்தவும் மாட்டேன்.”

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“ ‘சபாஷ் நாயுடு’ எந்த நிலையில் இருக்கு? ‘சாதியில்லாமல் என் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேன்’ என்று சொல்லும் உங்கள் படத்தின்  டைட்டிலில் சாதிப்பெயர் இருக்கே?”

“40 சதவிகிதம் முடிஞ்சது. டைட்டிலை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதாண்ணன் சாதிக்கெதிரா அத்தனை பேசினவர். ஆனா, சாதிப்பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுதான் வசனமே வைப்பார். பேர் வெச்சதாலேயே அதைக் கொண்டாடறதா அர்த்தமில்லை.”

“சின்ன வயசுல சாவித்திரியைப் பார்த்திருக்கீங்க. நடிகையர் திலகம் பார்த்தீங்களா? சாவித்திரி பற்றிய நினைவுகள்?”

“நேரமில்லை. படம் பார்க்கலை. ஆனால் கீர்த்தி சுரேஷ், அவங்க அம்மா ரெண்டு பேர்கிட்டயும் பேசினேன். சாவித்திரி அம்மாவுக்கு, கல்யாணம் முடிஞ்சு குழந்தை இல்லாம இருந்தப்ப, ‘நீ வேணா வா, உன்னைத் தத்தெடுத்துக்கறேன்’னு சொன்னாங்க. நான் எங்க அம்மாகிட்ட போய், ‘உனக்கோ நாலு புள்ளைகள். பாவம் சாவித்திரி அம்மா என்னைக் கேக்கறாங்க. கொடுத்துடேன்’னேன். எங்க அம்மா, ‘நீ யார்னு தெரியாம கேட்கறாங்க. ரெண்டு நாள் தாங்க மாட்டாங்க, பாவம்’னு சொல்லிட்டாங்க.”

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“உங்க அரசியல் வருகை எப்படி திடீர்னு நடந்தது?”

”எனக்கு சினிமாதான் எல்லாம்னு நினைச்சுட்டிருந்தேன். நான் சினிமாவில் நினைச்சதெல்லாம் செய்ய முடியலைங்கறது உண்மை. ஏன்னு யோசிச்சேன். அஸ்திவாரமே சரியா போடாம, சிகையலங்காரம் பண்ணிட்டி ருக்கோம்னு தோணிச்சு. நான் அரசியலுக்கு வர்றது ‘ஹேராம்’லயே ஆரம்பிச்சது.  ஆபத்து வருது, ஆபத்து வருதுன்னு ஒரு கட்டியம் கூறுதல் அதுல நடந்திருக்கும். அதுதான் இப்ப நடந்துட்டிருக்கு. நாடெங்கிலும் ஸ்ரீராம் அப்யங்கர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனையோ  சாகேத் ராம்கள் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.”

“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்!” - ‘அகம்’ திறக்கும் கமல்!

“ ‘விஸ்வரூபம் 2’-க்கு ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்போட வரலாம்?”

“இது முழுக்க அரசியல் படமல்ல. ஆனால் அரசியல் இருக்கு. எது நாடு, எது எதிரிங்கற தெல்லாம் இப்ப வரைஞ்சுகிட்ட வரையறைகள் தானே! முதல் பாகத்தைவிட, இதில் காதல், குடும்பம் இருக்கும். முதல் படம் அமெரிக்காவில் நடந்திருக்கும். இதுல இந்தியா வந்துட்டோம்.  இது ரொம்பநாளா வெச்சிருந்த கதை. கமர்ஷியல் சினிமா பாணியில், அழுத்தமான கதை ஒண்ணைச் சொல்ல முடியும்னு நான் நம்பறேன். ஆர்ட் சினிமா தனி, கமர்ஷியல் சினிமா தனினு பாகுபாடு இல்லாம மக்களுக்குச் சென்றடைய வேண்டிய கதையா, இது வந்திருக்கு.”