சினிமா
Published:Updated:

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

சுஜிதா சென் - படங்கள்: கே.ராஜசேகரன்

‘தள்ளிப்போகாதே...’ என்ற ஒற்றைப் பாடலின் மூலம் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்தவர் மஞ்சிமா மோகன். “டப்பிங் பண்றதுக்காகவே தமிழ் கத்துக்கிட்டேன். ‘அச்சம் என்பது மடமையடா’, படத்துல எனக்கு நானே டப்பிங் பண்ணுனேன். இப்போ நல்லா தமிழ் பேசுவேன்” என்றபடி நம்மிடம் பேசுகிறார்.

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

“உங்களோட சினிமாப் பயணத்தை வீட்ல எப்படிப் பார்க்குறாங்க?”

“என் அப்பா விபின் மோகன் மலையாளத்துல புகழ்பெற்ற   ஒரு கேமராமேன். அவரோட படத்துல ஒரு குட்டிப் பொண்ணு நடந்து போகுற மாதிரி ஒரு சின்ன ஷாட். அதுக்கு வேறொரு பொண்ணை வரச் சொல்லியிருந்தாங்க. ஆனா, அன்னைக்கு அவங்க வரலை. அப்போ செட்ல உள்ளவங்க, ‘உங்க பொண்ணையே நடிக்கச் சொல்லலாமே சார்’னு அப்பாகிட்ட சொன்னாங்க. அதனால வேற வழியில்லாம என்னை நடிக்க வெச்சார். உண்மையிலேயே நான் ஒரு நடிகையா வரணும்னு என் குடும்பத்துல உள்ளவங்க ஒருபோதும் விருப்பப்பட்டதில்லை. அதுக்கு ஒரே காரணம் என் அப்பாதான். அவர் சினிமாத்துறையில இருந்ததனால, பொண்ணுங்க இதுல எவ்வளோ கஷ்டப்படுவாங்கனு தெரியும். ஆனா, முதல் பட வாய்ப்பு வந்தப்போ என்னோட விருப்பத்துனால அவங்க ‘நோ’ சொல்லலை.

 அம்மா, ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அவங்க எனக்கு டான்ஸ்ல ஈடுபாடு இருக்குனு சின்ன வயசுலயே சரியா கணிச்சு அதுக்கேத்த பயிற்சிகள் கொடுத்தாங்க..”

“இயக்குநராகணும்ங்கிற உங்களோட கனவு எந்த லெவல்ல இருக்கு?”

“நான் சினிமாவுக்கு வந்து ரெண்டு வருஷம்தான் ஆகுது. சினிமாத் தொழில்நுட்பம் பற்றி நிறைய விஷயங்கள் கத்துக்கணும். அதுக்கப்புறம் நீங்க என்னை கண்டிப்பா ஒரு இயக்குநரா பார்ப்பீங்க. ஒரு க்ரைம் த்ரில்லர் கதை ரெடியா இருக்கு!”

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

“தோல்விகளை எப்படி அணுகுறீங்க?”

“’அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பிறகு ரெண்டு பெரிய ஹீரோக்களோட நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. ஆனா, சில சூழ்நிலைகளால ஒரு படம் ட்ராப் ஆயிருச்சு. இன்னொரு படத்துல வேறொரு ஹீரோயின் கமிட்டாயிட்டாங்க. அப்போ நான் மன அழுத்தத்துக்கு ஆளானேன். இப்படி மனசு கஷ்டமா இருக்குற சமயங்கள்ல நான் என்னைத் தனிமைப்படுத்திக்குவேன். அப்போ யாராவது வந்து என்கிட்டே பேசுனா அவங்கள கன்னா பின்னானு திட்டிவிட்டுருவேன். இந்த மாதிரி தனிமையா இருக்குற நேரங்கள்ல எனக்கு ஆறுதலா இருக்குற ஒரே விஷயம் மத்தவங்க அனுப்புற பாசிட்டிவ்  மெசேஜஸ்தான்! ஆமா, யாராவது எனக்கு நல்ல விஷயங்களை மெசேஜ் பண்ணினா அதைப் பத்திரப்படுத்தி வெச்சுக்குவேன். நான் கொஞ்சம் எமோஷனல் பர்சனாலிட்டி. அதான்...!

“வாய்ப்புகள் கம்மியா கிடைக்குதுனு வருத்தப்பட்டிருக்கீங்களா?”


“என் நண்பர்கள் நிறைய பேர், ‘ஏன் நீ ஒரு நடிகை மாதிரி நடந்துக்கமாட்டேன்ற’னு சொல்லுவாங்க. ஆமா, என்னை நான் ஒரு நடிகையா உணர்றதைவிட ஒரு சாதாரண பொண்ணாதான் உணர்றேன். நடிப்புங்கிறது பெரிய கடல். அதுல நீந்துறதே கஷ்டம். இதுல மத்தவங்களை விரட்டிவிட்டு நாம முன்னுக்கு வரணும்னு நெனைக்கிறது தவறு. எல்லாருக்கும் தனித்தனித் திறமை இருக்கு. யாருமே இங்க ஒரே பாதையில பயணிக்கலை. முதன்முதலா கெளதம் மேனன் சாரோட படத்துல கமிட்டானப்போ, ‘உனக்கு சினிமாத்துறையில பெஸ்ட் எதிர்காலம் இருக்கு’னு சொன்னாங்க. ஆனா, படத்துக்கு அப்புறம் நான் என் சாதாரண வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டேன். என்னோட இரண்டாவது இன்னிங்ஸ் ‘தேவராட்டம்’ படம் மூலமா தொடங்கும்னு நினைக்கிறேன். அடுத்த மாசம் இந்தப் படத்தோட ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறோம். எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பி செட்டுக்குப் போறேன்.”

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

“உங்களோட சினிமாச் செயல்பாடுகள்ல அப்பா தலையிடுவாரா?”

“ஒரு கதையை நான் செலெக்ட் பண்ணுனேன்னா அதுக்கான காரணம் என்னன்னு அப்பாகிட்ட விளக்கணும். அதாவது, அவர் என்கிட்ட நிறைய க்ராஸ் கேள்விகள் கேட்பார். ‘எதுக்காக இந்த கேரக்டர் செலக்ட் பண்ணுன’, ‘எப்படி இதுக்குத் தயாராகப் போற’, ‘இது மூலமா உனக்கு இண்டஸ்ட்ரியில என்ன பெயர் கிடைக்கும்’னு கேட்பார். இது எல்லாத்துக்கும் நான் கரெக்ட்டா பதில் சொல்லிட்டேன்னா எதுவும் சொல்லமாட்டார். ஆனா, பதில் சொல்ற வரைக்கும் விடவும் மாட்டார். அதேசமயம் என் முடிவுகள்ல அவர் தலையிடவும் மாட்டார்.”

“உடல் பருமனா இருக்குறது ஒரு தடையா இருந்திருக்கா?”

“இதை வெச்சு நிறைய பேர் என்னைக் கலாய்ச்சு மீம்ஸ் போட்டிருக்காங்க. அதுக்கெல்லாம் நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நிறைய பேர் பாசிட்டிவ்வாகவும் மீம்ஸ் போட்டிருக்காங்க. அதை நெனச்சு சந்தோஷப்பட்டுக்குவேன். ஒருகட்டத்துல கண்டிப்பா எடையைக் குறைச்சே ஆகணும்னு நெனச்சு சாப்பிடாம டயட்ல இருந்தேன். ப்ளஸ், அசைவ உணவுகள் சாப்பிடுறதை சுத்தமா கம்மி பண்ணிட்டேன். சைஸ் ஸீரோ மேல எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் ஓரளவுக்குக் கச்சிதமான உடல்வாகு இருக்கணும்னு விருப்பப்படுறேன்.”

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

“ஒரே நேரத்துல ‘குயீன்’ பட தெலுங்கு ரீமேக்ல தமன்னாவும், தமிழ் ரீமேக்ல காஜல் அகர்வாலும், மலையாளத்துல நீங்களும் நடிக்கிறீங்க. இந்தப் போட்டியை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?”

“முதல்ல, இது ஒரு போட்டியில்லை. குயீனோட மலையாள வெர்ஷன் ‘ஸம் ஸம்’ (Zam Zam) படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதை நெனச்சு பெருமைப்படறேன். இந்தப் படத்தை இந்தியில் நான் பார்த்திருக்கேன், ரொம்பப் பிடிச்சிருந்தது.  அதனால உடனே  ஒத்துக்கிட்டேன். எனக்கு நடிப்புல பல வித்தியாசத்தைக் காட்டணும்னு ஆசை. இல்லைனா இவங்க இந்த மாதிரியான கதைகளுக்கு மட்டும்தான் செட் ஆவாங்கனு சொல்லிடுவாங்க.

தமன்னா, காஜல் இவங்க ரெண்டு பேருமே எனக்கு சீனியர்ஸ். அவங்களுக்கு இணையா ஒரு படத்துல நடிக்கிறது சவாலா இருக்கு. பிரான்ஸ், கேரளா, சென்னை ஆகிய பகுதிகள்ல இந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்குது. இன்னும் சில மாதங்கள்ல ரிலீஸ்.”

“ஜெயலலிதாவா நடிக்கணும்!”

“கல்யாணம் பற்றி உங்களோட கருத்து என்ன?”

“எனக்குக் கல்யாணத்துல உடன்பாடு இருக்கு. என் வீட்லயும் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறாங்க. என் குடும்பம் கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி வாழணும்னு கத்துக்கொடுத்திருக்கு. தனியா இருக்கணும், கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுனு சொல்ற கும்பல்கிட்ட இருந்து என் பார்வை மாறுபட்டதா இருக்கு. ஆனா, யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறது ஒருத்தரோட பர்சனல் சாய்ஸ்.”

“இனி எந்தமாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு ஆசை?”


“ஒரு பெண் அரசியல்வாதியா இருக்குறதுல எவ்வளவு கஷ்டங்களும் சவால்களும் இருக்கும்ங்கிறதை ஜெயலலிதா அம்மாவைப் பார்த்துத் தெரிஞ்சுகிட்டேன். அதனால அவங்களோட பயோபிக் படத்துல நடிக்கணும்னு ஆசை.”