சினிமா
Published:Updated:

“திருப்பத்துக்காக காத்திருக்கிறேன்!”

“திருப்பத்துக்காக காத்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“திருப்பத்துக்காக காத்திருக்கிறேன்!”

மா.பாண்டியராஜன் - படம்: க.பாலாஜி

``நிறைய இயக்குநர்கள் என்கிட்ட கதை சொல்றதுக்கே அதிகம் யோசிக்கிறாங்க. `அவர் இயக்குநரோட பையனாச்சே; கதையில் அவங்க அப்பா தலையிடுவாரோ?’னு நினைக்கிறாங்க. அப்படி சசிகுமார் சார் யோசிச்சதனாலதான், எனக்கு `சுப்ரமணியபுரம்’ படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைக்காமப்போச்சு. எங்க வீட்டைப் பொறுத்தவரை அப்படி எதுவும் கிடையாது. நல்ல கதைக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...’’ - என பிரித்விராஜன் பேசும்போதே நடிப்பின் மேல் அவருக்கு இருக்கும் ஈடுபாடு தெரிகிறது.

“திருப்பத்துக்காக காத்திருக்கிறேன்!”

“அப்பா இயக்குநர், நடிகர்... அதனால நடிப்புல ஆர்வம் வந்துடுச்சா?”

“எனக்கு நடிக்கணும்னு ஆசை வந்ததே இல்லை. ஏன்னா, சினிமா சம்பந்தமா நான் எதுவுமே பண்ணுனது இல்லை. நான் சின்னப் பையனா இருக்கும்போதே அப்பாவோட `தாய்க்குலமே தாய்க்குலமே’ படத்துல அவருக்குப் பையனா நடிக்கக் கேட்டாங்க. நான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். அப்புறம் ஸ்கூல் படிச்சு முடிக்கும்போது அப்பாவோட அசோஸியேட் டைரக்டர் என்னை ஹீரோவா வெச்சுப் படம் எடுக்கணும்னு சொன்னார். அவர் வந்து சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கு நடிப்புமேல ஆர்வம் வந்துச்சு. ஆனால், அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. என் ஆர்வத்தைப் பார்த்து அப்பா என்னை வெச்சு `கைவந்த கலை’னு ஒரு படம் எடுத்தார். இப்படித்தான் என் பயணம் ஸ்டார்ட் ஆச்சு.’’

“உங்களோட முதல் படம் வந்ததுக்கு அப்புறம் நடிப்புக்காக என்னெல்லாம் வொர்க் பண்ணுனீங்க?”

“ஒரு செலிபிரிட்டி பையனா நான் சினிமாவுக்கு வந்தப்போ, என்னெல்லாம் பண்ணக்கூடாதுனு முதலில் கத்துக்கிட்டேன். ஒரு நடிகனா நல்ல பெயர் எடுக்கணும்னு நினைச்சேன். அப்பா பெயரைப் பயன்படுத்திப் பெரிய ஆளா ஆகணும்னு நினைச்சதே இல்லை. அதேசமயம் அவர் பெயரைக் கெடுத்துடக் கூடாதுங்கிற மிகப்பெரிய பொறுப்பும் எனக்கு இருக்கு. அதை மனசுல வெச்சுதான் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிச்சுக்கிட்டிருக்கேன். ரொம்பக் குறைவான படங்களைத்தான் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆனால், ஒரு நடிகனா இன்னும் எனக்கு ஒரு பிரேக் கிடைக்கவே இல்லை. நான் ஹீரோவா நடிச்சிருக்கிற `தொட்றா’, வில்லனா நடிச்சிருக்கிற `சகா’ படங்கள்தான் எனக்கான பிரேக் கொடுக்கும்னு நம்பிக்கையோட இருக்கேன்.’’

“திருப்பத்துக்காக காத்திருக்கிறேன்!”

“ ‘தொட்றா’ படத்தோட இசை வெளியீட்டு விழாவில் உங்க அப்பா ரொம்ப எமோஷனலா பேசினாரே?”

“எந்த வேலை செஞ்சாலும் அதுல சக்சஸ் கிடைக்கணும்கிற நோக்கத்தில்தான் எல்லோரும் ஓடிக்கிட்டிருக்கோம். அப்படி நான் சினிமாவுக்கு வந்து 10 வருடத்துக்கும் மேல ஆச்சு. ஆனா, எந்த வெற்றியும் கிடைக்கலை. அந்த வருத்தம் என்னைவிட என் அப்பாவுக்கு அதிகமா இருக்கு. பல சமயங்கள் நான் அப்செட்டா இருக்கும்போது, எங்க அம்மா, ‘நீ வேற ஏதாவது வேலை பார்க்கலாம்’னு சொல்வாங்க. ஆனால், அப்பாதான் எனக்கு சப்போர்ட் பண்ணி என்னை ஓட வெச்சுக்கிட்டிருக்கார்.

நான் சோர்ந்துபோற சமயங்களில் அப்பா எப்படி எனக்கு உற்சாகம் கொடுப்பாரோ, அதேமாதிரி சோகத்திலிருந்து என்னை மீட்டெடுக்கிறது கிரிக்கெட்தான். சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும்; எப்பவும் விளையாடிக்கிட்டுருப்பேன். எப்போ சி.சி.எல்-ல விளையாட ஆரம்பிச்சேனோ, அப்போதிருந்து கிரிக்கெட் என் வாழ்க்கையில பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு. சினிமாவில் இருக்கிற என்னோட ஃப்ரெண்ட்ஸ், சீனியர்ஸ்னு நிறைய நபர்களோடு அதிக நேரம் செலவிட முடியுது. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம்னு மற்ற மொழி நடிகர்களும் சி.சி.எல்-ல விளையாடுறதுனால, அவங்களோட நட்பும் கிடைக்குது. எப்போ கிரிக்கெட் விளையாடினாலும் அது எனக்குள்ள புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.’’

“ ‘தொட்றா’ படத்தை ரொம்ப நம்புறதா சொல்றீங்க... அதில் என்ன ஸ்பெஷலா?”

“தர்மபுரியில நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை வெச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம். காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன், சாதிப் பிரச்னைகள்னு படத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. முக்கியமா, இந்தப் படத்தைப் பார்க்கிறவங்க படத்தில் வர்ற கதாபாத்திரங்களோடு அதிகமா கனெக்ட் ஆவாங்க. ‘இந்தக் கேரக்டர் மாதிரியே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார்; இந்தக் கேரக்டர் என்னை மாதிரியே இருக்கு’னு படத்தில் வர்ற எல்லாக் கதாபாத்திரங்களையும் நாம அன்றாட வாழ்வில் அதிகமா பார்த்திருப்போம். அதுதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்னு நான் நினைக்கிறேன். படத்தோட க்ளைமாக்ஸ் பெருசா பேசப்படும்.’’