தன்னம்பிக்கை
தொடர்கள்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

எனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்! - லதா மேனன்

எனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்! - லதா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
எனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்! - லதா மேனன்

எனக்குள் நான்எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி

ண்களுக்கான உள்ளாடை முதல் அந்தரங்க உறவுக்கான அனைத்து விஷயங்கள் வரையிலும் பெண் முகங்களைப் பிரதானப்படுத்தும் விளம்பரங்களே பெரும்பான்மை. பெண்ணின் பெருமை பேசும், ஆண் பெண் சமத்துவம் பேசும் விளம்பரங்களை விரல் விடாமலேயே எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் எப்போதும் இடம்பெறுபவை லதா மேனனின் விளம்பரங்கள். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் மனைவி லதா மேனன், விளம்பரத் துறையில் கவனம் ஈர்க்கும் பெண். இவருடைய அழகியல் தயாரிப்புகளுக்கு லேட்டஸ்ட் உதாரணம், ஆரோக்யா பால் விளம்பரம். விளம்பர வேலைகள், கணவர் இயக்கும் `சர்வம் தாளமயம்' படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பு, தனக்குப் பிடித்த ஃபர்னிச்சர் டிசைனிங் என வெவ்வேறு தளங்களில் பிஸியாக இருக்கும் லதா, தனக்கே உரிய பாணியில் கேள்விகளைத் தொடுத்து அதற்குரிய பதில்களையும் கொடுத்தார்.

நான் யார்?

சிறு வயதிலிருந்தே விளம்பரங்களைக் கவனிப்பேன். சினிமா பிடிக்கும்.  விவரமே தெரியாத வயதில் மார்க்கெட்டிங் துறையிலும் ஆர்வம் வந்தது. பி.காம் முடித்தேன்.  படிப்பை முடித்ததும் `ஓ அண்டு எம்'மில் வேலைக்கான இன்டர்வியூ அழைப்பு வந்தது. அதேநேரம் மும்பை சோபியா கல்லூரியில் மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கும் அழைப்பு  வந்தது.

எனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்! - லதா மேனன்

இன்டர்வியூவில் செலெக்ட் ஆன நிலையில் அந்தக் குழுவில் இருந்த ஒருவர் `உனக்கு வேலை பார்க்கணுமா... படிக்கணுமா?' எனக் கேட்டார். `படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதேநேரம் எனக்குனு சில பொறுப்புகள் இருக்கிறதால வேலையும் முக்கியம்' எனச் சொன்னேன். `அப்படின்னா நீ படிப்பை கன்டினியூ பண்ணு. வேலைபார்க்க ஆரம்பிச்சுட்டா, படிப்புல ஆர்வம்போயிடும்' என்றார். என் வாழ்க்கையின் மிகச்சிறந்த அட்வைஸ் அதுதான் என நினைக்கிறேன். 

வேலை வேண்டாம் என மாஸ் கம்யூனிகேஷன் படிக்கப்போன பிறகுதான், எனக்கான உலகம் விரிந்திருந்ததை உணர்ந்தேன். படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தேன். ஆறு மாத அலைச்சலுக்குப் பிறகு விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. எம்.ஆர்.எஃப் நிறுவனத்துக்கு நிறைய விளம்பரங்கள் செய்து கொடுத்திருக்கிறேன்.

விளம்பரமும் வாழ்க்கையும்

சினிமாவில் ஆர்வமிருந்தாலும் வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அவர்களது பார்வையில் சினிமாவைவிடவும் விளம்பரத் துறைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாகத் தெரிந்தது. விளம்பரத் துறையில் வேலைபார்த்தபோதுதான் ராஜீவ் மேனனைச் சந்தித்தேன். அவரும் அதே துறையில் இருந்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். கல்யாணத்துக்குப் பிறகு அவருடன் சேர்ந்து வேலைபார்க்க ஆரம்பித்தேன். என் மூத்த மகள் சரஸ்வதி பிறந்த பிறகு, 1996-ம் ஆண்டில் என்னுடைய சொந்த விளம்பர கம்பெனி `ஐரிஸ் ஃபிலிம்ஸ்' ஆரம்பித்தேன்.

ஃபான்டா குளிர்பானத்துக்காக நான் செய்த விளம்பரங்கள் எல்லாமே எனக்கான அடையாளமாக அமைந்தன. தருண், சிம்ரனை வைத்துச் செய்த ஃபான்டா விளம்பரங்களும், சூர்யாவை வைத்துச் செய்த ஏர்செல் விளம்பரமும் நான் யார் என்று கவனிக்கவைத்தன.

2010-க்குப் பிறகு விளம்பரங்களில் யதார்த்தத் தன்மை வரத்தொடங்கியது. அரசுக்காக நிறைய டாகுமென்டரிப் படங்கள் செய்து கொடுத்த அனுபவம், எனக்கு யதார்த்த விளம்பரங்களுக்குக் கைகொடுத்தது. ஆரோக்யா நிறுவனத்துக்காக நான் எடுத்துக்கொடுத்த விளம்பரம் அந்த வகைதான். அந்த விளம்பரத்துக்காகப் பால் பண்ணை வைத்திருக்கும் மக்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அந்தக் குடும்பத்துப் பெண்களின் தன்னம்பிக்கையும் சம அந்தஸ்தும் என்னை பிரமிக்க வைத்தன. இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடி பால் வியாபாரத்தில் ஈடுபடும் அளவுக்கு ஸ்மார்ட் ஆகியிருக்கிறார்கள்.  விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், கூடவே மாடு வளர்ப்பு, பால் பண்ணை என வாழ்வாதாரத்துக்கான மாற்றுவழிகளையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். 

விளம்பரத்துக்காகச் செயற்கையாக மக்களையோ, சூழலையோ ஏற்பாடு செய்யக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன். அந்த விளம்பரங்களில் வருபவர்கள் நிஜமாகவே பால் பண்ணை வைத்திருப்பவர்கள். அந்த இடம் அவர்களுடையது. விளம்பரத்தில் சொல்லப்பட்ட தகவல்களும் அவர்களது சொந்தக் கதை. ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலைபார்க்கிறார்கள். நாட்டு மாடுகளையும் நாட்டுக்கோழிகளையும் வளர்க்கிறார்கள். பிள்ளைகள் காலையில் வேலை பார்த்துவிட்டுப் பள்ளிக்கூடம் போகிறார்கள். அடுத்து அதே நிறுவனத்துக் காக `பூமி சுத்துது அன்பால...' என்றோர் ஆன்தெம் தயாரித்தேன். பூமியைப் பற்றியும் தமிழகக் கிராமங்களின் அழகைப் பற்றியும் இதில் பேசியிருக்கிறோம். இதைப் பார்த்த பலரும் தமிழகத்தில் இவ்வளவு அழகான இடங்கள் இருக்கின்றனவா என ஆச்சர்யத்துடன் கேட்கிறார்கள்.

விளம்பரத் தயாரிப்பாளராக எனக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். அந்த உணர்வின் பிரதிபலிப்புதான் இத்தகைய விளம்பரங்கள்.

எனக்குக் குழந்தைகளுடன் இருப்பதுதான் முக்கியம்! - லதா மேனன்

விளம்பரங்களில் பெண்களின் சித்திரிப்பு

 என்னுடைய விளம்பரங்களில் மனித உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விஷயங்களோ, பெண்களைத் தவறாகச் சித்திரிப்பதோ இருக்காது. அது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் யோசிக்கவேண்டிய விஷயம். இதில் சினிமாவும் விதிவிலக்கல்ல. தான் விரும்பும் பெண்ணை அடைய எந்த எல்லை வரையிலும் போகலாம் என்கிற மாதிரியான சினிமா சித்திரிப்புகள், நிஜத்தில் சமூகத்தில் எத்தனையோ பெண்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன.

இது மட்டுமல்ல, விளம்பரங்களில் தலைகாட்டும் பிரபலங்களுக்கும் ஒரு பொறுப்பு உணர்வு தேவை. தாம் முகம் காட்டும் விளம்பரத்தின் தரமோ, அது ஏற்படுத்தப்போகிற தாக்கமோ தெரியாமலேயே நடித்துவிடுகிறார்கள். யோசிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் இருக்கிறது.

சவால்கள்... சங்கடங்கள்...

நான் பேஸ்பால் பிளேயர். விளையாட்டு, என்னை மனதளவில் உறுதியான பெண்ணாக மாற்றியது. விளம்பரத் துறையில் ஆணாதிக்கம் அதிகம்.  திறமையை நிரூபித்துவிட்டால், நமக்கான மரியாதை தானே வந்து சேரும். ஆனால், அந்தப் போராட்டம் மிகக் கடினமானது.

ஆரம்ப நாள்களில் யாருக்கும் தெரியாமல் தனிமையில் அழுத தருணங்கள் எக்கச்சக்கம். லைட்டிங் மாறிக்கொண்டே இருக்கும். நேரம் விரைந்துகொண்டிருக்கும். ஷாட் பற்றிய யோசனையே வராது. ஒவ்வொரு நாள் கால்ஷீட்டும் பணம். ஐடியா வந்து ஒருவழியாகத் தயாராகும் நிலையில், கிளையன்ட்டுக்கு அது பிடிக்காமல் மாற்றச் சொல்வார்.

க்ரியேட்டிவிட்டி அதிகம் தேவைப்படுகிற துறை இது. ஆனால், பெண்ணை நம்பி வாய்ப்புகளைக் கொடுப்பதில் பலருக்குத் தயக்கம். அவர்களால் கமர்ஷியலாக வெற்றிகளைக் கொடுக்க முடியாது என நினைக்கிறார்கள். சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமான `வொண்டர் உமனை' இயக்கியவர் ஒரு பெண். பெண்கள் இயக்கும் படம் கமர்ஷியலாக இருக்காது என்றொரு பார்வை உள்ள நிலையில் அதைத் தகர்த்திருக்கிறது இந்தப் படம்.

வேலையில்லா நாள்கள் விருப்பங்களுக் கானவை...

வாய்ப்புகள் இல்லாத  நாள்களை எனக்கானவையாக மாற்றிக்கொள்வேன். நிறைய படிப்பேன். வைல்டு லைஃப் போட்டோகிராபி செய்வேன். ஃபர்னிச்சர் டிசைன் செய்வேன். சிந்தனைக்கு ஓய்விருக்காது. கேரளாவில், என் பாட்டியின் 130 வருடத்துப் பழைய வீடு இருந்தது. அதைப் புதுப்பித்தபோது பழைய மரங்கள் கிடைத்தன. அவற்றை எப்படி மாற்றி அமைக்கலாம் என யோசித்தேன். அப்போதுதான் கார்ப்பென்டரியில் ஆர்வம் வந்தது. நானே ஐடியாக்கள் கொடுத்து ஃபர்னிச்சர்களை டிசைன் செய்யச் சொன்னேன். அதைப் பார்த்துவிட்டுச் சிலர் ஆர்டர் கொடுத்தார்கள். இப்போதும் விரும்பிக் கேட்கிறவர்களுக்கு மட்டும் ஃபர்னிச்சர் டிசைன் செய்து தருகிறேன்.

குடும்பம்...

பெரும்பாலும் எல்லா புராஜெக்ட்டு களையும் ராஜீவ் மேனனும் நானும் சேர்ந்தே ஆலோசித்து முடிவு செய்வோம். ராஜீவ் இப்போது இயக்கும் `சர்வம் தாளமயம்' படத்துக்கு நான்தான் தயாரிப்பாளர்.   

மூத்த மகள் சரஸ்வதி `லிட்ரேச்சர் இன் ஃபிலிம்' படித்திருக்கிறார். சினிமா ஆர்வமிருக்கிறது. இளையவர் லக்ஷ்மி, எகனாமிக்ஸ் படித்துக்கொண்டிருக்கிறார். இருவருக்கும் நல்ல படிப்பைக் கொடுத்திருக் கிறோம்.  மலையாளத் திருமணங்கள் ஆடம்பரமில்லாதவை என்பதால், அவர்களின் திருமணங்களுக்காகச் சேர்த்து வைக்கவேண்டிய நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை. அதனால், இந்தப் படத்தில் முதலீடு செய்தோம்.

மால்குடி சுபாவை வைத்து `வால்பாறை... வட்டப்பாறை...' என்றொரு மியூசிக் வீடியோ செய்தேன். அதைப் பார்த்துவிட்டுப் படம் பண்ணுவதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அந்த நேரத்தில் என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு என் அரவணைப்புத் தேவைப்பட்டது. நான் நினைத்திருந்தால் அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, சினிமாவில் இறங்கியிருக்கலாம். ஆனால், எனக்கு அவர்களுடன் இருப்பதுதான் முக்கியமாகப்பட்டது.

மீ டூ..?

ஒருமுறை பேஸ்பால் விளையாடிவிட்டு ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தோம். அந்த ரயிலில் இருவர் மட்டுமே உட்காரும்படியான இருக்கைகள் இருந்தன. `அப்படி உட்காரக் கூடாது... மூன்று பேர் உட்காருங்கள். கொஞ்சம் இடைவெளிவிட்டாலும் ஆண்கள் வந்து உட்காருவார்கள். தவிர, கையில் சேஃப்டி பின் வைத்துக்கொள்ளுங்கள்' என எங்களுக்கு எச்சரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

விளம்பரத் துறை வேலையிலும் தனியே பயணம் செய்வது, ஹோட்டலில் தங்குவது என எல்லாவற்றிலும் பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். எந்நேரமும் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய எச்சரிக்கையுடன் இருந்திருக்கிறேன்.

இன்று யாரும் யாருடைய விவகாரத்தி லும் தலையிடத் தயாராக இல்லை. சுயநல வாதிகளாக இருக்கிறார்கள். வாட்ஸ்அப்பிலும் இன்ஸ்டாகிராமிலும் மக்களின் வாழ்க்கை சுருங்கிவிட்டது. மனதையும் சிந்தனையையும் விசாலப்படுத்திய வாசிப்புப் பழக்கம் இல்லாமல்போனதும், ஒருவேளையாவது வீட்டிலுள்ள எல்லாரும் சேர்ந்து சாப்பிடும் பழக்கமின்றிப்போனதும் இத்தகைய மாற்றங்களுக்கு முக்கியமான காரணம்.