தன்னம்பிக்கை
தொடர்கள்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

பூவே பூச்சூடவா - நினைவோவியம்

பூவே பூச்சூடவா - நினைவோவியம்
பிரீமியம் ஸ்டோரி
News
பூவே பூச்சூடவா - நினைவோவியம்

விக்னா-சந்தோஷ், ஓவியம் : ஷண்முகவேல்

ந்தோஷ் தன் மகளுக்காக நல்ல பாலர் பள்ளி ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தான். `பூங்காவனம்’ பள்ளியின் நிறுவனரும் பிரின்சிபாலுமான சுந்தரி பற்றிய குறிப்பு எங்களை ஆச்சர்யப்பட வைத்தது. சுந்தரி இருக்கிறார் என்பதே சந்தோஷம்கொள்ள வைத்தது.

ஒரு வேலை நாளில் அங்கு சென்றோம். மரத்தடியில் குழந்தைகளோடு முதியவர் ஒருவரும் விளையாடிக்கொண்டிருந்தார். சற்றே பெரிய குழந்தைகளுக்கு, ஒரு பாட்டி களிமண்கொண்டு பொம்மைகள் செய்வதைச் சற்றே சிரத்தையுடன் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். சுற்றிலும் ஆறேழு குழந்தைகளை உட்காரவைத்து, முதிய தம்பதியினர் கதை சொல்லிக்கொண்டிருந்தனர்.

எங்கு பார்த்தாலும் குழந்தைகளும் முதியவர்களுமாக இருந்த அந்த இடம், எங்களுக்கு `பள்ளிக்கு வந்திருக்கிறோம்’ என்ற எண்ணத்தையே மறக்கச்செய்தது. டீச்சர் என்றோ, மேடம், சார் என்றோ யாரையும் அழைக்காமல், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உறவுமுறைகொண்டு அழைப்பதையும் கவனித்தோம்.

பிரின்சிபால் அறையின் வெளியே தொங்கிக்கொண்டிருந்த அந்த அழைப்பு மணியைப் பார்த்ததும் நான் சந்தோஷைப் புன்னகையுடன் பார்த்தேன். பித்தளைக் கிண்ணத்தைக் கவிழ்த்து சுவருடன் ஒட்டிவைத்ததுபோல இருந்தது அந்த மணி. வால்போல தொங்கிக்கொண்டிருந்த கயிற்றின் முனையில் ஒரு சிறிய குமிழ். சந்தோஷ், கை பரபரக்க, அதை இழுக்கப்போனான். நான் ``அடேய்...’’ என்றேன். அதற்குள் உள்ளிருந்து மெலிந்த குரலில் அழைப்பு வந்தது.

``உள்ளே வாங்க...”

மஞ்சள்நிற கைத்தறிப் புடவை. காதில், களிமண்ணால் செய்த மெல்லிய தொங்கட்டான். நெற்றியில் தீற்றலாக சந்தன நிறத்தில் பொட்டு. காதோரம் வெளிர்நரை. முகத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை
எனத் தோன்றியது. தெத்துப்பல்லா... இல்லையா எனச் சந்தேகம் வருகிற மாதிரியான புன்னகையுடன் ``வெல்கம்” என்றார் சுந்தரி.

பூவே பூச்சூடவா - நினைவோவியம்

ஒருகாலத்தில் சுந்தரி அணிந்த கம்மல்கள், வளையல்கள், உடைகள் மீதெல்லாம் தமிழ்நாட்டின் இளம்பெண்கள் பித்துப் பிடித்து அலைந்ததாக ஞாபகம். சுந்தரிபோல கொண்டை போட்டுகொள்ள தங்கள் கூந்தலைப் பாடாய்ப்படுத்திய அக்காக்களை நான் அறிவேன்.

``விக்னாதானே!” என்று என்னைப் பார்த்தவர், ``வழக்கமாக அட்மிஷனுக்குத்தான் கால் பண்ணுவாங்க. நீங்களும் அப்படித்தான்னு நினைச்சேன். ஆனா, கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. நேத்திக்கு எனக்குத் தூக்கமே வரலை. பாட்டி யோட ஞாபகத்துல மூழ்கிட்டேன்” என்றார்.

``ஸாரி... உங்களைத் திரும்ப சந்திக்கப் போறோம்கிற எக்ஸைட்மென்ட்லதான் பேசினேன்” என்றேன், வருத்தப்படும் பாவனையில்.

``சே... சே..! இட்ஸ் ஓகே. திடீர்னு நீங்க கேட்டதும் அப்படித் தோணுச்சு. ஆக்சுவலி நான் உங்களுக்கு தேங்க்ஸ்தான் சொல்லணும். பழசை நினைச்சுப்பார்க்கிறதும் ஒரு சுகம்தானே!” என்றவர், ``இது நீங்க சொன்ன சந்தோஷா?” என்றார்.

நான் வாய் திறப்பதற்குள் ``ஆமா மேடம். நான் உங்க ஃபேன்” என்றான் சந்தோஷ் அவசரமாக.

``நீங்க எப்படி இருக்கீங்க... உங்க ஹெல்த்? ஆக்சுவலி உங்க பாட்டி மாதிரி நாங்களும் நீங்க திரும்பி வருவீங்கன்னு அன்னிக்கு காத்திருந்தோம். உங்க பாட்டிக்காவது அந்த காலிங்பெல் இருந்துச்சு. எங்களுக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை. கையறு நிலை” என்றான். சுந்தரி சிரித்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.

``சர்ஜரியில பொழச்சுக்கிட்டேன். ஆனா, மீண்டுவர கொஞ்சம் வருஷமாச்சு. திரும்பவும் மல்லிகைப்பந்தல் வந்து பாட்டியோடுதான் வாழ்ந்தேன். பாட்டியோடு வாழ்ந்த அந்தக் கொஞ்ச காலத்துலதான் முதியவர்களோட பிரச்னைகளையெல்லாம் தீர்க்கணும்னு ஓர் ஈடுபாடு வந்துச்சு. குடும்பம்னா தலைமுறைகளும் உறவுகளுமா மனிதர்கள் எப்படி இணக்கமா வாழ்ந்திருக்கணும்... வாழணும்னு தோணுச்சு’’ என்றார்.

``பாட்டி...” என்று இழுத்தேன்.

``பாட்டி 2006-ல இறந்துட்டாங்க. இதோ இந்தச் சலங்கைகள் அவரோடதுதான்’’ - கண்ணாடிச் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த சலங்கைகளைக் காட்டினார்.

``பாட்டி, சின்ன வயசுலேயே மிகப்பெரிய பரதநாட்டிய டான்ஸர். பத்து வயசுல திருவனந்தபுரத்துல அரங்கேற்றமெல்லாம் கூட பண்ணாங்களாம். திருமணமாகி திருநெல்வேலி வந்த பிறகு அதெல்லாம் வேண்டாம்னு தாத்தா சொல்லிட்டாருபோல. இல்லைன்னா `நீங்க பெரிய `நாட்டியப் பேரொளி’யா வந்திருப்பீங்களோ’ன்னு நான் கிண்டல் பண்ணினதுக்குக் கோவிச்சுக் கிட்டாங்கன்னா பார்த்துக்கோங்க.”

``அப்பா 2000-த்துலேயே இறந்துட்டாங்க இல்லையா” என்றான் சந்தோஷ்.

``ஆமா... அப்பாதான் இப்படி ஒரு பள்ளி அமைக்கலாம்னு ஐடியா கொடுத்ததே. ஆனா, அவர் இருக்கும்போது என்னால ஆரம்பிக்க முடியலை. பாட்டியும் போனதுக்கப்புறம்தான் தீவிரமா யோசிச்சேன்.”

`நாம சந்திக்கிற பெண்கள் எல்லாரும் ஏன் தனியாவே இருக்காங்க?’ என்று யோசித்தபடி ``ஆமா மேடம்... அந்த டேவிட் என்ன ஆனாரு?” என்றேன்.

சந்தோஷுக்கு அந்த கூலிங்கிளாஸ் ஞாபகம் வந்திருக்க வேண்டும்... மையமாகச் சிரித்தான்.

``ஓ... டேவிட். அவருக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் தமாஷானதுதான். நான் திரும்பி பாட்டி வீட்டுக்கு வர்றதுக்குள்ள ஏதோ வேலை கிடைச்சு சென்னைக்குப் போயிட்டார். சென்னையிலேயே கல்யாண மெல்லாம் ஆகி செட்டிலாகிட்டார். சென்னைக்கு நாங்க வந்த பிறகு, குடும்பத்தோடு அடிக்கடி இங்கே வருவார். அவர் அரசியல்ல இறங்கிட்டார்னு ஒரு தடவை அப்பா சொன்னப்போ, எனக்கு குபுக்னு சிரிப்பு வந்துடுச்சு. அவரை சீரியஸாவே எடுத்துக்கத் தோணாதில்ல. ஆனா, உங்களுக்குத்தான் தெரியுமே வாய் கொஞ்சம் ஜாஸ்தின்னு. சமீபத்துலகூட ஏதோ பிரச்னையில மாட்டிக்கிட்டு கோர்ட் ஜாமீன் கொடுத்திருக்கிறதா கேள்விப்பட்டேன். பீச்ல வாக்கிங் போகும்போது குடும்பத்தோடு வந்திருந்தாரு. `காவல் துறை எங்கள் நண்பன்’னு சொல்லிச் சிரிச்சாரு. `நீங்க பெரிய ஆள்தான் டேவிட்’னு நானும் கிண்டல் பண்ணினேன்” என்று எழுந்தார்.

அறையைவிட்டு வெளியே வந்ததும் ``மேடம், ஒருதடவை இந்த அழைப்பு மணியை இழுத்துப்பார்க்கலாமா?” என்றான் சந்தோஷ்.

``ஓயெஸ்!” என்றார் சிரித்துக்கொண்டே.

சந்தோஷ் மணியை இழுத்ததும் அது `டிரிங்க்…’ என ஒலித்தது. பள்ளி வளாகத்தில் பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்த சிறுவர்களும் முதியோர்களும் திரும்பிப் பார்த்தார்கள்.

``வயதானவர்களை வைத்து பாலர் பள்ளி நடத்தும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?” என்று கேட்டேன். 

``பொதுவா மழலையர் பள்ளிகள்ல வேலைசெய்ய ஆயாம்மாக்களும் பாடம் சொல்லித்தர இளம்பெண்களும் இருப்பாங்க. அதை அப்படியே மாத்தியிருக்கிறேன். தாத்தா, பாட்டிகளோடு இருப்பதால் குழந்தைகளுக்கு இது மற்றுமொரு வீடு மாதிரியான எண்ணம் வருது” என்றார்.

``கூட்டுக்குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்புக்குச் சிறந்த சூழல் இல்லையா மேடம்?” என்றான் சந்தோஷ்.

``முன்பெல்லாம் சித்தப்பா சித்தி, அவங்க பிள்ளைங்க, பெரியப்பாங்க, அவங்களோட குடும்பம்னு 20, 25 பேரா வாழ்வதைத்தான் `கூட்டுக்குடும்பம்’னு சொல்வாங்க. இப்போ தாத்தா பாட்டி மட்டும் இருந்தாலே அது கூட்டுக்குடும்பம் ஆகிடுச்சு” என்று சிரித்தவர், தொடர்ந்தார்... ``பெரிய குடும்பங்கள்ல வளரும்போது,  யாராவது ஒருத்தர் மாத்தி ஒருத்தர் குழந்தைங்களைக் கவனிச்சுக்குவாங்க. இல்லைன்னா பெரிய குழந்தைங்களே வீட்ல சின்னக் குழந்தைங்களைக் கவனிச்சுக்கும். இப்போ இத்தனை `க்ரீச்’ பெருகி இருக்கிறது தனிக்குடும்ப முறையினாலதானே?”

``கூட்டுக்குடும்ப முறையில் `பிரைவசி’ இல்லைன்னு சொல்றாங்களே?” என்று சந்தோஷ் அவரை மேலும் பேசத் தூண்டினான்.

``விட்டுக்கொடுப்பது, பகிர்தல் இதெல்லாம் மனிதர்களுக்கு இயல்பாவே இருக்க வேண்டிய குணங்கள். ஆனா, இவற்றைப் பற்றி இளைய தலைமுறைக்குப் பாடம் எடுக்கவேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஏன்னு யோசித்துப்பார்த்தீங்களா? பல குழந்தைகளோடு சேர்ந்து வளரும்போது, இத்தகைய தன்மைகள் இயல்பாவே வந்துடும். இவ்வளவு ஏன், இப்போதுள்ள பெரியவர்களே மிகமிக சென்சிட்டிவாக இருக்கிறார்கள். பலவிதமான மனிதர்களோடு வாழும்போது, சின்னச்சின்னப் பூசல்களைப் பெரிதுபடுத்தாமல் எளிதில் கடக்க முடிகிறது. வயதில் பெரியவர்கள், இளையவர்களைச் சாந்தப்படுத்துவதையும், மனதைப் பக்குவப்படுத்துவதையும் ஒரு கடமைபோலவே செய்தார்கள். முதுமையும் இளமையும் சேர்ந்த வீடுகள், அனுபவமும் துடிப்பும் சேர்ந்த ஒன்றாக இருந்திருக்கிறது!”

``கூட்டுக்குடும்ப முறையில் வேறு என்ன நல்லது?”

பூவே பூச்சூடவா - நினைவோவியம்

``வரவுக்குள் செலவுசெய்வதுதான். வீட்டுப் பெரியவர்களில் ஒருவர்தான் கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்வார்கள். அந்த வகையில் சம்பாதிப்பவரிடம்கூட கையில் பணம் புரளாது. எதையாவது வாங்க வேண்டுமானால் அவசியம் கருதி வாங்க வேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் கடுமையாக இருப்பதுபோல தோன்றலாம். ஆயினும், சிக்கனமாக இருப்பது வாழ்க்கையில் உங்களை ஒருபோதும் கைவிடாது. திடீரென ஒருவருக்கு வேலைசார்ந்த நெருக்கடி ஏற்பட்டால்கூட, கூட்டுக்குடும்பம் என்றால் சேர்ந்து சமாளிக்க முற்படுகையில் எளிதாகிறது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் ஒருபோதும் செலவாளி ஆவதில்லை.”

``குழந்தை வளர்ப்பில் பெரியவர்களின் பங்கு என்ன? பெற்றோரைத் தாண்டிய முதியவர்கள் கண்காணிப்பு அவசியம் ஏன்?”

``கணவனும் மனைவியுமாக வேலைக்குப் போகும் வீட்டில், குழந்தைகளிடம் பேசுவதற்கு ஆள் கிடைக்காமல்போகிறது. அவர்களுக்கான பிரச்னைகள் நமக்குப் பெரிய பொருட்டல்ல. எனினும், அந்தச் சின்னஞ்சிறு உலகில் அதற்கான வீரியம் இல்லாமலில்லை. மேலும், பெற்றோரின் கண்டிப்பும், முதியவர்களின் அன்பும் சேரும் இடத்தில் குழந்தை சரியாக வழிநடத்தப்படுவதாக நம்புகிறேன்.”

``சரியாகச் சொன்னீங்க மேடம். அதுவும் உங்களைப் போன்றோர் அந்த வலியை உணர்ந்தவர்கள். உங்களிடமிருந்து வரும் இந்த வார்த்தைகளில் ஒவ்வொரு சொல்லுமே உண்மை” என்றான் சந்தோஷ். கிளம்பும்போது கவனித்தோம்...

தோட்டத்தில் பெரும்பாலும் மஞ்சள் நிற ரோஜாக்கள். நான் அதை வாஞ்சையுடன் பார்த்து ஏதோ சொல்லவருவதற்குள் சந்தோஷ் இடைமறித்தான் ``நோ... நோ... நோ கருத்து. ஓவர் மெசேஜ் உடம்புக்கு ஆகாது. கிளம்பலாம்” என்றான்.

நான் ஸ்கூட்டரை மிதித்தேன். ஒரே மிதியில் ஸ்டார்ட் ஆயிற்று.

பூவே பூச்சூடவா வெளியான ஆண்டு: 1985

நடிப்பு: பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர்

இயக்கம்: பாசில்