Published:Updated:

''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்
''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்

தமிழ் சினிமா போலீஸ் படங்கள் இரண்டு வகை. ஒன்று 'வாவ்வ்வ்வ்' ரகம். இன்னொன்று 'ஆவ்வ்வ்வ்வ்' ரகம். அரிதினும் அரிதான மூன்றாவது ஸ்பெஷல் ரகம் ஒன்று உண்டு. 'அடங்கப்பா' ரகம். ’திமிரு புடிச்சவன்’ இந்த மூன்றாவது வகை. (அது படத்துக்குப் போறப்போ நல்லாதான் இருந்தோம். போயிட்டு வந்து இப்படி ஆயிட்டோம்!)

தம்பியை தன்னைவிட பெரிய போலீஸ் ஆபிஸராக்க வேண்டும்  என்ற வெறி முருகவேல் (எ) விஜய் ஆண்டனிக்கு. அண்ணனின் டார்ச்சர் தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் ஓடிப்போகிறார் தம்பி. சில ஆண்டுகள் கழித்து தம்பியை குற்றவாளியாக பார்க்கிறார் முருகவேல். விசாரித்துப் பார்த்தால் பின்னணியில் விரிகிறது ஒரு மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கின் காட்ஃபாதர் யார், இளஞ்சிறார்கள் குற்றவாளிகள் ஆவது எப்படி, அதை விஜய் ஆண்டனி எப்படி தடுத்து நிறுத்தினார் என்பதுதான் மீதிக்கதை. ஒரு பத்தியில் படிக்கும்போது கதை நன்றாகத்தான் இருக்கிறது. பார்க்கும்போதுதான்... ப்ச்!

''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்

விஜய் ஆண்டனி மாடுலேஷன் மாறாமல் எல்லாக் காட்சிகளிலும் ஒரே போல நடிக்கிறார் என்ற விமர்சனம் உண்டு. அதை மாற்றுவதற்காகவோ என்னவோ இந்தப் படத்தில் ஒரு காட்சியில் 'ஏஏஏஏய்ய்' என எகிறுகிறார். இன்னொரு காட்சியில், 'தம்பி, இட்லிக்கு ஏன்ப்பா சட்னி தொட்டுக்கல' என அவரின் ட்ரேட்மார்க் ஸ்டைலில் மருகுகிறார். ஆனால் இரண்டுமே அளவுக்கு மீறி இருப்பதால் நம்மால் எங்குமே அவர் கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியவில்லை.

ஹீரோயின் மடோனாவாக நிவேதா பெத்துராஜ். ஒருசில காட்சிகளில் கலகலப்பேற்றுகிறார். முதலில் அன்னியமாகத் தெரியும் அவரின் மாடுலேஷன் போகப்போக 'அதுவே பழகிடும்' ரேஞ்சுக்கு ஆகிவிடுகிறது. விஜய் ஆண்டனியின் தம்பியாக வரும் ஜாக் ராபின் நடிப்பில் இன்னும் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். மொத்தப் படமும் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது என்ற நிலையில் அவரின் மிகையான நடிப்பே முதல் இருபது நிமிடங்களை சீரியல் ஸ்டைல் சினிமாவாக்கிவிடுகிறது. இளஞ்சிறார் குற்றவாளிகளாக நடித்திருக்கும் மற்றவர்களும் இதேபோலத்தான்!

''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்

வில்லன், 'மீசை பத்மா' என்ற அடைமொழியோடு வரும் சாய் தீனா. அவரின் கதாபாத்திரத்துக்கு குறைந்தபட்ச மெனக்கெடல் கூட இயக்குநர் தரப்பில் இல்லை என்பதற்கு துருத்தியபடி தெரியும் ஒட்டுமீசையே சாட்சி. மற்ற படங்களில் என்ன செய்வாரோ அதையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் தீனா. படத்தில் இன்னும் நிறைய கேரக்டர்கள் இருக்கின்றன. ஆனால் இயக்குநர், 'ஓவர் ஆக்டிங் பண்ணாதான் எடிட் டேபிள்ல சீன் கட்டாகாது' என சொல்லி வைத்திருப்பார் போல. ஆளாளுக்கு போட்டி போட்டு மிகை நடிப்பை வாரி இறைத்திருக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் லொள்ளு சபா சாமிநாதன் செய்வதை எல்லாம் கீழே 'காமெடிக்காட்சி' என ஸ்க்ராலிங் போட்டாவது நம்பவைத்திருக்கலாம்.

இசை விஜய் ஆண்டனி. ஒரு இடத்தில் பக்திப்பாடல் ஓடுகிறது. இன்னொரு இடத்தில் இந்தியன் படத்தின் சோக பி.ஜி.எம் ஓடுகிறது. பாடல்களாவது நல்லா இருக்குமே என காது கொடுத்தால்... அரதப்பழசான பாடல்வரிகளோடு சுமாரான பாடல்களே நம்மை வந்து சேர்கின்றன. அதுவும் அந்த முருகன் பாடல் எல்லாம்... ப்ளீஸ் சார்! படத்தின் எடிட்டிங்கும் விஜய் ஆண்டனியே! 'ஏன் சார் அங்கங்க கன்டினியூடி இல்லாம தொங்குது' என அவரிடம் கேட்கலாம்தான். ஆனால், எவ்வளவு குறைகளைத்தான் ஒரே ஆளிடம் சொல்வது?

ஒன்லைனை ஓகே ரகத்தில் யோசித்த இயக்குநர் திரைக்கதையை டைம் மிஷினில் முப்பதாண்டுகளுக்கு முன்னால் போய் எழுதி எடுத்துவந்திருப்பார் போல. அவ்வளவு அபத்தங்கள். திருநங்கைகளை நான்கைந்து காட்சிகளில் புகழ்ந்துவிட்டு அடுத்தக் காட்சியிலேயே, 'உன்கிட்ட தோத்துட்டா நடுரோட்டுல சேலை கட்டிக்கிறேன்டா' என ஒரு வீரவசனம் வைத்திருக்கிறார் இயக்குநர். வண்டி நிறைய சேலைகள் வரும் காட்சி வேறு. இந்த அரைகுறைப் புரிதலோடு கருத்து சொல்லாமல் இருந்தாலே போதும். சமூகம் அதன்போக்கில் முன்னேறிவிடும்.

''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்

முக்கியமான கட்டத்தில் ஒரு என்கவுன்ட்டர் காட்சி. ஹோட்டலில் உட்காந்திருக்கும் வில்லன் ஹீரோவிடம். 'எனக்காக ஒரு கோழி செத்திருக்கு. அதை சாப்பிட்டதும் நான் சாவுறேன்' என்கிறார். (சத்தியமா இதான் சார் வசனம். நாங்க கலாய்க்கல). ஹீரோவும் வில்லன் சாப்பிட்டு ஏப்பம் விடும்வரை துப்பாக்கியைப் பிடித்தபடி வாயைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்த க்ரியேட்டிவிட்டி இருக்கே.. அடங்கப்பா! தமிழ்சினிமாவில் கத்தி, அருவாளோடு திரியும் வில்லனை பார்த்திருக்கிறோம். ஸ்னைப்பர் கன்னோடு திரியும் வில்லனை பார்த்திருக்கிறீர்களா? அடங்கப்பா! தமிழ் தியேட்டர் வரலாற்றில் முதன்முறையாக...

இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் ஒரு காட்சி இருக்கிறது. ஒரு கொலைக் குற்றவாளியை சுடுகிறார் ஹீரோ. உடனே வயர்லெஸ்ஸில், 'முருகவேலின் இந்த அசாத்திய துணிச்சலை பாராட்டி அவர் இன்ஸ்பெக்டராக ப்ரோமோட் செய்யப்படுகிறார்' என சொல்கிறார்கள். என்கவுன்ட்டர் செய்த இரண்டாவது நிமிடத்தில் இன்ஸ்டன்ட் ப்ரொமோஷன் வாங்கிய... அதுவும் வயர்லெஸ்ஸில் வாங்கிய ஒரே போலீஸ் நம்ம போலீஸ்தான். அப்புறம் இன்னொரு முக்கிய ஜெனரல் நாலேட்ஜ் தகவல் தமிழ்சினிமா படைப்பாளிகளுக்கு... சி.சி.டிவி கேமராவில் இப்படி கல்யாண கேமரா போல் ஜூம் எல்லாம் வராது பாஸ். முக்கியமாக வசனங்கள் பதிவே ஆகாது. இன்னும் எத்தனை படத்துல ஜி?

''எனக்காக செத்த கோழியை, சாப்பிட்டு செத்துப் போறேன்!'' - 'திமிரு பிடிச்சவன்' விமர்சனம்

படத்தில் ஹீரோ பெயர் முருகவேல். இயக்குநர் பெயர் கணேஷா. இதற்காகவே பக்தி வழியே மெசேஜ் சொல்லியிருக்கிறார்கள். அதையாவது ஒழுங்காக எடுத்திருக்கலாம். சிரிப்பும் சலிப்பும்தான் வருகிறது. இளஞ்சிறார்கள் குற்றவாளிகள் ஆவது எவ்வளவு சென்சிடிவ்வான விஷயம்? அதை இவ்வளவு அலட்சியமாக கடனே என்றா டீல் செய்வது?

இந்தக் குறைகள் இல்லாமலும் படத்தில் தூவியிருந்த மசாலா குறைவாகவும் இருந்திருந்தால், திமிரு புடிச்சவனை நமக்கும் புடிச்சிருக்கும்.