Published:Updated:

`ஒரே கதாபாத்திரம்... 90 நிமிட சேடிஸ்டிக் த்ரில்லர்... என்ன ஆகிறாள் #Pihu'?

கார்த்தி
ஐஷ்வர்யா
குணவதி

காமெடிக் கதையாய் வந்த ஹோம் அலோன் படங்களில் இருக்கும் சிரிப்பலையை மியூட் செய்துவிட்டு, அதில் மரண பீதியைத் திணித்தால் எப்படியிருக்கும், அதுதான் #Pihu!

`ஒரே கதாபாத்திரம்... 90 நிமிட சேடிஸ்டிக் த்ரில்லர்... என்ன ஆகிறாள் #Pihu'?
`ஒரே கதாபாத்திரம்... 90 நிமிட சேடிஸ்டிக் த்ரில்லர்... என்ன ஆகிறாள் #Pihu'?

அந்த இரவு பிறந்தநாள் விழாவுடன் #pihu இரண்டாம் வயதை நிறைவு செய்கிறாள். அன்று காலை 7.15 மணிக்கு பிஹு எழுகிறாள். அவளது தாய் எழவில்லை. பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டில் பிஹுவுக்குத் துணையாய் யாரும் இல்லை. அந்த நாள் பிஹுவுக்கு எப்படிக் கழிகிறது என்பதுதான் Pihu படத்தின் கதை.

படத்தின் பிற விஷயங்களுக்குச் செல்லும் முன்னர், படத்தில் வரும் குழந்தையைப் பாராட்டியாக வேண்டும். ஒரு குழந்தைக்கு டெக்னிக்கல் குழுவில் இடம் தந்த முதல் படம் இதுதான் எனத் தோன்றுகிறது. பிஹு மைரா விஷ்வகர்மா ( Myra Vishwakarma) இந்த படத்தில் கூடுதல் திரைக்கதைக்கான கிரெடிட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வயதுக் குழந்தைதான் படத்தின் ஒரே தூண். ஒவ்வொரு ஃபிரேமையும் தனதாக்கிக்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாள். படத்தின் கதைக்கேற்ப இவள் நடித்திருக்கிறாளா அல்லது, இவளது போக்கில் கதை நகர்கிறதா என யூகிக்க முடியாத அளவுக்கான காட்சி அமைப்புகள். அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதபதப்பைக் கடந்தும், ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசிக்க வைக்கிறாள். கீழ் தளத்திலிருந்து மேல் தளத்துக்கு அந்த ஸ்டூலைக் கொண்டு வரும் காட்சி ஒரு சாம்பிள். அதை வைத்து அவள் மொபைலை எடுக்க முயலும் காட்சிகளில் அவளது மில்லியன் முகபாவனைகளைப் பார்க்கத் தவறாதீர்கள். படத்தின் சில செயற்கைத்தனங்களைக் கடந்து, நம்மைச் சீட்டில் அமர வைக்கும் ஒற்றை ஜீவன். வாழ்த்துகள் பிஹு மைரா விஷ்வகர்மா!

`ஒரே கதாபாத்திரம்... 90 நிமிட சேடிஸ்டிக் த்ரில்லர்... என்ன ஆகிறாள் #Pihu'?

டிரெய்லரில் வரும் 2 நிமிடக் காட்சிகள் அப்படியே 90 நிமிடங்களுக்கு நீள்கிறது. படம் முழுவதும் ஒரே ஒரு குழந்தை மட்டுமே நடித்திருக்கிறது மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் நம்மூர் பாலசந்தர் திரைப்படங்கள் போல மொபைலிலும் கதவுகளுக்குப் பின்னால் மட்டுமே வந்து செல்கின்றன. 

உங்கள் வீட்டில் எந்தப் பொருளெல்லாம் குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்னும் கேள்விக்கு, `எல்லாமேதான்' என பதில் அளிக்கிறது பிஹு. ஃப்ரிட்ஜ், தரை துடைக்கும் திரவம், பால்கனி உயரம், தூக்க மாத்திரை, சமையலறையில் இருக்கும் அறுந்த ஒயர், கேஸ் அடுப்பு, வெடிக்கும் ஹீட்டர், கேஸ் ஸ்டவ் (எல்லாமே டிரெய்லரில் வரும் காட்சிகள்) என சாகும் அபாயம் உள்ள எல்லாவற்றையும் வைத்துப் படம் பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிர வைத்துக்கொண்டிருக்கும் `இந்த ஒருவேளை அப்படி நடந்திருந்தா' டெனிக்கை எங்குதான் பிடித்தாரோ வினோத். சில சமயங்களில் நடந்தும் விடுகிறது. சில நிமிடக் குறும்படமாக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய திரைப்படத்தை 90 நிமிடங்களுக்கு நகர்த்துவதன் தேவை இயக்குநருக்கு ஏன் வந்தது என்றும் தெரியவில்லை. பிஹு செய்யும் எல்லா பீதியடைய வைக்கும் விஷயங்களைக் கடந்து, ஒரு கட்டத்தில் `அடப்போங்கடா மோடுக்கு' சென்றுவிட வைத்துவிடுகிறார்கள்.

`ஒரே கதாபாத்திரம்... 90 நிமிட சேடிஸ்டிக் த்ரில்லர்... என்ன ஆகிறாள் #Pihu'?

மேலும், உண்மைச் சம்பவமே கதையாக எடுக்கப்பட்டது என்று டைட்டில் கார்டில் கூறப்பட்டாலும் இரண்டு வயதுடைய குழந்தை இந்தச் செயல்களையெல்லாம் செய்யுமா என்பது கேள்வியாகவே இருக்கிறது. அதே போல், கதைக்குத் தேவையான கன்டினியூட்டி பிரச்னைகளும் எழாமல் இல்லை. இனிமேல் இங்கு உயிர் வாழ முடியாது என்று அபார்ட்மென்ட் வாசிகளால் பேசப்படும் வசனம், மும்பை அப்பார்ட்மென்ட் ஒன்றில் இறந்து ஆறு மாதங்களாகியும் யாராலும் கவனிக்கப்படாமல் எலும்புக்கூடாக சோஃபாவில் அமர்ந்திருந்த மூதாட்டியை நினைவுபடுத்தியது.

அந்த வீடு முழுக்க மூன்று கேமராக்களைப் பொருத்தி, நம்மை ஒரு பதற்ற நிலையிலேயே வைத்திருக்க உதவுகிறது யோகேஷ் ஜைனியின் கேமரா. இசையே தேவைப்படாத ஒரு படத்துக்கு, விஷால் குரானாவின் இசை சில இடங்களில் எரிச்சல் ஆகிவிடுகிறது. 
இது வினோத் கப்ரியின் இரண்டாவது படம். 2014ல் வெளியான அவரது டாக்குமென்ட்ரியான Can't Take This Shit Anymore தேசிய விருது வாங்கியது. அந்த டாக்குமென்ட்ரியின் தலைப்பைப் போல், இத்திரைப்படம் ஒரு கட்டத்துக்கு மேல் ஆனதுதான் சோகம்.

உறவுச் சிக்கல்கள், அபார்ட்மென்ட் வாழ்க்கை, தற்கொலை மனநிலை, மன அழுத்தம் எனப் பல விஷயங்களை பேச முயற்சி செய்திருக்கும் இப்படம், குறும்படமாக இருந்திருந்தால், `என்ன விதமான குரூரம் இது' என்னும் திட்டுக்களிலிருந்து ஒருவேளை தப்பித்திருக்கலாம்.

இந்த வாரம் வெளியான Fantastic Beasts and Where To find Them :The Crimes Of Grindelwald படத்தின் விமர்சனத்தைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யவும்.