Published:Updated:

``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை!'' - ஆதங்கத்தில் படக்குழு

``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை!'' - ஆதங்கத்தில் படக்குழு
``சர்கார் படத்துக்கு நாமளே சப்போர்ட் பண்ணலை!'' - ஆதங்கத்தில் படக்குழு

`சர்கார்' படத்துக்கு அரசு கொடுத்த அழுத்தத்தால் மிகுந்த கொதிப்பில் இருக்கின்றனர் படக்குழுவினர். `அரசின் நடவடிக்கையை ரஜினி கண்டித்தபோதே, நாமும் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும். இலவசங்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள்தாம், சர்கார் படம் பார்க்க வருகின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர்.

நடிகர் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம், தீபாவளி தினத்தன்று வெளியானது. இலவசங்களுக்கு எதிராகவும் வாக்கு அரசியலைப் பேசும் படமாகவும் இருந்ததால், ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், ஆளும்கட்சியின் கோபத்துக்கும் ஆளாகியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயர், படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டிருந்தது ஆளும்கட்சி வட்டாரத்தின் கொதிப்பை அதிகப்படுத்தியது. மேலும், இலவசங்களுக்கு எதிராகவும் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் நீக்கக் கோரி அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் பேனர்களும் கிழிக்கப்பட்டனர். இதுதொடர்பாகப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `படத்தின் பேனர்களை அ.தி.மு.க-வினர் கிழித்தார்கள் என்பது தவறான தகவல். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களோடு சேர்ந்து எங்கள் கட்சிக்காரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருள்களை வாங்கியிருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம். விலையில்லா திட்டங்களால்தான் உயர்கல்வியில் தமிழகம் 46.8 சதவிகிதமாக சிறந்து விளங்குகிறது' என்றார். தொடர்ந்து மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியானது. `இந்த விவகாரத்தில் தன்னைக் கைது செய்வார்கள்' என நினைத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், `சர்கார் விவகாரத்தை சரியாகக் கையாண்டிருக்கலாம்’ என நினைக்கின்றனர் படக்குழுவினர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விவாதமும் நடந்துள்ளது. அப்போது பேசிய படக்குழுவின் முக்கிய பிரமுகர் ஒருவர், `படம் வெளியாகி மூன்றாவது நாளில் ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை எதிர்கொள்ளத் தவறியதன் விளைவாக பி அண்ட் சி ஆடியன்ஸ் மத்தியில் படத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது. நாங்கள் சிறப்பான படத்தைத்தான் எடுத்திருந்தோம். மிகத் தெளிவான திரைக்கதையும் இருந்தது. மிகப் பெரிய வெற்றியடைய வேண்டிய படம் இது.`முழுக்க ஹீரோவையே புரஜக்ட் செய்ய வேண்டும்' எனக் கூறியதால் அதையொட்டியே காட்சிகள் வைக்கப்பட்டன. `துப்பாக்கி' படத்தைப் பார்த்துவிட்டு மலேசியாவில் இருந்து படக்குழுவினரை அழைத்துப் பேசினார் ரஜினி. `தேசபக்தி நிறைந்த படம். மிகப் பிரமாதமாக இருக்கிறது. மாபெரும் வெற்றி பெறும்' என நெகிழ்ந்தார் ரஜினி. அவருடைய வார்த்தைகள் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு வந்தபோது, அதைக் கடுமையாகக் கண்டித்தார் ரஜினி. அவரைப் பின்பற்றியே நாமும் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், பிரச்னை வந்தபோது சிலர் விலகிக்கொண்டார்கள். இதுதான் தவறாக அமைந்துவிட்டது. ஆளும்கட்சியினர் எதிர்ப்பு காட்டியபோது எதிர்த்து நின்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இந்த அரசு என்ன செய்துவிடும். கருணாஸ் துணிந்து பேசிவிட்டுக் கைதாகி நிற்கவில்லையா... கைது செய்தால் செய்துவிட்டுப் போகட்டும். எதிர்த்து நின்றால்தான் நிலைக்க முடியும். மறு தணிக்கைக்குப் பிறகு ஆடியன்ஸ் மத்தியில், `எடப்பாடியிடம் சரண்டர் ஆன பிறகு தணிக்கை செய்யப்பட்ட படம்' என்ற இமேஜ் உருவாகிவிட்டது. இது படத்தின் வெற்றியை பாதித்துவிட்டது. இலவசங்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள்தான், தற்போது தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நல்லவேளையாக, மிக்ஸி, கிரைண்டர் வைத்துக் கேக் வெட்டியதால்தான் படத்துக்கான செல்வாக்கு சற்று கூடியது. இந்தப் படத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது என்றால், இதுதான் காரணம்' எனப் பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தீவிர விவாதம் நடந்து வருகிறது" என்றார் விரிவாக.