பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”

சனா

“சென்னையில இருந்த ஆறு வருடத்துல நாற்பது படங்களுக்கும்மேல ஹீரோவா நடிச்சுட்டேன். ‘சதிலீலாவதி’ படத்துக்குப் பிறகு பெங்களூருக்குப் போயிட்டேன். அங்கே, ஒரே வருடத்துல ஒன்பது படங்கள்ல ஹீரோ. தொடர்ந்து நல்ல கேரக்டர்களா வந்தன. எல்லாமே நூறு நாள் ஹிட் படங்கள். அதனால, பெங்களூரை விட்டு வெளிய வரமுடியாமப்போயிடுச்சு. ஆனா, தமிழ்ல அப்பப்போ  கமல் சார் படங்கள்ல மட்டும் தலையைக் காட்டிடுவேன். அப்படி நல்ல நல்ல முக்கியமான கேரக்டர்கள் வந்தா தமிழ்ல நிச்சயம் நடிப்பேன். ஏன்னா, எனக்குத் தமிழ் நல்லா பேச, படிக்கத் தெரியும். தமிழை விட்டுக்கொடுக்க மாட்டேன்” - புன்னகைத்தபடியே சொல்கிறார் ரமேஷ் அரவிந்த். ‘உத்தம வில்லன்’ படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர், சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்தியில் வெற்றிபெற்ற ‘குயின்’ படத்தைத் தமிழ் மற்றும் கன்னடத்தில் ‘பாரீஸ் பாரீஸ்’, ‘பட்டர்ஃபிளை’ என்ற பெயர்களில் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார். 

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”

“ ‘குயின்’ படத்தை எந்த மொழியில ரீமேக் பண்ணாலும் ஓடும். அந்தளவுக்கு அருமையான கதை. எனக்கும் அந்தப் படம் பிடிச்சிருந்தது. அந்தச் சமயத்தில் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்னை அழைத்து, ‘குயின்’ படத்தைத் தென்னிந்திய மொழிகள்ல ரீமேக் பண்றோம். தமிழ், கன்னடத்துல நீங்க டைரக்ட் பண்ணுனா, நல்லா இருக்கும்னு சொன்னார். எனக்கும் ‘குயின்’ படம் பிடிக்கும்ங்கிறதால, உடனே ஓகே சொல்லிட்டேன். விடிஞ்சா கல்யாணம். வரப்போற கணவரை உயிரா நினைச்சுக்கிட்டிருக்கிற ஒரு பெண். ஆனா, கல்யாணத்துக்கு முதல்நாள் அவளை வேண்டாம்னு சொல்லிட்டு அவன் போயிடுறான். இந்தக் கதை எல்லாப் பெண்களுக்கும் ஒரு வலியைக் கொடுக்கும்னு தோணுச்சு. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸ்ல நடக்கும். ஒரு கம்பளிப் பூச்சி பட்டாம் பூச்சியாக மாறுவதுதான், கதை. கன்னட வெர்ஷனுக்கு ‘பட்டர்ஃபிளை’னும், தமிழுக்கு ‘பாரீஸ் பாரீஸ்’னும் பெயர் வெச்சிருக்கோம். இந்தப் பெயர்களுக்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கும், அதைப் படம் பார்க்கும்போது தெரிஞ்சுக்குவீங்க.” என்றவரிடம், சில கேள்விகள்.

“இந்தியில வந்த கதை. தமிழுக்காக ஏதாவது மாற்றங்கள் பண்ணியிருக்கீங்களா?”

“இயக்குநரா கன்னடத்துல என் முதல் படம், ‘ராமா ஷாமா பாமா’. இது, தமிழில் ஹிட்டான ‘சதிலீலாவதி’ படத்தோட ரீமேக். கன்னடத்துல கமலும் நடிச்சிருந்தார். படம் மிகப்பெரிய ஹிட். ‘பெஸ்ட் கிளாசிக் காமெடி படம்’னு இன்னும் இந்தப் படத்தைப் பத்தி கன்னட சினிமாவுல பேசிக்கிட்டிருக்காங்க. ரீமேக் பண்ணப்போற கதையை முதல்ல என் மனசு, கண்கொண்டு பார்ப்பேன். பிறகு, இதுதான் மெயின் கதை. இப்படி ஒரு விஷயம் நமக்கு முதல்ல தோணியிருந்தா, நாம எப்படி ரியாக்ட் பண்ணியிருப்போம்னு யோசிச்சு, பிறகு அதை ஸ்கிரிப்ட்டா பண்ணுவேன். அப்படித்தான் ‘குயின்’ படத்தின் கதையை என் மனசுக்கு மடைமாற்றி எழுதினேன். ஹிட்டான ஒரு படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தமாதிரி ரீமேக் பண்றதுல எனக்கு உடன்பாடில்லை. ஒரே நேரத்துல ரெண்டு மொழிகள்ல இயக்கினாலும், தமிழ் ரசிகர்களுக்கும் கன்னட ரசிகர்களுக்கும் ஏற்ற மாதிரிதான் திரைக்கதை அமைச்சிருக்கேன்.” 

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”

“கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ் வெர்சனுக்கு வசனம் எழுதியிருக்காங்க. வசனம் எப்படி வந்திருக்கு?”

“இது, பெண்ணை மையப்படுத்திய கதை. பெண் ஒருவர் வசனம் எழுதினா சரியா இருக்கும்னு தோணுச்சு. எழுத்தாளர் சுகாவிடம், ‘மாடலா, கிரியேட்டிவா எழுதுற பெண் எழுத்தாளர் படத்துக்குத் தேவை’னு சொன்னேன். அவர்தான் தமிழச்சி தங்கபாண்டியன் பற்றி சொன்னார். படத்தின் கதையைப் பற்றி இருவரும் விவாதிச்சோம். தமிழச்சி எல்லாத்தையும் மனசுல ஏத்திக்கிட்டு  வசனங்களை எழுதினாங்க. அவங்களோட அறிவு, தொழில் நேர்த்தி என்னை பிரமிக்க வெச்சதுனு சொல்லலாம். அவங்ககூட வொர்க் பண்ணது நல்ல அனுபவம். பாடல்களைப் பார்வதி, விவேகாகூட சேர்ந்து தமிழச்சியும் எழுதியிருக்காங்க.”

“ஹீரோயினா காஜல் அகர்வாலைத் தேர்ந்தெடுத்தது எப்படி?”

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”


“தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ். இப்படி மொழிக்கு ஒவ்வொரு ஹீரோயின்கள். இவங்களைத் தவிர முக்கியமான கேரக்டர்ல எமி ஜாக்ஸன் நடிக்கிறாங்க. மலையாளத்துல நீலகண்டனும், தெலுங்கில் பிரசாத்தும் டைரக்‌ஷன் பண்றாங்க. ஆனா, நாலு மொழிகளுக்கும் தயாரிப்பாளர் மனுகுமரன் என்பவர்தான். என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் காஜலுக்குத் திருப்புமுனையைக் கொடுக்கிற படமா இருக்கும். ‘பரமேஸ்வரி’ங்கிற கேரக்டர்ல அழகாக நடிச்சிருக்காங்க. எமி ஜாக்ஸன் தமிழ் வசனங்களை மனப்பாடம் பண்ணி அவ்வளவு அழகா பேசுறாங்க. அவங்க பேசுறதைப் பார்த்துட்டு, நானே ஆச்சர்யப்பட்டுப் போனேன். மைசூர்ல நான்கு மொழிப் படங்களுக்கும் ஒரே இடத்துலதான் ஷூட்டிங் போய்க் கிட்டிருக்கு. இந்த நான்கு மொழிகளும் எனக்குத் தெரியும்ங்கிறதால, இன்னும் கொஞ்சம் ஈஸியா இருந்தது. குட்டி இந்தியாவே ஒண்ணா வொர்க் பண்ற மாதிரி இருக்கு. நாலு மொழிகளிலும் பாடல்களுக்கு அமித்  திரிவேதி இசையமைக்கிறார்.”

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”

“தமிழில் தொடர்ந்து படங்கள் இயக்குற எண்ணம் இருக்கா?”

“கண்டிப்பா. ‘உத்தம வில்லன்’ தமிழில் இயக்குநரா என்னோட முதல் படம். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகலை. ஆனா, இந்தப் படம் ஹிட் அடிக்கும்னு நம்பிக்கை இருக்கு. கமலை வெச்சு ஏற்கெனவே கன்னடத்துல படம் இயக்கியதால், அவருக்கு என் வொர்க்கிங் ஸ்டைல் தெரியும். அதனாலதான், ‘உத்தம வில்லன்’ வாய்ப்பைக் கொடுத்தார். படத்துல பெரிய நடிகர், நடிகைகள் நடிச்சிருந்தாங்க. என்னை அறிமுகப் படுத்திய இயக்குநர் பாலசந்தரை நான் இயக்குற வாய்ப்பு அந்தப் படம் மூலமா எனக்குக் கிடைச்சது.”

“ ‘உத்தமவில்லன்’ படத்தோட கதை, திரைக்கதை, வசனம் கமலுடையது. இயக்குநருக்கான முழு சுதந்திரம் அந்தப் படத்துல கிடைச்சதா?”

“இதுல சுதந்திரம்னு ஒண்ணு தேவையில்லை. அவர் நினைக்கிறதை ஸ்க்ரீனில் கொண்டுவர அவருக்கு ஒரு இயக்குநர் தேவைப்பட்டார். ஏன்னா, படத்துக்கு ஹீரோ, தயாரிப்பாளர், எழுத்து எல்லாமே கமல் சார்தான். அதனால, அவர் சொல்ல வந்த விஷயத்தைக் கெடுத்துடாம, தெளிவா சொன்னதே பெரிய விஷயம்னுதான் நான் நினைக்கிறேன். முக்கியமா, கமல் சாரின் படத்தை டைரக்‌ஷன் பண்ணதே பெரிய விஷயமாதான் நான் நினைக்கிறேன்.”  

“கன்னடத்துல நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறீங்க. கமல் தமிழில் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ பார்த்தீங்களா?”

“ ‘பிக் பாஸ்’ ஆரம்பிச்ச கொஞ்சநாள் பார்த்தேன். கமல் சூப்பரா தொகுத்து வழங்கினார். முக்கியமா, அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”

“ரீமேக் என்று சொல்லி ஜெராக்ஸ் எடுக்கக்கூடாது!”

“கமலின் அரசியல் பிரவேசத்துல நீங்களும் கூட இருப்பீங்களா?”

“அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லைனு சொல்றதைவிட, அரசியல் பற்றி எனக்கு சுத்தமா தெரியாதுனு சொல்லலாம்.  அது, தமிழ்நாட்டு அரசியலா இருந்தாலும் சரி, கன்னட அரசியலா இருந்தாலும் சரி. கமலுக்கும் எனக்குமான நட்பு சினிமா, கலை, புத்தகம்... இதைச் சார்ந்துதான் இருக்கும். நட்புரீதியா என்கூடப் பேசும்போது, அரசியல் கட்சி தொடங்கப்போற விஷயத்தைச் சொன்னார். நல்ல விஷயம்னு நானும் சொன்னேன். அவரோட வாழ்க்கையில எல்லாத்தையும் பார்த்துட்டார். இந்த வயசுலேயும் சமூகத்துக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறார். இந்தத் தருணத்துல ஒரு நண்பனா, ‘நல்லது நடக்கும்’னு வாழ்த்துறேன்.”  

“இரண்டு மொழிகளில் ஒரே நேரத்துல படம் பண்றீங்க. இரண்டு மொழி சினிமாவுக்கும் இருக்கிற வித்தியாசமா எதைப் பார்க்கறீங்க?”

“மொழிகளைத் தாண்டி சினிமாவில் எந்த வித்தியாசமும் இல்லை. விஷூவலா ஒரு கதையை எப்படிச் சொல்றோம்ங்கிறதுதான் முக்கியம்!”