பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்!”

“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்!”

த.கதிரவன் - படம்: க.பாலாஜி

மிழக அரசியல் தலைவர்களில், ‘ஃபிட்னெஸ் சேலன்ஞ்’சுக்கு எப்போதும் தயார் நிலையில் இருப்பவர் சரத்குமார். 11 ஆண்டு களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ‘சமத்துவ மக்கள் கட்சி’, அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்திருக்கிறதா... இல்லை ஆரம்பித்த இடத்திலேயே ஆணியடித்துக்கொண்டு அசையாமல் நிற்கிறதா..?

‘‘ச.ம.க ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன... அந்த எல்லையை அடைந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘தனிமனிதனாக என்னால் முடிந்த உதவிகளை அதிகபட்சமாகப் பத்துப் பேருக்கு வேண்டுமானால் செய்யமுடியும். இதைத் தாண்டிப் பெரிய அளவில், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் உதவி பண்ண வேண்டும் என்றால், என் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே செய்துவிட முடியாது. அதற்கென்று தனி அதிகாரத்துடன் கூடிய அரசியல் பலம் வேண்டும். அதற்கான முயற்சியாகத்தான் ச.ம.க ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசியல் பயணத்தில், எல்லை என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு நாம் செய்ய நினைத்த சேவையைச் செய்துமுடிக்கும் நாள்தான்.... அதுதான் மகிழ்ச்சி!’’

‘‘ ‘சாதிய உணர்வோடு இருப்பதில் தவறு ஏதும் இல்லை’ எனப் பொது மேடையிலேயே பேசியிருக்கிறீர்களே?’’


‘‘எந்த சாதி - மதத்தில் பிறக்கப்போகிறோம்... எந்தத் தாய் வயிற்றில் பிறக்கப்போகிறோம் என்பதையெல்லாம் தீர்மானித்து யாரும் பிறப்பதில்லை. ஆனாலும்கூட, பிறந்தபிறகு பள்ளியிலேயே சாதி என்னவென்று கேட்டு அடையாளப்ப டுத்தப்படுகிறது. அப்படி யிருக்கும்போது ஒவ்வொருவருக்கும் இன்ன சாதி என்பது உள்ளுக்குள் இருக்கலாமே தவிர... அது வெறியாக மாறிவிடக்கூடாது என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொன்னேன்.

நான் பள்ளியில் படிக்கும்போது என்ன சாதி என்று யாருக்கும் தெரியாது, கல்லூரியில் படிக்கும்போதும் தெரியாது. அதே இஸ்லாமியக் கல்லூரியில் என்னைக் கால்பந்து அணிக்குக் கேப்டனாக நியமித்தபோதும்கூட, ‘இவன் இஸ்லாமியன் இல்லையே... எப்படி கேப்டனாக்கலாம்...’ என்று யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படியெல்லாம் இருக்கும்போது, அரசியலுக்குள் வந்த பிறகுதான் சரத்குமார் இன்ன சாதி என்று தெரிந்ததா? வேடிக்கையாக இருக்கிறதே!’’

“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்!”

‘‘சீமானோடு இணைந்து நீங்கள் பேட்டியளித்தது வலைதளங்களில் சாதியக் கண்ணோட்டத்துடன் விமர்சிக்கப்படுகிறதே?’’

‘‘சீமான் என் நண்பர். கலை உலகத்தில் நீண்ட நாள் ஒன்றாகப் பயணித்திருக்கிறோம். விமானநிலையத்தில், தற்செயலாக ஒன்றாகச் சந்தித்தபோது செய்தியாளர்களிடையேயும் கூட்டாகப் பேட்டியளித்தோம்... அவ்வளவுதான்!

மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்குள் வந்தவன் நான். வலைதளங்களில் தேவையான செய்திகளைப் பதிவு செய்வது மட்டும்தான் என் வேலை. யார் என்ன மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கோ, பதில் போடுவதற்கோ எனக்கு நேரம் கிடையாது. அதையெல்லாம் செய்துகொண்டிருந்தால், நான் வெட்டியாக உட்கார்ந்திருக்கிறேன் என்றுதான் அர்த்தம்!’’

‘‘ ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், தீவிரவாதிகள்; ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்’-என எல்லாமே திட்டமிட்ட அரசியலாகத் தெரிகிறதே... நீங்கள் அ.தி.மு.க கூட்டணிக் கட்சியாக இருப்பதால்...’’

(இடைமறித்துப் பேசுகிறார்) ‘‘நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதாக யார் சொன்னது? நாங்கள் பயணித்து வந்த பாதை வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். அரசியலைப் பொறுத்தவரையில், கூட்டணி என்பது தேர்தல் களத்திலே அமைத்துக்கொள்வது மட்டும்தான்!

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பார்வைக்கே வராமல் போனதால்கூட, சில தவறுகள் நடந்திருக்கலாம். அப்படியிருந்தால், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமைதானே... அரசோடு பகையாக இருந்துவிட்டால், எந்த விஷயத்தையுமே நாம் அவர்கள் கவனத்துக்குக் கொண்டுபோக முடியாமல் போய்விடுமே... ஆக எந்தப் பிரச்னையாக இருந்தாலும் கடைசியில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் போய்தானே  முறையிட முடியும்!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்திருக்கிறேன், நிதி உதவி செய்திருக்கிறேன் என்ற அடிப்படையில், அங்கே என்ன நடந்தது... அவர்களது  கோரிக்கைகள் என்ன... என்பதையெல்லாம் அரசிடம் நேரடியாகத் தெரிவித்திருக்கிறேன். உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், மறுபடியும் மக்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தவேண்டிய சூழலும் ஏற்படலாம்!’’

‘‘ ‘ச.ம.க ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தி.மு.க-வோடு நாங்கள் எந்தவொரு உறவும் வைக்கவில்லை’ என்கிறீர்கள். தி.மு.க மீது அப்படி என்ன வெறுப்பு? எதிர்காலத்திலும் இதே நிலை தொடருமா?’’

‘‘தி.மு.க-விலிருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பதை அப்போதே சொல்லிவிட்டேன். மறுபடியும் அதுகுறித்துப் பேச விரும்பவில்லை. மற்றபடி தி.மு.க மீது தனிப்பட்ட வெறுப்பு என்று எதுவும் இல்லை.

சட்டசபையிலிருந்து சட்டை கிழிந்த நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டபோதுகூட, ‘எதிர்க்கட்சித் தலைவரை இப்படி செய்திருக்கக்கூடாது’ என்றுதான் கருத்து தெரிவித்திருந்தேன். சமீபத்தில், கனிமொழி குறித்து ஹெச்.ராஜா கீழ்த்தரமாக விமர்சித்ததைக் கூட வன்மையாகக் கண்டித்தேன். உடல்நலம் இல்லாமல் இருக்கும் கருணாநிதியை சமீபத்தில், நானும் என் மனைவியும் நேரில் போய் சந்தித்துவந்தோமே... உணர்வுபூர்வமான அந்த சந்திப்பை அரசியலாக்க விரும்பாததால்தான் கேமரா, பேட்டி என்று எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

எனவே, தி.மு.க-வை நாங்கள் எந்தக் காலத்திலும் எதிரி என்று கூறியதே கிடையாது. ச.ம.க-வை ஆரம்பித்தபிறகு தொடர்ந்து அ.தி.மு.க-வோடு சேர்ந்தே பயணித்துவருகிறேன். சில நேரங்களில் அ.தி.மு.க-வை விட்டு விலகியும் வந்திருக்கிறோம். எந்த எண்ணத்துக்காக ச.ம.க-வை ஆரம்பித்தோமோ... அந்த நல்லெண்ணத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில்தான் தற்போது கவனம் செலுத்திவருகிறோம். அதனால், கூட்டணி பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், ச.ம.க தலைமையில் கூட்டணி அமைக்கமுடியுமா... ‘ச.ம.க-வை ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க வேண்டும்’ என்பதுபோன்ற கனவுகளோடுதான் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அது முடியுமா என்று நீங்கள் கேட்டால், ‘முடியாதது எதுவுமே இந்த உலகத்தில் கிடையாது.’ கனவு கண்டால்தானே சாதிக்க முடியும்!’’

“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்!”

‘‘ச.ம.க-வினால் அந்த சாதனையைப் படைத்துவிட முடியும் என்று எப்படி அவ்வளவு உறுதியாக நம்புகிறீர்கள்?’’

‘‘சிறுவயதில், நான் சைக்கிளில் சென்று பேப்பர் போடும்போது, ‘நாளை நாம் பெரிய நடிகராக வரவேண்டும்’ என்று நினைத்தேன்... நினைத்ததுபோலவே நடிகராகவும் ஆனேன். நடிகரான பின்பு, முதல் அமைச்சர் ஆகவேண்டும், பிரதம மந்திரி ஆகவேண்டும் என்றெல்லாம்கூட நினைத்தேன். ஏனெனில், Ambition should be made of sterner stuff என்கிறார்கள். எவரெஸ்ட் உச்சிக்குப் போய்க் கொடி நாட்டவேண்டும் என்றுதான் லட்சியம் இருக்கவேண்டுமே தவிர, கீழே கஞ்சன்ஜங்காவிலேயே நின்றுவிடலாம் என்று நினைக்கக்கூடாதல்லவா..?’’

‘‘விஜயகாந்தோடு நட்பு பாராட்டிப் பேசுகிற நீங்கள், அதே திரைத்துறையைச் சேர்ந்த ரஜினி - கமல் பற்றிய கேள்விகளை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுகிறீர்களே... ஏன்?’’


‘‘சட்டமன்றத்தில் நானும் விஜயகாந்தும் எதிரும்புதிருமாகப் பேசியிருந்தாலும்கூட, என் உண்மையான நண்பர் விஜயகாந்த்! சோதனையான காலகட்டங்களில் என்னுடன் உறுதுணையாக நின்றவர். அதனால், அவர்மீதான என் மரியாதையை நான் மறக்கவும் முடியாது... மறுக்கவும் முடியாது. மற்றபடி விஜயகாந்தோடு, ரஜினி - கமலை எல்லாம் ஒப்பிட்டே பார்க்கமுடியாது. அரசியலில், அந்தளவுக்கு அவர்கள் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது!’’

‘‘முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில், தற்போதைய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘நடிகர் சங்கத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் எனக்கு இப்போது இல்லை. அதற்கு நேரமும் இல்லை... அதனால் அங்கே என்ன நடக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது.’’

‘‘ ‘சரத்குமாரிடம் பிடித்த விஷயம் அவரது ஃபிட்னெஸ்’ என்கிறார் விஷால். உங்களுக்கு விஷாலிடம் பிடித்த விஷயம் என்ன?’’


‘‘அவரோடு நான் அதிகம் பழகியதில்லை... பழகாதவர்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?’’

‘‘விஷால் - வரலெட்சுமி இருவரும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் - என்று தொடர்ச்சியாக செய்திகள் வெளிவருகிறதே?’’

‘‘அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது... என் மகளிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால்...? என் மகள் மேஜர்... அவர் என்ன முடிவையும் எடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அப்பாவிடம்  ஆலோசனை கேட்கலாம். அப்படிக் கேட்கும்போது நான் அறிவுரைகள் கொடுக்கலாம். அவ்வளவுதான் என்னுடைய கட்டம். அதன்பிறகு முடிவெடுக்கக்கூடியதெல்லாம் அவர்களது விருப்பம்!’’