Published:Updated:

“புயலுக்கு நன்றி!”

சா.ஜெ.முகில் தங்கம் - படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

டிக்க வந்த எட்டு ஆண்டுகளில் 17 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளில் சொந்தக்குரலில் பேசியிருக்கிறார், ‘காலா’வில் ‘புயலாக’ வந்த அஞ்சலி பாட்டில்.

“சர்வதேச விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள். விருதுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“விருதுகள் பணமாக இருந்தால், நன்றாக இருக்கும் (சிரிக்கிறார்). நாம் நன்றாகத்தான் செய்கிறோம் என்ற உணர்வினைக் கொடுக்கக்கூடியவை விருதுகள். ஆனால், அவை மட்டுமே என் இலக்கு இல்லை. தேசிய விருது பெற்றபின் பலரும் நான் சீரியஸான ரோல்களில் மட்டுமே நடிப்பேன் என முன்முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால், நான் எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் செய்ய விரும்புகிறேன். நான் ‘காலா’வில் நடிக்க முடிவு செய்தபோது ‘நீ கமர்ஷியல் படமெல்லாம் பண்ணுவாயா?’ என, பலர் ஆச்சர்யமாகக் கேட்டனர். எனக்கு அப்படி வேறுபாடுக ளெல்லாம் இல்லை. எனக்குப் பிடித்த கதைகளை நான் தேர்ந்தெடுக்கிறேன்.” 

“புயலுக்கு நன்றி!”

“ ‘சக்ரவியூஹா’, ‘மிஸஸ் ஸ்கூட்டர்’, ‘நியூட்டன்’ என உங்களுடைய முந்தைய படங்களில் தைரியமான கதாபாத்திரங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்கள். ஆனால், ‘காலா’ போன்ற வணிகத் திரைப்படத்தின் ‘புயல்’ கதாபாத்திரம்தான் மக்களிடையே உங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நல்ல விஷயம்தான். ‘காலா’விற்குப் பிறகு இதற்கு முன் நான் நடித்த படங்களைத் தேடிப் பார்க்கின்றனர். எனது முதல் படமான ‘டெல்லி இன் எ டே’ திரைப்படத்தில் இருந்தே என்னைத் தொடர்பவர்களும் இருக்கிறார்கள். மிகக்குறைந்த, ஆனால், வலுவான ரசிகர்களை நான் கொண்டிருக்கிறேன். ‘புயல்’ கதாபாத்திரத்திற்காக நான் கடமைப்பட்டுள்ளேன். வணிக சினிமாவில் இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. வணிக சினிமாக்களில்கூட நல்ல கதைகள் கொண்ட, கருத்துகள் கொண்ட திரைப்படங்கள் வருவதுதான் ஆரோக்கியமான விஷயம்.”

“ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் எந்த மாதிரி தயாரிப்பை மேற்கொள்கிறீர்கள்? தனிப்பட்ட பயிற்சிகள்?”

“அனைத்து கதாபாத்திரங்களும் சவாலானதுதான். பல்வேறு மொழிகளில் நடிப்பது இன்னும் பெரிய சவால். மெத்தட் ஆக்டிங் (Method Acting) என எதையும் பின்பற்றுவதில்லை. ஆனால், எனக்கே உரிய தயாரிப்புகள் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் நான் செய்வேன். கதாபாத்திரம் என்ன உணவு சாப்பிடும் என்பது முதற்கொண்டு தயாரிப்பில் அடங்கும். நான் அந்தந்தக் கதாபாத்திரத்திற்கு உரிய ஆடைகளைப் படப்பிடிப்பிற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே அணியத் தொடங்கிவிடுவேன். ஒருவேளை, கதையானது பிரச்னை சம்பந்தமானது என்றால், அதுகுறித்து வாசிப்பேன். கதைக்கு நெருக்கமான நிஜ மனிதர்களைச் சந்திப்பேன். அவர்களுடன் பழகுவேன். சிங்களத் திரைப்படமான ‘வித் யூ வித் அவுட் யூ’வில் நடிக்கும்போது, இலங்கையில் உள்ள தமிழ்ப் பகுதியில்தான் அதிகம் சுற்றிக்கொண்டிருந்தேன். அங்குள்ள பெண்கள் எப்படிப் பேசுகிறார்கள், எப்படிப் பூ வைத்திருக்கிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள் எனச் சின்ன சின்ன விஷயங்களையும் நுணுக்கமாக கவனித்தேன்.”

“பாலிவுட்டில் உங்களுடைய நிறத்தை வைத்து, உங்களைத் தென்னிந்தியர் என்று நினைத்திருக்கிறார்களா?”

“சிலர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று நினைத்தனர், சிலர் பெங்காலி என்று நினைத்திருக்கிறார்கள், சிங்களத் திரைப்படத்தில் நடித்தபோது இலங்கையைச் சேர்ந்தவர் என்றுகூட நினைத்தார்கள். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்கூட அவர்கள் சொல்லும் அழகான பெண்கள் இருக்கிறார்கள். நிறம் மற்றும் இடம் குறித்த மிக மட்டமான பொதுப்படுத்திய பார்வை இது. ஆரிய திராவிடப் போராட்டம்போல இது மிகப் பழைய பார்வை.” 

“ஆரியம், திராவிடம் பற்றித் தெரியுமா?”

“ ‘காலா’ அதைப் பற்றித்தானே பேசுகிறது. அது பெரிய விஷயம். பேசினால் ஒருநாள் போதாது.”

“புயலுக்கு நன்றி!”

“நீங்கள் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்,  நிறைய மொழிகளைக் கற்றுக்கொள்வது எதனால்?”

“ஒவ்வொரு மொழியும் தனித்துவமானது. மக்களையும் அவர்களது பண்பாட்டையும் புரிந்துகொள்ள, அவர்களது மொழி நமக்குத் தெரியவேண்டும். குறிப்பிட்ட பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், சிந்தனை, கலாசாரம்... இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள மொழி அவசியம். எனக்கு இவற்றைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் அதிகம். அதனால்தான் எல்லா மொழிகளிலும் நானே டப்பிங் பேசுகிறேன். தமிழ் அழகான மொழி. நிறைய கவிதைகள், கதைகள், காப்பியங்கள் தமிழில் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டி ருக்கிறேன்.” 

“ ‘காலா’ திரைப்படத்தில் நடித்த அனுபவம்?” 

“மணிகண்டன், ஈஸ்வரி அக்கா எல்லோரும் என்னைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள். என் நடிப்பைப் பாராட்டினார்கள். ‘வித் யூ வித் அவுட் யூ’ படத்தை ரஜினி சாரிடம் கொடுத்தேன். அவரும் பார்த்துவிட்டு அதைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தார். ‘காலா’ அனுபவமே சந்தோஷமானது. என் முதல் காட்சியை ரஜினி சார் பயங்கரமாகப் பாராட்டினார். மொத்தத்தில் நல்ல அனுபவம்.”

“ ‘காலா’வின் பெண் கதாபாத்திரங்கள் பற்றி நிறைய பேசப்படுகிறது, கதை கேட்கும்போதே இதை எதிர்பார்த்தீர்களா?”

“நிச்சயமாகத் தெரியவில்லை. என் போர்ஷனைத் தவிர, மற்ற பெண் கதாபாத்திரங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ளவில்லை. ஈஸ்வரி அக்கா நடிக்கும்போது நான் ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ஈஸ்வரி அக்கா மிகச்சிறந்த நடிகை. ரஞ்சித் அவர் படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களைச் சித்திரித்து வருகிறார். அது மிக முக்கியமான விஷயம். சினிமாக்களில் பெண்கள் என்றாலே கவர்ச்சியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், நம் அம்மாவும் அக்காவும் அப்படியா இருக்கிறார்கள்? அவர்கள் ஆண்களுக்கு இணையாகப் போராடுகிறார்கள். உழைக்கிறார்கள். அப்புறம் திரையில் மட்டும் ஏன் இந்த வித்தியாசம்? நிஜ வாழ்க்கையின் பெண்களைத் திரையில் காட்ட வேண்டும். புயல், சரினா, செல்வி கதாபாத்திரங்களில் ரஞ்சித் அதைச் சாதித்திருக்கிறார்.”

“தமிழில் எந்த நடிகர்களோடு நடிக்க விரும்புகிறீர்கள்?”


“பலர் இருக்கிறார்கள். முக்கியமாக, விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும். அவருடைய படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், நண்பர்கள் பலரும் அவரைப் பற்றி, அவருடைய வித்தியாசமான படத்தேர்வுகள் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு