Published:Updated:

அன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா? #BohemianRhapsody படம் எப்படி?

`குயின்' பேண்டு மற்றும் அதன் லீட் சிங்கர் ஃப்ரெட்டி மெர்குரியின் வாழ்க்கைக் கதையாக வெளியாகியிருக்கும் #BohemianRhapsody படம் எப்படி?

அன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா? #BohemianRhapsody படம் எப்படி?
அன்று ரசிகர்களைப் பாட வைத்தவன், இன்று ரசிகர்களை ஈர்க்கிறானா? #BohemianRhapsody படம் எப்படி?

எல்லாக் கலைஞர்களுக்கும் பெரும்பாலும் ஒரே ஃபிளாஷ்பேக்தான். போராட்டம் - வெற்றி - வீழ்ச்சி - எழுச்சி! இதன் தொடர்ச்சியாக மரணம் அவர்களை ஆட்கொள்ளும் முன்னரே, அவர்களின் கலைப் படைப்புகள் சாகாவரம் பெற்றிருக்கும். அதை அந்தக் கலைஞனுக்கும் சற்றே பகிர்ந்து கொடுத்திருக்கும். 1970-களின் தொடக்கத்திலிருந்து கோலோச்சத் தொடங்கிய புகழ்பெற்ற ராக் பேண்டான 'குயின்'னின் முதன்மை பாடகர் ஃப்ரெட்டி மெர்குரியின் வாழ்க்கையும், ஏன் அந்தக் 'குயின்' பேண்டின் வரலாறுமே இதற்கு விதிவிலக்கல்ல. 'குயின்' பேண்ட் மற்றும் ஃப்ரெட்டி மெர்குரியின் வாழ்க்கைக் கதையாக வெளியாகியிருக்கும் #BohemianRhapsody படம் எப்படி?

இந்தியாவைச் சேர்ந்த பார்சி இனத் தம்பதியின் மகனான ஃபாரூக், ராக் இசையில் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். பிரிட்டன் காலேஜ் நண்பர்களின் 'ஸ்மைல்' பேண்டை 'குயின்' என்று மாற்றி அதில் லீட் சிங்கராக இணைகிறான். தன் பெயரையும் ஃப்ரெட்டி மெர்குரி என மாற்றிக்கொள்கிறான். அடுத்து என்ன, அடுத்து என்ன, இசையில் வித்தியாசமாக என்னவெல்லாம் செய்யலாம் எனத் துடிப்புடன் ஓடும் அந்த இளைஞர் குழுவுக்கு நடுவில் பிரச்னையாக நிற்கிறது ஃப்ரெட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை. துரோகம், பிரிவு, தோல்வி எனப் பல வகையான எமோஷன்களைக் கடத்தி, கடைசி அரை மணிநேரத்தில் நெகிழச் செய்து, நம்மையும் ஃப்ரெட்டியின் ரசிகனாக, குயினின் ரசிகனாக மாற்றி வெளியே அனுப்புகிறது இந்த #BohemianRhapsody.

இருத்தலியல் பிரச்னைகள், போராடிக் கிடைக்கும் வெற்றி, புகழ்; துரோகத்தால், கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் வீழ்ச்சி; தன்னை அறிந்து கொண்டதால் ஏற்படும் குழப்பம்; மீண்டும் இணையும் நட்பு... எனப் பல அத்தியாயங்களாக ஃபரூக் புல்சரா எனும் ஃப்ரெட்டி மெர்குரியின் வாழ்க்கை திரையில் விரிகிறது. தெத்துப்பல் அழகனாக மனங்களைக் கவர்ந்த ஃப்ரெட்டியை அப்படியே நகலெடுத்து ஒவ்வொரு காட்சிகளிலும் ஈர்க்கிறார் 'Mr.Robot' புகழ் ரமி மாலிக். ஃப்ரெட்டிக்கே உரிய விநோத உடல்மொழி, திமிர் மற்றும் எள்ளல் நிறைந்த தொனியைத் தாண்டி, தன் படைப்பின் மேல் அதீத நம்பிக்கை கொண்டிருப்பது, ரசிகர்களின் பல்ஸ் அறிந்து பாடல்கள் கொடுப்பது, அவர்களை முழுவதுமாக நம்புவது என ஃப்ரெட்டியின் அகநிலையை அப்படியே நமக்குக் கடத்தியிருக்கிறார். ஆரம்பக் காலத்தில் தன் பாலின ஈர்ப்பு குறித்து குழப்பத்தில் இருந்த ஃப்ரெட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை எந்தவித சமரசமும் இன்றி, அதே சமயம் விரசமின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்கர் கதவு உங்களுக்காகத் திறக்க அதிக வாய்ப்புகள் உண்டு ரமி மாலிக்.

பயோகிராபிக்கல் படம் எடுப்பது சற்றே சவாலான விஷயம்தான். காரணம், சம்பந்தப்பட்ட பிரபலத்தின் வாழ்க்கைக் கதையை அவர்களின் விக்கிப்பீடியா பக்கத்தைப் படித்துக்கூட நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதுவும் 'குயின்' பேண்ட் மற்றும் 'ஃப்ரெட்டி மெர்குரி' போன்ற பிரபலக் கதை என்றவுடன் இன்னமுமே சவால்கள் அதிகம். 'குயின்' ரசிகர்களையும் ஈர்க்க வேண்டும், அதே சமயம் புதிதாக 'குயின்' உலகத்துக்கு வருபவர்களையும் வரவேற்க வேண்டும். இந்த இரண்டையும் மிகுந்த சிரமத்துடன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் 'எக்ஸ்-மென்' புகழ் இயக்குநர் ப்ரையன் சிங்கர் மற்றும் குழுவினர். அதுவும் குயின் பேண்டு 1985-ம் ஆண்டு லைவாக கலந்துகொண்ட 'Live Aid' கான்செர்ட்டை அவ்வளவு தத்ரூபமாகப் படம்பிடித்து மீண்டும் பழைய 'குயின்' ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளனர். எந்த அளவுக்குத் துல்லியம் என்றால், நிஜத்தில் ஃப்ரெட்டி பியானோ வாசிக்கையில் அதன்மேல் இருந்த பெப்ஸி கப்புகளைக்கூட விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் படத்தில் இணைத்திருக்கிறார் கலை இயக்குநர்.

முதல் ஆல்பம் போட முடிவெடுத்தவுடன் அதை நிகழ்த்திக்காட்ட நண்பர்கள் தயங்காமல் செய்யும் அந்தக் காரியம், குயின் பேண்டு மற்றும் குடும்பத்துடன் ஃப்ரெட்டி தன் பிறந்தநாளைக் கொண்டாடுவது, 'போஹிமியன் ரப்ஸோடி' என்ற அந்த ஆறு நிமிடப் பாடல் உருவான விதம், தனக்கு இருக்கும் பிரச்னையைப் புரிந்துகொண்டு ஃப்ரெட்டி மீண்டும் தன் 'குயின்' பேண்டுடன் இணைவதற்குப் பேச்சுவார்த்தை நிகழ்த்தும் அந்தக் காட்சி, லைவ் கான்செர்ட்டுக்கு முன்பு தன் நண்பனுடன் (?) தன் வீட்டுக்குச் சென்று தன் தந்தையுடன் ஃப்ரெட்டி உரையாடுவது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அந்த லைவ் கான்செர்ட்... எனப் படத்தில் நெகிழ்ச்சியானத் தருணங்கள் ஏராளம்! முக்கியமாக, ஒரு பிரபலம் என்றவுடன் அவர் பெட்ரூமுக்குள் யாருடன் எல்லாம் இருக்கிறார் என்று அறிய முற்படும் மீடியா மற்றும் ரசிகர்களை சில காட்சிகளில் ஓப்பனாக சாடியிருக்கிறது படம். கோபத்துடன் ஃப்ரெட்டி பதிலளிக்கும் அந்தப் பிரஸ் மீட் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

ஃப்ரெட்டியின் 'குயின்' நண்பர்களாக வரும் அனைவரும் நிஜ மனிதர்களுடன் அச்சு அசலாகப் பொருந்துகிறார்கள். ஃப்ரெட்டியின் முன்னாள் காதலியான மேரி ஆஸ்டின், லாயராக இருந்துவிட்டு குயின் பேண்டின் மேனேஜராக மாறும் ஜிம் பீச், முன்னாள் மேனேஜர் அய்டன் கில்லன் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளனர். நியூட்டன் தாமஸ் சிகலின் ஒளிப்பதிவு பிரமாண்ட கான்செர்ட் மேடைகள், ரசிகர் கூட்டம், வீட்டின் சிறு சிறு அறைகள் எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு பீரியட் ஃபிலிம் என்பதை மட்டும் இன்னமும் சற்று டீட்டெய்லிங் செய்து காட்டியிருக்கலாமே?

ரமி மாலிக்குக்கு அடுத்ததாகப் படத்தின் மிகப்பெரிய பலம் ஏற்கெனவே உலகின் பல மூலைகளுக்கும் சென்றுவிட்ட குயின் பேண்டின் பாடல்கள். படத்தில் அரங்கேறும் நிகழ்வுகளுக்கு ஏற்ப அந்தந்த பாடல்களும் அழகாகப் பொருந்திப்போகின்றன. இது உண்மைச் சம்பவங்கள் மற்றும் தற்போது எழுதப்பட்ட புதிய திரைக்கதை இரண்டும் நிகழ்த்தும் மாயாஜாலம் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, Bohemian Rhapsody, We will rock you, Another one bites the dust, Love of my life, Ay-Oh, We are the Champions போன்ற புகழ்பெற்ற பாடல்கள் திரையில் வரும்போது 'குயின்' பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்களின் விசிலும் கரவொலியும் திரையரங்கை நிறைக்கின்றன. காலம் கடந்தும் ஈர்ப்பை ஏற்படுத்துவதில் நல்லதொரு இசைக்கு என்றுமே ஒரு தனி இடமுண்டு. 'குயின்' உருவாக்கிய இசையாலான சாம்ராஜ்ஜியம் எத்தனை காலங்கடந்தாலும் நீடிக்கும் வகை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்கு இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பே ஒரு சாட்சி! இறுதியில் ஃப்ரெட்டியின் மரணச் செய்தி வெறும் சொற்களாகத் திரையை ஆக்கிரமித்தாலும் நாமும் சற்று கலங்கித்தான் போகிறோம்.

PG ரேட்டிங்கை மனதில் வைத்துக்கொண்டு உண்மைக் கதையில் நிறைய காம்ப்ரமைஸ் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தன்பாலின ஈர்ப்பு குறித்து ஓப்பனாகப் பேசினாலும் ஃப்ரெட்டியின் பிற இருண்டப் பக்கங்களைக் காட்ட மறுக்கிறது படம். அவரின் போதை மருந்து பழக்கத்தைக்கூட ஒரே காட்சியில் ஜஸ்ட் லைக்தட் கடந்துவிடுகிறது. படம் பேண்டின் கதையாகத் தொடங்கி பின் ஃப்ரெட்டியின் கதையாக மட்டுமே பிற்பாதியில் விரிகிறது. இப்படி ஆங்காங்கே படத்தில் சில முரண்கள். அதிலும், தன் பார்ட்னரின் சொல்லுக்கு மயங்கி ஃப்ரெட்டி தன் குயின் பேண்டை விட்டுவிட்டு தனியாக ஆல்பம் போட முயலும் அந்த அத்தியாயம் சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. அந்தத் துரோகக் காண்டத்தில் இன்னமும் சற்று வேகத்தைக் கூட்டியிருக்கலாம்.

ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்டு, ஃப்ரெட்டி மற்றும் குயினின் ரசிகனாக இல்லாத யார் வேண்டுமானாலும் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்பதால் இந்த 'Bohemian Rhapsody'யை கொண்டாட வேண்டியது அவசியமாகிறது. ஒரே ஓர் எச்சரிக்கை, இப்படியான ஒரு மனநிலையுடன் நீங்கள் படத்துக்குச் சென்றாலும், வெளியே வருகையில் நிச்சயம் ஃப்ரெட்டி மற்றும் குயினின் ரசிகனாக மட்டுமே வெளியே வருவீர்கள். அடுத்த 10 நிமிடங்களில் யூடியூபில் இவர்களின் ஆல்பங்களைத் தேடத் தொடங்கியிருப்பீர்கள். அதுதான் ஃப்ரெட்டி, அதுதான் குயின்!