பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்!

கொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்!

சுஜிதா சென் - படம்: ஜி.வெங்கட்ராம்

மிழ் சினிமாவின் யதார்த்த முகம் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தக் காமுக்காபட்டி அன்புச்செல்வியின் கால்ஷீட் டைரியில், இப்போது மணிரத்னம், கெளதம் மேனன், வெற்றி மாறன், ஹரி... என்று மாஸ் இயக்குநர்களின் படங்கள்!

“ `சாமி-2’ படத்தில் திரிஷாவுக்கு பதிலா நடிச்சிருக்கீங்க. எப்படி இருந்தது?”

“அவங்களுக்குப் பதிலா என்னை நடிக்கக் கேட்டப்போ, ‘இதுக்கு திரிஷாதான் கரெக்ட். மக்கள் மத்தியில் அவங்க கதாபாத்திரம் நல்லா பதிஞ்சிடுச்சு. நிச்சயம் நான் செட் ஆக மாட்டேன்’னு ஹரி சார்ட்ட சொன்னேன். அதுக்கு அவர், ‘எங்களுக்கு பவர் ஃபுல்லான ஒரு ஹீரோயின் வேணும். அதுக்கு நீங்க சரியா இருப்பீங்க’னு சொன்னார். தவிர, ஹரி சாரோட சேர்ந்து வேலை பார்க்கணும் என்பது ரொம்பநாள் ஆசை. ஏன்னா, கதை சார்ந்த படங்களைத் தவிர ஒரு கமர்ஷியல் படத்துலகூட நான் நடிச்சதில்லை. அதையும் முயற்சி பண்ணணும்னு தோணினதால இதில் நடிக்க ஒப்புக்கிட்டேன்.”

கொஞ்சம் கமர்ஷியல்... கொஞ்சம் மாடர்ன்... கொஞ்சம் கிரிக்கெட்!

“விக்ரமோட `துருவநட்சத்திரம்’ படத்துலயும் இருக்கீங்களே... கௌதம் மேனன் என்ன சொல்றார்?”

“கௌதம் சார் படங்கள்ல பெண் கதாபாத்திரங்களுக்குக்கூட அதிக முக்கியத்துவம் இருக்கும். கிராமத்துக் கதாபாத்திரங்கள்ல அதிகம் நடிச்சிட்டிருந்த எனக்கு க்ளாஸியான ஹீரோயினா நடிக்கிறது ரொம்பப் புதுசா இருந்துச்சு. ஆனா அவர் சொல்லிக்கொடுத்த மாதிரி நான் நடிக்கலை. என் ஸ்டைல்லதான் நடிச்சேன். அப்ப, ‘இது என் ஸ்டைல் இல்லை. ஆனா, நீங்க நடிச்சது எனக்குப் பிடிச்சிருந்துச்சு’னு சொன்னார்.”

“மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ எப்படிப் போகுது?”

“மணி சார் நான் நடிச்சதைப் பார்த்துட்டு ஒண்ணுமே சொல்லலை. முதல் டேக்லேயே ஓகே ஆச்சு. அப்போ நான், ‘சார், ரீடேக் போகலையா’னு கேட்டேன். ‘நீங்க சூப்பரா நடிச்சுட்டீங்க. நான் ஏன் இன்னொரு டேக் போகணும்’னு கேட்டார். சாரோட வேலை பார்க்கறதுன்னா எனக்கு பயம். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் இன்னும் பயத்தை அதிகப்படுத்திட்டாங்க. ஆனா, என் கரியர்ல மணி சார்கூட சேர்ந்து வேலை பார்க்கிறதுதான் ரொம்ப ஈஸியா இருந்துச்சு.”

“ `கனா’ படத்துல நீங்க கிரிக்கெட் பிளேயர். பயிற்சிகள் எப்படிப் போச்சு?”

“இந்தப் படத்துக்காக ரொம்ப நாளா ஹீரோயின் தேடி, கடைசியில என்னைத் தேர்ந்தெடுத்தாங்க. இதில் நடிக்க எனக்கு 65 நாள்கள் கிரிக்கெட் பயிற்சிகள் கொடுத்தாங்க. உலகத்துலேயே பெண்கள் கிரிக்கெட்டை மையமா வெச்சுப் படங்கள் எடுக்கப்பட்டது இல்லை. இப்படி ஒரு படம் நடிச்சிருக்கோம்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு.  எனக்குப் பத்து வயசு இருக்கும்போதே என் அப்பா இறந்துட்டார். நான் நடிச்ச படங்கள்லகூட அப்பா சென்டிமென்ட் அதிகமா இருந்ததில்லை. ‘கனா’வில் சத்யராஜ் சார் எனக்கு அப்பாவா நடிச்சிருக்கார். அப்பா இருந்திருந்தா இப்படித்தான் இருந்திருப்பார்னு நெனைக்கிறேன். அவ்ளோ அட்டாச் ஆயிட்டேன்.”

“வடசென்னை’ படத்தில் தனுஷுடன் ஜோடி. வெற்றிமாறன் டைரக்ஷன். அந்த அனுபவம் சொல்லுங்க?”

“நல்லா இறங்கி வேலை செய்யற ஊர்ப் பொண்ணு கேரக்டர். தனுஷ் சார்கூட முதல் தடவை நடிச்சிருக்கேன். இப்போ வரை தமிழ் சினிமாவுல இப்படியொரு கதாபாத்திரம் வந்திருக்கானு கேட்டா, நிச்சயமா இல்லைனு ஆணித்தரமா சொல்லுவேன்.”

“ `நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியலே இல்லை’னு சில பேர் சொன்னதா உங்க ஆரம்பகாலப் பேட்டிகள்ல குறிப்பிட்டிருக்கீங்க. இப்போ பெரிய படங்கள் கமிட்டாகியிருக்கீங்க, இந்த மாற்றம் எப்படி இருக்கு?”

“என் முதல் படத்துல என்னைப் பார்க்கும்போது ரொம்பக் கேவலமா இருந்தேன். போகப் போகத்தான் சினிமாவுல என்னை நானே வளர்த்துக்கிறது எப்படினு தெரிஞ்சுகிட்டேன். ஆனா, இப்போ வர்ற ஹீரோயின்கள், வரும்போதே டிரெஸ்ஸிங் சென்ஸ், திறமை, அறிவுனு சூப்பரா வர்றாங்க. கடின உழைப்பு இருக்கணும். கத்துக்கிற ஆர்வம் அதிகமா இருக்கணும். இதெல்லாம் இருந்தாலே போதும். யார் வேணும்னாலும் நல்ல நிலைமைக்கு வரலாம்.”