Published:Updated:

"அது 10... இது 90..!" - எதைச் சொல்கிறார், மிஷ்கின்?

"அது 10... இது 90..!" - எதைச் சொல்கிறார், மிஷ்கின்?
"அது 10... இது 90..!" - எதைச் சொல்கிறார், மிஷ்கின்?

நடித்துக்கொண்டிருக்கும் படங்கள், இயக்கிக்கொண்டிருக்கும் 'சைக்கோ' திரைப்படம், அரசியல், சமூகம்... எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநர் மிஷ்கின்.

கொஞ்சம் சினிமா தெரிந்து, நிறைய பொறுமை இருந்தால்... இயக்குநர் மிஷ்கினிடம் உரையாடிக்கொண்டே இருக்கலாம். இயக்குநராக வலம் வந்தவர், இப்போது நடிகராகவும் பிஸி. 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் நடித்திருக்கிறார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் அற்புதம் என்ற ஃபாதிரியார் கேரக்டரிலும், சுயாதீனத் திரைப்படமான 'கட்டுமரம்' படத்தில் மீனவராகவும் நடித்திருக்கிறார், மிஷ்கின். 

"பேஸ்புக், டிவிட்டர்ல இல்லை. பேப்பர், டிவி பார்க்கமாட்டீங்க. நாட்டு நடப்புகளை வேறென்ன வழிகள்ல தெரிஞ்சுக்குவீங்க?" 

"எனக்கு இந்த சமூகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் நண்பர்களா இருக்காங்க. பத்து உதவி இயக்குநர்கள் இருக்காங்க. எந்த ஊருக்குப் போனாலும் என்னை யாருன்னு தெரியாத பத்து பேரிடம் நானே போய் பேசுவேன். அவங்க கதைகளைக் கேட்பேன். தொழில் பற்றி, குழந்தைகளைப் பற்றி பேசுவேன். அதுபோக, காத்து வழியே வதந்திகள் வருமே... அதையும் கேட்டுக்குவேன்." 

"அப்போ, கண்டிப்பா 3000 கோடிக்கு சிலை வெச்ச விஷயமும் தெரிஞ்சிருக்கும், பல நூறு அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட விஷயமும் தெரிஞ்சிருக்கும்.." 

"நிச்சயம் தெரியும். இதுல எது சரி, எது தேவைனு அவங்கவங்க மனசாட்சிக்குத் தெரியும். இங்கே தாழ்வுகள்தான் நிறைய இருக்கு. அதை மூடணும். உயரமான சிலைகளெல்லாம் அதுக்குப் பிறகுதான். பட்டேல் இருந்திருந்தா, நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்." 

"சினிமாவுக்கு வருவோம். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்துல நடிச்சிருக்கீங்க, கதை எழுதியிருக்கீங்க. விவாதத்தில் அவருக்கும் உங்களுக்குமான உரையாடல் எப்படி இருந்தது?" 

"இந்தப் படம் ஒரு நடிகரா எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுக்கும்னு உறுதியா சொல்வேன். ஏன்னா, தியாகராஜன் அப்படி ஒரு நேர்த்தியான இயக்குநர். இப்படி ஒரு பரபரப்பான இயக்குநரை நான் பார்த்ததில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல யாரைப் பத்தியும் வதந்தி பேசாத, நல்ல மனுஷன். தமிழ் சினிமாவின் பெரும் இயக்குநர்கள் பட்டியலில் இவன் பெயரும் இருக்கும். 150 ரூபாய் கொடுத்து தியேட்டருக்கு வர்ற ஆடியன்ஸை மயக்கிப் போடுற வித்தை அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. இந்தப் படம் மூலமா, எல்லோரையும் மயக்கிடுவான்.

இந்தப் படத்துக்காக என்கிட்ட வர்றப்போ சில வரிகளைப் படிச்சுக் காட்டி, 'இப்படி ஒரு கதை எழுதிக் கொடுங்க'னு சொன்னான், எழுதிக் கொடுத்தேன். அதை அப்படியே பயன்படுத்தாம, உன் இஷ்டத்துக்கு மாத்திக்கோனு சொன்னேன். ஏன்னா, 'கதவைத் திறந்து ஒருத்தன் உள்ளே வந்தான்'னு நான் எழுதலாம். வேணும்னா, மெதுவா வந்தான் அல்லது வேகமா வந்தான்னு குறிப்பிடலாம். ஆனா, இந்த வரியை ஒரு இயக்குநர் நூறு விதமா எடுக்க முடியும். எழுத்தாளருக்கும் இயக்குநருக்குமான வித்தியாசம் இது. தவிர, ஒரு எழுத்தாளரா நான் எதையாவது எழுதிட்டா, அடுத்த நொடி எனக்குள்ள இருக்கிற எழுத்தாளன் தற்கொலை பண்ணிக்குவான். ஏன்னா, அதுக்குப் பிறகு நான் ஒரு இயக்குநரா மாறணும். சமயத்துல நான் எழுதுன காட்சியையே, இயக்குநரா படிக்கும்போது, 'என்னடா மயிரு மாதிரி எழுதியிருக்க?'னு எனக்கு நானே திட்டியிருக்கேன். தியாகராஜனும் அப்படித்தான். ஆக்சுவலா, இந்தப் படத்துக்காக எழுதுனதை நானும் மறந்துட்டேன், படமாக்கிய அவனும் மறந்துட்டான்."   

" 'சைக்கோ' படம் மூலமா மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கீங்க... மியூசிகல் ட்ரீட் எப்படி இருக்கும்?"  

"சின்ன வயசுல இருந்து இப்போவரைக்கும் இசையால் என்னை ஆச்சரியப்படுத்திக்கிட்டே இருக்கார் இளையராஜா. அவர்கூட எனக்கு இது மூணாவது படம். நான் சொல்றேன்... கடந்த பத்து வருடத்துல இந்தப் படத்துல வர்ற மாதிரி காதல் பாடலை நீங்க கேட்டிருக்கவே மாட்டீங்க. எனக்கு அவர் தனி இடம் கொடுத்திருக்கார். 'understanding'ங்கிற வார்த்தைக்கு, 'standing under'னு அர்த்தம் சொல்வாங்க. நான் அப்படித்தான் ராஜா சார் காலுக்குப் பக்கத்துல உட்கார்ந்து வேலை பார்க்கிறேன். இன்னும் நூறு வருடம் கழிச்சு, எல்லோரும் ராஜா சார் இசையைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்கப்போறாங்க. மாமேதைனு அவரைத்தான் புகழப்போறாங்க. ஏன்னா, வருங்கால சந்ததியினருக்கு அவர் ஒரு ஆலமரமா படர்ந்து நிற்கிறார். இனி வரும் இசையமைப்பாளர்கள் யாரும் அவரோட இன்ஸ்பிரேஷன் இல்லாம மியூசிக் பண்ணவே முடியாது. பிப்ரவரி காதலர்கள் காலம்ல... அப்போ சிங்கிள் டிராக் ரிலீஸ் பண்ணப்போறோம்."

"டைட்டில், சைக்கோ. பாடல், காதலர்களுக்காக... எதுவும் குறியீடா?

"காதலும் ஒரு அதீததமான உணர்ச்சியின் வெளிப்பாடுதானே!. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது இதுவரைக்கும் என்னோட லைஃப்ல நடக்காத விஷயங்களெல்லாம் நடக்குது. பூக்கள் தூவுது. திடீர்னு பறக்குறேன். அதனால, காதலும் ஒரு மெல்லிய சைக்கோ பேத்தாலஜினுதான் நினைக்கிறேன்." 

"படம் எதைப் பற்றி பேசப்போகுது?"  

"குழந்தைகளை எப்படிப் பார்த்துக்கணும், அன்பு செலுத்தணும், அவங்க திறமையை எப்படிக் கண்டுபிடிக்கணும்னு சொல்லியிருக்கேன். ஒரு மதக் கலவரம் நடக்குதுனு வெச்சுக்கோங்க. இங்கே இருந்து கெளம்பி கலவரம் நடக்குற இடத்துல இருக்கிற ஒரு குழந்தையை நான் கொன்னா, அதுவும் ஒருவகை மனப் பிறழ்வுதான். என் மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவங்களுக்குள்ள இருக்கிற காதலைப் பார்க்காம, கொலை பண்றது ஒருவகை மனப் பிறழ்வுதான். பக்கத்துல வீட்டுல புருஷன், தன் பொண்டாட்டியைப் பல வருடமா அடிச்சுக்கிட்டே இருக்கான்னா, அவனும் ஒருவகை சைக்கோதான். எல்லோருடைய மூளையையும் ஸ்கேன் பண்ற வசதி வந்துட்டா, எல்லோருமே சைக்கோ பேத்தாலஜியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியும். அப்படி ஒரு சைக்கோகிட்ட ரெண்டுபேர் மாட்டிக்கிறாங்க.. அவங்க வாழ்க்கை என்னாச்சு, சைக்கோ பேத்தாலஜியால பாதிக்கப்பட்டவன் என்ன ஆனான்னு சொல்லியிருக்கேன்." 

"இந்தப் படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டதா ஒருத்தர் புகார் சொல்லியிருக்காரே?!"

"அந்தப் பையன் சொன்னதெல்லாம் உண்மைதான். ஏமாத்திட்டதா சொன்னதைத் தவிர! நான் அவரை ஏமாத்தலை. அவர்கிட்ட பணத்தை 'செக்'காதான் வாங்கியிருக்கேன். இயக்குநர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் திருப்பித் தர்றேன்னு உத்திரவாதம் கொடுத்திருக்கேன். ஆனா, அந்தப் பையன் என்னைத் திட்டியிருக்கான். நான் அவனுடைய உணர்வுகளை மதிக்கிறேன். அவருக்கு ஏற்பட்ட வருத்தம், உண்மையானது. என்ன ஒன்னு... தம்பி நிறைய பேசிட்டான். இந்தப் படத்துல அவர் நடிக்க முடியாம போனதுக்கு அவருக்கு மட்டுமில்ல, எனக்கும் வருத்தம். 'இந்தக் கதை எனக்கான சொன்னது'னு சொல்லியிருக்கான். அப்படியெல்லாம் உலகத்துல யாருக்காகவும் கதை எழுதமாட்டாங்க. அதனால, அவனோட இந்தக் குற்றச்சாட்டு குழந்தைத்தனமா இருந்தது, கஷ்டமா இருந்தது." 

"சமீபகாலத்துல பல திரைப் படைப்பாளிகளை சமூகப் போராட்டங்களிலும் பார்க்க முடியுது. மிஷ்கின் அப்படியான போராட்டங்களில் கலந்துக்கிறதில்லையே... ஏன்?"  

"நான் ஒரு கதை சொல்லி. சமூகத்தை உள்வாங்கி, அதை ஒரு கதையா சொல்லணும்னு நினைக்கிறேன். எனக்கும் கோபம் இருக்கு, உணர்வுகள் இருக்கு. ஆனா, அதைப் பேசவேண்டியது என் படைப்புகள் மூலமாதான்னு நினைக்கிறேன்.  தவிர, செல்போன், இன்டர்நெட், சோஷியல் மீடியா வந்ததுக்குப் பிறகு எல்லோரும் கருத்து சொல்லக் கிளம்பிட்டாங்க. வேற வழி இல்லைதான். சமூக வலைதளங்களில் நான் இல்லை. ஆனா, யூ-டியூப்ல என் பேட்டி வந்ததுனா, அதைப் பார்த்து என்னைப் பாராட்டுறாங்க, ரொம்பக் கேவலமா திட்டவும் செய்றாங்க. சமூக வளைதளங்களில் இப்படியான கெட்ட வார்த்தையைப் பதிவு பண்ண முடியும்னா, மனிதர்களுக்குள்ளே எவ்வளவு வன்மம் இருக்கு. எந்த நிகழ்வுக்கும் யோசிச்சுப் பார்த்துகூட பதில் சொல்ல முடியல. அதுக்குள்ள எல்லாமே மாறிடுது. டிஜிட்டல் யுகத்துல எல்லாமே சூப்பர் காஸிப். நடமாடும் டீக்கடைகள் மாதிரி... அதனால, நான் அங்கெல்லாம் கருத்து சொல்ல விரும்பலை. படமா வெளியாகிற என் கதைகள்ல சமூக அவலங்களைப் பேசுறேன். 'ஓநாயும் ஆட்டுகுட்டியும்' படத்துல அடிபட்டு கீழே கிடக்கிற ஒருத்தனைப் படமெடுத்து, பேஸ்புக்ல போடலாம்னு சொல்வான் ஒருத்தன். இதுமூலமா நான் சொல்ல வந்த கருத்து மக்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். தவிர, அங்கேயும் என் கருத்தை நான் திணிக்க மாட்டேன். தேவைப்படுற இடத்துல சமூகத்தைப் பிரதிபலிப்பேன். அதை நீங்க கேட்கலாம், சிந்திக்கலாம், இல்லை நிரகாரிக்கலாம்."

"விமர்சகர்கள் 'டெம்ப்ளேட்'னு சொல்ற விஷயங்களை, நீங்க உங்க ஸ்டைல்னு சொல்வீங்க. 'சைக்கோ'வுல என்னென்ன டெம்ப்ளேட்ஸ் வெச்சிருக்கீங்க?"

"என் படங்கள்ல மட்டுமில்ல பாக்யராஜ், பாரதிராஜா சார் எல்லோருக்குள்ளும் ஒரு டெம்ப்ளேட் இருந்தது, எனக்கும் இருக்கு. என் படங்கள் விஷூவல் மீடியம். சுலபமா புரியணும்னு அப்படிப் பண்ணுவேன். அந்த ரிப்பிடேஷனை என்னால தடுக்க முடியாது. சின்ன வயசுல நான் ஒரு பாட்டிகிட்ட இட்லி வாங்கி சாப்பிடுவேன். வீட்டுல வைக்கிற சாம்பாரைவிட அவங்க வைக்கிற சாம்பார் தன்ணியா இருக்கும். 28 வருடமா அந்த சட்னியோட சுவை மாறவே இல்லை, நானும் அதை வெறுக்கவும் இல்லை. அதுக்காக, 'உங்க சட்னி டெம்ப்ளேட்டா இருக்கு, மாத்துங்க'னு சொல்ல முடியுமா... சினிமாவும் அப்படித்தான். ஓவியர் யார்னு அவங்க வரைஞ்ச ஓவியங்களைப் பார்த்தே சொல்லிடலாம், அது அவனுடைய சுய வெளிப்பாடு. அதைத் தவிர்க்கவே முடியாது. தவிர்க்கச் சொல்லிட்டா, அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை. என் கதைகள் எல்லாம் என் குழந்தைகள். என் குழந்தைக்கு என் முகம்தான் இருக்கும்." 

"சினிமா குறித்து தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கீங்க... ஏதோ ஒரு சின்ன மாற்றத்தை நாம உணரலைனா, இந்த நீண்ட உரையாடல் தொடரவே வாய்ப்பில்லை. அப்படி, எதை உணர்ந்து இவ்வளவு தீவிரமா சினிமாவைப் பேசுறீங்க?" 

"சினிமாவே ஒரு உரையாடல் கலைதான். சமீபத்துல ஒரு படத்தை உதவி இயக்குநர்களோடு பார்த்தேன். எல்லோருக்கும் ஏன் இந்தக் காட்சி பிடிச்சது, அந்தக் காட்சி பிடிச்சதுனு கேட்டேன். ஏன்னா, அவங்களுக்கு ஒரு படத்தை எப்படிப் பார்க்கணும்னு சொல்லிக் கொடுப்பது என் கடமை. அதுல ஒருத்தன் கேமரா நல்லா இருக்குனு சொன்னான். ஏன்னு பத்து காரணம் கேட்டேன்... பதறிட்டான். நான் சொல்லிக் கொடுத்தேன். ஏன்னா, 24 கலைகளை அடக்கிய பெருங்கலை சினிமா. இந்த சினிமாவைத்தான் நாம மரியாதை இல்லாம பேசுறோம். இன்னும் 100 வருடத்துக்குப் பிறகு சினிமாதான் பிரதானமா இருக்கப்போகுது. ஏன்னா, எல்லோரும் கேமராவைத் தூக்கிக்கிட்டு படமெடுக்கக் கிளம்பிடுவாங்க. சினிமா ஒவ்வொரு நாளும் புதுசா உருவாகும். 

உரையாடல்தான், அதை இன்னும் புதுசாக்கும். என் மகளுக்கு கொஞ்சநாளைக்கு முன்னாடி 'ரெயின் மேக்கர்'ங்கிற கதையை அனுப்பி படிக்கச் சொன்னேன். ரொம்ப வருடமா அந்தக் கதையை நான் படிச்சுக்கிட்டு இருக்கேன். வாழ்க்கையில இந்தக் கதை உன்னைப் பத்திரமா பார்த்துக்கும்னு, என் பொண்ணுகிட்ட சொன்னேன். சமூகத்துக்கு முக்கியமா எதைச் சொல்லணுமோ, அதை சொல்லிடணும்.  என் ஆபிஸூக்கு இயக்குநர்கள் யாராவது வந்தா, சினிமாவைப் பற்றி மட்டும்தான் பேசுவோம். அப்போ, மனசுல இருக்கிறதெல்லாம் கொட்டித் தீர்ப்பேன். என் மொழி வளமை பெறும். என் சிந்தனை நீளமாகும். இதை ஒரு பயிற்சியாவே பண்றேன். ஒரு கதையை நூறு பேர்கிட்ட சொல்வேன். இதைத்தான் ராமும் பண்றான். அவனும் நானும், நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்குவோம். அவன் இப்போ நிறைய கவிதைகளைப் படிக்கிறான். அவன் படிச்சுட்டு, என்கிட்ட சொல்வான். உரையாடல் என்பது, தீராக் காதல். அது ஒரு திளைப்பு. நான் வாழ்றதுக்குக்கான அர்த்தம் எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபிடிக்க, நிறைய உரையாடலும், வாசிப்பும் தேவை. லீ போர்ட் என்ற கவிஞரைப் பற்றி படிச்சிருக்கேன். அவருக்கு நிலவு மீது அவ்வளவு காதல். நிலவு நகர்ந்துபோற இடத்துக்கெல்லாம் போய்க்கிட்டே இருக்கார். ஒருநாள் போதையில் நதியில் இருக்கும் நிலவைப் பிடிக்கப்போய், அந்த நதியிலேயே விழுந்து இறந்து போறார். ஒரு கவிஞனோட கனவு அது. இதையெல்லாம் படிக்கும்போது, சக மனிதன் மீது எனக்குக் கோபம் வரலை, சாதி கண்ணுல படலை. அவனை எனக்கு அடிமையா நடத்தப் பிடிக்கலை. இதையெல்லாம் படிச்சா, ஆணவக் கொலை பண்ணத் தோணாது. அதுக்கெல்லாம் டைம் கிடைக்காது. அதுக்கு உரையாடல்கள் அவசியம்."  

"இங்கே சில இயக்குநர்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மெனக்கெடுறாங்க. நீங்ககூட கலர் சிம்பாலிக்ஸ் எல்லாம் படத்துல பயன்படுத்துவீங்க. ரசிகர்கள் அதை கவனிக்காம கடக்கும்போது, உங்க மனநிலை என்னவா இருக்கும்?" 

"ஒரு கலைஞன் கலையைப் படைக்கிறான். அது படைக்கப்படும் காலத்தில் பணமாக்கப்படுது. அது நல்ல படைப்பா இருக்கும் பட்சத்தில் அடுத்த தலைமுறையும் அதைப் பற்றி பேசும். அதாவது, அது புதையல். அகிரா குரசோவாவின் மகன் ஒருமுறை, 'செவன் சாமுராய் மாதிரி ஒரு கமர்ஷியல் படம் எடுங்கப்பா'னு சொன்னானாம். அப்போ, குரசோவாவுக்கு 82 வயசு. 'அது கமர்ஷியல் படமில்லப்பா, கலைப் படைப்பு'னு சொன்னாராம், அகிரா. இங்கே எல்லாமே அப்படித்தான்! ஒரு படம் ஓடலைனா என்ன... இதோ, நான் எடுத்த 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தைப் பலரும் பாராட்டுனாங்க. படம் ஓடுச்சா?! இல்லை. ஆனா, நான் ஃபாரின் போகும்போது, மக்கள் என்னை அந்தப் படத்துக்காக ஆரத் தழுவிக்கிறாங்க. சென்னையில் ஒரு மாலில் மகளோட போயிருந்தப்போ, வயசான ஒரு அம்மா என் கையைப் புடிச்சுக்கிட்டு, 'மிஷ்கின்...  i tell u one thing. you don't earn money'னு சொன்னாங்க. 'i will do that'னு சொன்னேன். பெளத்தம்ல 'koan'னு ஒன்னு இருக்கு. அது ஒரு புதிர். பத்து வருடம் ஆனாலும், அதோட அர்த்தம் புரியாது. அந்தம்மா, எனக்குச் சொன்னது அப்படியானதுதான். 'நீ சம்பாதிக்கவே கூடாது'னு சொல்றாங்க. அதோட அர்த்தம் எனக்குப் புரிஞ்சது. என் மகளுக்கும் புரியும்னு நினைச்சுக்கிட்டேன். டால்ஸ்டாய், தத்யவேஸ்கி மாதிரி பெருங்கலைஞர்கள் எல்லாம் வறுமையில இருந்து செத்துப்போனவங்க.  அதனால, அதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டில்லை. நாங்க பண்ற சினிமா 10% கலை, 90% அறிவின்மையும்தான். அந்தப் 10% சினிமாவை யாரும் சாகடிக்கவே முடியாது. 'ஆரண்ய காண்டம்' படத்துல 10% கலையை ரசிச்சேன். என்னோட 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்துல 12% இருந்தது. 'சைக்கோ' படத்துல நிச்சயம் 10% கலை இருக்கும். மிச்சம் இருக்கிற 90% கலையை ரசிகர்களுக்குக் கொடுக்க ஓடிக்கிட்டு இருக்கேன். ஏன்னா, ஒரு கலை என்னைக்கும் தோற்காது. நதி, மரம், நிலவு, இறகு, பனித்துளி... இதுக்கெல்லாம் தோல்வி இருக்கா என்ன?!

வருடத்துல 300 படங்கள் வருது. மக்கள் எத்தனை படங்களைப் பார்ப்பாங்க, எல்லாப் படங்களுக்கும் எப்படி தியேட்டர்கள் கிடைக்கும். தியாகராஜன், ராம், நான், வெற்றிமாறன்... இன்னும் பல இயக்குநர்கள் எல்லாம் சினிமாவுல ஜெயிக்கிறதுக்காகப் படம் எடுக்கலை. நல்ல படம் எடுக்கணும்னுதான் எடுக்கிறோம். சில படங்கள் சம்பாதிச்சுக் கொடுக்கும், சில படங்கள் கொடுக்காம போகும். அது அந்தப் படைப்போட தோல்வி கிடையாது."  

"டிஜிட்டல் வளர்ச்சியால் விளைந்த வித்தியாசத்தை  உணரமுடியுது. நீங்க எந்தெந்த வகையில எல்லாம் அதை உணர்றீங்க?"

"மாற்றம் பரிதாபமா இருக்கு. மொபைல் ஆப்ல புத்தகங்கள் படிக்கிறோம். அதுல படிக்கிறது பெரிய ஈர்ப்பு இல்லை. ஒரு புத்தகத்தைத் தேடிப்பிடிச்சு வாங்கி, அட்டையைத் தொட்டுப் பார்த்து, வாசனையை முகர்ந்து பார்த்து, முதல் பக்கத்தைப் படிச்சதும் பெரிய விழிப்பு உணர்வு பெற்று, அந்தப் புத்தகத்தை தலையணைக்கு அடியில வெச்சுத் தூங்கி, அந்தப் புத்தகத்தை எடுத்துட்டு மரத்தடிக்குப் போய் படிச்சு... இப்படிக் கிடைச்ச அனுபவம் அலாதி. தியேட்டரில் கூட்டத்தில் நுழைஞ்சு பச்சைக் கலர், சிவப்புக் கலர் டிக்கெட்டை வாங்கி, அதைப் பத்திரப்படுத்திப் படம் பார்த்த அனுபவம் போயிடுச்சு. என் மகள் இதுமாதிரி எல்லா அனுபவத்தையும் இழந்துட்டா. அவள் குளத்தில் குளிச்சதில்லை, கிணத்தில் குதிச்சதில்லை, மரமேறி மாங்காய் பறிச்சதில்லை, சைக்கிள் ஓட்டத் தெரியலை. ஆனா, கார் ஓட்டுறா... அமெரிக்காவுக்குப் போயிருந்தப்போ, நம்மூர் சிட்டுக் குருவிகளை அங்கே பார்த்தேன். வளார்ச்சிங்கிற பெயர்ல நகர்ந்துக்கிட்டே இருக்கோம். ஆனா, நகர்வதுதான் வளர்ச்சியா?! நம்மளோட வளர்ச்சியே இனி உயரமா இருக்கப்போறதில்லை, அகலம் ஆகுறதுலதான் இருக்கப்போகுது. ஏன்னா, உட்கார்ந்தே வேலை பார்த்துப் பழகிட்டோம். 

எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுதும்போது, ஒரு 'ரைட்டர் பிளாக்' வரும். அப்போதெல்லாம் சின்ன வயசுல நான் சுத்துன இடங்களுக்கெல்லாம் போயிட்டு வருவேன். பிளாக் ஓப்பன் ஆயிடும். நகர்வைத் தடுக்க முடியாதுனு தெரிஞ்சு போச்சு. திரும்பவும் பாட்டி கதைகளைச் சொல்லணும், காமிக்ஸ் படிக்கணும், அம்புலி மாமா கதைகளை மியூசியத்தில் வெச்சு, தேடிப் போய் படிக்க வைக்கணும்."  

"அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ்னு சினிமாவோட தளங்கள் பரவலாகிட்டு இருக்கிற சூழல்ல, மிஷ்கினின் படைப்புகளை அதிலெல்லாம் பார்க்க முடியலையே... என்ன காரணம்?" 

"சீக்கிரமே எல்லாப் படைப்பும் அதுல வரும். 'துப்பறிவாளன்' படத்தைப் பலரும் அமேசான் ப்ரைம்ல பார்த்துட்டு பாராட்டினாங்க. நானும், தியேட்டர்களுக்குப் படம் பண்றதோட நிறுத்திடாம, நேரடியா இதுபோன்ற இணையதளங்களுக்காகப் படம் பண்ணலாம்னு இருக்கேன். ஏன்னா, இனி தியேட்டர்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. நம்ம ஊர்ல மட்டுமில்ல, வெளிநாடுகள்லகூட தியேட்டருக்கு வர்ற மக்களோட எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சுக்கிட்டு வருது. எல்லா வசதியும் வீட்டுக்குள்ள வந்துடுச்சு. இது அறிவியலோட வளர்ச்சி, நாம தடுக்க முடியாது.

தரையில உட்கார்ந்து படம் பார்த்து, அந்த மண்ணிலேயே மூத்திரம் அடிச்சு மூடுன தியேட்டர்களெல்லாம் இப்போ எங்கே இருக்கு, எம்ஜிஆர், நம்பியார்கூட ஃபைட் பண்ணும்போது, எம்.ஜி.ஆர் கையில கத்தி இல்லைனு தென்னை மரத்துல இளநீரைப் பறிச்சுக்கிட்டே படம் பார்த்தவர், தன்கிட்ட இருந்த கத்தியைத் தூக்கிப்போடுவார்... அதுதாங்க தியேட்டர். கால மாற்றத்தில் தியேட்டர்கள் காணாமல் போகும். அதுக்காக கவலைப்படத் தேவையில்ல. பொண்ணு பின்னாடியே சுத்தி காதலைச் சொன்ன காலம் எங்கே... வாட்ஸ்அப்பில் 'உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னைக் காதலிக்கிறியா'னு மிரட்டுற காலம் எங்கே?! மாற்றத்தை ஏத்துக்கணும், நாமளும் மாறணும்."

அடுத்த கட்டுரைக்கு