Published:Updated:

100 பாகுபலிக்குச் சமமான 'மகாபாரதம்', அமீர் கானுக்கு நனவாகுமா?!

100 பாகுபலிக்குச் சமமான 'மகாபாரதம்',  அமீர் கானுக்கு நனவாகுமா?!
100 பாகுபலிக்குச் சமமான 'மகாபாரதம்', அமீர் கானுக்கு நனவாகுமா?!

மீர் கானின் அடுத்த படம் `மகாபாரதம்' என்று சொல்கிறார்கள். ``மகாபாரதத்தைத் திரைப்படமாக எடுப்பது சாதாரண காரியமல்ல. என் வாழ்க்கையிலிருந்து ஏழெட்டு வருடங்களை எடுத்துக்கொள்ளும் பெரும்படைப்பு அது” என்று சொல்லியிருக்கிறார், அமீர் கான். இவருக்கு மட்டுமல்ல, டோலிவுட்டின் ராஜமெளலிக்கும் மகாபாரதம் `கனவுப்படம்'. 

இலக்கியவாதிகளுக்கும் மகாபாரதம் பெருங்கனவு. இந்தியாவின் மிக முக்கிய இலக்கியவாதிகள் மகாபாரதத்தை வைத்து இலக்கியம் படைத்திருக்கிறார்கள். ஜெயமோகனிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன் வரை மகாபாரதத்தால் கவரப்படாத இலக்கியவாதிகளே இல்லை. `மகாபாரதத்தை எப்படிப் படிக்க வேண்டும்?’ என்பது குறித்தே, பெருங்கட்டுரை எழுதியிருக்கிறார் எஸ்.ரா., பல்லாயிரம் பக்கங்களுக்கு `வெண்முரசு’ கொட்டிக்கொண்டிருக்கிறார், ஜெமோ.

மலையாள இலக்கியவாதிகளும் மகாபாரதத்தின் மீது தனி கரிசனம் கொண்டவர்கள். பி.கே.பாலகிருஷ்ணனின் `இனி ஞான் உறங்கட்டே' உங்களை உறங்கவே விடாது. பாஞ்சாலி பார்வையில் கர்ணனின் கதையை வடித்திருப்பார், மலையாள பிகேபி. மராத்தி எழுத்தாளர் சிவாஜி சாவந்த், `மிருத்யுஞ்சய்' எழுதி மிரளவைத்தார். `கர்ணனின் கண்ணீர்' வரிகளில் வழிந்தோடும்.

ஓர் எழுத்தாளர் சொல்லிய சம்பவம் இது... மறைந்த மலையாள இயக்குநர் லோகிததாஸ் ஒரு வழக்கில் சிக்கினார். அவரது `கிரீடம்’ திரைப்படம் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த நேரம். `கிரீடம் என்னுடைய கதை. லோகிததாஸ் திருடிவிட்டார்' என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். லோகிததாஸ் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தார். கூண்டில் ஏறினார். நீதிபதி கேட்கிறார், "நீங்கள் கிரீடம் கதையைத் திருடியது உண்மையா?". லோகிததாஸ் அமைதியாக, "ஆம். திருடினேன்" என்கிறார். நீதிபதி கண்களை சுருக்கிப் பார்க்கிறார். நீதிமன்றத்தில் இருப்போரும் பார்க்கிறார்கள். 

லோகிததாஸ் தொடர்கிறார், "ஆம், திருடினேன். கிரீடம் என் கதையல்ல. வழக்கு தொடர்ந்தவரின் கதையும் அல்ல. அது வியாசனின் கதை". நீதிபதி மீண்டும் பார்க்கிறார். லோகிததாஸ், "அர்ஜூனன் - அபிமன்யூ கதையே கிரீடம் கதை. இது மட்டுமல்ல. நான் எடுத்த எல்லாப் படங்களுமே மகாபாரதத்திலிருந்து திருடியதுதான்" என்று, ஒரே அடியாக அடிக்கிறார். நீதிபதி சிரிக்கிறார். வழக்கைத் தள்ளுபடி செய்கிறார். 

`இதுவரை இங்கே எழுதப்பட்ட அத்தனை கதைகளுக்கும் மூலம் மகாபாரதத்தில் இருக்கும்' என்பார்கள். ஒரு வலைப்பதிவர் `மகாபாரதத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள்கூட இருக்கும். அர்ஜூனனின் சாகசங்கள்!' என்று பதிவு செய்தார். உண்மைதான். மகாபாரதம் கதைகளின் ஆழ்கடல். அதன் அலைகளே மற்ற கதைகள் அனைத்தும். `வியாஸோச்சிஷ்டம் ஜகத்சர்வம்’! 

`மகாபாரதம்’ அறிந்த இயக்குநரால் திரைக்கதையில் பின்னி எடுக்க முடியும். ராஜமெளலி பெரிய உதாரணம். சிறுவயதில் கேட்ட `அம்புலி மாமா’ மகாபாரதக் கதைகளைக் கொண்டு `பாகுபலி’ வரை பாய்ந்தவர். அவரது `சத்ரபதி’ அப்படியே கர்ணனின் கதை. மணிரத்னமும் மகாபாரத பித்துப்பிடித்த மனிதர். `தளபதி’ ஒரு கிளாசிக்! `சின்னத்தாயவள் தந்த ராசாவே’ என்ற ஒற்றைவரியில் `சூரியப் புத்திரன்’ கதையை அடக்கியிருப்பார், `இந்திரப் புத்திரன்’ வாலி.

இந்தியாவின் முதல் சினிமாவே மகாபாரதக் கதையிலிருந்து எடுக்கப்பட்டதுதான். தாதாசாகிப் பால்கே இயக்கிய `ராஜா ஹரிச்சந்திரா’, மகாபாரதத்தில் இருக்கும் `அரிச்சந்திரன்’ கதை. மகாபாரதத்தில், தர்மப்புத்திரனுக்கு நாரதரால் சொல்லப்படும் கதை, அது.

தமிழின் முதல் சினிமாவும் மகாபாரதக் கதைதான். கீசகவதம்! விராட தளபதி கீசகனை பீமன் வதம் செய்யும் கதை. மாயாபஜாரை மறக்க முடியுமா?! மாஸ்டர் பீஸ் சினிமா, அது! `அபிமன்யூ - சசிரேகா’ திருமணம்தான் கதை. `தம்பி’ அபிமன்யூவுக்கு ‘அண்ணன்’ கடோத்கஜன் எப்படி உதவுகிறார் என்பதே படம். அமைதி ராமாராவ்... அதிரடி ரங்காராவ்...! சசிரேகாவாகக் கலக்கியிருப்பார், சாவித்திரி. அடுத்து, `கர்ணன்’. பி.ஆர்.பந்துலு, மேக்கிங்கில் மெர்சல் காட்டிய காவியம். நடிகர் திலகத்தின் நவரச நடிப்பில், வசூலில் வானம் எட்டிய படம். மறு வெளியீட்டிலும் வசூலை வாரி வழங்கினான், `வள்ளல்’ கர்ணன்.

மகாபாரதத்தின் பிரமாண்டத்தைத் திரையில் கொண்டுவருவது, யானையைப் பானையில் அடைப்பதைப்போல! பெரும் சாகசம். ஏனென்றால், மகாபாரதம் 100 `பாகுபலி’களுக்குச் சமம், 100 `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’களுக்குச் சமம், 1000 `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’களுக்குச் சமம்.

தெருக்கூத்து காலம் முதல் திரையரங்குகள் காலம்வரை, மகாபாரதம் இங்கே சொல்லப்பட்டு வருகிறது. ஆஸ்திகனை மடியில் அமர்த்தி மானசாதேவி கதை சொல்வதைப்போல, இம்மண்ணின் மக்களை மடியில் அமர்த்தி மகாபாரதத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள், இந்தியத் தாய்.   

மண்ணோடு கலந்திருக்கிறது மகாபாரதம். தானதயாளனைக் கர்ணன் என்கிறோம். உற்ற நண்பனைத் துரியோதனன் என்கிறோம். நியாயவானைத் தர்மன் என்கிறோம். பலவானைப் பீமன் என்கிறோம். இலக்கு தவறாதவனை அர்ஜூனன் என்கிறோம். சூது கொண்டோனை சகுனி என்கிறோம். இளம் திறனோனை அபிமன்யூ என்கிறோம். வியூகம் வகுப்பவனைக் கிருஷ்ணன் என்கிறோம். ஆம், இந்த மண்ணோடு கலந்திருக்கிறது மகாபாரதம். காற்றோடு கலந்திருக்கிறார்கள் அதன் கதை மாந்தர்கள்.  

அமீர் கானின் கனவு நனவாகட்டும்!