Published:Updated:

தன்பாலின ஈர்ப்பாளர்களை வெறுப்பது கடவுளா, மனிதனா? #BoyErased படம் எழுப்பும் கேள்விகள்!

ர.சீனிவாசன்

LGBTQ சமூகத்துக்காகத் தொடர்ந்து போராடிவரும் ஜரார்ட் கான்லெயின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் #BoyErased படம் எழுப்பும் கேள்விகள் என்னென்ன?

தன்பாலின ஈர்ப்பாளர்களை வெறுப்பது கடவுளா, மனிதனா? #BoyErased படம் எழுப்பும் கேள்விகள்!
தன்பாலின ஈர்ப்பாளர்களை வெறுப்பது கடவுளா, மனிதனா? #BoyErased படம் எழுப்பும் கேள்விகள்!

லகின் எல்லா மதங்களிலும் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் குற்றவாளிகளாகவும் பெரும்பாவம் செய்பவர்களாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். ``நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்" என்று கூறும் மதங்களின் மதிப்புமிக்க மனிதர்கள்கூட இந்த விஷயத்தில் அந்தச் சித்தாந்துக்கு முரணான கருத்துகளையே முன்வைக்கின்றனர். LGBTQ சமூகத்துக்காகத் தொடர்ந்து போராடிவரும் ஜரார்ட் கான்லெயின் (Garrard Conley) சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் #BoyErased படம் எழுப்பும் கேள்விகள் என்னென்ன?

புகழ்பெற்ற பாப்டிஸ்ட் போதகரான மார்ஷல் ஈமன்ஸ் (ரசல் க்ரோவ்) கூடவே கார் டீலர்ஷிப் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரின் மகனான ஜாரெட் ஈமன்ஸ் (லுகஸ் ஹெட்ஜஸ்) ஒரு தன்பாலின ஈர்ப்புகொண்டவன் என்ற உண்மை தெரிய வருகிறது. அதை ஒரு குற்றம், ஒரு நோயெனக் கருதி மகனை அவனின் தாய் மற்றும் தன் மனைவியான (நிக்கோல் கிட்மேன்) உதவியுடன் ஒரு கன்வெர்ஷன் தெரபிக்கு அனுப்புகிறார் மார்ஷல். அந்த தெரபியில் அரங்கேறும் ட்ரீட்மென்ட்கள், அங்கே போடப்படும் சட்ட திட்டங்கள், உடனிருக்கும் மற்ற மாணவர்களின் மனநிலைகள் ஜாரெட்டுக்குப் பல உண்மைகளைப் புரிய வைக்கின்றன. போதாக்குறைக்கு அவனின் இறந்த கால நினைவுகளும் அவனைத் துரத்துகின்றன. இவற்றை எல்லாம் மீறி, தான் யார் என்பதை அவன் உணர்ந்து கொண்டானா? அதை ஏற்றுக் கொண்டானா? இம்மாதிரி தெரபிகளின் குற்றங்களை உலகுக்கு உணர்த்தினானா?

தன்பாலின ஈர்ப்பு குறித்த படங்களுக்கு ஹாலிவுட்டில் பஞ்சமேயில்லை. இங்கே நாம் பேசுவதற்கு அஞ்சும் விஷயங்களைக்கூட அங்கே தைரியமாகப் படமாக்கி விடுவார்கள். ஆனால், மற்ற தன்பாலின ஈர்ப்பு குறித்த படங்களிலிருந்து சற்றே விலகி நிற்கிறது இந்த `பாய் எரேஸ்டு'. காரணம், தன் தன்பால் ஈர்ப்பு கொண்ட மகனின் பெற்றோர்கள் தரப்பு வாதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது இந்தப் படம். என்னதான் படம் ஒரு சுயசரிதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தாலும் திரைமொழிக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களைச் செய்து எழுதி இயக்கியுள்ளார் ஜோயல் எட்ஜர்டன். அது மட்டுமன்றி, `Love in Action' என்ற அந்த கன்வெர்ஷன் தெரபி மையத்தின் முதன்மை தெரபிஸ்ட்டாகவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெதுவாக நகரும் கதைதான் என்றாலும் திரைக்கதையில் நான்-லீனியர் யுக்தியைப் பயன்படுத்தி படத்துக்கு சுவாரஸ்யம் சேர்த்துள்ளார்.

ஜாரெட் ஈமன்ஸாக லூகஸ் ஹெட்ஜஸ்க்குப் படத்தைத் தூக்கிச் சுமக்கும் கதாபாத்திரம். தன்னைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும்போதும், புரிந்துகொண்டும் அதை வெளிப்படுத்தத் தயங்கும்போதும் பரிதவிப்பில் ஸ்கோர் செய்கிறார். அதே சமயம் தெரபிஸ்ட் நடக்காத விஷயங்களை, தனிப்பட்ட ரகசியங்களைக் குறித்து கேள்விகளால் துளைத்து எடுக்கும்போது கோபத்தில் வெடிக்கிறார். இவரின் பெற்றோர்களாக வரும் புகழ்பெற்ற நடிகர்கள் ரசல் க்ரோவ் மற்றும் நிக்கோல் கிட்மேன் கவனிக்க வைக்கின்றனர். தன் மகனின் நிலையைப் புரிந்துகொண்டாலும் தன் மதக் கட்டுப்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு தடுமாறும் கதாபாத்திரம் ரசலுக்கு. குழப்பம் நிறைந்த முகமும் கலங்கும் கண்களும் என ஒரு பாரம்பர்யக் குடும்பத்தின் தந்தையைக் கண்முன் நிறுத்துகிறார்.

இவருக்குக் கிடைத்த ஸ்க்ரீன் ஸ்பேஸ்கூட நிக்கோல் கிட்மேனுக்கு இல்லையோ என நினைக்கும் தருணத்தில் க்ளைமாக்ஸில் ஒரு சிறந்த தாயாக ஜொலிக்கிறார் நிக்கோல். ``இந்த முறை உன் அப்பா நான் சொல்வதை கேட்கட்டும்!" என்று மிடுக்குடன் தன் மகனிடம் அவர் சொல்லும் இடம், படத்தின் இறுதியில் தான் சொன்னது சரிதான் என்று நிரூபிக்க ஒரு செய்திக் கட்டுரையை மெயில் செய்துவிட்டு மகனுக்கு மெசேஜ் செய்யும் இடம், தெரபிஸ்ட்டை சரமாரியாகக் கேள்விகள் கேட்கும் அந்தக் காட்சி, ``ஆபாசப் படங்கள் பார்ப்பதெல்லாம் குற்றமா?" என்று மகனிடமே கேட்கும் காட்சி... வாவ் நிக்கோல்!

படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களும் அத்தனை சிரத்தையுடன் எழுதப்பட்டுள்ளன. அதிலும் அந்த தெரபி மையத்தில் உலாவும் பதின்வயதுச் சிறுவர்கள் இதயத்தைக் கணக்கச் செய்கிறார்கள். தன் மனம் மாறவில்லை என்று உண்மையைச் சொன்ன கேமரூன் சந்திக்கும் அவமானங்கள் யாரையுமே கலங்கச் செய்துவிடும். அவனைப் போலவே நிஜமாகவே தான் மாறவேண்டும் என்று துடிக்கும் ஜான், ``நீ மாறிவிட்டாய் என்று அவர்களை நம்பவை. அவர்களுடன் சேர்ந்து நீயும் அந்த ஆட்டத்தை ஆடு" என்று அறிவுரை கூறும் கேரி என ஒன்றிரண்டு காட்சிகளில் வருபவர்கள்கூட படத்தின் கதைக்குள்ளேயே உலாவுகின்றனர்.

பின்னணி இசை காட்சிகளின் தன்மை அறிந்து இசைத்திருக்கிறது. பாத்திரங்கள் பேசி முடித்தபின்னும், காட்சிகள் சொல்ல வந்த விஷயத்தை உணர்த்திய பின்னும் நீள்வது ஒருவித திரை மொழிதான். அதுவும் இவ்வகை மென்மையான படங்களுக்கு அந்த யுக்தி தேவைதான். ஆனால். அதுதான் இரண்டு மணிநேரப் படத்தை மூன்று மணிநேரமாக நம்மை ஃபீல் செய்ய வைக்கிறது.

இவற்றை எல்லாம் தாண்டி, உலகமே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருக்கையில் அதன் கிளைப் பிரச்னையான இந்த கன்வெர்ஷன் தெரபிகளின் உண்மை முகத்தைத் தோலுரித்து காட்டியதற்காகவே 'Boy Erased' ஒரு முக்கியப் படைப்பு ஆகிறது. தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களை கடவுளின் பெயரால் பயமுறுத்தி, மாறச்சொல்லிக் கட்டாயப்படுத்துவதும் ஒருவகை வன்புணர்ச்சிதான். கடவுள் அவர்களை வெறுக்கவில்லை, 'கடவுளின்' மனிதர்கள்தான் அவர்களை வெறுக்கிறார்கள் என்றும் தைரியமாக சாடுகிறது படம்.