சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!

அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!

அலாவுதீன் ஹூசைன்

“எந்த அரசியலும் பேசாம ஒரு படம் முழுமை அடையாது. குறைந்தபட்சம் அரசியலை அல்லது சமூகக் கருத்துகளை மையமா வெச்சு வர்ற படங்கள் இதை ஃபாலோ பண்ணணும். இது என் முதல் படம். பல இடங்கள்ல நடந்த விஷயங்கள், சந்திச்ச மனிதர்களை அடிப்படையா வெச்சு எடுத்திருக்கேன். வெற்றிமாறன் சார்கிட்ட கத்துக்கிட்ட விஷயங்களை இந்தப் படத்துல பயன்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன்!” - தீர்க்கமாகப் பேசுகிறார், ராஜ்குமார். ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் இயக்குநர்.   

அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!

“சினிமா என்ட்ரி?”

“எங்க குடும்பத்துல யாரும் சினிமாவை விரும்பிப் பார்க்கிற ஆட்கள் இல்லை. ஆனா, சினிமா மேல எனக்குத் தீராக் காதல். அதனால, பார்த்துக்கிட்டிருந்த தொலைக்காட்சி வேலையை விட்டுட்டேன். நண்பர்கள் என்னை ‘நாளைய இயக்குநர்’  நிகழ்ச்சியில கலந்துக்கச் சொன்னாங்க. அவங்க உதவியால குறும்படங்கள் எடுத்தேன். நான் இயக்கிய எல்லாக் குறும்படங்களிலும் காமெடியும் அரசியலும்தான் பிரதானமா இருக்கும். ‘நாளைய இயக்குநர் சீஸன் 2’ல சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றேன். வீட்டுல என்மேல நம்பிக்கை வந்தது.”

“வெற்றிமாறன் தயாரிப்பிலேயே முதல் படம் பண்ணியிருக்கீங்களே?”


“என் வாழ்க்கையில எல்லா மாற்றங்களுக்கும் வெற்றிமாறன் சார்தான் காரணம். என் குறும்படத் திரையிடலுக்கு வந்திருந்தப்போதான், வெற்றி சாரை முதல் முறையா சந்திச்சேன். என் குறும்படத்துல ஒண்ணை, ‘இதைப் படமா பண்ணலாம்னு நினைக்கி றேன், ரைட்ஸ் தர்றீங்களா?’னு கேட்டார். உடனே சரினு சொல்லிட்டு ஆபீஸுக்குப் போனேன். காதலன், காதலிகிட்ட ப்ரொபோஸ் பண்றமாதிரி, ‘நான் உங்ககிட்ட உதவி இயக்குநரா சேர ஆசைப்படுறேன் சார்’னு சொல்லிட்டேன். அவரும், பெருசா கேள்வியெல்லாம் கேட்காம, ‘ஓகே’னு சொன்னார். இப்படித்தான் உதவி இயக்குநர் ஆனேன். கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி, கொஞ்சம் ஊர் சுத்திக்கலாம்னு வெற்றி சார்கிட்ட பர்மிஷன் கேட்டு, ஊர் ஊரா சுத்தினேன். அப்பதான் வெற்றி சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. ‘நான் ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். உன்கிட்ட கதை இருக்கா?’னு கேட்டார். ஒரு ஐடியா சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. நானும் வெற்றி சாரும் நிறைய விவாதிச்சு, ஸ்கிரிப்டை முடிச்சோம். ‘அண்ணனுக்கு ஜே’ தொடங்கிட்டோம்.”

அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!

“என்ன கதை?”

“லோக்கல் அரசியல்தான், படத்தோட களம். சமூகத்துல மனிதர்கள் மூணு வகை. ஆல்ஃபா - தலைவன், பீட்டா - உபதலைவன், காமா - தொண்டன். தலைவர்கள் மாறிக்கிட்டே இருப்பாங்க. தொண்டன் மட்டும் அப்படியேதான் இருப்பான். போஸ்டர்ல, பேனர்ல பெயர் வர்றதுதான் அவனுக்கான பெரிய அரசியல். அந்தத் தொண்டன், தன் அப்பாவுக்காக, காதலுக்காக வாழ்க்கையை எப்படியெல்லாம் எதிர்கொள்ளுறான்றதைத்தான் கதையா சொல்லியிருக்கேன். ஆங்கிலத்துல ‘லோக்கல் இஸ் குளோபல்’னு சொல்வாங்க, அதைத்தான் இந்தப் படத்துல நாங்க சொல்லப்போறோம். மக்கள் கவனிக்காமப் கடந்துபோற அன்றாட அரசியலைப் பேசியிருக்கோம். எந்த ஊர் மக்கள் பார்த்தாலும், இந்தக் கதையை அவங்க உள்வாங்கிக்க முடியும். இன்றைய அரசியல் அமைப்பை நய்யாண்டியும் பண்ணியிருக்கோம்.’’

“ஹீரோ தினேஷ் எப்படிப் பண்ணியிருக்கார்?”


“தினேஷ் நடிப்புக்கு ரொம்ப மெனக்கெடுவார். படத்துக்காக 50 அடி பனைமரம் மேல ஏறும் காட்சியை ஒரே ஷாட்டா எடுக்கணும்னு முடிவு பண்ணோம். அந்தக் காட்சி நல்லா வரணும்னு கிட்டத்தட்ட 15 தடவை பனைமரம் ஏறி இறங்கினார். மஹிமாவுக்குப் படத்துல அடாவடியான கதாபாத்திரம். ஆடிஷன் பண்ணும்போது, டாவின்ஸியோட கோல்டன் ரேஷியோ முகம் யாருக்கு இருக்கோ, அவங்களை நடிக்கவைக்கலாம்னு முடிவு பண்ணோம். அஜித், ஐஸ்வர்யா ராய்னு சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய முகம் அது. அவங்களுக்குப் பிறகு மஹிமாவுக்கும் இருந்துச்சு. மக்களுக்கு அவங்க முகம் பிடிக்கும்னு நம்புறேன்.

அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!

“தமிழகத்தின் இன்றைய அரசியலை இந்தப் படம் பிரதிபலிக்குமா?”

“நேரடியா இருக்காது. ஆனா, படத்துல பேசியிருக்கிற அரசியல், நிகழ்காலம் மட்டுமல்ல, கடந்தகாலத்துக்கும் பொருந்தும். எதிர்காலத்துலகூடப் பொருத்திப் பார்த்துக்கலாம். எல்லோர் வாழ்க்கைக்கும் பொருந்துற ஒரு கதையை, அரசியல் களத்துல சொல்லியிருக்கோம். 5 வருடத்துக்கு முன்னாடி எழுதுன கதை இது. இன்றைய அரசியல் சூழல்ல வரணும்னு இருக்கு. சந்தோஷம்தான். ஏன்னா, இன்றைய அரசியல்ல அவ்வளவு என்டர்டெயின்மென்ட் இருக்கே!”