சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நான் பார்ட்டி பாய் இல்லை... பக்தி பாய்!”

“நான் பார்ட்டி பாய் இல்லை... பக்தி பாய்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் பார்ட்டி பாய் இல்லை... பக்தி பாய்!”

சனா - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

“என் ஒரிஜினல் பெயர் கணேசகுமார். சினிமாவுக்கு நடிக்க வந்தப்போ, அப்பா நியூமராலாஜி பார்த்து, பிரேம்னு வைக்கலாம்னு முடிவு பண்ணுனார். அப்போவோட இனிஷியலான ‘ஜி’யைச் சேர்த்து, பிரேம்ஜி ஆயிட்டேன்!”

நடிகர் பிரேம்ஜி... இப்போது இசையமைப்பாளர் பிரேம்ஜி! 

“மியூசிக் எனக்கு எப்பவுமே பிடிக்கும். நான் சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்னாடியே யுவன்கிட்ட உதவியாளரா இருந்தேன். அவரோட பல படங்களுக்கு ரீ-ரெக்கார்டிங் வேலைகள் பண்ணிட்டிருந்தேன். யுவன், கார்த்திக் ராஜா, மணிசர்மா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர்னு பல இசையமைப்பாளர்கள்கிட்ட கீ போர்டு ஆர்ட்டிஸ்ட்டா வேலை பார்த்திருக்கேன். அந்த டைம்ல நடிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. எல்லாமே இசைதான்.”

“நான் பார்ட்டி பாய் இல்லை... பக்தி பாய்!”

“அண்ணன் படத்துலதான் இசையமைப்பாளரா என்ட்ரி கொடுக்கணும்னு ஆசைப்பட்டீங்களோ?”

`` ‘சென்னை 28’ படத்துல அண்ணன் ஒரு கேரக்டரைக் கொடுத்து நடிக்க வெச்சு, ஒரு இசையமைப்பாளரை அநியாயமா நடிகர் ஆக்கிட்டார். ஆனாலும், இசையை விட்டுடலை. அந்தப் படத்துக்கு ரீ-ரெக்கார்ட்டிங் பணிகளையெல்லாம் நான்தான் பண்ணுனேன். எனக்கான முதல் இசை வாய்ப்பைக் கொடுத்தது, யுவன்தான். அவர்தான் எனக்கு குரு. அதையும் தாண்டி, நல்ல நண்பன்!

‘சரோஜா’ படத்துக்கே நான் இசையமைக்க பண்ணவேண்டியது. ‘நடிச்சா மியூசிக் பண்ணக்கூடாது, மியூசிக் பண்ணுனா நடிக்கக்கூடாது’னு யுவன் எனக்கு கண்டிஷன் போட்டார். அதனால தொடர்ந்து அண்ணனோட எல்லாப் படங்களிலும் நான் நடிச்சேன், யுவன் மியூசிக் பண்ணிக்கிட்டே இருந்தார்.

அப்போதான் ஒருநாள், `நான் ‘பார்ட்டி’னு ஒரு படம் பண்ணப்போறேன். நீ நடிக்கவேணாம், மியூசிக் பண்ணு’னு அண்ணன் சொன்னார். என்னை மியூசிக் டைரக்டர் ஆக்கணும்னு அண்ணனுக்கு ரொம்ப ஆசை. அவர் என்ன கதை எழுதினாலும், எனக்கு ஒரு கேரக்டர் எழுதிடுவார். அது அவரோட மைண்டுல ஆட்டோமேட்டிக்கா செட் ஆயிடுச்சு. ‘பார்ட்டி’ படத்துல அதைப் பண்ணலை. அண்ணன் தயாரிக்கிற ‘ஆர்.கே.நகர்’ படத்துக்கும் நான்தான் மியூசிக்.”

“ரெண்டு படத்திலும் எப்படி வந்திருக்கு உங்க இசை?”


`` ‘பார்ட்டி’ படத்துல நிறைய ஹீரோ, ஹீரோயின்ஸ் நடிச்சிருக்காங்க. எல்லோரும் என்னைத் தனியா விட்டுட்டு, பிஜூ தீவுக்குப் போயிட்டாங்க. நான் மட்டும் இங்கே இருந்து மியூசிக் பண்ணிக்கிட்டிருந்தேன். அண்ணனாவது ஜாலியா இருந்தாரேனு விட்டுட்டேன். முழுக்க வெளிநாட்டுல நடக்கிற கதையாச்சே... அதனால ஹிப்ஹாப் ஸ்டைல்ல மியூசிக் பண்ணியிருக்கேன்.  ‘ஆர்.கே.நகர்’ படம் அப்படியில்லை. லோக்கல் ஏரியாவுல நடக்கிற கதை. அதுக்குத் தகுந்தமாதிரி இறங்கி அடிச்சிருக்கோம்!”

“யுவன், கங்கை அமரன், இளையராஜா... இவங்ககிட்ட எல்லாம் இசை குறித்துப் பேசிக்கிறதுண்டா?”


“எனக்கு ஏதாவது சந்தேகம்னா, முதல்ல யுவன்கிட்ட கேட்பேன். கிராமத்துச் சாயல்ல யாராச்சும் பாட்டு வேணும்னு சொன்னா, அப்பாகிட்ட கேட்டுப்பேன். ‘பார்ட்டி’ படத்துல சத்யராஜ் சாருக்கும், ரம்யா கிருஷ்ணன் மேடமுக்கும் ஒரு டூயட் இருக்கு. அதை, பெரியப்பா (இளையராஜா) ஸ்டைல்ல கம்போஸ் பண்ணிக் கொடுத்திருக்கேன். அதுக்காக, பெரியப்பா என்னென்ன கருவிகளை அவரோட டூயட் பாடல்களுக்குப் பயன்படுத்தினார், அவரோட ஸ்டைல் எப்படி இருந்ததுனு பல விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன். இசையமைப்பாளரா இதுவரை ஏழெட்டுப் படத்துக்கு வொர்க் பண்ணியிருக்கேன். எந்தப் படமும் எனக்கு அடையாளத்தைத் தரலை. அண்ணன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கார், அதை மிஸ் பண்ணிடக்கூடாதில்ல. ‘ஆர்.கே.நகர்’ ஆடியோ லாஞ்ச்ல யுவன் எனக்கு ‘இசை சுனாமி’னு பட்டம் கொடுத்தார். ‘பார்ட்டி’ படத்துக்கு ‘இசை டக்கீலா’னு பட்டம் கொடுத்திருக்காங்க.”

“ ‘சிம்பா’ படத்துல வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சிருக்கீங்களாமே?”

“பரத் ஹீரோவா நடிச்சிருக்கிற ‘சிம்பா’ படத்துல எனக்கு ‘நாய்’ கேரக்டர். மத்தவங்களுக்கெல்லாம் நாயா தெரியற நான், பரத்துக்கு மட்டும் நாய் உடலும் மனித முகமுமா தெரிவேன். ரொம்பப் புதுவிதமா இந்தப் படத்தை எடுத்திருக்காங்க!”

“வெளியே இருந்து பார்க்கும்போது, நீங்க ஜாலி கேரக்டர். உண்மையிலேயே அப்படித்தானா?”

“எல்லோருமே என்னை ‘பார்ட்டி பாய்’னு நினைக்கிறாங்க. அதெல்லாம் கிடையாதுங்க. கடந்த ஏழு வருடமா சிவனோட தீவிர பக்தன் நான். அடிக்கடி திருவண்ணாமலைக்குப் போயிட்டிருக்கேன். ஒருமுறை சாமி கும்பிடப் போனப்போ, சிவன் கழுத்துல இருக்கிற ருத்திராட்சம் என்கிட்ட உருண்டு வந்தது. அதைக் கழுத்துல மாட்டிக்கிட்டேன். பிறகு, என் லைஃப்ல நடந்த எல்லாமே மேஜிக்தான்! நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுகூட மகாலட்சுமி மாதிரி மங்கலகரமா இருக்கணும்னு ஆசைப்படுற ஆள். ஆனா, இன்னும் பொண்ணு கிடைக்கலைங்கிறது வேற விஷயம்!

ஆக்சுவலா நான் ஒரு பொண்ணைக் காதலிச்சேன். நாங்களும் அவங்களும் வேற வேற ஆளுங்கனு சொல்லி பொண்ணு வீட்டுல கல்யாணத்துக்கு ஒப்புக்கலை. அவங்க கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க.”

நீங்களும் சீக்கிரம் செட்டில் ஆகுங்க ப்ரோ!