சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்

தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்

தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்

டைட்டில் கார்டு முதல் எண்ட் கார்டு வரை தமிழ் சினிமாவையும், அரசியல் அலப்பறைகளையும் ‘வெச்சு’ செய்திருக்கும் ‘ஸ்பூஃப்’ சினிமா தமிழ்ப்படம் 2.

2010-ல் ஹிட்டடித்த `தமிழ்ப்பட’த்தின் இரண்டாம் பாகமே போலீஸ் அத்தியாயமாக மலர்ந்திருக்கிறது. இதுவரை போலீஸ் படங்களில் எவற்றையெல்லாம் கைதட்டி ரசித்தோமோ அவற்றையெல்லாம் தேடித் தூசு தட்டி காமெடி பண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்

முதல் பாகத்தில் தமிழ் சினிமாவை மட்டும் கலாய்த்தவர்கள் இதில் உலக சினிமா, அரசியல், மொபைல்போன், சோஷியல் மீடியா வைரல்கள் என நையாண்டி பண்ணியிருக்கிறார்கள். சமாதியில் தியானம் தொடங்கி பணமதிப்பு நீக்கம் வரை நிகழ்கால அரசியலையும் விட்டுவைக்கவில்லை. கபாலி, கங்கை அமரன் வாழ்க்கை வரலாறு, ஔவையார்- அதியமான், கேம் ஆஃப் த்ரான்ஸ் என அவுட் ஆஃப் சிலபஸிலும் லொள்ளுகளால் அள்ளுகிறது அமுதன் டீம்.

 அகில உலக சூப்பர் ஸ்டார் என டைட்டில் கார்டில் ஆரம்பித்து ‘பாகுபலி’யை நினைவுபடுத்தும் க்ளைமாக்ஸ் வரை படம் முழுக்க `சிவா தாண்டவம்’ தான்! தேவர்மகன் ஃபன்க் கெட்டப்பில் சிவா என்ட்ரி கொடுப்பதில்  தொடங்கி படம் முடிவது வரை சிவா வந்தாலே சிரிப்புதான்.

தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்

சிவாவுக்கு அடுத்து படத்தில் மிரட்டியிருப்பது சதீஷ். ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை எல்லா வில்லன்களின் கெட்-அப்பிலும் வந்து உலக நாயகனுக்கே உறியடிக்கிறார்.  ஹீரோயின் ஐஷ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் `லூஸு’ ஹீரோயினைக் கச்சிதமாய்க் கொண்டு வந்திருக்கிறார். போலீஸாக வரும் சேத்தன் மற்றும் நிழல்கள் ரவி, பாட்டியாக வரும் கலைராணி என எல்லோரும் சீரியஸாக நடித்து சிரிக்கவைத்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில், கலைராணி ‘இன்னும் இந்த சுவரு எத்தனை உசிரைக் காவு வாங்கப் போவுதோ..?’ என சொல்லும்போது தியேட்டரே குலுங்கி அடங்குகிறது.

தமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்ஆர்ட் டைரக்டர் செந்தில்ராகவன் சின்னச் சின்ன டீடெயிலிங்கில் கலாய்த்திருக்கிறார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் கண்ணன்.

முதல் பாகத்தில் தமிழ்சினிமாவின் பொதுவான அம்சங்களைக் கொண்டு கலாய்த்ததால் எல்லோருமே ரசிக்கும்படி இருந்தது. ஆனால் இதில் காட்சிக்கு காட்சி நுணுக்கமாக டீடெயிலிங் பண்ணி இருப்பதால் அந்தப் பொதுத்தன்மை மிஸ்ஸிங்!  முதல் பாகத்தில் படங்களை மட்டுமே கலாய்த்தவர்கள், இதில் சில நபர்களை பர்சனலாகவும் கலாய்த்திருக்கிறார்கள். முதல்பாகம் வெளியானபோது மீம்ஸ் போன்ற சமூக ஊடகக் கலாய்ப்புகள் இல்லாததால் அதிகம் ரசிக்கவைத்தது. இப்போது வாட்ஸ்-அப்பைத் திறந்தாலே நக்கலும் நையாண்டியும் கும்மியடிப்பதால்,  முதல் பாகத்தோடு ஒப்பிடும்போது 2.0வில் கிண்டல் கிக் குறைவுதான்.

- விகடன் விமர்சனக் குழு